மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 15 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 15 | பெ. கருணாகரன்

எங்கப் பாட்டன் சொத்து!

யுத பூஜைக்குக் குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று என் இல்லத்தரசி சொல்லும்போதே ஒரு குறும்புப் புன்னகை என் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. ‘கண்டிப்பாக… ஆனால் ஒரு சந்தேகம்… குப்பைகளை உண்மையில் நம்மால் ஒழிக்க முடியுமா?’ என்று நான் கேட்ட கேள்வியில், அவரது இதழ்களில் ஒரு புன்னகை. அதற்குக் காரணம்… தொடர்ந்து படித்தால் புரியும்.

பெரிய அளவில் குப்பைகளை ஒழித்துவிட வேண்டும் என்கிற திட்ட இலக்குடன் போகி, ஆயுதபூஜை என்று குப்பை ஒழிக்க உட்காரும்போது, அது கடந்தகால வாழ்க்கையை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்ப்பது போல சுகமான அனுபவமாகவே அமைந்துவிடுகிறது. பத்தடி அகல அறையில் புழங்குதல் என்பது புழுங்குதல்! ஒவ்வொரு முறையும்  உற்சாகமாய் ஆரம்பிக்கும் குப்பை ஒழிப்பு, குப்பைகளின் பூர்வ கதை பேசி இதமாகவே நகர்கிறது! பழம்புடவை, நைந்த கொசுவலை, உடைந்தகுடை, சக்கரமில்லா பொம்மை கார்கள்,  அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்…  இன்னும் இன்னும் இண்டு இடுக்குகளிலும்  ஏராள அடைசல்கள்!

ஒழிக்க வேண்டும் என்று நினைத்து நாம் கையிலெடுக்கும் ஒவ்வொரு பொருளும் தனக்குள் ஒரு குட்டி சுயசரிதையை எழுதி வைத்துக் கொண்டு, வெளியே போக மாட்டேன் என்று அழுவாச்சி காட்டி அடம் பிடிக்கின்றன. சின்ன சின்ன வார்த்தைகளால் தனது பூர்வ கதைகளைக் காதருகில் செல்லமாய்ச் சொல்லிவிட்டு, அவை சிறப்புச் சலுகையுடன் மீண்டும் தன் இடத்துக்கேபோய் ஓய்வெடுக்கின்றன.

குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டிய இற்றுப் போன தலைச்சன் பிள்ளை அணிந்த முதல் சட்டை, பொக்கிஷம் போல மீண்டும் பீரோவுக்குப்போய் அந்துருண்டை வாசனையுடன் உறங்குகிறது. முதல் முதலில் வாங்கிய சேம்சங் விசிடி பிளேயர் பயனற்றும் கூட சென்டிமெண்ட் வாசனையுடன் பரணில் பத்திரமாக இருக்கிறது. கல்லூரியில் நெருங்கிய நண்பன் கொடுத்த எழுதாத பேனா பல்லாண்டுகள் கழித்தும் அவனது தீராத நட்பை ரகசிய வார்த்தைகளில் எழுதிக்காட்டி விட்டு, மீண்டும் சிம்மாசனத்தில் இடம் பிடித்து விடுகிறது. உடைந்த பொம்மைகளைத் தொட முடிவதில்லை. நாம் உட்காரும்போதே குட்டி வாண்டுகளும் நம் அருகில் பதவிசாக உட்கார்ந்து கொண்டு, நம் ஒவ்வொரு அசைவையும் காவல்காரன் போலவே கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களது உடமைகளுக்கு ஏதாவது பாதகம் வந்து விடுமோ என்கிற பதைப்புடனே காத்திருக்கிறார்கள். அவர்கள் உடமைகள் எதையாவது எடுக்கும்போது, ‘எடுக்காதே… இங்கே கொடு…’ என்று பிடுங்காத குறையாகப் பறித்துச் சென்று பத்திரப்படுத்துகிறார்கள். டோரா பொம்மை, தலையில்லாத பார்பி, உடைந்து போன கிரிக்கெட் பேட், காற்று போன ஃபுட் பால் என்று எதையும் அவர்கள் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிப்பதே இல்லை. பயன்படா தலைகிளிப், ரிப்பன், கவுன்களைத் தொட்டால் கண்களில் நீர்காட்டி கலங்கவைப்பாள் தலைச்சன்மகள்.

