அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 14 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 14 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் -14

விழா நடந்து முடிந்த சந்தோஷமேயில்லாமல் வீடு களையிழந்து கிடந்தது. அவரவரும் மஞ்சுவின் நெருப்புப் பேச்சினால் அவரவர் எண்ணப்போக்கில் உட்கார்ந்திருந்தனர். கோயிலிலேயே மஞ்சுவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி விட்டது சாப்பாட்டு பந்தி ஆரம்பித்ததுமே அலமேலு களைப்பு மீதூர கோயிலின் ஒருபுறமாயிருந்த அறைக்குள் சென்று படுத்து விட்டாள். பயண அலுப்பும் காலையிலேயே எழுந்ததும் சோர்வைத் தந்தது. காது குத்தலில் வலி தாங்காமல் அழுது  ஓய்ந்த சின்னுவையும் அருகில் படுக்க வைத்துக்கொள்ள கண் சொக்கியது. நிலா சாப்பிட அழைக்க வந்தவள் அலமேலு அசந்து உறங்குவதைக் கண்டு கதவை வெறுமனே மூடிவிட்டு வெளியேறினாள்.

சாப்பிட்டு முடித்தவர்கள் தாம்பூலம் தரித்துபடி பேசிச்  சிரித்துக் கொண்டிருக்க மஞ்சுவுக்குள் வன்மம் வெடித்துச் சிதற துடித்துக் கொண்டிருந்தது.

யார் வீட்டு பணம்? யாருக்கு செலவழிப்பது. ஒரு காது குத்துக்கே இப்படி பணம் தண்ணீரா போனா இன்னும் இதுகளுக்கு செலவழித்தே சொத்து கரைஞ்சுடும் போலயே!

ஒரு வேலைக்காரனுக்கு அதுவும் ரெண்டாவது கர்ப்பத்துக்கு விமர்சையான வளைகாப்பா?

யாரோ அருகிலிருப்பவள் யாருடனோ…

“அருமையா செஞ்சாங்க இல்லே? ஆயிரமிருந்தாலும் பெரிய தனக் குடும்பம் குடும்பம் தான். அந்த அலமேலு அம்மா அதான் சின்னராஜா சம்சாரமும் குணவதியா தெரியறாங்க”

என்று தன்னியல்பில் பேசிக் கொண்டு போக மஞ்சு வெடித்தாள்.

“ச்சீ நிறுத்துங்க! சின்ன ராஜாவாம். சின்ன ராஜா.யாருடி சின்ன ராஜா. என் வீட்டு எடுபிடி அந்த செந்திலு.”

அந்தப் பெண்கள் ஆழியூரைச் சேர்ந்தவர்கள்.கோபமாய்த் திரும்பினார்கள்.

.  “ஏய் என்ன பேசுறோம்னு கவனிச்சு பேசு . எங்கய்யாவை பேசினா அப்புறம் பேச நாவிருக்காது அறுத்தெறிஞ்சிடுவோம் ஜாக்கிரதை “என்று மிரட்ட

அருகிலிருந்த மஞ்சுவின் தாய் மஞ்சுவின் வாயடைத்து இழுத்துப் போனார்.

“எங்கே பேசனுமோ அங்கே பேசு. இங்கே வச்சு ரசாபாசமானா உன் மாமனாரே கோபப் படுவார். வீட்டுக்குப் போனதும் கச்சேரியைத் துவங்கு. இன்னிக்கு அந்த எடுபட்ட பயலை குடும்பத்தோட விரட்டிட்டு மறுவேலை பார்க்கலாம் “

உள்ளுக்குள்ளே கனிந்து கனல் கக்க தயாராயிருக்கும்  லாவா வாக வீடு வந்து சேர்ந்தாள் மஞ்சு.

