“லேசா… ஒரு லேசர் முத்தம்” – சிறுகதை | முகில் தினகரன்

  “லேசா… ஒரு லேசர் முத்தம்” – சிறுகதை | முகில் தினகரன்

நீண்ட வருடங்களாக தன்னை வந்து பார்க்கவோ… இல்லை நலம் குறித்து விசாரிக்கவோ செய்யாத அண்ணன் குமரேசன், இன்று தன் வீட்டிற்கு வந்து பாசமலர் சிவாஜியாய்… நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆராய்… முள்ளும் மலரும் ரஜினியாய்… மாறி, தன் மீது பாசத்தைக் கொட்டிய போது, நிதர்சனாவால் அந்தப் பாசாங்குப் பாசத்தை எளிதாகவே புரிந்து கொள்ள முடிந்தது.  ஆனாலும், அதை காட்டிக் கொள்ளாமல், தானும் அந்த அன்பில் உருவது போல் நடித்தாள்.  பின்னே?… இன்று தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராய் விளங்கும் அவளுக்கு நடிக்கச் சொல்லியா தர வேண்டும்?

அவள் நடிப்பை நிஜமென்று நம்பிய அண்ணன் கதிரேசன் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்தான்.  எந்தவித தயக்கமும் இன்றி உடனே “சரி” சொன்னாள் அவள்.

அவன் காரிலேயே இருவரும் கிளம்பி, அடுத்த அரை மணி நேரத்தில் கதிரேசனின் மினி பங்களாவின் மெயின் கேட்டிற்குள் நுழைந்தனர்.

 “வீடு சின்னதா இருந்தாலும்… க்யூட்டா இருக்கு… ஆமாம் வீட்டுல அண்ணி…  குழந்தைகள் எல்லோரும் இருக்காங்கல்ல?…” நிதர்சனா கேட்க,

 “இல்லை… அவங்க இன்னும் கிராமத்துலதான் இருக்காங்க!… நான் இங்க நல்ல முறைல செட்டில் ஆனதும்தான் அவங்களை கூட்டிட்டு வரப் போறேன்”

இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும் ஹால் கதவை உடனே சாத்தினான் கதிரேசன்.

அது நிதர்சனாவிற்கு மெல்லிய அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அது எதிர்பார்த்ததுதான் என்பதால் நார்மலாகவே இருந்தாள்.

“நில்லுடி….” சட்டென கர்ண கடூரக் குரலில் கதிரேசன் கத்த, நின்றாள்.

“அங்க பார்…” இடப்புறம் அவன் கை காட்ட, அங்கே ஒரு பெரிய சைஸ் புகைப்படம், பெரிய மாலையோடு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது.

நிதர்சனா நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கதிரேசனைப் பார்க்க, “ம்.. பக்கத்துல போய்ப் பாரு” என்றான் அதிர வைக்கும் குரலில்.

சென்று பார்த்தாள்.  படத்தில் அவள் தாயும், தந்தையும் ஒரே விட்டத்தில்… ஒரு சேரத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

“உனக்கு இந்தப் போட்டோவைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே எடுத்து வெச்சேன்!… எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு டெய்லர் கூட ஓடிப் போய்… குடும்ப மானத்தையே குழி தோண்டிப் புதைச்சே!… உன்னைப் பெத்தவங்க அந்த அவமானம் தாங்காம…  நாண்டுக்கிட்டு செத்திட்டாங்க!… ஆனா.. நீ இன்னிக்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கே!… விட மாட்டேன்… இங்கியே உன்னைக் கொன்னு தூக்குல தொங்க விட்டு அதைப் போட்டோ எடுத்து நாளைக்கு பேப்பர்ல போடப் போறேன்… “பிரபல நடிகை மன உளைச்சல் தாங்காமல் தூக்குப் போட்டு தற்கொலை”ன்னு செய்தி வர வைப்பேன்!’

