அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 15 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 15 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் -15

ருதவள்ளி சடசடவென்று கொட்டி தண்ணீர்த் தொட்டியை நிரப்பியபடி  வழிந்து போன நீரைக்கண்டதுமே கண்கள் பளபளக்க நின்றாள்.

“ஆஹா…சதாசிவம் அண்ணன் பம்பு செட்டுலே தண்ணி விட்டுட்டாங்களா”

என்று குதூகலித்தவள்

வாகாய் உட்கார்ந்து முகத்தையும் கழுத்தையும் தண்ணீரில் காட்டி கழுவிக்கொண்டாள்.சுற்றிலும் விழியை ஓட்ட யாரையும் காணவில்லை. சற்று சுதந்திரமாகவே கழுத்துக்குக் கீழும் முழங்கால் வரையிலுமாக தன்னை சுத்தப் படுத்திக்கொண்டாள் தண்ணீர்த் தொட்டியின் விளிம்பிலேயே கண்ணை மூடிக் கொண்டு உட்காரவும் செய்தாள். காலைமுதல் கதிரறுத்த அலுப்பு தண்ணீர் தந்த ஒத்தடத்தில் சுகமாய் மறைந்தது. மாற்றுடையிருந்தால் குளியலே போட்டிருப்பாள். கசகசத்த உடம்பு புத்துணர்வு பெற்றது. நேற்று தான் அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள் மருதவள்ளி. செந்திலும் அலமேலுவும் தோப்பு  வீட்டுக்கு வந்து விட்ட பின்பு தன் வீட்டுக்கு போக யத்தனித்தவளை நிலாதான் நிறுத்தி வைத்தாள். அவளின் அம்மாவுக்கும் செவத்தையா மூலம் சேதி அனுப்பினாள்.

காதுகுத்து வளைகாப்பு முடிந்ததுமே நிலா அவளின் அம்மாவுக்காக எடுத்துத் தந்த சேலையையும் கொஞ்சம் பலகாரவகைகளையும் கையில் செந்தில் தந்த பணத்தோடும் அம்மாவைப் பார்க்க அனுப்பி  வைத்திருந்தாள்.

இன்று கதிரறுக்க கிளம்பிய தாயோடு அவளும் களத்துக்கு கிளம்பி விட்டாள். தனியே வீட்டிலிருந்து மோட்டு வளையைப் பார்ப்பதற்கு வேலைக்குப் போனால் கூலி கிடைக்குமே.

வேலை முடிந்து அம்மா முன்னே கிளம்பிவிட இவள் தன்சோட்டுக்காரிகளோடு வருவதாக சொன்னாள்.

அவளவள் பேசிச் சிரித்து பிரிந்து போக இவள் தண்ணீரைக்கண்டதும் நின்று விட்டாள்.

‘ஹ்ஹ்ம் கிளம்பனும். அம்மா பிஞ்சுக் கத்திரிக்காயும் பச்சமொச்சையும் போட்டு கொழம்பு வச்சு களி கிண்டறேன்னுச்சு. போயி ஒரு பிடி பிடிக்கனும்”என்று வாய் விட்டு பேசிக்கொண்டே எழ முயன்றவள் தோளை பின்னாலிருந்த வலிய கைகள் இரண்டு அழுத்திப் பிடித்தன.

‘சுர்’ரென்று கோபம் வர

 “எவண்டா அவன் கட்டைல போறவன்? முன்னே வந்து நில்லுடா.தனியாயிருக்கிற பொம்பளை பிள்ளைக்கிட்டே வம்பு வளர்க்கிறவன் மூஞ்சே பேர்த்துட்டு மறு வேலே பாக்கேன் “

என்று சிலுப்பியவளை முரட்டுத்தனமாய் திருப்பியது அந்தக்கைகள்.

எதிரே…..

பலராமன் எஸ். ஐ. நின்று கொண்டிருந்தான் கோணல்சிரிப்புடன்.

“என்னடி சிலுத்துக்கிற சின்னச் சிட்டு. பாதி நனைஞ்சு பாதி நனையாம என்னா அழகுடி நீ. மாமனை குஷிப்படுத்திட்டு போயிட்டேயிருப்பியாம்.”

மருதவள்ளிக்கு உள்ளே எரிந்தது.

‘வாடா ..வாடா…உனக்காகத்தானே காத்திருக்கேன். வசமா மாட்டிக்கிட்டியாடா மவனே. பாக்கிற பொண்ணையெல்லாம் குஷிப்படுத்தவாடின்னு கூப்பிடுவியா நீ? இன்னைக்கிருக்குடா மாப்பு இந்த மருதவள்ளி வைக்கிறா பாரு உனக்கு ஆப்பு.’

