மரப்பாச்சி –15 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 15
வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் இயந்திரங்கள் போல் நடமாடினார்கள். ப்ரியாவிற்கு வீட்டில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ’தந்தையும் தாயும் தன்னுடன் ஏன் சரியாகப் பேசுவதில்லை? தன்னை ஏன் ஆஸ்பிடலில் அனுமதித்தார்கள்? தனக்கு என்ன நடந்தது?’ குழம்பித் தவித்தது அந்த பிஞ்சு மனம்.
வாரம் ஒன்று ஓடியிருந்தது..பிருந்தா கணவனை வினவினாள்..
“ஏங்க பிரியா ஆஸ்பிடலுல இருந்து வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு அவளை ஸ்கூலுக்கு அனுப்பணும்”
“பிருந்தா இவளை இனிமேல் ஸ்கூலுக்கு அனுப்பணுமான்னு யோசிக்கிறேன்”
பிருந்தா பதறினாள்.. “ஐயய்யோ என்ன பேசுறீங்க? ஸ்கூலுக்கு அனுப்பாம வீட்டுல வச்சுக்கறதா? எங்கோயோ தப்பு நடந்துடுச்சு இனி அந்த மாதிரி எதுவும் நடக்காத மாதிரி நான் கண்ணும் கருத்துமா நான் பார்த்துக்கறேன். அதுக்காக சின்னப் பொண்ணு படிப்பை நிப்பாட்டுறதா?”
“எனக்கு பயமா இருக்குது பிருந்தா, இவளுக்கு இது எப்படி நடந்துச்சு? இதுக்கு யார் காரணம்? இதெல்லாம் தெரியாம இவளை எப்படி வெளியே அனுப்பறது? இவளை பள்ளிகூடத்துக்கு அனுப்பிட்டு நாம எப்படி நிம்மதியா ஆபீசுல உக்கார்ந்து வேலை பார்க்கிறது?”
“அதுக்கு நான் ஒரு தீர்வு வச்சிருக்கறேன்”
“என்ன?”
“நான் வேலையை விட்டுடுறேன்”
மணிமாறனிடமிருந்து பதில் இல்லை.. அவளே தொடர்ந்தாள்.
“ஆமாங்க தங்கச்சிங்க ரெண்டு பேரையும் கட்டிக் குடுத்தாச்சு. நான் வீ ஆர் எஸ் வாங்கிடுறேன், கிடைக்கிற பணத்தை பேங்குல டெபாசிட் பண்ணிடுவோம் அதுல கிடைக்கிற வட்டியும் எங்கப்பாவுக்கு கிடைக்கிற பென்ஷனும் அவங்களுக்கு போதும். நான் ப்ரியாவை கூடுதலா கண் காணிச்சுக்கறேன். அவளை நானே ஸ்கூலுக்கு கொண்டு விட்டுட்டு கூட்டிட்டு வர்றேன்”
மனைவி கூறுவது ஓரளவிற்கு நல்லதாகப் படவே ..
“சரி அப்படியே செய்வோம் உடனே வீஆர்எஸ்சுக்கு அப்ளை பன்ணிடு” என்றார் மணிமாறன்.
மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள் பிருந்தா. எந்த உணர்ச்சிகளையும் வெளியில் காட்டிக் கொள்லாமல் இருந்தாலும் கடந்த ஒரு வார காலமாக அவள் உள்ளுக்குள் ஒரு தணல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஒரு பதினான்கு வயதுப் பெண் இப்படிச் செய்திருப்பாளா? இண்டர்நெட் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது. இருந்தாலும் கள்ளங் கபடமில்லாத ப்ரியாவின் முகம் அவளுக்குக் கூறியது இந்தக் காரியத்தில் பிரியாவின் பங்கு இருக்காது என்று. ஆனால் அவள் மூளை கூறியது இந்தக் காலத்தில் யாரையும் நம்பிவிடக் கூடாது, விசாரிக்க வேண்டும். டியூஷனுக்கும் அவளை காரில் கூடவே சென்று கொண்டு விட்டு கூட்டி வந்தாள். மகளிடம் அறவே பேசுவதில்லை மணிமாறன். அவர் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டது மகள் தப்பையும் செய்து விட்டு அவனிடம் மறைக்கிறாள் என்று.
