2026-27 நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் சில முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஞாயிற்றுக்கிழமையில் நிதிநிலை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
2016ஆம் ஆண்டு வரையில் தாக்கலான வருடாந்திர நிதிநிலை அறிக்கைகள், பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் செய்யப்படுவது மரபாக இருந்தது. அதில் சீா்திருத்தம் செய்யும் விதமாக 2017-18 நிதியாண்டில் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தேதியை பிப்ரவரி 1 ஆக நிா்ணயித்தாா்.

ஏப்ரல் மாதத்தில் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பு, மத்திய அரசுத்துறைகளும் யூனியன் பிரதேசங்களும் அவற்றின் வருடாந்திர செலவினங்களைத் திட்டமிட்டுச் செயல்பட அதிக நேரம் வழங்க ஏதுவாக பிப்ரவரி 1-ஐ நிரந்தர பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியாக அறிவிப்பதாக அப்போது மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அதே நாளிலேயே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு உறுதிகாட்டியுள்ளது.
இதேபோல, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நேரம் மத்தியில் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது மாற்றம் செய்யப்பட்டது. 1999-2000 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சா் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்தாா். அதற்கு முந்தைய ஆண்டுவரை பிரிட்டிஷ் காலனித்துவ நடைமுறைப்படி, மாலை 5 மணிக்கே நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதை மாற்றி மக்களவையில் அலுவல் தொடங்கியவுடன் கேள்வி நேரமின்றி நேரடியாக நிதிநிலை தாக்கல் செய்யும் வழக்கத்தை அப்போதைய நிதியமைச்சா் யஷ்வந்த் சின்ஹா அறிமுகப்படுத்தினாா். அந்த பாரம்பரியம் தற்போதும் பின்பற்றப்படுகிறது.
