நண்பரும், எழுத்தாளருமாக ஸ்ரீமதி அவர்களின் கடாரம் கொண்ட சோழன் நாவல் சுமார் 472 பக்கங்கள் கொண்ட சோழனின் கடற்படையெடுப்பு பற்றிய புதினம்.
வரலாற்றை வாசிப்பதில் என்றுமே எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இந்த புத்தகத்தை அனுப்பி பின், முதலிரண்டு அத்தியாங்களை மட்டும் வாசியுங்கள். பிறகு நீங்க பொறுமையாக கூட வாசியுங்கள் என்றார். ஒரு புத்தகத்தை முழுமையாக வாசிக்காமல், அதைப்பற்றிக் கருத்து கூறுவதோ, ரசித்தவைகளைப் பற்றி சொல்வதோ அறமாகாது.
நான் கடாரம் கொண்ட சோழனோடு, கதை மாந்தர்களோடு பயணித்து ஒரு வார கால ஆகிறது. அதன் மாந்தர்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீண்டு இருக்கிறேன். வேலைப் பளு காரணமாகவும் தாமதமாக எழுதுகிறேன்.

சோழந்தியின் பயணம் கடலலைப்போல சீற்றமாகவும், தாலாட்டாகவும், பயமேற்படுத்துவதாகவும் அமைந்தது. எத்தனை தகவல்கள். இதை சேகரிக்க அவர் மேற்கொண்ட பயணங்களை யோசித்தேன். முன்னுரையில் எழுதியிருக்கிறார். கடாரப்போர் என்றதும், சோழத்தில் இருந்து புறப்பட்டு, நக்காவரத்தில் ஓய்வு பெற்று, பின்னர் கடாரத்தை அடைந்ததுதான் போர்…”இவ்வளவுதான் அல்லவா ?”
அந்த “இவ்வளவில்”, சோழர்களின் போர்திறம், விவேகம், வீரம், கூரிய திட்டமிடல், துரோகம், தியாகம் என்று ஏராளமான உணர்வுகளைத் துடுப்பாய் கொண்டு சோழந்தியில் பயணித்தேன் என்றால் மிகையாகாது.
புருவங்களை உயர்த்திய சம்பவங்கள் பல….
முதல் அத்தியாயத்தில், மோகனாவின் வழி கதைச் சொல்வதைப் போன்ற துவக்கம். மர உருளையில் விரிந்திருந்த கண்கள். அவன் யார் ? கேள்வியில்…. ஒரு கட்டத்தில் அய்யோ இவனாகத்தான் இருக்குமோ என்ற பயமும், அச்சமும் தொற்றிக் கொண்டது.
அரசனுடன் கடற்பயணித்தில் பயணிக்க துடிக்கும் கடம்பன், நிறைமாத கர்ப்பிணியான மனைவியை விட்டுப் பிரியக்கூடாது என்று படையிலிருந்து துரத்தப்பட்டு, தன் கணவனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மனைவி. அதற்கு உறுதுணையாய் இருக்கும் மோகனா.
மாந்தைக் கிழாரின் அறிவும், வயது முதிர்ந்தாலும் அவரின் வீரமும் வியக்க வைக்கிறது. சோழனின் ஒவ்வொரு அறிவாற்றலையும், புத்திக் கூர்மையினையும், திட்டங்கள் அனைத்தும் எதிர்கால நன்மையினைக் குறித்து செயல்படுத்துவதைப் பற்றியும் கிழாரின் விளக்கங்களை மோகனா மட்டுமல்ல, வாசிக்கும் நாம் கூட விழி விரித்துக் கேட்டுக் கொள்கிறோம்.
முக்கியத் தகவல்களை அனுப்பும் ‘எண்ணோலை’ பற்றிய விளக்கம் வெகு அருமை.
எறும்புண்ணிக்கு பெயர் அலங்கு, மெய்ப்பை என்றால் சட்டை, தனு தம்பர்கள் எனில் வில் வீரர்கள். கப்பலின் கட்டுமானம், நன்னீர் சேகரித்து எப்படி எடுத்து செல்வது, கப்பலின் மேல் தளத்தில் காய்கறிகள் பயிரிடுவது. குதிரைகளும், யானைகளும் எப்படி கொண்டு வரப்படுகிறது.