அவன் சொன்னதைக் கேட்ட நிதர்சனா, அவனை நேருக்கு நேர் பார்த்து “ஹா… ஹா… ஹா” வென்று ஓங்கிச் சிரித்தாள்.

கதிரேசன் விழிக்க,

      “என்ன கதிரப்பா?… அழ வேண்டிய சீக்வென்ஸ்ல இந்த நடிகை சிரிக்கறாளே?ன்னு பார்க்கறியா?… கடந்த எட்டு வருஷத்துல இந்த சினி ஃபீல்டுல நான் பல கூனிகளையும், பல சகுனிகளையும் பார்த்து… அவர்களைத் தாண்டி வந்தவள், “திடு..திப்”ன்னு நீ வந்து பாசமலர் சிவாஜி ஆனா…நான் சாவித்திரி ஆயிடுவேனா?… நீ என்னைக் கொலை பண்ணும் நோக்கத்தோடதான் இங்க கூட்டிட்டு வந்திருக்கே! என்பதைக் கூட யூகிக்க முடியாத பச்சைப் பாப்பா இல்லை நான்!… நிதர்சனா…. நெம்பர் ஒன் ஹீரோயின் ஆஃப் கோலிவுட்!” என்று சொன்னவள் பேசிக் கொண்டிருக்கும் போதே தன் வயிற்றுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த அந்தச் சிறிய சில்வர் நிற பிஸ்டலை வெளியிலெடுத்தாள்.

      இதற்கு மேலும் தான் அமைதியாய் நின்றிருந்தால் தன் வாழ்க்கைக்கு அவள் “முற்றும்” போட்டு விடுவாள், என்பதைப் புரிந்து கொண்ட கதிரேசன், அவள் கையிலிருந்த அந்தப் பிஸ்டலைக் கைப்பற்றும் முடிவில், அவள் எதிர்பார்க்காத விநாடியில் சட்டென்று அவள் கையைப் பற்றி, பிஸ்டலைப் பிடுங்க முயன்றான்.

      பிஸ்டலை இறுகப் பற்றிக் கொண்டு, அவனுடன் போராடினாள் நிதர்சனா. ஆனால், வெறும் ஏழே நிமிடம்தான் அவளால் தாக்குப் பிடிக்க முடிந்தது.

     பிஸ்டல் தன் கைக்கு வந்ததும், “பாவி… பெத்தவங்களைச் சாகடிச்சே!… இப்ப என்னையும் சுட்டுப் பொசுக்கத் துணிஞ்சிட்டே… இதுக்கு மேலேயும் உன்னைய உயிரோட விட்டா… உன் அண்ணனான எனக்குத்தான் கேவலம்!… போ… இந்த உலகத்தை விட்டே போ… நரகத்துக்குப் போ!” சொல்லியவாறே கதிரேசன் அந்தப் பிஸ்டலை அவளை நோக்கிப் பிடித்து டிரிக்கரை அழுத்த, அது நகர மறுத்து அப்படியே நின்றிருந்தது.

      கையைக் கீழே இறக்கி அதை ஆராய்ந்து விட்டு மீண்டும் முயற்சித்தான்.  ம்ஹூம்… டிரிக்கர் இறுக்கமாய் அப்படியே இருந்தது.

      குறுஞ்சிரிப்புடன் அவனைப் பார்த்த நிதர்சனா, “கண்ணா… நீ நினைக்கற மாதிரி அது சாதாரண பிஸ்டல் இல்லை!… லேசர் பிஸ்டல்… அதுக்குக் குடுத்திருக்கற அந்த டிரிக்கர் சும்மா வெறும் டம்மி!… அதோட ஆபரேடிவ் மோட்… இதுல இந்த மொபைல்ல இருக்கு!…”என்று தன் மொபைலைக் காட்டி, அதன் டச் ஸ்கிரீனைத் தேய்த்தவள், மொபைலை அவன் பக்கம் திருப்பி, “இதோ இந்த மண்டையோடு ஐக்கான் தான் பட்டன்!.. இதை நான் தொட்டால்தான் லேசர் புல்லட் வெளிய வரும்!” என்று சொல்லி விட்டு அவள் அதைத் தொடப் போக,

      புத்திசாலித்தனமாகச் செயல்படுவதாய் நினைத்து அந்த விநாடியில் பிஸ்டலை நிதர்சனாவின் நெஞ்சிற்கு குறி வைத்தான் கதிரேசன்.