என்று சூளுரைத்துக் கொண்டாள். பலராமனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை.சஸ்பென்ஷனில் தான் இருக்கிறான். இங்கே மனைவியின் சகோதரி வீட்டு விசேஷத்திற்கு வந்தவன் மாமனாரின் அறிவுரையைத் தாளமாட்டாமல் வெளியேறி விட்டான்.

பெரிய வீட்டு சங்காத்தமே வேண்டாம் தள்ளி நில்லு என்று அவர் சொன்னது கசந்தது. பலராமனுக்கு.

பெரியவர் சிவநேசனின் அப்பா காலத்திலிருந்தே இரண்டு குடும்பத்துக்கும் ஆகாது. சிவநேசனின் தாத்தா தன்  மனைவி மட்டுமல்லாது வேறொரு பெண்ணின் தொடர்பிலுமிருக்க அங்கிருந்து கிளைத்ததுதான் பலராமனின் வேர். தாத்தா காலத்துக்குப்பின் அவருடைய மகன் ….இப்போது சிவநேசம், ஸ்ரீநிவாஸ், என்று சந்ததி வளர வளர  பகையுமே வளர்ந்தது. இன்று அபய், நந்தன் என்று வளர்ந்து நிற்கையில் பலராமனும் வளர்ந்து படித்து அதிகாரம் பெற்றாலும் பகையையும் நெஞ்சு முழுக்க வளர்த்துக் கொண்டு பெரிய வீட்டை கேவலப்படுத்தவே சமயம் பார்த்திருந்தான். . ஒரே வம்சத்தின் இன்னொரு கிளையாயிருந்தும் தங்களுக்கு கிடைக்காத அங்கிகாரமும் செல்வாக்கும்அந்தக் குடும்பத்திற்கு கிடைப்பதைக் கண்டு  அவன் மனதில் அசூயையும் ஆங்காரத்தையும் நிறைத்தன. குலத்தளவே ஆகுமாம் குணம் என்பதற்கு சிறந்த உதாரணம் பலராமன் படிப்பு தந்த பதவியை கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் பயன்படுத்திக் கொண்டிருந்தான். பெண்களிடம் அத்துமீறல் அவனுக்கு பொழுதுபோக்காகவே ஆகி விட்டது. அப்படி எல்லைமீறித்தான் சஸ்பென்ஷன் வரை போயும் திருந்தாத ஜன்மமாயிருந்தான். கோபத்தோடு சகலையின் வீட்டை விட்டு வெளியேறி  ஊரைச்சுற்றி வருகையில் கண்ணில் விழுந்த மான்குட்டியைக் கண்டதுமே இரையாக்கிக் கொண்டுவிட நெருங்கினான்.

“வாடி என் கப்பக்கிழங்கே! “

மருதவள்ளியின் கையைப் பிடித்து இழுக்க

அடுத்த ஐந்தாவது நிமிடம்  “அய்யோ அம்மா “என்று அலறலுடன் கையை உதறினான்.புளிச் சென்று கையிலிருந்து வெளியேறிய குருதி ஓடும் தண்ணீரில் தெறித்து நிறமிழந்து ஓடியது.

கையிலிருந்த கதிரறுவாளால் அடுத்து இன்னொரு வெட்டை அழுத்தமாய் இறக்கினாள் மருதவள்ளி

“ஏய் “

என்று ஆத்திரத்துடன் அவளை கை நீட்டிப் பிடிக்க முற்பட தோளிலிருந்து நெஞ்சுவரை ரத்தக் கோடு விழுந்தது. நிலைதடுமாறி  கீழே சாய்ந்தவனின் மீது இன்னும் ரௌத்திரமாய் வெட்ட முனைந்தவளைக்கண்டு அச்சத்துடன் உருள வெட்டு இடம் மாறி எசகுபிசகான இடத்தில் அடிவயிற்றின் கீழே  ஆழமாய் விழுந்தது.

“அய்யோ அம்மா! யாருடீ நீ? பொண்ணா பேயா? ஒரு போலிஸ்காரனையே வெட்டுறியா உன்னை இப்பவே என்ன பண்றேன் பாரு “

அத்தனை வலியிலும் அவன் உறுமிக்கொண்டே தன் மொபைலை எடுத்து

“ஹலோ! சாவடி போலிஸ் ஸ்டேஷன்! நான்”

மருதவள்ளி அதைப் பிடுங்கினாள்.பிடுங்கிய வேகத்திலேயே தூக்கி எறிந்தாள் அது களக் புளக் என்று கிணற்றுக்குள் விழுந்தது.

