சொதப்பல் மீல்ஸா அன்னப்பூரணி…! | தனுஜா ஜெயராமன்

 சொதப்பல் மீல்ஸா அன்னப்பூரணி…! | தனுஜா ஜெயராமன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றாலே லீடிங் ரோல் தான்.. கதாநாயகிக்கு முக்கியதுவம் உள்ள ரோலா கூப்பிடு நயன்தாராவை என்பது சினிமா வட்டாரத்தில் வழக்கமாகி விட்டது எனலாம். ஜெய் கதாநாயகன்.

திரைப்படங்களில் இதுவரை பேசப்படாத சமையற் கலைஞர் துறையைக் முக்கிய கதைக்களமாகக் கொண்டதற்கு அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவைப் பாராட்டலாம்.

ஶ்ரீரங்கத்தில் ரங்கனுக்கு தளிகை செய்யும் சமையல்காரின் ஒரே மகள் நயன்தாரா. சுத்தமான வைணவக்குடும்பம். அதில் செல்ல மகளான நயன்தாராவிற்கு உலகின் மிகச்சிறந்த சமையல் கலைஞர் (செப்) ஆக வேண்டும் என்பது அவரது ஆகச்சிறந்த விருப்பம். சின்ன வயதிலேயோ நாக்கில் அதீத சுவைமொட்டுக்களோடு பிறந்தவராம்.

சிறுவயதிலிருந்தே நயனுக்கு  பர்ஹான் என்கிற பள்ளி தோழர் . காலேஜ் வரை கூடவே பயணித்து நயனின் முன்னேற்றத்திற்கு கடுமையாக பாடுபடுகிறார்.

ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த  நயனின் அப்பா கேட்டரிங் படித்தால் அசைவம் சமைக்கவேண்டும் என ஆட்சேபிக்கிறார்.  நயன் தனது லட்சியத்தை அடைய பர்ஹான் உதவியுடன் வீட்டுக்கு தெரியாமல் கேட்டரிங் படிப்பில் சேர்கிறார். கோழி வெட்டுகிறார். பிரியாணியையும் வெட்டுகிறார். லெக் பீஸை ருசிக்கிறார்.

அவர் அப்பாவுக்கும் அவர் சேர்ந்த சமூகத்துக்கும் தெரிந்துவிட… ரங்கனுக்கு தளிகை செய்யும் வேலையை துறக்கிறார் நயனின் அப்பா. கோபமடைந்த நயனின் அப்பா நயனுக்கு கல்யாண ஏற்பாடு செய்கிறார். நயன் கல்யாணம் பிடிக்காமல் பர்ஹானின் உதவியுடன் வீட்டை விட்டு ஓடி தனது கனவினை நோக்கி லட்சிய பயணம் மேற்கொள்கிறார்.

உலகின் மிகசிறந்த செப் சத்தியராஜ் மற்றும் அவர் மகன் கார்த்திக் நடத்தும் நட்சத்திர ஹோட்டலில் காலேஜ் கூட முடிக்காத நயன் மிகப் பெரிய செப் ஆகிறார். அங்கே நடக்கும் விபத்தில் நயன் தனது சுவைமொட்டுக்களை இழக்கிறாராம். அப்படி ஒரு வியாதி இருக்கிறதா தெரியவில்லை. சத்யராஜ் மகனை எதிர்த்து நயனுக்கு சமையல் போட்டிக்கு உதவுகிறார்.

அந்த விபத்தை ஏற்படுத்தியது யார்?

நயன் உலக செப் சமையல் போட்டியில் கலந்து கொள்கிறாரா? ஜெயிக்கிறாரா? என்பதை அருசுவை சமையற் சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் ஏன் இத்தனை சாதி விஷயங்கள் என புரியவில்லை? சம்பந்தபட்ட சமூகத்திற்கு ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்கிறார்.

சமையற்கலைஞர் வேலைக்கும் ஜாதிக்கும் முடிச்சு போட முயல்கிறார் இயக்குனர்…

வெங்கடேஷ்பட் உட்பட சைவ சமையல் கலைஞர்கள் குறித்து இதுவரை இயக்குனர் அறியவில்லையா என தெரியவில்லை?

இது 1970 யில் எடுத்திருக்க வேண்டிய கதை கரு.

உலகெங்கும் சைவ செப்கள் பலர் கலக்கி கொண்டிருக்க இவர் இன்னம் பாலபாடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதில் பர்ஹான்(ஜெய்)  தைரியமாக நயனை காதலிக்கிறார். ஆனால் நயன் பர்ஹானை காதலிக்கிறாரா இல்லையா என நமது சிந்தனைக்கு விட்டு விடுகிறார் இயக்குனர். இருக்கின்ற சர்ச்சைகளில் இது எதுக்கு தேவையில்லா சர்ச்சைன்னு விட்டு விட்டதாக தெரிகிறது.

லட்சியமா? சாதியா? காதலா?

படம் எதை நோக்கி செல்கிறது என புரியவேயில்லை? மூன்றையும் சேர்த்து குழப்பி அடிக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் அன்னப்பூரணி சொதப்பல் மீல்ஸை ரசிகர்களுக்கு பரிமாறுகிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...