த.வெ.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

கடந்த 4-ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், அக்கட்சியினால் அரசை அமைக்க இயலவில்லை. இதனால் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கவில்லை.

தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல். ஆகியவை த.வெ.க.விற்கு ஆதரவளித்தன. எனவே ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க.வுக்கு பலம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி த.வெ.க.வின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க.வின் 47 எம்.எல்.ஏ.க்களில் 25 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து, த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்தனர். எனவே விஜய்யின் அரசுக்கான பலம் 144-ஆக உயர்ந்தது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144-ஆக உள்ளது.

முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. என்றாலும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இன்னும் நடக்கவில்லை.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் தரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியில் பங்கெடுக்க மாட்டோமென்று கூறிவிட்டனர். அவர்கள் த.வெ.க. அரசை வெளியில் இருந்து ஆதரிக்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நீண்ட விவாதத்தில் உள்ளனர். த.வெ.க. அமைச்சரவையில் ஐ.யூ.எம்.எல். பங்கேற்குமா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அக்கட்சியின் நிர்வாகக் குழு இன்று காலை 11 மணிக்கு கூடி முடிவெடுக்கிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் வருகின்றனர். த.வெ.க. அமைச்சரவையில் சேர்வதற்கு அக்கட்சியின் அகில இந்திய தலைமை ஒப்புதல் வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரசில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 பேர் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர். அவர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதோடு, அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு, த.வெ.க.வை ஆதரிக்கும் 25 எம்.எல்.ஏ.க்களில் சிலர் அமைச்சரவையில் இடம் பெற விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அ.தி.மு.க.விற்கு அமைச்சரவையில் இடம் அளித்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூறியிருந்தது. எனவே அ.தி.மு.க.விற்கு அமைச்சரவையில் பங்கு இல்லை என்று தெரிகிறது.

எனவே, த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அழைப்பிதழை தலைமைச் செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டார்.

அதில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான மக்கள் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் த.வெ.க. மற்றும் காங்கிரசை சேர்த்து 20 அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

இன்று கவர்னர் அர்லேகர், புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள், அமைச்சரவையில் இடம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!