      நிதர்சனா மண்டையோட்டைத் தொட, “விஷ்க்க்க்க்”கென்று அந்தப் பிஸ்டலின் பின்புறம் வெளியான நீல நிற லேசர் கதிர், கதிரேசனின் நெஞ்சுப் பகுதியில் புகுந்து அவன் மொத்த உடலுக்குள்ளும் ஊடுருவி “தொபீர்”ரென்று அவனைத் தரையில் சாய்த்தது. கீழே விழுந்த அவன் உடலிலிருந்து வெளிர் நீல நிறத்தில் வெளியேறியது மெல்லிய புகை.

      ஒன்று… இரண்டு… மூன்று……. பத்தே நிமிடத்தில் அவன் உடல் கிடந்த இடம் வெற்றிடமாக, பிஸ்டல் மட்டும் அனாதையாய்க் கிடந்தது. வெற்றிப் புன்னகையுடன், குனிந்து அதை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் நிதர்சனா.

      மறுநாள் காலை, “பூபாலன்… மிஸ்டர் பூபாலன்” சன்னக் குரலில் தன் பி.ஏ.வை அழைத்தாள் நிதர்சனா.

      அவள் எதிரில் வந்து நிற்கும் போதெல்லாம் தன் கழுத்து டையை மேலும் இறுக்கிக் கொள்ளும் தன் மேனரிஸத்தை அப்போதும் தவறாமல் கடைப்பிடித்தான். “இன்னிக்கு… என்னோட ஷூட்டிங்கையெல்லாம் கேன்ஸல் பண்ணிடுங்க… ஐ வாண்ட் டு டேக் ரெஸ்ட்”

      “மேடம்… ஆக்சுவலா இன்னிக்கு ஆர்.கே.ரெக்கார்டிங் தியேட்டர்க்கு நீங்க டப்பிங் பேச  போகணும்!…. ஜஸ்ட் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி அவங்களே போன் பண்ணி “இன்னிக்கு ரெக்கார்டிங் இல்லை”ன்னு சொல்லிட்டாங்க” என்றான் பூபாலன் குறுஞ் சிரிப்புடன்.

      அவன் சென்றதும், நிதானமாய் எழுந்து தன் படுக்கையறைக்குச் சென்று மீண்டும் படுக்கையில் விழுந்தவள் நினைவுகளில் நேற்றைய நிகழ்வுகள் ஓட, “இதுவும் கடந்து போகும்” தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

      அப்போது தலையணை மீதிருந்த மொபைல் ஒலிக்க, படுத்தபடியே எடுத்துப் பார்த்தாள்.  கதிரேசன் எண். “விருட்”டென எழுந்து அமர்ந்தவளின் உடல் நடுங்கியது.  பேச நா எழாமல் தொண்டை வறண்டு போனது.  “எடுக்கலாமா?… வேண்டாமா?” அவசர பட்டிமன்றம் உள்ளே ஓடியது. தீர்ப்பு, “எடுக்கலாம்” என்று வந்ததும், இணைப்பிற்குள் புகுந்து “ஹ….ல்….லோ….” என்றாள்.

