சென்னையில் பறவைக் காய்ச்சல்

சென்னை: காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்ததில், அவை ஹெச்5.என்1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் தொடர்ந்து காகங்கள் இறந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறை மற்றும் கால்நடைத் துறை இணைந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள் மற்றும் பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பறவைகளின் கழிவுகள் மூலமாக மனிதர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படக்கூடும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ அல்லது மனிதரிடமிருந்தோ ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ போன்ற தொற்றுகளை கொசுக்கள் கடத்தும் அபாயமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றால் காய்ச்சல், தலைவலி, தசை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பறவைக் காய்ச்சலால் கோழிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை நன்கு வேகவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். மேலும், வீட்டின் அருகிலோ அல்லது பொது இடங்களிலோ இறந்து கிடக்கும் காகங்கள் மற்றும் பிற பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. இவ்வாறான நிகழ்வுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

அச்சம் தேவையில்லை: சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னைமாநகரம் முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் காகங்களை பாதுகாப்பாக மயானங்களில் புதைக்கவும், எரிக்கவும் கால்நடைத் துறைக்கு, மாநகராட்சி உதவி வருகிறது. பொதுஇடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்வோருக்கு, இறந்த பறவைகளை கையாள்வது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் பொதுமக்களுக்கு பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. பறவைகள் இறப்பும் இல்லை. எனவே, பொதுமக்கள் பறவை காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!