பத்மஸ்ரீ விருதாளர் எழுத்தாளர் சிவசங்கரியோடு உரத்த சிந்தனை சங்கம் , நம் உரத்த சிந்தனை மாத இதழ் கடந்த 35 ஆண்டுகளாக இணைந்து பயணித்து வருவது இறைவன் தந்த இன்ப வரம்.
உரத்த சிந்தனையின் பல செயல்பாடுகளை பல மேடைகளில் உச்சி முகர்ந்து பாராட்டும் அவர், விளம்பரம் விரும்பாமல் செய்து வரும் தனது அறப்பணிகளில் ஒரு பகுதியை செய்திட உரத்த சிந்தனை சங்கத்தைத் தேர்வு செய்து அறம் செய விரும்பு திட்டம் வாயிலாக வாய்ப்பளித்திருப்பது உரத்த சிந்தனை மீதான அவரது பரிபூரண நம்பிக்கையின் வெளிப்பாடு. நம் மீது கொண்ட அன்பின் அடையாளம்.
தேசிய விருதுக்கு எப்போதோ தகுதி பெற்றிருந்த அவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்ட போது நம் குடும்பத்தின் மூத்த சகோதரிக்கேக் கிடைத்தது போன்று உற்சாகம்.
அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே அவரை அலைப்பேசியில் அழைத்து வாழ்த்தினாலும் நேரில் சென்று வணங்க மனம் துடித்தது. ஏக்கம் கொண்டது.
காலை 10 மணி அளவில் அவரிடம் இருந்து திடீர் அழைப்பு . “ராம் (02.02.2026) காலை 11.30 மணிக்கு வாங்க .. நிறைய பேர் வேண்டாம் .. ஆறேழு பேர் வாங்க நிறைய பேர் வேண்டாம்பா ” என்று அன்பு தோய்ந்து சொன்னதும் ஆனந்தம் கரை புரண்டது.
யாரை அழைப்பது யாரை விடுவது ? உரத்த சிந்தனையில் பல பேரை அவருக்கு நெருக்கமாகத் தெரியுமே? எல்லோருமே பல்துறை வித்தகர்களாயிற்றே … இது என்ன சோதனை என்று நீண்ட நேரம் யோசித்து பாரதி உலா புரவலர்கள் மற்றும் உரத்த சிந்தனையின் தலைவர் , செயலர் , பொருளாளர் , இணைச் செயலாளர்கள் என பதினோரு பேர் செல்லத் திட்டமிட்டு அது எட்டாகக் குறைந்து கடைசியில் ஏழு பேர் கொண்ட குழு இன்று சந்திக்க ஏற்பாடாகியது.

நேற்று காலை 11 மணிக்கு பி.கே.பி சார் போனில் அழைத்து .. “சார் அவர்களுக்கு என்ன வழங்குவது ? வழக்கமான பழங்கள் பொன்னாடைத் தவிர்த்து என்ன தரலாம் ? பிராஸ் மெட்டலில் பத்மஸ்ரீ சிவசங்கரி என்ற பெயர் பொறித்து கொடுத்தால் வாசலில் பதிய வைக்கலாம்” என்றார். அவரே அதைப் பற்றி விசாரிக்க அக்கறையுடன் அடுத்த நிமிடங்களில் அமேசானில் தேடினார். ஒரு வாரம் ஆகும் என்றார்கள். ராயப்பேட்டை ஏரியாவில் உள்ள சில கடைகளைத் தேடி அவர்களை அவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்க .. அவர்களும் உடனடியாக முடியாது என கைவிரித்தனர்.
உடனே எனக்குள்ளிருந்த ஞானசூன்யத்தின் மூளை வேலை செய்து (எப்போதாவது வேலை செய்யும் ) ஏன் அதை பிரேமாகத் தரக்கூடாது என்று யோசித்தது.
