நேற்று (14/06/25) அன்று லேனா சாரின் பண்ணை வீட்டுக்கு, பேனாக்கள் பேரவை எழுத்தாளர்களும், எழுத்தை ரசிப்பவர்களும் ஒரு இன்ப சிற்றுலா மேற்கொண்டோம்!
என் ஆருயிர் நண்பர்களுடன் அநேக சிற்றுலாக்களில் பங்கு கொண்டு சுகித்திருந்தாலும், எழுத்தாளர்களோடு ஒரு இன்பப் பயணம். இதுவே எனக்கு முதல் முறை!
அதை ஒரு எளிமையான, யதார்த்தமான, எழுத்தாள இதயங்களோடு உறவை முன்னெடுக்கும் இயல்பான சந்திப்பாக மாற்றிக் காட்டினார்கள்- எழுத்துலக மற்றும் சேவையுலக ஜாம்பவான் திரு NCM மற்றும் அத்துணை ஏற்பாடுகளையும் சிரமேற்று செய்த மடிப்… க்கும், பூவேந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!
பயணத்தில் ஒரு சிறு தொய்வும், அலுப்பும் ஏற்படாமல், தனது மடை மாறாத உற்சாகத்தாலும், மெல்லிய காயப்படுத்தாத கிண்டல்களாலும், உசுப்பேற்றி கலகலப்பாக்கிய NCM அவர்களின் சகோதரத்துவம் என்னை மலைப்புக்குள்ளாக்கியது!
சிறப்பு விருந்தினர்கள் சின்னத்திரை தொடர்களின் கதாநாயகன் தேவி பாலா அவர்களும், மர்ம மற்றும் வித்தியாசமான கதைகளை வழங்கி வரும் இரட்டை எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலா அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ள, பயணம் தொடர்ந்தது.
முதலில் காலியாயிருந்த வயிற்றை நிறைக்கும் போட்டி ஆலடிப்பட்டியானில் நவதானிய இட்லி, தோசை, பொங்கலோடு, காபியும் சேர எங்களை சுறு சுறுப்பாக்கியது.
அதன்பின் கண்திறந்த கலியுக வரதன் நரசிம்ம பெருமாளை (சிங்க பெருமாள் கோயில்) தரிசித்துவிட்டு. லேனா சாரின் வீட்டிற்கு லூட்டியுடன் பயணித்தோம்!
உள்ளே நுழையும் போதே, எழுபது புத்தகங்களின் ஆசிரியர், வாழ்வு முன்னேற்ற ஆயிரம் கட்டுரைகளை எழுதியவர், கலைமாமணி லேனா தமிழ்வாணன் அவர்கள், வேட்டி சட்டையுடன், ஓடோடி வந்து எங்களை வரவேற்றார்! அவரின் எளிமை, பணிவு, பேரன்பைக் கண்டு நாங்கள் சிலிர்த்தோம்,
உடனே எங்களுக்கு இளநீரும், நுங்கு பழங்களும், மாம்பழ துண்டுகளும் தரப்பட்டு, நாங்கள் தாகசாந்தி அடைந்த போது, அவரே வசந்த மாளிகை சிவாஜி போல, மேல் சால்வை அணிந்து, (கறை படாமலிருக்க) வந்த விருந்தினர்களுக்கு அவரே இளநீர் காய்களை வெட்டிக் கொடுத்தார்.
அவரைச்சுற்றி வட்டமாக நாங்கள் அமர்ந்து இளநீரை சுவைத்திருக்க, அவர் இந்த தோட்டத்தின் பூர்வ கதையை விளக்கினார். அவசரத் தேவைகளுக்காக, அந்த நிலத்தை விற்றுவிடாமல், நிலத்தைப் பண்படுத்தி அதை பழமுதிர்ச்சோலையாக தான் மாற்றியதை எடுத்துச் சொன்னார்!

அதையெல்லாம் விடுத்து, அவரின் இளமைக் கோலத்தின் ரகசியத்தை வற்புறுத்திக் கேட்டோம். அதனால் அவரின் உண்மையான வயதை; வேண்டாம்- ரகசியம்!, அதற்கு சீரான உடற்பயிற்சி, மது, புகையிலை அற்ற வாழ்க்கை, நேர்மறை சிந்தனை மற்றும் எதையும் தாங்கும் இதயம் என விளக்கினார்.