கண்கள் தெறிப்பது போல பார்த்தவனுக்கு அடிவயிற்றில் விழுந்த வெட்டினால் ரத்தம் அதிகம் வெளியேற மயக்கத்துக்கு போக ஆரம்பித்தான்.

அவனுடைய விழிகள் உயிர் பயத்துடன் பார்த்தன.

 “ப்ளிஸ்….என்னைக் காப்பத்து “

 அவளையே பார்த்து கைகூப்ப

“இந்தமாதிரி எத்தனை பொம்பளைங்க உன்கிட்டே கையேந்தி மானப்பிச்சை கேட்டுருப்பாங்க கை கூப்பி கெஞ்சியிருப்பாங்க…நினைச்சுப் பாரு. “

எனும் போதே அவன் விழிகள் களைப்புடன்

மூடிக் கொண்டன.

சிறிது நேரம் அப்படியேஅமர்ந்திருந்தவளுக்கு மூச்சு வாங்கியது.

‘ஹ்ம்மா! நிசமாவே போட்டுத் தள்ளிட்டோமோ. அம்மாடி …கொலைக்குத்தமாகி தூக்குலே போட்டுடுவாய்ங்களோ’

‘போட்டா போடட்டுமே! ஒரு வெறிநாயைத்தானே கொன்னு போட்டோம். ஊரு பொம்பளைங்க இனியேனும் நிம்மதியாயிருப்பாங்க தானே ‘

‘அண்ணி கையைப்பிடிச்சு இழுத்த கையை ரெண்டு துண்டாக்கியிருக்கனும் தப்பிச்சுட்டான். அண்ணியை போலிஸ் ஸ்டேசன் உட்கார வைச்சதுக்கு இது சரியான தண்டனைதான்’

‘ஆனா நம்மால ஒரு உசிரு போயிடக் கூடாது. என்ன பண்ணலாம்?’

‘அவள் தன்னுடைய போனிலிருந்து ஆம்புலன்சுக்கு போன் செய்தாள்.

பெண்மையின் குணச் சிறப்பே இதுதானே…

மறு நாள்….

ஏட்டைய்யா வந்து அவள் முன்னே நின்றார்.

அவளுக்கு ஈ.ரக்குலையே அறுந்து வாய் வழியே வெளியே விழுந்து விடும் போலிருந்தது.

 “ஏம்மா நேத்து நீதானே ஆம்புலன்சுக்கு போன் பண்ணது.?”

அவள் அவரையே விழித்துப்பார்த்தாள் காலெல்லாம் நடுங்கியது.

“அய்யா! அவ சின்னப்பொண்ணுய்யா ஒன்னும் தெரியாது விட்டுடுங்கய்யா.இனிமே எதுவுமே செய்ய மாட்டாய்யா “

“உங்க பொண்ணா? “

“ஆமாங்கய்யா.  சின்னப் பொண்ணு நான் கண்டிச்சு வைக்கிறேன்யா”

“அட இரும்மா நீ வேற

உன் பேரென்ன “

“மருத வள்ளிங்க”

ம்ம் உனக்கு எம்மாந் தைரியம். போலிஸ்காரனையே வெட்டியிருக்கே”

“அவன் போலிஸ்காரனா நடந்துகிட்டா நான் ஏன் வெட்டப்போறேன்.”

“ம்….”

அவர் மீசையை நீவிக் கொண்டே முறைத்தார். அவளும் முறைத்தாள்.

“தாணாக்காரரே. அவ சின்னப்பொண்ணுய்யா ஏதோ விவரம் தெரியாம செஞ்சுடுச்சு கழுதை.எதானாலும்ல.விட்டுடுங்கய்யா.நான் கண்டிச்சு வைக்கிறேன். அவ உயிரைக் காப்பத்தான் ஆம்புலன்ஸ்ஸை கூப்பிட்டா. அது தப்பாய்யா? “

“அப்படியா பொண்ணு.”

“………..”

“பதிலு சொல்லு. நீதானே வெட்டினே”

“……….”

“ஹ்ம் நான் சொல்றது சரிதானான்னு சொல்லு.”

“………”

“நீ  வேலை முடிச்சு வரப்போ சத்தம் கேட்டுச்சு. நீ ஓடிப்போய் பார்த்த. அப்போதான் ஒரு மனுசன் குத்தியிரும் குலையுயிருமா கெடக்கிறதைப்பார்த்துட்டு ஆம்புலன்சுக்கு போன் பண்ணே.அப்படித்தானே.”