கடவுளின் கருணையால் நேற்று நம் இதழின் இளம் டிசைனர் அபினேஷூடன் இதழ் சம்பந்தப்பட்ட பணிகள் செய்து கொண்டிருந்ததால் .. அவருக்கு கொஞ்சூண்டு ஏ.ஐ. வேலையும் தெரியும் என்பதால் அரை மணி நேரத்தில் பத்மஸ்ரீ சிவசங்கரி என்ற பெயர் பொரித்த டிசைன் தயாராகியது
உடனே பெரம்பூரில் ஞாயிற்றுக்கிழமையில் அரை நாள் வேலை செய்யும் ஸ்கொயர் பிரதர்ஸ் டிசைனிங் பிரிண்டிங் சென்டருக்கு சென்று அழகாக பிரிண்ட் செய்து கிளாஸி பிரேம் செய்து முடித்து
ஐடியா மன்னன் பி.கே.பி சாரிடம் ஓ.கே வாங்கிய பிறகுதான் மூச்சு விட்டேன் . பெருமூச்சு விட்டேன் என்றும் கூட சொல்லலாம்.
சரி .. சிவசங்கரி மேடத்துடன் என்ன பேசினீங்க ? அவங்க என்ன சொன்னாங்க ..? மேட்டருக்கு வாங்க என்கிறீர்களா ?
மீதிக் கதையை பி.கே.பி சாரின் முகநூலில் இருந்து அவர் அனுமதியுடன் காபி பேஸ்ட் பண்ணியிருக்கிறேன்
பத்மஸ்ரீ விருது பெற்றமைக்காக திருமதி சிவசங்கரி அவர்களைச் சந்தித்து அரசு அளிப்பதற்கு முன்பு பத்மஸ்ரீ பெயர் போட்டு படமளித்து உரத்த சிந்தனை சார்பாக வாழ்த்தினோம். (நேற்று காலையில்தான் இந்த யோசனையை சொன்னேன். எங்கள் செயல் வீரர் உதயம்ராம் AI உதவியுடன் ஓவியம் போல படத்தை வடிவமைத்து பிரமாதப்படுத்தி விட்டார்)
நெகிழ்ந்து போனார் சிவசங்கரி. மைசூர்பாகு, சுடச்சுட மசால் வடைகள், ஜூஸ் சாப்பிட்டபடி ஒரு மணி நேரம் மனம் விட்டுப் பேசிவிட்டு வந்தோம்.
எப்போதும்போல உற்சாகமாகப் பேசினார். உரத்த சிந்தனை தனித்து ஒரு பெரிய பாராட்டு விழா எடுக்க சம்மதம் கேட்டோம். ‘உரத்த சிந்தனை என் குடும்ப அமைப்பு, நீங்களெல்லாம் நெடுங்காலமாக என் ஆத்மார்த்தமான நண்பர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்’ என்றார்.
டெல்லியிலிருந்து போனில் தகவல் வந்ததையும், கவர்னர் திருமிகு.ரவி அவர்களும், முதல்வரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களும் போன் செய்து வாழ்த்து சொன்னதையும், நேற்று அவர் படித்த சாரதா வித்யாலயா பள்ளியில் நிகழ்ந்த விழா குறித்தும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
அவருடைய முக்கியமான 25 புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதையும், ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரே படித்துப் பார்த்து திருத்தங்கள் செய்வதையும் தற்போதைய இலக்கிய பணியாகக் குறிப்பிட்டார்.
வாழ்த்த வந்ததற்கு அவர் நன்றி சொன்னபோது, நாங்கள் வாழ்த்த வரவில்லை, ஆசிகள் பெற்றுச் செல்லவே வந்தோம் என்று ஜிபுக்காவிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
எங்கள் தலைவி பத்மினி பட்டாபிராம், ஆடிட்டர் ஜே.பி, கணேஷ் கிருஷ்ணா, ஜி..சுப்பிரமணியம், தொலைப்பேசி மீரான் எல்லோரையும் ஒருங்கிணைத்து இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த உதயம் ராம் இப்போதே பிரமாண்டமான பாராட்டு விழாவுக்கு திட்டங்கள் யோசிக்கத் துவங்கி விட்டார்.
(பி.கே.பியின் முகநூல் பதிவு)
என் விரல்களுக்கு ஓய்வளித்த பரத் – சுசிலா படைப்பாளருக்கு நன்றி.
படங்களும் வீடியோவும் எடுத்த எழுத்தாளர் சிவசங்கரியின் உதவியாளருக்கும் நன்றி.
