மரப்பாச்சி –14 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி –14 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 14

      ருகில் இருந்த மகளை நம்பமுடியாமல் பார்த்தாள் பிருந்தா.. இந்த பிஞ்சு தப்புச் செய்திருக்குமா? செய்திருக்குதே.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? எதுவும் தெரியாத மாதிரி உக்கார்ந்திருக்கிறாளே, இவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? வீட்டிற்குச் சென்றதும் இவளை விசாரிக்க வேண்டும், வாகனம் விரைந்து கொண்டிருந்தது.. அதைவிட வேகமாக சிந்தித்த வண்ணம் இருந்தது பிருந்தாவின் மூளை..

கேப் அவர்கள் வீட்டின் முன் நின்றது. வண்டியிலிருந்து இறங்கினர் மூவரும், உடைமைகளை வண்டியிலிருந்து இறக்க உதவினான் டிரைவர், பணத்தை அக்கவுண்டில் ட்ரான்ஸ்பர் செய்தார் மணிமாறன். பெட்டிகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் சுந்தரம்..

“ஐயா கொடைக்கானல் ட்ரிப் எப்படி இருந்துச்சு?”

நிலமை தெரியாமல் உற்சாகமாய்க் கேட்டான் சுந்தரம்..

“இருந்துச்சு.. இருந்துச்சு”

      தன் எஜமானனிடமிருந்து சலிப்பான பதில் வரவும், ஏதோ சரியில்லையே என்று உணர்ந்தவன்..

“என்னய்யா ஏன் ஒரு மாதிரி இருக்கறீங்க?”

“ஒண்ணுமில்லை போய் காஃபி கொண்டு வா?”

      என்று அவனைத் துண்டித்தார்.. மௌனம் அங்கே நிலமையை தத்தெடுத்துக் கொண்டது..

“ப்ரியாவை அழைச்சுட்டு ரூமுக்குப் போ” பிருந்தாவுக்கு உத்தரவிட்டார் மணிமாறன்..

      காஃபியுடன் வந்தான் சுந்தரம். கோப்பையை வாங்கிக் கொண்டு சோபாவில் சாய்ந்தார், உடலும், உள்ளமும் சோர்ந்து கிடந்தது.. அடுத்த கேள்வி அவரை வதைத்தது.. ‘இந்த நிலை மகளுக்கு யாரால் வந்தது? மீண்டும் மீண்டும் மூளையை பிறாண்டியது கேள்வி. அப்படியே கண்டுபிடித்தாலும் மகளை இந்தச் சிறுவயதில் கல்யாணம் செய்தா கொடுக்கமுடியும்?’.

உள்ளறையில் மகளுடன் சென்ற பிருந்தா மகளை கட்டிலில் அமர வைத்து தானும் அமர்ந்தாள்.. மகளின் கையை தன் கையில் பிடித்தவள் அழைத்தாள்..

“ப்ரியா..”

“என்னம்மா?”

“நீ என்னை அம்மான்னு கூப்பிடுறது கடமைக்கு இல்லையே? உள்ளன்போட  தானே அம்மான்னு கூப்பிடுற?”

“இதுல என்னம்மா சந்தேகம், எங்கம்மாவைவிட ஒரு படி மேல நீங்க என்னை கவனிச்சுக்கறீங்க, நான் உண்மையாத்தான் உங்களை அம்மான்னு கூப்பிடுறேன், கடமைக்கு இல்ல..”

“தேங்க்ஸ்டி செல்லம், அதனால அம்மா ஒரு உண்மையைச் சொல்லப் போறேன்..”

“சொல்லுங்கம்மா, நானும் உங்களை கேட்கணும்னுதான் இருக்கறேன், எனக்கு என்ன ஆச்சு? அப்பா ஏன் என்னை அடிக்கிறாரு?” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அறைக்கதவு திறந்து உள்ளே வந்தார் மணிமாறன்..

“என்ன இவளைக் கொஞ்சிட்டிருக்கற சனியனை ரெடி பண்ணு ஆஸ்பத்திரிக்குப் போகணும்” கணவனின் பேச்சில் அடிபட்டனர் இருவரும்.. கேட்டாள் பிருந்தா..