கோபம் கொண்ட மனதுக்கு சிந்தனை தெளிவின்றி போவது சகஜம் தானே. மஞ்சுவின் விஷயத்திலும் அதே நடந்தது. கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் அங்கே வந்திருந்த பல பெரிய தலைக்கட்டுகளும் முதியவர்களும் செந்திலுக்கு தந்த மரியாதையையும் அன்பையும் உணர்ந்திருப்பாள். ஆனாலும் அதுவும் கூட சந்தேகமே. கணவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை செந்திலுக்கு கிடைப்பதாக எண்ணி க் குமைந்தாள். கணவன் வீட்டு சொத்தே அழிந்து போவதாக மருகினாள். ஒரு அனாதைப்பயலின்  மனைவிக்கு விழாவா என்று குமுறினாள்.

வீடு வந்த பின்னும் கூட எப்போஎப்போ என்று காத்திருந்தவளுக்கு கிடைத்தது வாய்ப்பு.

 வெந்நீர் வேண்டும் என்று கேட்டவளுக்கு  அதைக் கொண்டு வந்து மேஜையில் வைத்து விட்டுப் போய்விட்டாள் பொன்னி.. மிகவும் சூடாக இருக்க அங்கிருந்த சின்னுவை கைகாட்டி கூப்பிட்டவள்

“இந்தா! இதைக் கொண்டு போய் பொன்னி கிட்டே குடுத்து நல்லா ஆத்தி வாங்கிட்டு வா “என்று சொம்பைத்தர

குழந்தை கை பொறுக்காமல் சொம்பை தவறவிட சூடான நீர் குழந்தை காலிலும் மஞ்சுவின் காலிலும் பட்டுவிட எரிச்சலில் சின்னு அலறினாள். மஞ்சுவோ கோபத்துடனும் எரிச்சலுடனும்

“சனியனே! ஒரு சொம்புத்தண்ணியை தூக்க முடியாதா உன்னாலே. எருமை மாதிரி இருக்கே.  என் காலையெல்லாம் வேக வச்சிட்டியே “என்று சின்னுவின் முதுகில் அறைந்தாள்.

அக்காவுடன் உள்ளறையில் பேசிக் கொண்டிருந்த செந்தில் வெளியே வந்து குழந்தையை அள்ளிக் கொள்ள மரகதம் பொன்னி நிலாவோடு வீட்டிலிருந்த ஆண்களும் ஹாலுக்கு வந்தனர்.

குழந்தையின் சிவந்த பாதமும் முதுகில் படிந்திருந்த விரலின் தடிப்பும் அழுகையும் மஞ்சுவின் மீது கண்டனத்தை வீசின.

நிலவழகி வேகமாய் வந்து

“குழந்தையை ஏன் அடிச்சீங்க! “”

“குழந்தையா இது? ஒரு வேலை செய்ய துப்பு இருக்கா? என் காலெல்லாம் வெந்து போச்சு

“உங்க கால் வெந்து போச்சுன்னு குதிக்கிறிங்க…சின்னு காலை பாருங்க குழந்தை காலெல்லாம் எப்படி இருக்குன்னு”

“அடக் கடவுளே ஏம்மா மஞ்சு என்னை கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே.பாப்பா காலெல்லாம்  செவந்து போச்சே! ” பொன்னி அங்கலாய்த்தாள்.

“மஞ்சு நீ மனுஷி தானா “

“என்னத்தை இது? ஒரு எடுபிடியோட பிள்ளைக்கு பரிஞ்சுகிட்டு சொந்த மருமகளையே பேசுறீங்க.  “

வேகமாக அவளை நெருங்கிய அபய்யிடம்

“பாருங்க கால் எரியுது. தோல் வழண்டு போச்சு”

அவள் முடிக்குமுன்னே அபய்யின் கை வேகமாக அவள் கன்னத்தில் இடி போல் இறங்கியது.நிலைகுலைந்தவள் மேஜையைப் பற்றிக் கொண்டாள். கன்னம் காலை விட திகுதிகுவென எரிந்தது.