அந்தக் குரலில் அப்படித்தான் என்ற அழுத்தம் ஒலிக்கவே

மருதவள்ளியும் ஏதோ புரிந்தது போல்  “ஆமாமென ” தலையாட்டினாள் அனிச்சையாக.

அவளின் தாயின்புறம் திரும்பியவர்

“ஏம்மா வீட்டுக்கு வந்தவங்களுக்கு காபித்தண்ணி வேணாம் தாகத்துக்கு சொம்புத்தண்ணீ கூடத் தரமாட்டீங்களா?”

“அய்யோ …அப்படியில்லைங்கய்யா. காபித்தண்ணீயே சூடா எடுத்தாரேன் “

என்று அவர் நகர

அவர் இவளிடம்

“இங்கப்பாரு மருதவள்ளி! நீ ஒன்னும் நல்லவனை குத்திப்போடலை. அவனுக்கு இது சரியான தண்டனைதான் எனக்கே புரியுது. என்ன நடந்திருக்கும்னு. உன்கிட்ட கோக்குமாக்கா நடக்க நினைச்சிருப்பான்.நீ அரிவாளாலே போட்டிருப்பே. இதை இப்படியே கோர்ட்டுலே சொல்லலாம் தான் ஆனா நீ வாழ வேண்டிய பொண்ணு. ஊரு வாயை மூடமுடியாது. இஷ்டத்துக்கு பேசும்.

அதனாலேதான்….

நீ வேலை முடிச்சு வர்ர வழியிலே சத்தம் கேட்டுச்சு பார்த்தே ஆம்புலன்சுக்கு போன் பண்ணே. அவ்ளோதான். எந்தக் கொம்பன் வந்து கேட்டாலும் மாத்திமாத்தி கேட்டாலும் இதைத்தான் சொல்லனும் புரிஞ்சுதா.”

அவள் முகம் தெளிவானது.

“ரொம்ப நன்றி ஏட்டய்யா. அவன் நேத்து என்கிட்ட நடந்துகிட்டதும் பேசுனதுமே சரியில்லை.எங்கண்ணி கையைப்பிடிச்சு இழுத்து தள்ளிவிட்டுட்டு போயிட்டான். போலிஸ் ஸ்டேஷன்ல கர்ப்பிணின்னு பார்க்காம கால்கடுக்க நிக்க வைச்சான். எல்லா கடுப்பும் சேர்ந்து வகுந்துட்டேன்.”

“உங்க அண்ணியா யாரு”

“செந்திலண்ணன் பொஞ்சாதி. நிலாம்மாவும் நந்தன் அய்யாவும் வந்தாங்களே. அதுலதானே இவனுக்கு வேலை போயிடுச்சு”

“செந்தில்ஸார் எப்படி அண்ணன்!”

“அவர் வீட்டுலே தான்வேலை செய்றேன் ஏட்டய்யா. இப்போ இங்கேயில்லை அவங்க பெரிய வீட்டுக்கே போயிட்டாங்க நானும் அங்கதான் வேலைக்கு போறேன். பெரிய வீட்டுல விசேசம் நடந்தப்பபோ எங்கம்மாவுக்கு சீலைத்துணி புதிசா எடுத்துத் தந்தாங்க அதான் அதையும் குடுத்திட்டு அம்மாவைப்பார்த்துட்டு போலாமின்னு வந்த இடத்துலே”

அம்மா வரவே பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

“அப்புறமென்ன தங்கமாப்போச்சு. பெரிய வீட்டு அய்யாகிட்டே சேதி போனாலே போதுமே. நீ எதுக்கும் கவலைப்படாதே. கிளம்பி வழக்கம் போல பெரியவூட்டுக்கே போ. .அப்புறமா  மிச்சத்தைப்பார்த்துக்கிடலாம். சரிம்மா நான் வரேன்”

என்றவர்

குரலை தழைத்துக் கொண்டு

“செந்தில் அய்யா காதிலாவது நந்தன் அய்யா காதிலாவது போட்டு வைம்மா. அந்த ஆளுமே பொம்பளைப் புள்ளை கையாலே அரிவா வெட்டு வாங்கினதை வெளியே சொல்ல மாட்டான். பார்த்துக்கிடலாம். வரேன் “

என்று கிளம்பினார்.

எல்லா இடத்திலுமே நல்லவர்களும் இருக்கிறார்கள் தான்.

அத்தனை பேரும் தங்கமாயிருக்க பெரியதனக்காரர் வீட்டிலேயே மஞ்சுளாம்மா இல்லையா?  மருதவள்ளி யோசனையில் ஆழ அவளுடைய அம்மா அவளை பெரிய வீட்டுக்கு த் துரத்தினார்.