“எங்கங்க கிளம்பணும்?”

“ஆங்.. சுடுகாட்டுக்கு, தெரியாத மாதிரி கேட்கற? ஆஸ்பத்திரிக்குத்தான், இந்தச் சனியன் வயித்துல இருக்கற சனியனை தொடச்சு எறிஞ்சிட்டு வருவோம்..”

“பொறுங்க தடாலடியா எதுவும் செய்ய வேண்டாம்..”

“தடாலடியா செய்யாம, பத்து மாசம் கழிஞ்சு செய்யவா” கோபமாய் வந்தது மணிமாறனிடமிருந்து வார்த்தைகள், திருமணமாகி வந்ததிலிருந்து இப்படியொரு மணிமாறனை அவள் அப்படிப் பார்த்ததில்லை, அதிர்ந்து பேசாதவர் வாயிலிருந்து இப்படி தடித்த வார்த்தைகள், கணவன் சமநிலை தட்டிப் போயிருக்கிறான், இவனிடம் விவாதம் செய்வது சரியாய் வராது என்று எண்ணியவள்.. அவன் வார்த்தைக்கு உடன்பட்டாள்..

“எந்த ஆஸ்பத்திரிக்குங்க?”

“வேற எங்க நம்ம ஃபேமிலி டாகடர் மனோகரிட்டத்தான்..”

“அவங்ககிட்ட பேசிட்டீங்களா?”

“பொண்ணுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லியிருக்கறேன், போய்தான் விஷயத்தைச் சொல்லணும்..”

“சரி” என்றவள் மகளை குளிக்கச் சொன்னாள். பத்து நிமிடத்தில் குளித்து வேறு உடை உடுத்தி வந்தாள் ப்ரியா. அவளும் ஒரு காட்டன் புடவைக்கு மாறினாள். காரில் ப்ரியாவுடன் கிளம்பினார்கள்.

      டாக்டர் மனோகரி எம்பிபிஎஸ்., எம்.டி.. மேஜை மேல் அமர்ந்திருந்தது அந்த நேம்போர்ட்.. அறுபது வயது மனோகரி.. சௌகார் ஜானகி சாயலில் இருந்தார். ப்ரியாவை வெளியே நிறுத்திவிட்டு கொடைக்கானல் சென்றது, அங்கே மகள் மயங்கி விழுந்தது, கொடைக்கானல் டாக்டர் ப்ரியா கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னது அனைத்தையும் கூறினார். மனோகரி அதிர்ச்சியில் ஸ்தம்பித்தார்..

“என்ன சொல்லுறீங்க மணிமாறன், உங்க பொண்ணு குழந்தை உண்டாயிருக்கறாளா?”

“அப்படித்தான் கொடைக்கானலில் டாகடர் சொன்னாங்க”

“ப்ரியாவை அழைச்சிட்டு வாங்க” மனோகரி கூறவும் வெளியே நின்ற ப்ரியாவை உள்ளே அழைத்து வந்தாள் பிருந்தா..

ப்ரியாவை தடுப்புக்கு பின்னே அழைத்துச் சென்று பரிசோதித்த டாக்டர் மனோகரி இருண்ட முகத்துடன் வந்தாள்..

“டாக்டர்?” மணிமாறன் அழைத்தார்..

“எஸ்.. மிஸ்டர் மணிமாறன்” என்றாள்..

      டெஸ்டில் எதாவது தவறு நடந்து மகளுக்கு ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொல்லுவார் என்று ஒரு சிறு நப்பாசை மணிமாறன் மனதில் இருந்தது.. அதை ‘எஸ்’ என்ற ஒற்றை வார்த்தையில் உடைத்தெறிந்தார் மனோகரி..

“என்ன டாக்டர் செய்யிறது?”

“14வயசுப் பொண்ணு டி அண்ட் சி பண்ணுறதும் கஷ்டம்”

“அதுக்காக கொழந்தையை பெத்துக்கவா முடியும்?”

“அதுவும் முடியாது..”

