11-ம் தேதி துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

தமிழகத்தில் வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், பிப்.11-ம் தேதி தமிழகம் வரும் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, மாநிலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள், இறுதி வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்கிறார்.

தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் கடந்த அக்.27-ம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த டிச.19-ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் கடந்த அக்.27-ம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இறந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிச.19 முதல் ஜன.30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த அவகாசம் வழங்கப்பட்டது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேர், நீக்கல் கோரி 1.84 லட்சம் பேர், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேர் என மொத்தம் 24.47 லட்சம் பேர் படிவங்களை வழங்கியிருந்தனர்.

இதே காலகட்டத்தில் இணையவழியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5.74 லட்சம் பேர், நீக்கல் கோரி 15.93 ஆயிரம் பேர், திருத்தம் கோரி4.38 லட்சம் பேர் என மொத்தம் 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் பிப்.11-ம் தேதி சென்னை வருகிறார். இங்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்து கேட்க இருப்பதாகவும், வார்டு மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!