நான் என்னை நினைத்து பெருமூச்சு விட்டேன்.

அப்போதே, அங்கேயே, சிறப்பு விருந்தினர்களின் வெற்றிப்பாதையைப் பற்றிய நேர்காணல் தொடங்கியது. அவற்றில் தெளிந்த சில நல்முத்துகள் இதோ:-
சு பா அவர்களின் 20 கதைகள் கல்கிக்கு எழுதி அனுப்பி 19 கதைகள் திரும்பிவிட்டதும், மீதி ஒரு கதை வராமல் அவர்கள். தவித்ததும், போட்டியில் பரிசு பெற்றதும் ஒரு மர்ம நாவலின் படபடப்பைத் தந்தது!
இயக்குநர் திரு கே.வி.ஆனந்த் அவர்களின் படங்களுக்கு கதாசிரியர்களாக இருந்ததும், அவர் பட தலைப்புகளில் கதை சுபா மற்றும் தன்பெயரைப் போட்டு பெருமைப் படுத்தியதும் மறக்க முடியாதது என்று கூறினர்.

கல்லூரி நாட்களில் துவங்கிய இலக்கிய நட்பு காலங்கள் கடந்தும், இன்றும் இலக்கியப் பணியை தொடர்ந்து இருவரும் செய்து வருவது எங்களை மலைக்க வைத்தது!
அவர்களின் உள்ளாழ்ந்தநட்பும், நேசமும், அவர்கள் தங்களின் கதையை ஒருவர் சொல்லும் போது , உணர்ச்சிப் பெருக்கில் இன்னொருவர் குறுக்கிடும்போதும், அதைப் புரிந்து கொண்டு அவரை பேசவிட்டு ரசிக்கும் இன்னொருவரைப் பார்த்து, புரிந்து கொண்டோம், நட்புக்கும் கற்பு இருக்கிறது என்று..
இவர்களைப் பார்த்து, பதின்வயதில் இருந்த நானும் என்னுடைய அண்ணனும், இரட்டையராக எழுத்துலகில் கால் பதிக்க வேண்டும் என முயற்சித்து, தோல்வியுற்றதை நினைத்துக் கொண்டேன். அவர்களின் எழுத்தின் வலிமையைப் புரிந்துகொண்டேன்!
வீட்டு உறவுகளின் சிக்கல்களை முடிச்சுப் போட்டும், அவிழ்த்தும், காட்டும் இவரின் கைதேர்ந்த தேவிபாலா மந்திரம் உலகறிந்தது! ஆம்! சிறுகதையாளர், நாவலாசிரியர், சின்னத்திரை தொடர்களின் கதை வசன ஆசிரியர் திரு தேவிபாலா அவர்களை அறியாத சின்னத்திரை மற்றும் நாவல் படிப்பவர்களின் ரசிகர்கள் இருக்க முடியாது.
இவரின் பெயர்க் காரணம் அவர் விளக்க புரிந்தது. திருவேற்காடு மாரியம்மன் அஅவரது குலதெய்வம் அதனால் பெயரின் முன்னால் தேவி, பாலா என்ற அவரின் பெயர் பின்னாலும், இணைக்கப்பெற்று தேவிபாலா ஆனார்.
எண்்ணற்ற நாவல்கள், சிறுகதைகள், சின்னத்திரைத் தொடர்கள், ( நீள் தொடர்களின் 15000 அத்தியாயங்கள்) கட்டுரைகள் என பன்முக ஜனரஞ்சக எழுத்தாளரின் சாதனைகளைக் கேட்டு மயக்கமுற்றோம்!
இப்போதும் மாதம் ஐந்து நாவல்கள், இரண்டு சின்னத்திரைத் தொடர்கள், பல சிறுகதைகள், கட்டுரைகள் என காலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு மணி இரண்டு வரை எழுதும் நவீன AI அல்ல மாமனித எழுத்தாளர் இவர் என்றால் நம்ப முடிகிறதா?
அவர் KB மற்றும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களை விளக்கினார். KB அவர்கள் தன்னை சினிமாத்துறைக்கு வரவேண்டாம் என தடுத்தி நிறுத்தியதையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்ந்தார்.