      “கதிரேசன் பேசறேன்!… என்ன நிதர்சனா?… எப்படியிருக்கே?” மறுமுனையில் கதிரேசன் கேட்டான்.  சட்டென்று இணைப்பைக் கட் செய்தாள். அவள் உடம்பிலிருந்த மொத்த ரத்தமும் வடிந்து போய், ரத்தமற்ற உடலானாள்.  வெளிறிப் போன விரல் மொபைலை உடனே ஆஃப் செய்தது.  “எப்படி?… எப்படி?… கதிரேசன்.. .பொழைச்சிட்டானா?… இல்லையே?… லேசர் புல்லட் பாய்ந்தவர்களின் உடல் கூட ஐந்து நிமிடத்திற்கு மேல் இருக்காதே?… என் கண்ணெதிரில்தானே அவன் கரைந்தான்… பின்னே எப்படி?… ஒரு வேளை வேற எவனாவது கதிரேசன் வாய்ஸை மிமிக்ரி பண்ணி என்னை மிரட்டறானோ?.. ஆனா கதிரேசன் நெம்பரில் இருந்தல்லவா கால் வருகின்றது?”

      சிந்தனை வண்டுகள் மண்டைக்குள் தாறுமாறாய்ப் பறக்க, இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.  “வாட் நெக்ஸ்ட்?… இப்ப என்ன பண்ணலாம்?”

      எழுந்து அறைக்குள் இங்குமங்கும் நடந்தாள்.  “யார் கிட்டே போய் உதவி கேட்பது?… அப்படிப் போனால் நான் கதிரேசனைக் கொன்றதை என் வாயால் ஒப்புக் கொள்ள வேண்டி வருமே?… அது தப்பாச்சே?” அச்சம் ஒரு புறம், ஆவேசம் ஒரு புறம், இயலாமை ஒரு புறம் என அவளை உலுக்கியெடுக்க, மெல்ல நடந்து பால்கனிக்கு வந்தாள்.  கீழே கேட்டருகே யாரோ ஒரு இளைஞன் வாட்ச்மேனுடன் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு, அந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தாள்.  தினமும் தன் வீட்டு வாசலில் வந்து நின்று தன்னுடைய தரிசனத்திற்காகவும், தன்னுடன் பேசுவதற்காகவும் காத்திருக்கும் அந்த இளைஞனை அடையாளம்  கண்டு கொண்டவள் உள்ளத்தில் அந்த ஐடியா தோன்ற, “வாட்ச்மேன்… அந்த ஆளை உள்ளே விடு” என்று இங்கிருந்தே கத்தினாள்.

      மறுபடியும் மொபைல் அதிர, எடுத்துப் பார்த்தாள். கதிரேசன் எண். “ஹலோ… யார்ரா நீ?” கோபமாய்க் கேட்டாள்.

      “கதிரேசன் பேசறேன்!… என்ன நிதர்சனா?… எப்படியிருக்கே?” மறுமுனையில் கதிரேசன் கேட்டான். உடனே லைனைக் கட் பண்ணினாள்.     இருதயம் அதிவேகமாய்த் துடித்தது.

அறைக்கு வெளியே பூபாலன் குரல், “மேடம்.. மேடம்”.

      “அந்த ஆளை ஒரு ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ணச் சொல்… வந்திடறேன்”

      மூன்றாவது நிமிட முடிவில், முன் புற ஹாலுக்கு வந்த நிதர்சனா, “மிஸ்டர் பூபாலன்… நீங்க ஆடிட்டர் ஆபீஸ் போகணும்!னு சொன்னீங்களே?… கிளம்புங்க” என்றாள் தன் பி.ஏ.வைப் பார்த்து. “மேடம்… இந்த ஆள்?” என்று அந்த பி.ஏ. இழுக்க, “அதை நான் பார்த்துக்கறேன்.. .நீங்க கிளம்புங்க பூபாலன்!”

