திகிலூட்டும் பாதையான “ரூட் நம்பர் 17” ..! | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் : அபிலாஷ் ஜி தேவன்
எடிட்டர் :அகிலேஷ் மோகன்
ஒளிப்பதிவாளர் : பிரசாந்த் பிரணவம்
இசை : அவுசப்பச்சன்
நடிகர்கள்: ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா
இயக்குனர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் திகில் மற்றும் திரில்லர் வகை திரைப்படம். இதில் ஜித்தன் ரமேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஞ்சு பாண்டியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் ஒரு காட்டுப்பாதையில் வரும் ரூட் நம்பர் 17 என்கிற இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் அச்சமூட்டும் மர்ம கொலைகளை திகில் சேர்த்து விறுவிறுப்பாக சொல்கிறது இப்படம். தனிமையை விரும்பும் இளம் காதல் ஜோடிகள் இருவர் இப்பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை ஒரு திடுக்கிடலோடு சொல்லியிருக்கிறார்கள்..
அடர்ந்த வனப்பகுதியின் அழகை அதன் இயற்கை மாறா பசுமையோடு பயணித்து செல்லும் கேமிரா கோணங்கள் நம் மனதை சிறைப்பிடிக்கிறது என்றால், காட்டு பகுதியின் இரவு நேரத்து அனுமாஷ்யத்தோடு சேர்த்து பயமுறுத்தும் அந்த பிண்ணனி இசை நம்மை திடுக்கிட வைக்கிறது.
ஜித்தன் ரமேஷிற்கு இதுவரை கிடைக்காத வித்தியாசமான கதாப்பாத்திரம் அதனை மிகச் சிறப்பாகவே செய்துள்ளார். அந்த இளம் ஜோடிகளாக வரும் இருவரின் நடிப்பும் நன்றாகவே உள்ளது.
இன்ஸ்பெக்டராக வருபவரும், கான்ஸ்டபிளாக வரும் அருவி மதனும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடித்துள்ளனர்.
பிண்ணனி இசையும் நன்றாக உள்ளது . இரண்டு பாடல்கள் கேட்கும் படியாகவே இருக்கிறது. பிளாஷ்பேக் கதையில் இன்னமும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். காட்சியமைப்புகளில் மிரட்டியிருந்தாலும் வழக்கமான பழிவாங்கும் கதைகளில் ஒன்றாக நகர்கிறது படம்.. வித்தியாசமாக ஏதும் இல்லை என்பது படத்தின் பெரிய குறை.
ரூட் நம்பர் 17 வழக்கமான அதே பாதை தான்.. புதியதாக ஏதும் இல்லை.. புதிய தட்டில் பழைய சோறு தான்…!