இயல் கூடுகை – 12

 “இயல்” எனும் சிறார் மின்னிதழ், அனைத்து வயது குழந்தைகளுக்கும்

பெற்றோர்களுக்குமான இதழாகும்.

150-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருபவர், பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான திரு உதயசங்கர் அவர்கள், “இயல்” இதழின் ஆசிரியராக உள்ளார்.

இவ்விதழ், சிறார் இலக்கியத்தில் புதிய தடம்பதிக்க, புதிய திசைகளில் சிறகுகள் விரிக்க, சிறந்த படைப்புகளை அடையாளம் காட்ட, நம் முன்னோடிகளின் சாதனைகளைத் தெரிந்துகொள்ள, அயலக இலக்கியங்களை அறிமுகப்படுத்த, சிறார் இலக்கியச் சிந்தனைப்பள்ளிகளை வளர்த்தெடுக்க, விவாதங்களை, உரையாடல்களை ஒருங்கிணைக்க உறுதி பூண்டுள்ளது. இத்துடன், இலக்கியம், அறிவியல், சூழலியல், கல்வியியல், பெற்றோரியம், குழந்தைகளின் உரிமைகள் சார்ந்து புதிய விவாதங்களையும் உருவாக்குகிறது. மேலும், இலக்கியம், நாடகம், பாடல், புதிர்கள், சினிமா, ஆளுமை அறிவோம், காமிக்ஸ், பரிசோதனை, கேள்வி பதில் தொடர்கள் என்றும் பல பகுதிகளைக் கொண்டுள்ளது.

“இயல்” சிறார் மின்னிதழ், எடுக்கும் முன்னெடுப்புகளில் ஒன்றாக, ‘இயல் கூடுகை’ என்ற பெயரில் மாதந்தோறும் சிறார் இலக்கிய அரங்கம், நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 25-05-2026 அன்று, 12ஆம் இணைய வழி, ‘இயல் கூடுகை” நடந்தது. இதில், “இயல்” ஆசிரியர் குழுவின் அங்கமான, திருமதி சாலை செல்வம் அவர்கள் உரையாற்றினார்.

பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களும், புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை குறித்து ஏராளமான நூல்களும் எழுதியவர்,  தொடர்ந்து தம் பணியிலே இயங்குபவர் எனச் சிறப்புடைய அவர், இந்நிகழ்வில், பேசிய தலைப்பு, “வாசிப்புப் பண்பாடும் சிறார் இலக்கியமும்” என்பதாகும்.

வ(ள)ரும் தலைமுறைக்கான வளர்ச்சிக்கு உகந்த செறிவுடைய மேற்கண்ட தலைப்பில், அவர் ஆற்றிய உரையில், வாசிப்பிற்காகத் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள், நூலகச்செயல்பாடுகள், சிறார் சங்கங்களின் முன்னெடுப்பு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள், அக்கறையுள்ள ஆசிரியர்களின் முன்னெடுப்புகள், கதை சொல்லிகளின் செயல்பாடுகள், சிறார் நூலகங்களின் வழிகாட்டுதல்கள், பெற்றோர்களின் ஈடுபாடு, சிறார் நூலகக் கண்காட்சி, கலாச்சார செயல்பாடுகள் என

ஒவ்வொன்றையும் பற்றி விரிவாகப் பேசியதோடு இன்னும் செய்ய வேண்டியவற்றையும் எடுத்துப் பேசினார்கள். சிறார்கள் வாசிப்பை, விரும்பி ஏற்கும்படியான செயல்பாடாக மாற்றுவது குறித்தும் எடுத்துரைத்தார்கள்.

புதுச்சேரியிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் தோழர்கள் கமலாலயன், குமரேசன், உதய சங்கர், சண்முக வடிவு, க்ரிஸ்டி சுபத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சிறார் வாசிப்பில் தீவிரமாக செயல்பட்டுவரும் ஆசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பெற்றோர்கள் என, வரும் தலைமுறையின் வளர்ச்சிக்காகப் பலரும் பங்கெடுத்தனர்.

இரவு 8:00 மணிக்குத் துவங்கிய இவ்வுரையாடல் 10.30 மணிக்கு நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.

நெஞ்சார்ந்த வணக்கங்களுடன், கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!