மனித நேயர் எம்.ஜி.ஆர்!

 மனித நேயர் எம்.ஜி.ஆர்!

மனித நேயர் எம்.ஜி.ஆர்!

– முனைவர் குமார் ராஜேந்திரன்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு தினப் பகிர்வு

‘மக்கள் திலகம்’, ‘புரட்சித் தலைவர்’, ‘வாத்தியார்’ என்று அவரைக் கொண்டாடிய தொண்டர்களாலும், நேசித்த மக்களாலும் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்டாலும், உறவினர்களுக்கு அவர் என்றும் “சேச்சா’’ தான்.

உறவினர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை “சேச்சா” என்று தான் அழைப்போம். என்னுடைய அம்மா லதா ராமாவரம் தோட்டத்தில் அவரால் வளர்க்கப்பட்டவர்.

சினிமாவிலும், அரசியலிலும் அவரை அறிந்தவர்கள் கூட வீட்டில் எப்படிப்பட்ட இயல்புடன் இருந்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

ராமாவரம் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டால் எளிமையாக இருப்பார். சட்டை, லுங்கியுடன் நடைப்பயிற்சி போவது அவருக்குப் பிடிக்கும். விறகு அடுப்புக்குப் பிறகு சாணி எரிவாயுவைப் பயன்படுத்தப்பட்ட சமையலறைக்குப் பக்கத்தில் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்.

அதிகாலை எழுந்து வீட்டில் அவர் வளர்த்த குழந்தைகளை காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு, சின்னச் சின்ன உடல்பயிற்சிகளைச் சொல்லித் தருவார்.

குழந்தைகள் அவருக்கு “காலை வணக்கம்’’ என்று தமிழில் வணக்கம் சொன்னதும் பதிலுக்கு வணக்கம் சொல்வார். குழந்தைகளுக்குச் சிலம்பம் சொல்லித்தர ஏற்பாடு செய்திருந்தார். வாய்ப்பாட்டையும், நடனத்தையும் கற்க வைத்திருக்கிறார்.

அன்பாகவும் அதே சமயம் கட்டுப்பாட்டுடனும் குழந்தைகளை வளர்த்திருக்கிறார்.

ஒரு சமயம் எம்.ஜி.ஆர் வீட்டிற்குள் நுழைந்த நேரத்தில் ட்யூசன் சொல்லிக்கொடுக்க வந்த ஆசிரியர் தரையில் அமர்ந்தபடி சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

குழந்தையாக இருந்த என்னுடைய அம்மா ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் கோபப்பட்டு அம்மாவைக் கண்டித்துத் தரையில் அமர வைத்திருக்கிறார். என்னுடைய சித்தி ஜானுவுக்கு குச்சுப்பிடி நாட்டியம் சொல்லிக் கொடுக்க வந்த ஆசிரியருக்குப் பாடம் சொல்லித்தர சரியான இடம் இல்லை என்று கேள்விப்பட்டதும் அவருக்கு இடம் தந்து உதவியிருக்கிறார்.

சில சமயங்களில் குழந்தைகளுக்கு முன்னால் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைப் பாடிக்காட்டியிருக்கிறார். அவர் எழுதிய டைரிக்குறிப்புகளில் அவருடைய இசை ஞானம் தெரியும்.

சேச்சாவுக்கு தமிழ் மொழி மீது ஈடுபாடு அதிகம். நிறையத் தமிழ் நூல்களை வாங்கிச் சேகரித்து வைத்திருந்தார். திருக்குறளைக் குழந்தைகளுக்குச் சொல்லி அதற்கு அவருடைய பாணியில் எளிமையான விளக்கமும் சொல்லியிருக்கிறார்.

எந்தப் பண்டிகையையும் விட சேச்சாவுக்குப் பிடித்த பண்டிகை பொங்கல். அன்று தோட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே மாதிரி புது உடையைப் பரிசளிப்பார். அவரும் அதே உடையை அணிந்திருப்பார். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். கலை நிகழ்ச்சிகள் நடக்கும். எல்லோருக்கும் பணம் கொடுத்து பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடுவது அவருடைய வழக்கமாக இருந்தது.

தான் வளர்த்த குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். தன்னிடம் வேலை பார்த்த அல்லது தன்னைத்தேடி உதவி கேட்டு வந்தவர்களின் குழந்தைகளையும் படிக்க வைத்தார். பலரைத் தொழிற்கல்வியைப் படிக்க வற்புறுத்தியிருக்கிறார்.

யாரையும் நம்பியிருக்காமல், அவரவர் உழைப்பை மட்டுமே நம்பி வாழவேண்டும் என்பதைப் பல திருமணங்களிலும், நேரில் பலரிடமும் வலியுறுத்தியிருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில் அவர் பெற்ற பாடங்களே அவருக்கு வழிகாட்டியிருக்கின்றன. கும்பகோணத்தில் உள்ள யானையடி பள்ளியில் மூன்றாண்டுகள் அவர் படித்தபோது உணர்ந்த அனுபவத்தினால் தான் சென்னையில் கோடம்பாக்கத்தில் திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் துவக்கி, மதிய உணவு வழங்கினார். கட்டணமில்லாமல் புத்தகங்களை வழங்கிப்படிக்க வைத்தார். சீருடைகளை வழங்கினார்.

