நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, வனப்பகுதியின் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு தேர்தல் காரணமாக ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, குன்னூரில் பழ கண்காட்சி மட்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 14-ந் தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி 2 லட்சம் ரோஜா மலர்களால் பறவைகள் வடிவ அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தொடங்கி வைக்கிறார்.