அதில் நிலத்தில் இருப்பதைப் போலவே அவைகளை உணரச் செய்ய செய்யும் தந்திரம், அதற்கு தரும் மருந்தின் அளவு, புகட்டும் முறை, சேணம் முறிப்பது என்றால் என்ன ? இன்னும் எத்தனை எத்தனையோ தகவல்கள்.
கடலன்னையை வணங்கி போடப்படும் படையலில் மாமிசம் இருக்கவேண்டும் என்று கூறப்படும் இடத்தில்…. பூமித்தாய்க்கு எப்படி பொறுமை அடையாளமோ அதேபோலக் கடலன்னை கோபத்தின் அடையாளம் அல்லவா ? கொஞ்சம் கோபப்பட்டாலும், நாமெல்லாம் “அவளது நீல வாயக்குள் நீந்த முடியாமல் மரணிக்க வேண்டியதுதான்” என்று கிழார் உரைக்கும் நேரம்… கதை முழுக்க அழகான அநேக வர்ணனைகள் நிறைந்திருந்தது.
காதல் என்ற ஒன்று வந்துவிட்டால்தான் இந்த மனம் எத்தனை தூய்மையடைந்து விடுகிறது. அதற்கு மோகனாவின் மனமாற்றம் நல்ல உதாரணம். தாய் திருநாட்டை யார் இகழ்ந்தாலும் விடேன் என்ற கோபம் கொள்ளும் அருள்மொழி, அவன் தன் அருகிலேயே வைத்திருந்த அந்த முருகர் சிலை என்று கதை. மனதிற்குள் அலையலையாய் உற்சாகம் எழுப்பியது.
ஸ்ரீ விஜய நகர மன்னர் சங்க்ரமனின் முதல் மகள். அவளின் சூழ்ச்சி, நக்காவரத்தில் அதனை சோழர்கள் முறியடிப்பது.
ரத்தமின்றி, காயங்கள் ஏதுமின்றி ஆங்காங்கே வீரர்கள் வாய் கோணலாகி சுருண்டு கிடந்ததை உணர்ந்தது. ‘அங்கைப் போர்முறை’ என்று மோகனா முணுமுணுத்தாள். அது என்ன போர்முறை என்பதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள். யார் யாருக்கு விரோதி என்று யோசிப்பதிலேயே, எதிர்பார்ப்பதிலேயே, வாசகர்களை வைத்துக் கொள்வதில் இருக்கிறது ஆசிரியரின் சாமார்த்தியம்.
அதிலும், காதலி மோகனா பசியார அருள்மொழி, பலாப்பழத்தைப் பெற்று வரும் இடமும், அதில் உள்ள சுளைகளை பழத்தைப் பிரிக்காமலே கணக்கிடுவதும் ஆகச்சிறந்த புதிர்.
சோழம் வென்றது. போரில் ஈகையை கொடுத்தும் திருந்தாதவர்களை, ராஜேந்திர சோழர் சாய்தார். கடற்போரை வென்றார். ‘

‘என் கணவனை மட்டுமல்ல, அவன் மூலம் ஈன்ற கைக்குழந்தையினையும் கூட சோழத்திற்காக அர்ப்பணிப்பேன். உன் தந்தையைப்போல நீயும் நாட்டிற்காக மடிய வேண்டும்’ என்ற வீரமிக்க பெண்மணியை கண்டு தானும் இந்த சோழ மண்ணில், வாழ்வதற்கு பெருமையடையும் மோகனாவின் வணக்கத்தோடு முடிகிறது. “கடாரம் கொண்ட சோழன்” நாவல்.
அருமையான எண்ணற்ற, தருணங்களை நான்கு பாகங்களாக கலத்திலும், களத்திலும் விவரித்திருக்கிறார்.
வீரர்களின் எண்ணிக்கை, சரியான நேரத்தில் போர்களத்திற்கு அவர்களை வரவேற்கும் முறை.சிந்தனைக்கு அப்பாற்பட்ட செல்லச் செழிப்புடனும், அறிவாற்றலுடனும், அதீத வீரத்துடன் சோழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை, சிறந்த வரலாற்றுப் புதினமாக படைத்திருக்கும் … ஆசிரியர் ஸ்ரீமதி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.