ப்ரியா பள்ளிக்கூடம் சென்று வந்து உடை மாற்றிக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள். வந்தவள் தந்தையின் அருகில் அமர்ந்தாள். அவள் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது..
“டாடி” தந்தையை அழைத்தாள். மணிமாறன் கல்லாய் அமர்ந்திருந்தார். ப்ரியாவே தொடர்ந்தாள்..
“ஏன் எங்கிட்ட பேச மாட்டேங்கறீங்க? நான் என்ன தப்புச் செய்தேன்? என்ன ஏதுன்னு சொல்லாம எங்கிட்டப் பேசாம இருக்கறீங்க? நான் ஒரு தப்பும் செய்யலை டாடி எங்கிட்டப் பேசுங்க டாடி”
கதறி அழுதாள் ப்ரியா. கணவனின் பிடிவாதம் கண்டு ஒரு கணம் பிருந்தாவின் மனதில் கோபம் எழுந்தது, ஆனால் அடுத்த கணம் தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டாள். ‘வேண்டாம் எரியும் தீயில் நாம் எண்ணை ஊற்ற வேண்டாம், கணவன் கோபம் நாளக நாளாகத் தணியும் என்றெண்ணியவள் மகளின் தலை தடவி..
“ப்ரியா வா அப்பா உன்கிட்ட சீக்கிரம் பேசுவார் அப்பா வேற ஒரு பிரச்சனையில இருக்கறார் இப்ப அப்பவை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று கூறி அப்போதைய நிலமையை சமாளித்து மகளை அழைத்துக் கொண்டு மாடியேறினாள்.
அறைக்குச் சென்றவள் பெட்டில் பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்தவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவளைத் தேற்றபடாத பாடுபட்டாள் பிருந்தா. நிமிடங்கள் கரையவும் சற்று அழுகையி நிறுத்தியிருந்தாள் ப்ரியா. அவளை தோளில் சாய்த்து தலையை வருடியவள் மெதுவாகக் கேட்டாள்..
“நீ என்னை அம்மான்னு கடமைக்குக் கூப்பிடுறியா உண்மையா உங்க அம்மா ஸ்தானத்துல வச்சுக் கூப்பிடுறியா?”
பலகீனமாய் தலை தூக்கியவள் பிருந்தாவின் மடியில் படுத்துக் கொண்டு கூறினாள்.
“இந்த ஜென்மத்துல நீங்க தான் என் அம்மா இதுல எந்த மாற்றமும் இல்லை.. சரி எதுக்கு இப்ப இந்தக் கேள்விம்மா?”
“சரி என்னை நீ உண்மையிலயே அம்மான்னு ஒத்துக்கிட்டதால இந்த அம்மாக் கிட்ட உண்மையை மறைக்காம சொல்லணும். அப்பத்தான் அப்பா உன் கூட பேசுவார்.இல்லைனா இந்த ஜென்மம் முழுவதும் அப்பா உன்கூட பேசமாட்டார்”
“சரிம்மா கேழுங்க நான் பதில் சொல்லுறேன் ஆனா நான் எந்தத் தப்பும் பன்ணலைமா”
தவிப்பாய் கூறும் அந்த முகத்தில் பொய் இருப்பதாக பிருந்தாவிற்கு தோன்றவில்லை.
“சரி மொதல்ல போய்க் குளிச்சிட்டு சாப்பிடு அப்புறம் அம்மா கேட்கிறதுக்கு பதில் சொல்லு”
“சரிம்மா நான் குளிச்சு ரெடியாயிடுறேன் ஆனா கீழே சாப்பிட வரலை சாப்பாட்டை நீங்க மேலே கொண்டு வந்திடுங்க”
“ஏம்மா கீழே சாப்பிட வரலைங்கற?”
“அப்பா என் கூட பேச மாட்டேங்கறார் எனக்கு அழுகை அழுகையா வருது”
“சரிம்மா எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்” என்று கூறியவள் கீழே இறங்கி டைனிங் ஹால் சென்றவள் சுந்தரம் செய்து வைத்திருந்த சப்பாத்தி குருமாவை ஹாட் பாக்சில் அவளுக்கும் ப்ரியாவிற்கும் எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள். ப்ரியா குளித்து இரவு உடைக்கு மாறியிருந்தாள். தட்டில் சப்பாத்தி வைத்து குருமாவை ஊற்றியவள் மகளை சாப்பிடப் பணித்தாள்..
