விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் நடிகர் நேற்றே விஜய் மலேசியா சென்றுவிட்டார். அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோரும் இந்த இசை வெளியீட் விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் விமானம் பிடித்து மலேசியாவுக்கு சென்று விஜய்யை ரசிக்கவிருக்கிறார்கள்.

இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. எனவே அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, க்ரிஷ், ஹரிசரண், திப்பு என பல பின்னணி பாடகர்களும், பாடகிகளும் விஜய் நடித்த படங்களிலிருந்து பாடல்களை மேடைகளில் பாடவிருக்கிறார்கள். வழக்கமாக, தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு டிரெண்டாகும். அந்த வகையில், இம்முறை விஜய் என்ன பேசுவார் என அவரது ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, விழா களைகட்டப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
