மரப்பாச்சி –16 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி –16 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 16

      னக்குத் தெரியாம அப்படி எனக்கு என்னதாம்மா நடந்துச்சு? அப்பாவியாய் கேட்கும் மகளை கண் கொட்டாமல் பார்த்தாள் பிருந்தா. எப்படிப் புரிய வைப்பேன் இந்தப் பெண்ணிற்கு? சொன்னால் புரிந்து கொள்வாளா? முதலில் மகளிடம் பேசிப் பார்ப்போம் அவள் போக்கில் விட்டு அவளிடமிருந்தே அவள் வாயைப் பிடிங்கி உண்மை வருகிறதா என்று பார்ப்போம் அப்புறம் அவளிடம் நடந்த உண்மையை கூறுவதா வேண்டாமா என்று முடிவெடுப்போம். எண்ணியவள் மகளை வினவினாள்.

“ப்ரியா நீ இந்த அம்மா தலையில அடிச்சு சத்தியம் பண்ணணும்”

“என்னன்னு?”

“நீ பொய் சொல்லலைனு”

“ஐயோ அம்மா நான் பொய் சொல்லலை அப்பவே சொல்லிட்டேன்..இனியும் பொய் சொல்ல மாட்டேன் இது சத்தியம்” என்று பிருந்தாவின் தலையில் அடித்தாள்.

“சரிம்மா நான் சொல்லுறேன்.. மொதல்ல நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லு”

“கேளுங்க”

“உனக்கு பாய் ஃப்ரண்ட் யாராவது இருக்கறாங்களா?”

‘பிரச்சனை இதுவா?’ மனதில் யோசித்தவள் தாய்க்கு பதில் கூறினாள்..

“அம்மா எங்க ஸ்கூல்  கோ எட் ஸ்கூல் அது உங்களுக்குத் தெரியும். கூடப் படிக்கிற பசங்க கூட பேசிக்குவோம் அவ்ளவுதான்.”

“அதுல எந்தப் பையைகூடயாவது நீ தனியா பழகுறியா?”

“அம்மா..” அவள் வாயிலிருந்து அந்த அம்மா சற்று உஷ்ணமாய் வந்தது. மகள் கோபப் படுவது பிருந்தாவிற்குத் தெரிந்தது.

“ப்ரியா கோபப் படாதே காரியமாத்தான் கேட்கறேன் கோப்பபடாம பதில் சொல்லு”

“அம்மா நீங்க கேட்கிறது எனக்குப் புரியுது எனக்கு யாராவது லவ்வர் இருக்கறாங்களான்னு சுத்தி வளைசுக்  கேட்கறீங்க அப்படித்தானே?”

“நீயே புரிஞ்சுக்கிட்ட இப்பச் சொல்லு உனக்கு யாராவது லவ்வர் இருக்கறாங்களா?”

“அம்மா எனக்கு என்னம்மா வயசு ஆகுது? இந்த வயசுல லவ் எல்லாம் தேவையா? ஏன் இப்படி கேட்கறீங்கன்னே எனக்குப் புரியலை.. யாராவது அப்பவுக்கு மொட்டைக் கடுதாசி போட்டாங்களா? இதுக்குத்தான் அப்பா என் கூட பேசாம இருக்கறாரா?” அப்பாவியாய் கேட்டாள் பிரியா.

“நிஜமா உனக்கு லவ்வர் யாரும் கிடையாதே?

“கண்டிப்பா அப்படி யாரும் கிடையாது என்னை நீங்க நூறு சதவீதம் நம்பலாம்”

“சரி இப்பச் சொல்லுறேன் உனக்குக்கு உடம்புல ஒரு சின்ன பிரச்சனை இருந்துச்சு அதை ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணி சரி பண்ணிட்டோம்”

“அதுக்கும் அப்பா என் கிட்ட பேசாம இருக்கிறதுக்கும் என்னம்மா சம்மந்தம்?”

“அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை நீ மொதல்ல சொன்ன இல்ல மொட்டைக் கடுதாசி அதான் காரணம்”

“அதை அப்பா நேரே கேட்டிருக்கலாம் இப்படியா கோபப்படுறது?”