“ஒரு வேலைக்காரன் பெத்த குழந்தைக்கு பரிஞ்சுகிட்டு கட்டுன பொண்டாட்டி மேலே கை வைக்கிறியா நீ மனுசன் தானா”

அடுத்தகன்னத்திலும்  அறை விழுந்தது.

“அய்யோ! இதை கேட்க யாருமேயில்லையா? அத்தை இது நியாயமா?”

அவரோ சின்னுவின் பாதத்தில் நந்தன் கொடுத்த களிம்பை பூசிக் கொண்டிருந்தார். குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தாள்.

“மாமா டாக்டர்கிட்டே போயிட்டு வந்திடலாம் மாமா”

பெரியவர் முன்னால் போய்

“இதை கேட்கமாட்டீங்களா?ஒரு அனாதையை  விட உங்க வீட்டு மருமக கீழே போயிட்டாளா? நம்ம கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கறவனுக்காக என்னை உங்க பேரன் கைநீட்டி அடிப்பாரா? “

“மஞ்சு! நீ யாரை  சொல்றே? செந்திலையா? “

“.ஆமாம் அவனையே தான் தண்டசோறு தண்ட சோறு “

“சீ நாவை அடக்கிப்பேசு. என் தம்பியைப் பார்த்து நீ இப்படியெல்லாம் பேசுவியா அவனை யாருன்னு நினைச்சே? “

“மரகதம் பேசாமலிரு. ரங்கம்மா “

கணவர் குரல் கொடுத்ததுமே தங்கள் அறைக்கு போன ரங்கநாயகி கையில் பத்திரங்களோடு வந்து கணவனிடம் தர அதை மஞ்சுவின் முன்னே விசிறினார் பெரியவர்.

“படிச்சுப்பாரு அவன் யாரு? அவனோட உயரம் என்னன்னு தெரியும் “

மஞ்சு விழிகளை யோட்டினாள். படிக்க படிக்க தலை சுற்றியது.

ஆழியூர் கோட்டை ஜமினின் ஒரே வாரிசு. என்றும் அவனுடைய சொத்துக்களின் விவரமும் பட்டியல் வர தலை சுற்றியது.

‘இவனா? இவனா ஆழியூர் ஜமிந்தார்?”

மரகதத்தின் தாய் தந்தையும் செந்திலின் பெற்றோரும் அண்ணன்தம்பிகள் சகோதரிகளையே மணமுடித்தனர். மரகதமும் செந்திலும் பிறந்த பின்பு செந்திலைப் பெற்றவர்கள் அடுத்தடுத்து இறையடி சேர்ந்து விட சிறுவனாக இருந்த செந்தில் மரகதத்தின் வளர்ப்பு மகனாகி விட்டான். மணமாகி அக்காவோடு அக்கா வீடு வந்தவன் விவரம் தெரிந்தபின்பு தன்னுடைய ஊருக்கு போவதும் வருவதுமாகவே இருந்தானே தவர ஜாகை என்னவோ இங்குதான். ஜமின்தார் என்ற எண்ணமேயில்லாமல் அக்கா அக்கா குடும்பம் பிள்ளைகள் என்று இருந்ததில் அவர் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்த வேலைகள் மஞ்சுவுக்கு அவரை எடுபிடியாகவே காட்டியதும் விதிதான். அவளுடைய தாயும் உண்மையை உணராமல் தூபம் போட்டது இன்னும் கொடுமையே.

மஞ்சுவின் தலை குனிந்தது.

“மஞ்சு உன் புருஷன் பார்த்துகிற நெல்லுக்களமும் மில்லும் செந்திலுடையது தான். அப்படி பார்த்தா உன் புருஷன்தான் கூலி வேலை பார்க்கிறான். “

“உண்மை என்னன்னு தெரியாம பேசுறது பெரிய தப்பு அதிலும் மாமியாருடைய சகோதரன்னும் தெரிஞ்சும் நீ பேசுறேன்னா என்னவொரு திண்ணக்கம் வேனும்.”