சேச்சா முதல்வர் ஆனதும், கோவையைச் சேர்ந்த ராஜம்மாள் தேவதாஸ் தயாரித்துக் கொடுத்த சத்துணவுத்திட்ட அறிக்கையின் படி சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். அந்தத் திட்டம் ஐ.நா.சபை வரை பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் செருப்புகளை வழங்கியது கூட வெயிலின் சூட்டை அவர் அனுபவித்ததால் தான்.

ஒருமுறை முதல்வராக அவர் இருந்தபோது குயின் மேரீஸ் கல்லூரியைக் காரில் கடந்து சென்றார். அங்கு படிக்கும் மாணவிகள் பஸ் ஸ்டாப்பில் சிரமப்படுவதை நேரில் பார்த்தவர், மகளிருக்காகத் தனி பஸ் ஸ்டாப்பையே உருவாக்கச் சொன்னார். உடனடியாக நடைமுறைக்கு வந்தது அந்த மகளிர் பஸ் ஸ்டாப்.

படித்தவர்கள் அதிகரித்து கல்லூரிகள் இல்லாததை உணர்ந்து ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு அரசுக்கு என்று அறிவித்த பிறகு ஏராளமான தனியார் கல்லூரிகள் தமிழகத்தில் பெருகின. தொழிற்கல்வி படித்த மாணவர்களும் பெருகினார்கள். ஆசிரியர்களும் பெருகினார்கள்.

தன்னுடைய ரசிகர்களையும், கட்சித்தொண்டர்களையும் அவர் என்றைக்குமே மந்தையாக – வெறும் கூட்டமாக நினைத்ததில்லை. மாறாக அவர்களுடைய குடும்பப் பின்னணி பற்றிய அக்கறையோடு இருந்தார். 1967-ல் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டபோது சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. அதன் பிறகு நடந்த கூட்டங்களில் “ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’’ என்று அழைக்க ஆரம்பித்தார்.

“என் உடம்பில் ஏற்றப்பட்ட ரத்தம் பலருடைய ரத்தம் என்பதால் அனைவரையும் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று உரிமையுடன் அழைக்கிறேன்’’ என்று அழைத்ததற்கு விளக்கமும் கொடுத்தார்.

தமிழ்நாட்டையே உலுக்கிய அந்தத் துப்பாக்கிச்சூடு பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது நேரில் பார்த்ததை சாட்சியாகச் சொன்னவர் என்னுடைய தாயார் லதா.

1972-ல் அவர் தி.மு.க.வை விட்டு விலக்கப்பட்டபோது உணர்வுவயப்பட்டு உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர் உதவியிருப்பது பலருக்குத் தெரியாத விஷயம்.

1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும், 1984-ல் சிறுநீரகப் பாதிப்போடு சிகிச்சை எடுத்துக் கொண்டபோதும், அவருக்குப் பேசுவதில் சிரமம் இருந்தது. அதற்காக ஸ்பீச் தெரபிஸ்ட்டிட் மூலம் விடாமல் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

தன்னை மாதிரிச் சிரமப்படுகிறவர்களை, முக்கியமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக தமிழ்நாடு முழுக்க காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகளுக்கான பதினெட்டு மாவட்டங்களில் சிறப்புப் பயற்சிகள் துவக்கினார். தான் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திலேயே வாய்பேச இயலாத, காது கேளாதோருக்கான இல்லத்தையும் துவக்க வேண்டும் என்று உயிலில் எழுதினார்.

1987 டிசம்பர் 24-ம் தேதி மறைந்தபிறகு எம்.ஜி.ஆர் விரும்பியபடியே ராமாவரம் தோட்டத்தில் வாய்பேச முடியாத, காது கேளாதோருக்கான இல்லம் துவக்கப்பட்டு இதுவரை ஆயிரக்கணக்கான குழந்தைகள் நவீனத் தொழில்நுட்பத்துடன் படிப்பை முடித்து வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மனநிலையோடு செல்கிறார்கள்.

மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ராமாவரம் தோட்டத்தில் இயங்கும் இந்த இல்லத்திற்கு வந்தபோது நெகிழ்ந்து போயிருக்கிறார். அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் அவர் அப்போது எழுதிய வரிகள் இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன.

“இந்த அளவுக்கு அர்ப்பணிப்புணர்வோடு இயங்கக் கூடிய பள்ளியை நான் வேறு எங்கும் நான் பார்க்கவில்லை. வள்ளலான எம்.ஜி.ஆர் மறைந்தும் வள்ளலாக இருக்கிறார்’’.

எத்தனையோ உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் தேதியை ‘மனித நேய நாளாக’ அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவருடன் வாழும் பாக்கியத்தைப் பெற்ற எங்களுடைய ஆசை.”

*

கட்டுரையாளர்: முனைவர் குமார் ராஜேந்திரன், எம்.ஜி.ஆரின் மருமகனான ராஜேந்திரனின் மகன்.

நன்றி: தாய்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...