“அதை விடும்மா அப்பா உன் கிட்ட சீக்கிரம் பேசுவாரு”

      மனதில் நினைத்தாள்..  ‘மகளே உன்னை யாரோ கெடுத்து உன் வயிற்றில் ஒரு குழந்தையை கொடுத்து விட்டான். இந்தச் சிறிய வயசுலயே நீ ஒரு குழந்தையைச் சுமந்து நிற்பதைக் கண்டு எந்தத் தந்தை கோபப்படாமல் இருப்பான்?. மொட்டைக் கடுதாசி உன்னைப் பற்றி தப்பாக வந்ததைக் கண்டு தந்தை கோபப் பட்டார் என்று கூறி உன்னை இப்பொழுது சமாதனப் படுத்தி வைக்கிறேன்.  முகம் தெரியாத அந்த கயவன் மீது வன்மம் சூழ்ந்தது அவள் மனதில். குருவிக்கூடு போன்ற ஒரு குடும்பத்தில் குண்டு வைத்தவனை கண்டு பிடிக்க வேண்டும். மகள் தனக்கு ஆண் நண்பர்கள் இல்லை என்று கூறுகிறாள். ஆண் இணை இல்லாமல் வயிற்றில் குழந்தையை உருவாக்கிக் கொள்ள இவள் ஒன்றும் இதிகாச குந்தியோ, கன்னி மரியாவோ இல்லை.இதற்குப் பின்னால் ஒரு சூத்திரதாரி இருக்கிறான்.அவனை கண்டுபிடிக்க வேண்டும். முதலில் கணவனிடம் சொல்லி மகளுடன் சகஜமாகப் பேசச் சொல்ல வேண்டும். தந்தையையும் மகளையும் இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டும்” எண்ணியவள் மகளிடம் கூறினாள்..

“ப்ரியா, சில உண்மைகளை நான் இப்ப உங்கிட்டச் சொல்ல முடியாது, அதுக்கு காலம் நேரம் வரும் அப்போ சொல்லுறேன், இப்ப நீ படிக்கிறதுல மட்டும் போகஸ் பண்ணு, அப்பா நாளையில இருந்து உன்கூட சகஜமா பேசுவார்”

“பேசுவாராம்மா?”

“காலைல பாரு உனக்கு குட்மார்னிங் சொல்லுவார்” என்றவள் மகளை படுக்கச் சொல்லிவிட்டு கீழே இறங்கினாள். டிவி பார்த்தபடி மணிமாறன் அமர்ந்திருந்தார்.. பிருந்தா அவர் அருகில் அமர்ந்தாள். டிவி சத்தத்தைக் குறைத்தவர் கேட்டார்..

“தூங்கலை கீழே வந்துட்ட?”

“தூக்கம் வரலைங்க”

“எப்படி நமக்கு தூக்கம் வரும்? ஒரு பதிநாலு வயசுப் பொண்ணு நம்ம மூஞ்ச்சியில கரியைப் பூசிட்டா.. எப்படி நாம நிம்மதியா இருக்க முடியும்?”
“நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்”

“என்ன?”

“நீங்க ப்ரியா கூட வழக்கம் போல சகஜமா பேசணும்”

“நோ.. அந்த நம்பிக்கைத் துரோகியோட இனி இந்த ஜென்மத்துல நான் பேச மாட்டேன்”

“ஐயோ ஏன் இப்படிப் பேசறீங்க? அது உங்க பொண்ணு. என்ன,எப்படின்னு தெரியாம நீங்க அவளை வெறுக்கிறது சரியில்லை..”

“அப்ப இந்த வயசுல இவ செஞ்சிட்டு வந்தது மட்டும் சரியா?”

“குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி நீங்க யோசிக்கறீங்க”

“கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு? இவளுக்குத் தெரியாம இவ எப்படி கர்ப்பமாக முடியும்?”