“மனுஷாளை மனுஷாளா பார்க்க கத்துக்கோ இனிமேலாவது.நல்ல வளர்ப்பு. நல்ல குடும்பம். நல்லா போயி யொண்ணு எடுத்தே பாரு நீயீ .”

ரங்கநாயகியின் அக்கா பளிச்சென்று வார்த்தை கத்தியை வீசிச் செருகினார்.

“பச்சைப்புள்ளைன்னு பார்க்காம அடிக்கிறியே மனசுலே ஈரமில்லையா உனக்கு.?மனசுக்குள்ள ஈரமில்லேன்னா மடி எப்படி ஈரமாகும். கல்யாணமாகி இத்தினி வருசமாகிப்போச்சு. புழு பூச்சைக் காணோம் வயித்துலே. இதுலே பேச வந்திட்டா நியாயத்தை “

அவர் விடவேயில்லை .மஞ்சு கூனிகுறுகி விட்டாள்.

“சரிசரி இத்தோடு விடுங்க பேச்சை நந்தன் பாப்பாவை கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வந்திடுடா. “

“தாத்தா ….ஒரு நிமிஷம் அப்பா நீங்களும் தான். உங்களை  மீறி பேசறதா நினைக்காதீங்க. இன்னிக்கு நேத்தியில்லை இவ எவ்ளோ நாளா இப்படித்தான் எடுத்தெறிஞ்சு பேசுறாள். நிலாவையும் கூட விட்டு வைக்கிறதில்லே.  இன்னிக்கு இவ செஞ்சது மன்னிக்கவே முடியாத குற்றம். நாம் மற்றவர்களுக்கு தீர்ப்பு சொல்ற நிலையிலே இருக்கிறவங்க. இப்படிப்பட்ட தப்பு இனி தொடரக்கூடாது. எப்போ இவ மனசு திருந்திட்டதா நாம் உணர்கிறோமோ உணர வைக்கிறாளோ அதுவரைக்கும் நான் இவளை இந்த வீட்டுலயிருந்து தள்ளி வைக்கிறேன்.அத்தோடு இதுக்கு மேலும்  தண்டனையா

இவள் இனிமேல் தனக்கான ஆகாரத்தை தானே உழைச்சு சம்பாதிச்சு தானே ஆக்கி சாப்பிடனும்.

பின்கட்டு வழியா தான் போகனும் வரனும் பின்னால இருக்கிற அறையிலே தங்கிக்கலாம். நம்ம மில்லிலோ களத்திலோ நிலத்திலோ எங்கே வேணுமானாலும் வேலை செஞ்சு கூலி வாங்கி சமைச்சு சாப்பிடட்டும். “

அபய் சக்ரவர்த்தியின் அழுத்தமான குரலில் மஞ்சு விதிர்த்துப்போய் நின்றாள். “அபய்”

“கண்ணா “

“தம்பி”

“அண்ணா “

“பெரியத்தான்”

என்று பலவகையான குரல்கள் எழும்ப அவனோ இதுதான் என் தீர்ப்பு என்பது போல நிமிர்ந்து நின்றான்.

“யாருமே அவளுக்கு எந்த வகையிலும் உதவக்கூடாது. அவளே அவளை பார்த்துக்கிடனும் அப்போதான் மனுஷாளை…உறவை …மனசை மதிக்கிற எண்ணம் வரும் இதை யாருமே மீறக்கூடாது. என் மேல் ஆணை”

“என்னங்க “என்ற மஞ்சுவின் கேவலும் கதறலும் அவனை அசைக்கவேயில்லை.

