திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறு வரிகள் இருந்தன. அதில் ஆண்களுக்கு தலை வரி (Thalakkaram) விதிக்கப்பட்டது போல, பெண்களுக்கும் இந்த மார்பு வரி விதிக்கப்பட்டது. இது வெறும் பணத்திற்கான வரி மட்டுமல்ல ஒரு பெண் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை காட்டும் கருவியாக இருந்தது. மேலாடை அணிவது என்பது அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது.
அந்த கால கட்டத்தில் வரி வசூலிப்பவர்கள் (pravathiyars) பெண்களின் மார்பகத்தின் அளவை வைத்து வரியின் தொகையை தீர்மானித்தனர், இது மிகவும் இழிவான முறையாக கருதப்பட்டது.
நங்கேலி என்ற பெண்மணி இந்த வரியை செலுத்த மறுத்து நடத்திய போராட்டம் கேரள வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆகும்.
நங்கேலி வரியை கட்ட தவறியதால் அதிகாரி அவர் வீட்டிற்கு வந்து மிரட்டினார், நங்கேலி வீட்டிற்குள் சென்று தனது மார்புகளை தானே அறுத்து ஒரு வாழை இலையில் வைத்து அதிகாரியிடம் நீட்டினார் வரிக்கு பதிலாக தன் உறுப்பை கொடுத்த அவரது செயல் அதிகாரியை நிலை தடுமாற வைத்தது.
நங்கேலி இறந்த பிறகு அவரது கணவர் கண்டன் மனைவியின் சிதையிலேயே குதித்து உயிர்துறந்தார் இது இந்தியாவின் முதல் ஆண் சதி (male Sati) நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்வு நடந்த இடம் இன்றும் முலச்சிப்பறம்பு (mulachiparambu) என்று அழைக்கப்படுகிறது.
நங்கேலியன் துணிச்சல் பின்னாளில் வந்த நாடார் சமூகப் பெண்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்தது. 1813 முதல் 1859 வரை நடைபெற்ற தோல் சீலை போராட்டம் இதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
நங்கேலியன் தியாகம் கேரளாவின் சமூக மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு (Social Reform Movements) வித்திட்டது.
ஸ்ரீ நாராயணகுரு மற்றும் ஐயன் காரி போன்ற தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணியத்திற்காக போராட நங்கேலி ஒரு குறியீடாக மாறினார்.
இன்றைய நினைவுகள் நங்கேலி வாழ்ந்த அந்த இடம் இன்று முலைச்சி பறம்பு(மார்பகமுள்ள பெண்ணின் நிலம்) என்று அழைக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வரலாற்று பாட புத்தகங்களில் நங்கேலியின் பெயர் நீண்டகாலமாக மறைக்கப்பட்டிருந்தாலும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ஓவியங்கள் மூலம் அவர் இன்றும் ஒரு போராளியாக கொண்டாடப்படுகிறார்.
நங்கேலி ஒரு தனி மனிதப் பெண் அல்ல அவர் சுயமரியாதையின் வடிவம் ஆணாதிக்கமும், சாதியமும் இணைந்து ஒரு பெண்ணின் உடலை வருவாய்க்கான கருவியாகப் பார்த்தபோது அதே உடலை போராட்டக் கருவியாக மாற்றியவர் அவர், கேரளாவின் நவீன சமத்துவ சமூகத்திற்கு அடித்தளம் விட்டவர்களில் நங்கேலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.
இன்று 21ம் நூற்றாண்டில் பெண்கள் அனைவரும் அனுபவிக்கும் பெண் சுதந்திரம் பெண்கள் கல்வி பெண்கள் வேலைவாய்ப்பு பெண்களுக்கான சரிசமமான உரிமைகள் இன்னும் பல விஷயங்கள் நங்கேலி போன்ற வீர பெண்மணிகளின் தியாகத்தினாலும், போராட்டத்தினாலுமே நமக்கு கிடைத்தன.
எழுத்து
திவன்யா பிரபாகரன்