                  ************

மஞ்சுளா

 பொத்துக்கிடந்த தன் உள்ளங்கைகளுக்கு  எரிச்சல் தாளாமல் நிலா தந்திருந்த களிம்பைப் பூசிக் கொண்டிருந்தாள்.

வேலையே செய்து பழகாத உடம்பு வயக்காட்டில் நின்ற ஒருமணி நேரத்திலேயே துவண்டு போய்விட்டது.இரவும் காலையும் சாப்பிடாததும் பழக்கமில்லாத வெயிலும் தலை சுற்றிக் கொண்டு வந்தது.

அருகில் நின்றிருந்த குடியானவப் பெண்தான் தன்னுடைய பித்தளை போணியிலிருந்து நீராகாரத்தை வடித்துத் தந்தாள்.

அதை அருந்தவும் மஞ்சுவின் தன்மானம் இடந்தர வில்லைதான். கண்கள் கிறங்க சாய்ந்தவளுக்கு அவளிடம் கேட்காமலேயே வாயில் நீரை வார்த்தாள் அந்தப் பெண்.

என்ன செய்வது தண்டனையை அனுபவித்துத் தானே ஆகனும்.மனிதநேயம் இன்றிப்போனால் இதையெல்லாம் அனுபவித்தே தானே தீரனும்.

மஞ்சு மயக்கம் தெளிந்து எழுந்தபோது மதிய உணவு நேரம் வந்திருந்தது.

களியும் பழையசோறும் கீரை மசியலும் சுண்டக் குழம்புமாகக் கதம்ப வாசனை மஞ்சுவின் வயிற்றில் பசியெனும் தீயை மூட்டியது. ஒரு வாய் சோறுக்காக வயிறு ஓலமிட்டது. கண்ணீர் குளம் கட்டியது. தன்னை இப்படியொரு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்ட புருஷன் மீது கடுங்கோபம் வந்தது. மரநிழலில்வேரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

“அம்மா! அம்மா மஞ்சும்மா “

யாரோ எழுப்பினார்கள்.

“அம்மாடி!  எம்புருசனுக்கும் சேர்த்துத்தான் சோறு கொண்டாந்தேன். அது வேற எடத்துக்கு வேலைக்கு போயிடுச்சு.

தயிருஞ்சாதமும் காணாத்துவையலும்  தாம்மா . சாப்பிடுங்களேன். உங்களுக்கு பழக்கமில்லாத வேலையைக் கத்துக்கிடனும்னு வந்திருக்கீங்க. ஆனா கொளுத்துற வெயிலுக்கு இதாம்மா உடம்புக்கு நல்லது. சாப்பிடுங்கம்மா “

முதியவர் ஒருவர் சொல்லிக்கொண்டே தூக்குச்சட்டியை நீட்டினார். மஞ்சு வேண்டாமெனத் தலையசைத்தாள்.

அவரோ விடாமல் வற்புறுத்த கடைசியாக வாங்கிக் கொண்டாள். ஒரு வாய் வைக்கவும் அமுதமாய் இருந்தது. இத்தனை வருடங்களில் முதன்முறையாக பசித்து உண்கிறாள்.

காலியாகக் கிடந்த வயிற்றில் ஜில்லென்று உணவு இறங்கியது.

அந்த முதியவர் வேலிப்பக்கமாய் நகர்ந்து போய் சந்தோஷமாய் கையாட்டியது மஞ்சுவுக்குத் தெரியாது. அந்தபக்கமிருந்தவரும் தன்னை மறைத்துக் கொண்டு தம்ஸ்அப் காட்டினார். ஸ்கூட்டியொன்று வேகமாக நகர்ந்தது.

இதேதும் அறியாத மஞ்சு மதியத்துக்கு மேல் செய்த அரைகுறை வேலையில் கை யை பொக்கிக் கொண்டது தான்மிச்சம்.

மாலை நேரம் கையில் தனக்கான பணத்தை வாங்கிக் கொண்டபோது கையெல்லாம் நடுங்கியது. ஜுரம் வரும் போலிருந்தது. தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்தவள் களைப்புடன் படுத்தே விட்டாள். அப்போதுதான் நிலாம்மா தந்து விட்டாங்க என்ற பொன்னி களிம்பைத் தந்ததுடன் பூசியும் விட்டு போய் விட்டாள்.

அப்போதுமே மஞ்சு எதுவுமே யோசிக்கவேயில்லை.

மறுநாள்

பொழுது விடிந்தது

மஞ்சு எழுந்திருக்கவேயில்லை..

(சஞ்சாரம் தொடரும்…)

முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...