சக்கரம் இல்லாத மூன்று சக்கர சைக்கிளை வெளியே தூக்கி எறிந்து விட முடிவெடுத்தால், ‘நம்ம பையனுக்கு முதல் முறையா வாங்கின சைக்கிள்… இருக்கட்டும்…’ என்ற நெகிழ்ச்சியான வார்த்தைகள் அந்த சைக்கிளுக்கு உயிர் தந்து விடுகிறது.  முதல் முறையாக வாங்கிய ஒனிடா பிளாக் அண்ட் ஒயிட் டிவியின் பில்லைக் கூட தூக்கி எறிய முடிவதில்லை. இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்கிய வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகிய பில்கள் பழைய பொருளாதார நிலவரத்தை கண்களுக்கு முன் ஜாடை காட்டி, நினைவுப் பொக்கிஷமாக மீண்டும் ஃபைலில் இடம் பிடித்து விடுகின்றன.

குப்பை ஒழிப்பு நேரங்களில் புகைப்பட ஆல்பங்கள்தான் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. ஆல்பத்தில் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு வீடியோபோல் விழித்திரைகளில் ஓட, ‘அன்னிக்கு உட்கார வெச்ச இடத்தில் எம்புட்டு அழகா பதவிசா உட்கார்ந்திருக்கான். இப்ப பாருங்க வாலு கணக்கா…’ என்று மகனைச் செல்லமாய் கடிந்து கொண்டும், ‘கல்யாணத்துக்கு முன் நான் ரொம்ப ஒல்லியா இருந்தேன் இல்லே…’ என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டும், ‘நீங்கதான் இளைச்சுட்டீங்க…’ என்று நெகிழ்வான அன்பை வெளிப்படுத்திக் கொண்டுமாக ஆல்பங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு அடுக்கி வைக்கப்படுகின்றன. அடுக்கப்பட்ட ஆல்பத்திலிருந்து, அப்பா அல்லது அம்மாவின் போட்டோ களவாடிச் செல்லப்பட்டு, ‘களவாணிகள்’ கொடுக்கும் அன்பு முத்தங்களில் பெற்றோரின் கன்னம் ‘ஜில்’லிட்டு விடுகிறது.

புத்தகங்களை ஒழிப்பதுதான் பாறையில் நார் உரிக்கும் சாகசம். எந்தப் புத்தகத்தையும் எடுத்தெறிய முடிவதில்லை. நான்கு பாரதியார் கவிதைத் தொகுதிகள் இருந்தபோதும் ஒன்றைக் கூட விட்டுத்தர மறுக்கிறது மனம். பெண்களுக்குப் புடவையைப் போல வாசகனுக்குப் பாரதிப் பித்து. ‘இது வேணுமா, அது வேணுமா?’ என்று இல்லத்தரசியின் எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்தான். ‘வேணும்…’ அதற்குப் பிறகு அவரிடமிருந்து கேள்வியே வருவதில்லை. படித்த பக்கங்கள் பாதியும் படிக்காத பக்கங்கள் மீதியுமாக பெரும்பாலான புத்தகங்கள் படித்து முடிக்கப்படாத நிலையிலேயே இருக்கின்றன. அவையெல்லாம் நாளைக்கே படித்து முடித்து விடவேண்டும் என்கிற தீர்மானத்துடன் தனியாக அடுக்கப்படுகின்றன. அவசரத்துக்குத் தேடும்போது கிடைக்காத பல புத்தகங்கள் நட்சத்திரங்களைப் போல் வெளியே எட்டிப் பார்த்துக் கண் சிமிட்டுகின்றன.  ஏதேனும் சுவாரஸ்யமான ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டால், குப்பை ஒழித்தல் சில நிமிடங்கள் தடைபட்டு, புத்தக வாசிப்புக்குள் மனம் சென்று மீளுகிறது.

ஒழுங்கற்றுக் கிடந்த குப்பைகள் தற்காலிக ஓழுங்குக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, குப்பை ஒழித்தல் சம்பிரதாயம் இனிதே நிறைவடைகிறது.  ஒவ்வொரு முறையும் வீட்டில் குப்பைகள் ஒழிக்கும்போது, தொண்டை எரிச்சலும் தும்மல்களுமே மீதமாகின்றன.  வீட்டை ஒழித்து முடிக்கும்போது குப்பைகள் இடம் மாறுகின்றனவே தவிர, ஒழிவதில்லை! ஆஸ்த்மா, அலர்ஜி, தும்மல்களோடு குப்பைகளோடு குப்பைகளாகவே வாழ்ந்து மடிகிறார்கள் சென்டிமெண்ட் மனிதர்கள்!