அடுத்து சங்கதிகளைக் கேட்டு சோர்வுற்ற எங்களின் வயிற்றுப் பசிக்காக அருமையான மதிய உணவு பரிமாறப்பட்டது! காரட் சாதம், புதினா சாதம், சப்பாத்தி, தக்காளி தொக்கு, தயிர் சாதம் ஊறுகாய் என ஒரு கை பார்த்தோம்.
சாப்பிட்ட மயக்கத்தில் இருந்த போது, பண்ணையை சுற்றிப் பார்க்க அழைத்தார் லேனா அவர்கள். கருநாகம் வசிக்கும் கரும்புக் காட்டை தவிர்த்து, மாம்பழ சோலைக்குள் பிரவேசித்தோம்.
தானே விழுந்த மாங்காய்களை எடுத்து அங்கேயே அன்பளிப்பாக அளித்தார்! ஸ்வயம்புவாக முளைத்த தேக்குமரங்களின் வரிசையைக் காண்பித்தார். இருபத்தியைந்து ஆண்டுகள் ஆனபின்னால் அரசு அனுமதியுடன் வெட்டி விற்கலாம் என்றார். ஒவ்வொரு மரமும் அப்போது லட்ச ரூபாய்களைத் தாண்டும் என்றார். இப்போது பதினைந்து ஆண்டுகள் ஆகிறதாம். இன்னும பத்து வருடங்கள் கழித்து தாம் இருப்போமோ என்று கவலைப்பட்ட லேனாசாரை நாங்கள் அனைவரும் நீங்கள் நூறாண்டு காலம் இருப்பீர்கள் என வாயாற தெஞ்சாற வாழ்த்தினோம்.
பின்னர் தேதீருக்காக குழுமிய எங்களை ஜவஹர் சார் கேள்விகளைக் கேட்டுத் துளைத்தார்! ஒவ்வொருவருக்கும் gpay இல் பரிசாம்! ஜவஹர் சார்- I am waiting! பின்னர் எங்களின் குறும்பாட்டுக் கச்சேரி!
இதில் அதிசயம் லேனா சார் இதிலும் ஒரு கலக்கு கலக்கினார்! அருமையாகப் பாடி எங்களை அசரவைத்தார்! ‘என்ன தவம் செய்தனை’ பாடலை சற்றும் மூச்சு வாங்காமல், தெளிவாகவும், பிசிறு தட்டாமலும், இனிமையாக உம் பாடினார்! திரு NR Sampath அவர்கள் அவருடன் duet ஆக பாடினார். எங்கள் குழுவின் ஆஸ்தான பாடகர்கள்- சிவகாமி, அகிலா, காலவன், TNR யாவரும் அழகாகப் பாடினார்கள்.
விடை பெறும் நேரம் வந்துவிட்டது. லேனா சார் தேங்காய்கள் அடங்கிய ஒரு பையில் கவிஞர் அசோகன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய ஒரு மாம்பழத்தையும் சேர்த்து பரிசாக வழங்கினார்! பிரியாவிடை பெற்றோம்!
லேனா சார், பேருந்துக்குள் ஏறி எங்களுக்கெல்லாம் விடையளித்தது எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
அடுத்து சொந்தக்கூட்டை விடுத்து குஞ்சு பொரிக்க வந்த வலசை நாரைகளை வேடந்தாங்கலுக்குச் சென்று கண்டு களித்தோம். பிறகு சென்னை திரும்பல் தான்!
இனிய நினைவுகளை அசைபோட்டபடி, எங்கள் பாடற்குழுவினர் பாடியபடி, எசப்பாட்னுக்கு அடி எடுத்துக் கொடுத்துஉதவிய NCM உற்சாக குரலுடன் எங்களின் கூடுகளை அடைந்தோம்.
எழுத்துச் சிற்பிகளிடம் பிரியாவிடை பெற்றோம்! மீண்டும் இன்னொரு நிகழ்வில் சந்திப்போம் என்ற இனிய நினைவுடன் நாளைய பொழுதை சந்திக்கத் தயாரானோம்!
–P.V.இராஜகுமார்

மறக்க முடியாத அருமையான பயணம். பதிவு சிறப்பு சகோ