      பி.ஏ.நகர்ந்ததும், “உட்காருப்பா” என்றாள் நிதர்சனா அந்த இளைஞனைப் பார்த்து. அவன் உட்கார்ந்ததும், “உன் பேர்?” கேட்டாள்.  “சுரேஷ் மேடம்”

      “ம்ம்ம்…சுரேஷ்!…அன்னிக்கு “மேகா மூவீஸ்” பட பூஜைல உன்னைப் பார்த்தேன்…“உங்களோட தீவிர ரசிகன் மேடம்!…உங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கப் போறேன்”ன்னு சொன்னே…நான் உன்னைத் திட்டி அனுப்பிச்சிட்டேன்!…அப்புறம் யோசிச்சுப் பார்த்ததில் ரசிகர் மன்றம் அவசியம்!னு பட்டது…ஸோ…நானே சில லட்சங்கள் பண உதவி பண்ணி அதை ஆரம்பிக்கலாம்!னு முடிவு பண்ணியிருக்கேன்!…” தன் தூண்டிலை லாவகமாக எறிந்தாள்.

      அந்த சுரேஷ் உற்சாக ஊஞ்சலில் ஏறி உல்லாசமாய் ஆடினான்.  நிதர்சனா எதிரில் அமர்வதே பெரும் பாக்கியமாய்க் கருதும் அவனுக்கு அவள் மன்றம் ஆரம்பிக்க அனுமதியும், கூடவே லட்சக்கணக்கில் பணமும் தரப் போவதாய்ச் சொல்லியது லட்சுமி தேவியே நேரில் வந்து வரம் கொடுத்தது போலிருந்தது.  நிதர்சனா அடுத்த வலையை விரித்தாள், “நீ என் மேல் வெச்சிருக்கற அபரிமிதமான அன்பைப் பார்த்து உண்மையிலேயே நான் மனசு நெகிழ்ந்து போயிட்டேன்!… அதனால.. உன்னை முழுசா நம்பி ஒரு விஷயத்தை உன் கிட்டே சொல்லி…உதவி கேட்கலாம்!னு இருக்கேன்!…என்கிட்ட நிறைய பணம் இருக்கு…ஆனா நம்பிக்கையான ஆள் யாருமே இல்லை” அவள் குரல் கரகரத்தது.

     “மேடம் உங்களுக்காக நான் என் உயிரையே கொடுப்பேன்…சொல்லுங்க மேடம் என்ன உதவி செய்யணும் நான்?” சந்தோஷமாய் துடித்தான்.

      கதிரேசனைத் தான் கொன்ற விஷயத்தையும், அதன் பிறகும்  அவனிடமிருந்து கால் வரும் விஷயத்தையும், தழுதழுத்த குரலில் சொன்னாள் நிதர்சனா.

      சில நிமிடங்கள் யோசித்த சுரேஷ், “ப்பூ… இது ஜுஜுபி மேட்டர்… என் ஃப்ரெண்ட் ஏர்டெல்லுல இருக்கான்… உங்க அண்ணன் நெம்பரைச் சொல்லி விசாரிச்சா… யாரு?… எங்கிருந்து பேசறாங்க?… எல்லா விஷயமும் வெளிய வந்திடும்!… இன்னிக்கு ஈவினிங் உங்களோட இந்தப் பிரச்சினையை நான் முடிக்கறேன் மேடம்.”

      “முடிச்சிட்டு வா…உனக்காக அஞ்சு லட்சத்தோட வெய்ட் பண்றேன்”

      அன்று மாலை ஏழு மணி வாக்கில், நிதர்சனா வீட்டிற்கு வந்தவனை வாட்ச்மேன் மறுப்பின்றி உள்ளே அனுப்பினான். “மேடம்… என் ஃபிரெண்டு கிட்ட விசாரிச்சு, அந்தக் கால் எங்கிருந்து வருது?ன்னு ட்ரேஸ் பண்ணிட்டே போனேன்… கடைசில அந்த இடத்துக்குப் போயே போயிட்டேன்!.. அது ஒரு தனி பங்களா… மினி பங்களா!… அங்கே கேட்டில் இருந்த வாட்ச்மேன்தான் அந்த மொபைலை உபயோகிச்சிட்டிருந்தான்!”