குழந்தைகள் இல்லாத வீட்டின் ஒழுங்கில் வெறுமையே தேங்கியிருக்கிறது. அது அழகாய் இருக்கலாம். ஆனால், அதில் உயிர் இருப்பதில்லை. குழந்தைகள் கைப்பட்டு உடையாத பொம்மைகள் தேவதைகளால் புறக்கணிக்கப்பட்டவை. என்னதான் விளையாட பொம்மைகள் இருந்தாலும் தங்கள் விளையாட்டுக்கான பொருட்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளவே குழந்தைகள் பிரியப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் கை, கால் முளைத்து நடக்கத் தொடங்கும்போதே, அந்த வீட்டில் குப்பை சேர்வதன் அளவு அதிகரிக்கிறது. வெளியில் செல்லும் குழந்தை முதலில் கொண்டு வரும் குப்பை பெரும்பாலும் கல், சாக்லெட் காகிதம், கொட்டாங்குச்சியாகவே இருக்கிறது. அது வளர வளர பல்பம், சாக்பீஸ், காகிதம் என்று வேறொரு பரிணாமத்துக்குப் பயணப்படுகிறது.

அடுத்தவருக்குக் குப்பைகளாகத் தெரிபவை அதன் உடமையாளர்களுக்குப் பொக்கிஷமாகவே தெரிகின்றன. எங்கள் ஊரில் கோவிந்தசாமி என்னும் பெரியவர். அவருக்கு வயது 65 இருக்கும்.  அவர் பல வருடங்களாக ஒரு நகவெட்டி வைத்திருந்தார். லேசாகத் துரு பிடித்திருக்கும் அந்த நகவெட்டியால் அவர் அடிக்கடி தனது நகங்களை வெட்டிக் கொண்டே இருப்பார். நானும் அந்தக் காட்சியைப் பலமுறை கண்டிருக்கிறேன். இந்நிலையில் அந்த ஆண்டு போகிக்கு வீட்டில் குப்பைகளை ஒழித்த அவரது மருமகள் அவரது நகவெட்டியையும் சேர்த்து ஒழித்துக் குப்பைத் தொட்டிக்குள் வீசி விட்டார். விஷயம் தெரிய வந்த கோவிந்தசாமியின் கண்களில் குபுக் என்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. அன்று மதியமே அவர் தன் மகன் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு கடந்த ஐந்தாண்டுகளாக அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்கிற தகவல் இல்லை. அந்த நகவெட்டிக்குப் பின்னே ஒரு கதை இருந்தது.

அந்த நகவெட்டி அவரது மனைவி மாசிமகத் திருவிழாவின்போது வாங்கிக் கொடுத்தது. ஒருநாள் தூக்கத்தில் அவர் தன்னைத் தானே சொறிந்து கொண்டபோது, அவரது, மார்பில் அவரது நகம்பட்டு பெரிய காயம் ஏற்பட்டதால், நகம் வெட்டிக் கொள்வதற்காக அவரது மனைவி அன்புடன் வாங்கிக் கொடுத்தார். அடுத்த சில ஆண்டுகளில் மனைவி மறைந்து விட, அவர் நினைவாக அந்த  நகவெட்டியை இருபதாண்டுகளுக்கும் மேலாக அவர் பாதுகாத்து வந்தார். இப்போது, அந்த நகவெட்டி குப்பையாக நினைத்து மருமகளால் கழித்துக் கட்டப்பட்டதை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அந்த நகவெட்டியின் மீதே அவர் அந்த அளவு பாசம் வைத்திருந்தால், அவர் மனைவியின் மீது எந்த அளவு நேசம் வைத்திருந்திருப்பார்?

ஏற்கெனவே குப்பைகளால் திமிலோகப்படும் தேசம், கொஞ்சமேனும் குப்பை குறைந்து காணப்படுவதற்குக் காரணம், இத்தகைய இந்திய கோவிந்தசாமிகளின்  சென்டிமெண்ட் உணர்வே. அந்த சென்டிமெண்ட் மட்டும் இல்லையென்றால் வீட்டிலிருக்கும் முக்கால்வாசி பொருட்கள் சாலைக்கு வந்து, இன்னும் பல லட்சம் டன் குப்பைகளால் தேசம் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும்.  இந்திய தேசத்தை ஓரளவு தூய்மை தேசமாக வைத்திருக்கும் கோவிந்தசாமிகளின் சென்டிமெண்ட் வாழ்க!

(-தொடரும்…)

முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...