பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்கசாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1964-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. பிராட்வே பேருந்து நிலையம் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்காக இருந்த நிலையில், காலப்போக்கில் அங்கு பல்வேறு கடைகள் அமைந்தன.
சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் அமைந்திருந்ததாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், இடநெருக்கடியால் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002-ம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டன. இதன் பின் பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.

பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் 2022-23-ம் ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் பிராட்வே பஸ் நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புக்கிணங்க, ரூ.822.70 கோடி மதிப்பில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடம் (Multi Modal Facility Complex) கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று இப்பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சிறப்பம்சங்கள்: இத்திட்டம் உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் எம்ஆர்டிஎஸ்/புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட கட்டிடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டிடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
இதில் 73 பேருந்துகளை நிறுத்தும் வசதி, பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெறும். 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 ச.மீ. கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ரூ.516 கோடியில் 19 பாலங்கள்: சிஎம்டிஏ சார்பில் பெரம்பூர் நெடுஞ்சாலையில், ரூ.21.50 கோடியில் கட்டப்பட்ட அம்பேத்கர் திருமண மாளிகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 10 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர், “சென்னையின் கட்டமைப்பு வசதியைப் பெருக்க வேண்டும்; அதை நல்ல வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்டு அந்தப் பணியை நிறைவேற்றி வருகிறோம்.
திமுக அரசு அமைந்த 5 ஆண்டுகளில், வட சென்னை பகுதியில், மேயர் சிட்டிபாபு பாலம், தென் சென்னையில் தியாகராய நகர் ஆகாய நடை மேம்பாலம், ஜெ.அன்பழகன் மேம்பாலம், வடசென்னையில் செங்கை சிவம் பாலம் என்று ரூ.500 கோடியில் பல்வேறு பாலங்களை அமைத்திருக்கிறோம். ரூ.516 கோடியில் இன்னும் 19 பாலங்களை சென்னை மாநகரில் உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன” என்றார்.