      “வாட்?… வாட்ச்மேனா?… இல்லையே… போன்ல எங்கண்ணன் குரல்தானே வந்திச்சு?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டாள் நிதர்சனா.

      “உங்க அண்ணன் தன் குரலை வாட்ச்மேனோட மொபைல்ல ரெக்கார்ட் பண்ணி… தன்னோட மொபைலை அவன் கிட்டக் குடுத்து…. அதுல அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் உங்க நெம்பரை டயல் பண்ணி… அந்த ரெக்கார்டட் வாய்ஸை அது முன்னால் வைக்கச் சொல்லி கட்டளை போட்டிருக்கார்”

      முகத்தைச் சுளித்த நிதர்சனா, “எதுக்கு?… அதுல என்ன லாபம் அவனுக்கு?” கேட்டாள்.

      “பின்னே?… அவர் உங்களை பங்களாவுக்கு உள்ளார கூட்டிட்டுப் போனதே உங்களைக் மர்டர் பண்ணத்தானே?… உங்களைக் கொன்னு அந்தப் பிணத்தை எங்கியோ தூரமா கொண்டு போகத் திட்டமிட்டிருக்கார்!… அப்படிப் போகும் தன் கைல மொபைல் இருந்தா…. போலீஸ் அதை வெச்சு அவரை டிரேஸ் பண்ணிடுவாங்க அல்ல?… அதான் வாட்ச்மேன் கைல குடுத்திட்டு தான் இந்த ஊரிலேயே இருப்பதாக ஒரு அலிபி கிரியேட் பண்ணியிருக்கார்”

      “அது செரி… அந்த வாய்ஸெல்லாம்… எதுக்கு?”

      “என்ன மேடம் நீங்க?… அந்த சம்பவத்துக்கு அடுத்த நாள் அவர் பலமுறை உங்களைக் காண்டாக்ட் செய்திருப்பதற்கு ஒரு ரெக்கார்ட் வேணுமல்ல?… அதுக்குத்தான்” அந்த சுரேஷ் தன்னைப் பெரிய துப்பறிவாளனாய் நினைத்துக் கொண்டு பெருமையோடு சொன்னான். நிதானமாய் அனைத்தையும் யோசித்துப் பார்த்தாள் நிதர்சனா, “இவன் சொல்வதும் சரிதான்!” என்றெண்ணி

யவள், “அந்த மொபைல் இன்னமும் வாட்ச்மேனிடமா இருக்கு?” கேட்டாள்.

      “விடுவேனா நான்?… அவனுக்கே தெரியாமல் அடித்துக் கொண்டு வந்து விட்டேன்” என்றவாறே தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்து, நிதர்சனாவிடம் கொடுத்தான்.

      புன்னகையோடு வாங்கிக் கொண்டவள், “உன்னோட உதவிக்கு ரொம்ப நன்றி சுரேஷ்!… ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு அஞ்சு லட்சத்தை எடுத்திட்டு வர்றேன்!..”

      அறைக்குள் சென்றவள் திரும்பி வந்த போது, அவள் கையில் அந்த லேஸர் பிஸ்டல். அவள் வாய், “சுரேஷ் பையா… சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும், மத்தவங்களுக்கு குழி பறிக்க அல்ல!… மத்தவங்க நமக்குப் பறிக்கும் குழிகளில் நாம விழாமல் இருக்க” என்று முணுமுணுத்தது.

      சுரேஷ் சுதாரிப்பதற்குள், “விஷ்க்க்க்க்க்”

                ஒன்று… இரண்டு… மூன்று……. பத்தே நிமிடத்தில் அவன் உடல் கிடந்த இடம் வெற்றிடமாக, வெற்றிப் புன்னகையுடன், குனிந்து அதை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் நிதர்சனா.

(முற்றும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...