“டாக்டர் உங்களைத்தான் மலை போல நம்புறேன், எப்படியாவது இந்த களங்கத்தை இவ வயத்துல இருந்து தொடச்சு எடுத்துடுங்க, உங்களால முடியும்..”

“இது இல்லீகல் மணிமாறன் நீங்க படிச்சவரு..”

“இப்ப இதெல்லாம் பார்க்கிற நிலையில நான் இல்லை..”

“இவளோட இந்த நிலமைக்கு காரணம் யாருன்னு தெரிஞ்சுதா?”

“டாக்டர் அந்த இன்வெஸ்டிகேஷனுக்கு இப்ப நேரமில்லை, அவ வயிற்றை மொதல்ல சுத்தப்படுத்தணும், நீங்க முடியாதுன்னா, இதுக்குன்னே இருக்கற ஆஸ்பத்திரிக்கு என்னால போக முடியும், இந்த ரகசியம் வெளியே எந்தக் காலத்துக்கும் தெரியக்கூடாது, அதனாலதான் ஃபேமிலி டாக்டர் உங்ககிட்ட வந்திருக்கறேன், ஒரு தகப்பனோட நிலையை புரிஞ்சுக்கங்க, ஃபிளீஸ் டாக்டர்” என்றவர் குலுங்கிக் குலுங்கி அழுதார்.. அவரின் கண்ணீர் மனோகரியை கரைத்தது..

      இண்டர்காமில் தொடர்பு கொண்டார் டாக்டர்.. நர்ஸ் ஒருத்தி உள்ளே வந்தாள்.. அவளிடம் கிசுகிசுப்பான குரலில் உத்தரவுகளை பிறப்பித்தார்.

“எஸ் மிஸ்டர் மணிமாறன், என் மெடிக்கல் எத்திக்சை மீறி ஒரு தகப்பனுக்காக இந்தச் செயலை செய்யிறேன், என் மனசாட்சியை கழட்டி வச்சுக்க்கிட்டு” என்றவள் அங்கிருந்து அகன்றாள்..

      அனெஸ்தீஷியா கொடுத்து அந்த சிறிய ஆபரேசன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள் ப்ரியா, தவிப்பான இரண்டு மணி நேரம் கழிந்தது.. ஸ்டெச்சரை தள்ளிக் கொண்டு வந்தான் அந்த வார்ட்பாய்.. பின்னாலே ஓடினாள் பிருந்தா. சிறிது நேரத்தில் ஒரு தனியறையில் அனுமதிக்கப்பட்டாள் ப்ரியா, மகளின் முகம் தடவிய பிருந்தா கண்கள் கண்ணீரில் தளும்பியது. மணிமாறன் ஒரு சிலை போல் அமர்ந்திருந்தார்.  அந்நேரம் உள்ளே வந்தார் டாக்டர் மனோகரி..

“மிஸ்டர் மணிமாறன் ஆண்டவன் புண்ணியத்துல ப்ரியாவுக்கு எந்தச் சேதாரமும் இல்லாம அவ வயிற்றில் இருந்த கருவை தொடச்சுட்டேன், அந்தச் சின்னப் பொண்ணை நீங்க ரொம்ப கவனமா கையாளணும், அவ இப்ப ரெண்டும் கெட்டான் வயசுல இருக்கறா. அவகிட்ட பொறுமையாத்தான் இந்த விஷயத்தை அணுகணும். அவகிட்ட மொரட்டுத்தனம் கூடவே கூடாது. கொஞ்சம் நாள் போன பிறகு நிதானமா பேசுங்க, இவளே இந்த விஷயத்துக்கு காரணம் யாருன்னு சொன்னாலும் சொல்லலாம்.. திரும்பவும் சொல்லுறேன் இப்ப அவகிட்ட எதுவும் பேச்சு வச்சுக்காதீங்க, அனெஸ்தீசியா மயக்கத்துல இருக்கறா, இன்னும் நாலு மணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சுடும், ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் அப்புறம் நீங்க இவளை அழைச்சுட்டுப் போகலாம்” கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார் டாக்டர் மனோகரி.. கலங்கிப் போய் நின்றிருந்தனர் மணிமாறனும், பிருந்தாவும்!

(- தொடரும்…)

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...