“அம்மா ஊட்டி விடும்மா” என்றாள் ப்ரியா. ஒரு நாளும் இப்படி அவள் கேட்டதில்லை. பிருந்தா மகளின் மனம் உணர்ந்திருந்தாள். அவள் மனதளவில் நொறுங்கியிருக்கிறாள். ஆதரவு தேடுகிறது அவள் மனம். இந்தச் சின்னப் பெண்ணை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் மனதினில் என்ணியவள் சப்பாத்தியை பிய்த்து குருமாவில் தோய்த்து மகள் வாயில் ஊட்டினாள். ப்ரியாவின் கண்களிலிருந்து இப்பொழுது கண்ணீர் வழிந்து அவள் வாய்க்கு வந்தது. மகள் கண்ணீரை தன் புடவை முந்தானையால் துடைத்தவள் கேட்டாள்..
“ஏன் இப்ப அழுற?”
“எனக்கு செத்துப் போகணும்போல இருக்குதும்மா..”
ஒரு கணம் திக் பிரமை அடைந்தாள் பிருந்தா மறு கணம் சுதாகரித்தவள் சாப்பாட்டைக் கீழே வைத்து விட்டு மகளைக் கட்டிக் கொண்டாள்..
“இங்க பாரு இப்ப எதுவும் நடந்துடலை அப்பா ஒரு விஷயத்துல கொஞ்சம் கோபமா இருக்கறார் அது கொஞ்சம் நாளுல சரியாயிடும் அதுவரை இந்த அம்மா இருக்கறா உனக்கு. சின்னப் புள்ளை வாயில இப்படி பெரிய வார்த்தை எல்லாம் வரக்கூடாது. இனி இந்த மாதிரி யோசனை பேச்சு எல்லாம் உன் வாயில வர்றதில்லைனு எனக்குச் சத்தியம் பண்ணு” மகள் முன் கையை நீட்டினாள். மெதுவாய் அவள் கையில் தன் கையை வைத்தாள் ப்ரியா. அதை பொத்திக் கொண்டவள் மகளுக்கு சப்பாத்தியை ஊட்ட ஆரம்பித்தாள். மகள் சாப்பிட்டதும் அவளும் சாப்பிட்டுக் கை கழுவினாள்.
சாப்பிட்டு கைகழுவியதும் மகளுடன் பெட்டில் அமர்ந்தாள். அமர்ந்தவள் கேட்டாள்..
“சரிம்மா அம்மா கேட்கிறதுக்கு பொய் சொல்லாம பதில் சொல்லணும்”
“அம்மா நீங்க இப்படியெல்லாம் கேட்கவே வேண்டாம் நான் உங்க கிட்ட இல்லை யார் கிட்டயும் பொய் பேசுறதில்லை”
“சரி சொல்லு உன்னோட டியர் ஃப்ரெண்ட் யாரெல்லாம்?”
“ஜானுவும் தீப்தியும்”
“அவங்க கிட்ட போன் இருக்குதா?”
“இருக்குது”
“அவங்க நம்பர் குடு”
ப்ரியா அவளின் செல்லை எடுத்து காண்டாக்ட் ஆப்ஷன் சென்று இருவர் எண்ணையும் தாய்க்குக் கூறினாள்.அதை பிருந்தா தன் செல்லில் பதிந்து கொண்டாள்.
“அம்மா நீங்க அவங்க கிட்டக் கேட்கிறதை என் கிட்ட நீங்க நேருக்கு நேர் கேட்கலாம்”
“இல்லைமா உன்னை நம்பாம இல்லை உனக்குத் தெரியாம எதாவது நடந்துருச்சான்னு நான் விசரிக்கணும்”
தாயை புரியாத பார்வை ஒனறை பார்த்தவள் கேட்டாள்..
“அம்மா நான் ஒண்ணு கேட்கறேன்”
“கேளும்மா”
“எனக்குத் தெரியாம எனக்கு என்னதாம்மா நடந்துச்சு?”
அப்பவியாய் கேட்கும் மகளுக்கு என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்து நின்றாள் அந்த வளர்ப்புத்தாய்!
(-தொடரும்…)
முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16