தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் டெல்லி பயணம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். விஜய்யின் டெல்லி பயண ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கவனித்து வருகின்றனர்.
அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்துக்கும் அவர் முதல் முறையாக செல்ல உள்ளார். அவருக்கு அங்கு வழங்கப்பட இருக்கும் அரசு மரியாதையையும் ஏற்க இருக்கிறார்.அதனைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு, மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு உள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மோடியுடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இது ஆகும். இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளார் டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சூழலில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று இரவு டெல்லி புரப்பட்டு சென்றதாக கூறப்பட்டது. பிரதமர் மோடியுடனான சந்திப்பை நிறைவு செய்ததும், முதல்-அமைச்சர் விஜய், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனையும் அவர் சந்திக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து நாளை (வியாழக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும், அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும், அந்த சந்திப்பை முடித்ததும் அன்றைய தினமே முதல்-அமைச்சர் விஜய் சென்னை திரும்ப இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
