புதுச்சேரியில் இனிய நந்தவனம் 29ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா

 “இனிய நந்தவனம்” இலக்கிய இதழின் 29ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா கடந்த 23-05-2026 சனிக்கிழமை அன்று மாலை, புதுச்சேரி, மூலைக்குளம், “பாரதி பல்கலைப் பேரவை”யில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குப் பாவலர் ந. ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரிடமிருந்து புதுச்சேரி, மனிதநேயச் சிறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. ஆ.சபரி அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

“வள்ளியப்பா” சிறார் இலக்கியக் காலாண்டிதழின் ஆசிரியர் பாரதிவாணர் சிவா அவர்களும் “இனிய நந்தவனம்” இதழின் இணை ஆசிரியர் கவிஞர் பா. தென்றல் அவர்களும் 29ஆவது ஆண்டு மலர் குறித்து சிறப்பான இதழாய்வினை செய்தார்கள். ஆண்டு மலரைப் படிக்கத் தூண்டும் வண்ணம், குறிப்பிட்ட சில படைப்புகளை எடுத்துக்காட்டி, வழங்கிய இருவரின் இதழாய்வும் பார்வையாளர்களிடம் கவனயீர்ப்பு பெற்றது.

பல்வேறு விதமான படைப்புகளை, சிறப்பிதழ்களைக் கொண்டு, 20 நாடுகளுக்குச் சென்று பல நூற்றுக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருக்கும் இதழ் “இனிய நந்தவனம்” ஆகும். இந்த இதழைக் குறித்தும் ஆண்டுமலரைக் குறித்தும் இதழாசிரியர் மற்றும் இணையாசிரியர் இதழ்ப்பணிகளைக் குறித்தும் முனைவர் சு. ரேவதி, எழுத்தாளர் பூபதி பெரியசாமி, பாவலர் விஜய சாமுண்டீஸ்வரி, பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன், கவிஞர் அன்பாதவன், எழுத்தாளர் மாலதி இராமலிங்கம், “புதுவைப் பரணி” ஆசிரியர் லெனின் பாரதி,  கவிஞர் சொ.கு.செந்தில்குமரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

“இனிய நந்தவனம்” ஆசிரியர் சந்திரசேகரன் அவர்கள் மகிழ்வுடன் ஏற்புரை ஆற்றினார்.

கவிஞர் கலாவிசு வரவேற்புரை அளித்த இந்நிகழ்வின் தொடக்கத்தில், மாணவி சஞ்சனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

“இனிய நந்தவனம்” ஆசிரியர் சந்திரசேகரன் அவர்களையும், இணையாசிரியர் பா.தென்றல் அவர்களையும், எழுத்தாளர் பாரதிவாணர் சிவா அவர்களும், அவரது இணையரான சிறுகதை எழுத்தாளர் சி.ராஜேஸ்வரியும் சிறப்பு செய்தார்கள்.

40 ஆண்டு காலமாக, “புதுவை பாரதி” இதழ்ப் பணியால், பாரதியாரை மீண்டும் இந்தப் புதுவை மண்ணில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் “வள்ளியப்பா” சிறார் இலக்கியக் காலாண்டிதழின் ஆசிரியர் பாரதிவாணர் சிவா அவர்களின் “பாரதி பல்கலைப் பேரவை”யில் நடந்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்கது ஆகும்.

பல்வேறு துறையில் பணிநிறைவு பெற்றவர்கள், பணியாற்றுபவர்கள், படைப்பாளர்கள், பார்வையாளர்கள் என தமிழோடு இணைந்திருக்கும் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின் நிறைவாக, எழுத்தாளர் ராஜேஸ்வரி நன்றி நவின்றார்.  இவ்வாறாக, விழா இனிதே சிறப்புற்றது.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

நெஞ்சார்ந்த வணக்கங்களுடன்,

கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!