28/6/25 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை தரமணியில் உள்ள spastics society of Tamil nadu அலுவலக அரங்கில் Born 2 win சாதிக்கப் பிறந்தவர்கள் அமைப்பின் நிறுவனர் திருநங்கை ஸ்வேதா அவர்கள் மாற்று பாலினத்தவர்களின் வாழ்வியல் போராட்டங்களில் வென்று சாதித்த திருநங்கைகளான பிரபல நடிகையும் பன்முகத் தன்மை வாய்ந்தவருமான மிலா, தீபிகா, போலீஸ் கான்ஸ்டபிள், பெரி, அதிகாரி, உணவு பாதுகாப்பத் துறை, டட்லி முத்து ஈஸ்வரன், ஆசிரியை ஆகியோருடன் ஒரு கலந்துரை யாடல் “கதைப்போமா வாங்க” சீசன் நான்கு என்று ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக திருமதி ருக்மணிசேகர் அவர்கள் மிக அருமையான கேள்விகளை தொடுத்து கலந்து கொண்டவர்களின் மனப்பூட்டை திறந்து அவர்களது வாழ்க்கை சவால்களை எதிர்கொண்ட நிகழ்ச்சிகளை தொகுத்து சொல்லும்படி வெகு திறமையாக கையாண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். அவர்கள் நால்வருமே தங்களைப் பற்றிய அறிமுகத்தின் போது “குழந்தைகளாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பெற்றோர் அல்லது உற்றோர் பெயர் வைப்பர்,…. ஆனால் எங்களைப் போன்றோருக்கு பிடித்த மான பெயரை நாங்களே வைத்துக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம்” என்று சொன்னது வெகு நெகிழ்ச்சி யாக இருந்தது.
மிலா,அவர்கள் தான் ஆரம்பத்தில் தாய் தந்தையருடன் சௌதியில் இருந்ததையும் தன் மாற்றுப் பாலினின உணர்வை பெற்றோரிடம் சொல்லி தனக்கு சொத்து சுகம் ஏதும் தேவையில்லை என்றும் தன் உடல் அறுவை சிகிச்சைக்கு மட்டும் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து தன் சொந்த முயற்சியில் மீடியா ஸ்டார் ஆக வந்த வாழ்க்கையை சொன்னார்.

தனக்கு நடிகை ஷகீலா வளர்ப்பு தாயாக இருந்து தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மாற்றுப் பாலின குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை நிராதரவாக வெளியே விரட்டி விடுவது கண்டிக்கத் தக்கது என்றும், அரசாங்கம் அத்தகையைபெற்றோருக்கு சட்டப் பூர்வ தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


ஆசிரமத்தில் வளர்ந்த தீபிகா உடலின மாற்றத்திருக்காக சென்னை வந்திருந்த போது ரயில்வே ஸ்டேஷனில் மயக்கமுற்ற ஒருவருக்கு யாரும் உதவி செய்ய முன் வராததால் தான் முன்னின்று உதவி செய்ததையும் பொது மக்கள் அவரை தொடாதே என்று இவரை புறந்தள்ளியபோது அங்கிருந்த காவல் அதிகாரி இவருக்காக பரிந்து பேசிய அவரின் சொல்லுக்கு கட்டுப் பட்ட வெகு ஜனத்தை கண்டு தானும் ஒரு போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று பல போராட்டங்களுக்கு பின் போலீசில் சேர்ந்து பணியாற்றும் வாழ்க்கை எடுத்துச் சொன்னார்.
அடுத்ததாக பெரி தன்னை மாற்று பாலினமென்று உதாசீனப் படுத்திய இந்த சமூகத்தில் கல்வி ஒன்றே தன்னை முன்னிறுத்தும் என்று மிகவும் கஷ்டப்பட்டு பட்டப் படிப்பை முடித்து கிடைத்த சின்ன சின்ன கம்பெனி உத்தியோகம் பார்த்து ஆவடியில் தங்கி பல அரசு உத்தியோகத்திற்கான தேர்வுகளை எழுதி இறுதியாக லட்சங்களில் சம்பளம் வாங்கும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அதிகாரியாக உயர்ந்து இருப்பதை சொல்லி, மாற்றுப் பாலினின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வி ஒன்று தான் ஒரேவழி என்று திட்ட வட்டமாகச் சொன்னார். தன் பெயரின் முன் தன்னை பாதுகாத்து கல்வி அளித்த திண்டுக்கல் டட்லி நிறுவனத்தின் பெயரை சேர்த்த டட்லி முத்து ஈஸ்வரன் இன்று ஒரு ஆசிரியராக உயர்ந்து எல்லோருக்கும் ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறார்.
அந்த நால்வரும் தங்கள் வாழ்க்கையில் மாற்றுப் பாலினத்தவராக தங்களை உணர்ந்த தருணத்திலிருந்து வாழ்க்கைக்குத் தேவையானது கல்விதான் என்று விடாமுயற்சியுடன் இருந்த வெற்றிக் கதையை கேட்டு அரங்கமே கரகோஷம் செய்தது.

நிகழ்ச்சியின் இடையே ஸ்வேதா அவர்கள் அப்சனா பேபி, அனு, அகிலா, அதுல்யா போன்றோர்களை கவிதைகள் வாசிக்க வைத்து அவர்களை அவையோர் முன் நிறுத்தி சிறப்பு செய்தார். மேலும், Born 2 win அமைப்பாளர் நங்கை ஸ்வேதா அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த குறும்படதயாரிப்பாளர், ஊடகவியாளர் திரு.ராஜிகாந்த், மற்றும் ரவி நவீனன் ஆகியோற்கு நினைவு விருது வழங்கி கொளரவித்தார்.

இரண்டு திருநங்கை களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. பல்வேறு தளங்களில் வாழும் திருநங்கைகளின் அன்றாடவாழ்க்கையை சித்தரிக்கும் ‘அந்த ஏழு நாட்கள்’ எனும் குறும்படம் அடுத்த சில மாதங்களில் தயாரிக்கப்படவிருப்பதன் முன்னோட்டமாக அறிவிப்பு பேனர்வெளியிடப்பட்டது.
இந்த சமூகத்தில் ஆணென்றும் பெண்ணென்றும் நாம் சாதித்தவை எதுவும் இந்த மாற்றுபாலின மங்கைகளின் சாதனைக்கு ஈடாகாது. அவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது நாம் வாழ்வில் படுவதெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை என்ற உண்மை அரங்கை விட்டு வெளியே வரும்போது முகத்திலாடித்தார்போல புரிந்தது. மாற்றுப் பாலினமக்களுக்கான சமுக, அரசியல் உரிமைகள் அவர்களுக்கு கிடைத்து அவர்தம் வாழ்வு மேம்பட பொது மக்கள் மன முதிர்ச்சி அடைய இறைவன் அருள் கிட்டவேண்டும்.

மாற்றுப் பாலின மக்களின் கதைப்போமா சீசன் நான்கு பற்றிய எனது கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.
ரவி நவீனன்.