“பொன்னிக்கா! மாடசாமியை உதவிக்கு வச்சுகிட்டு பின்னாலேஇருக்கிற ரூமை சுத்தப்படுத்திக் கொடுத்திடுங்க. நம்ம வீட்டு அன்னந்தண்ணியை அவள் புழங்கவே கூடாது. “

“தம்பீ அபய் வேணாம்டா! ஏதோ அறியாம பேசிட்டா இவ்ளோ பெரிய தண்டனை வேணாம்டா “

“அபய்! உன் மேல ஆணைன்னு பெரிய வார்த்தை சொல்லலாமா? “

அவனோ அமைதியாக இருந்தான். சட்டென்று அவனை நெருங்கியவள் தடாலென அவன் காலில் விழுந்தாள்

“ப்ளிஸ்.  மன்னிச்சிடுங்க இப்படி இனிமே நான் பேசவே மாட்டேன் என்று சொல்லி அவன் பாதங்களை பற்றிக் கொள்ள முனைய அவனோ இரண்டடி பின்னால் நகர்ந்து மாடிப்படியேறியே விட்டான்.

 குழந்தை அழுது முடித்தவளாய் விசும்பலோடு மெதுவே உறக்கத்தின் வசப்பட்டிருந்தாள். மாடியில் இத்தனை களேபரத்திலும் அலமேலு உறங்கி கொண்டிருந்தாள். நிலவழகி கணவனைப் பார்த்தாள்.  இறுகிப் போயிருந்த முகம் உணர்ச்சியற்று இருந்தது.

பெரியவரும் ரங்கநாயகியும் அறைக்குள் போக ஒவ்வொருவராக நகர்ந்து விட்டனர். பொன்னியும் கூட மாடசாமியை அழைக்க போய்விட்டாள்

மஞ்சு மட்டுமே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள். கண்ணீர் மட்டும் துடைக்க துடைக்க பொங்கி பொங்கி வந்துகொண்டிருந்தது. எப்பேர்ப்பட்ட தவறைச் செய்து விட்டு தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்ததும் இன்னும் அழுகை வந்தது அடக்க முடியாமல்..

மஞ்சுவுக்கு திகிர் என்றிருந்தது.

“வேலை செய்வதா? தானே சமைத்து உண்பதா?

வேலைக்காரியைப்போல வேலை செய்து  தான் என் சாப்பாட்டை உண்ண வேண்டுமா? கடவுளே எனக்கு எந்த வேலையுமே செய்யத் தெரியாதே.  உள்ளுக்குள் ஒரு பீதி சுனாமி போலக் கிளம்பியது.

உண்மையிலேயே மஞ்சுவுக்கு உடம்பு வணங்காது. தாய்வீட்டிலும் அப்படியே நகக்கண்ணில் அழுக்கு படாமல் வளர்ந்தவள் . புருஷன் வீட்டிலும் பணியாளர்களை மிரட்டியே வேலை வாங்கிக் கொள்வாள். எல்லோருமே அவளுக்கு கீழே என்ற நினைப்பிலேயே இருப்பவள். இவள் என்ன என்று வேலை பார்ப்பாள். சம்பளம் வாங்குவாள் பொருள் வாங்கி சமைத்து உண்பாள்.

ஏதோ கோபத்தில் அபய் சொல்லியிருப்பானோ? ஆயிரம் கோபமிருந்தாலும் இதுவரை அவளை விட்டுத் தந்ததில்லையே! . இன்னும் சற்று நேரத்தில் வந்து “மஞ்சு “ன்னு கொஞ்சட்டும். அப்போ வச்சிக்கிறேன்.

என்று எண்ணியவளுக்கு எண்ணமே நிம்மதியாயிருந்தது.

ஆனால் …..

நடந்ததோ வேறு.மஞ்சு  திக்கற்றவளைப்போல் நின்று கொண்டிருந்தாள் வெகு நேரம்.

மருதவள்ளிகூட வாயடைத்துப் போய் நின்று விட்டாள். மஞ்சுவுக்கு இது சரியான தண்டனைதான் என்று ஒரு மனசு எண்ணினாலும் மற்றொன்றோ அய்யோ பாவம் என்றே பரிதாபப் பட்டது.

இதே மருதவள்ளியின் மனம் இன்னொருவனுக்கு பாவம் புண்ணியம் பாராமலேதண்டனை கொடுக்கப் போவதை விதி ஆவலோடு எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தது.

(-சஞ்சாரம் தொடரும்…)

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...