“முடியுமுங்க இந்த அறிவியல் யுகத்துல எதுவும் பாசிபிள் தாங்க”

“நீ சொல்லுறது எனக்குப் புரியலை”

“அவ முகத்தைப் பார்த்தா அதுல எந்தக் களங்கமும் எனக்குத் தெரியலை. அவளை தரோவா விசாரிச்சிட்டேன்.. அவளுக்கு எந்த ஆண் நண்பனோ லவ்வரோ கிடையாது”

“அப்ப இது ரிஷி கர்ப்பமா? இந்தக் காலத்துப் புள்ளைங்களை பற்றிப் புரியாம பேசுற நீ?”

“உண்மைதாங்க மறுக்கலை ஒரு வேளை அவ தப்புப் பன்ணிட்டு மறைக்கலாம், ஆனா அவளை விசாரிச்சவரைக்கும் அவ தப்புப் பண்ணினமாதிரி எனக்குத் தெரியலை”

“அப்ப எப்படி அவ வயிற்றுல குழந்தை?”

“அது தான் மில்லியன் டாலர் கேள்வி? இன்னும் தீர விசாரிப்போம் ஒரு வேளை அவ இன்னசெண்டா இருந்து அவ மேல வன்மம் வச்சா இந்த ஜென்மம் முழுவதும் உங்களைப் அது பாடாப் படுத்தும்.இன்னும் தீர விசாரிப்போம். உண்மையை கண்டு பிடிப்போம்.அதுவரை நீங்க அவ கூட எப்பொழுதும் போல பேசுங்க”

“எனக்கு இப்ப ஆத்திரம் அந்த கண் தெரியாத அயோக்யன் மேல வருது.அவன் என் கையில கிடைச்சா அடுத்த நொடியே அவன் உயிரு இந்த பூமியில இருக்காது”

      கணவனின் கண்களில் மின்னிய ஆக்ரோஷத்தைக் கண்டவள் ஒரு கணம் ஆடிப் போனாள்.அப்பொழுது அவரைப் பார்க்க சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு தாசில்தார் தெரியவில்லை. ஒரு வெறி பிடித்தா கிராமத்தான் வந்து போனான்.

“அதெல்லாம் அவன் கிடைச்சப்புறம் பார்க்கலாம் இப்ப நீங்க செய்யவேண்டியது காலைல நீங்க எழுந்ததும் வழக்கம்போல அவளுக்குக் குட்மார்னிங்க சொல்லணும். கொஞ்சம் கொஞ்சமா அவ கிட்ட உண்மையை வாங்கிறது என்னோட பொறுப்பு”

“நான் என்ன செய்யணும் சொல்லு?”

“உங்க பொன்ணுக்கு வழக்கமான அப்பாவா மாறுங்க.அப்பா எங்கிட்ட ஏன் பேச மாட்டேங்கறார்னு என்னைப் போட்டு துளைச்சு எடுக்கறா, அவளை இப்ப சமாதானப்படுத்தற ஒரே காரணி நீங்க மட்டும் தான்”

      சற்று நேரம் யோசித்தவர் “சரி நான் அவ கிட்டப் பேசுறேன்” என்றார். பிருந்தாவின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை. அப்பாடா ஒரு பிரச்சனை தற்காலிகமாக தீர்ந்தது. மனதின் பாரம் சற்று குறைந்தது அவளுக்கு.

பிருந்தா கேட்டாள்.. “ஏங்க உங்களுக்கு எதிரிங்க இருக்கறாங்களா?’

“எதுக்கு இப்படி ஒரு கேள்வி?”

“சொல்லுங்க உங்களுக்கு எதிரிகள் இருக்கறாங்களா?”

“லஞ்சம் வாங்காத அரசு உயர் அதிகாரி அதுவும் தாசில்தாருக்கு எதிரிகள் இல்லாம இருக்குமா? அது நெறய பேர் இருப்பாங்க. சரி எதுக்கு இப்படி ஒரு கேள்வி சொல்லு?”

“உங்களால பாதிக்கப்பட்ட உங்க எதிரி யாராவது உங்களைப் பழி வாங்க இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கலாமே?”

“அப்படிச் செய்திருந்தா அது ப்ரியாவுக்குத் தெரிஞ்சிருக்கணுமே?”

“அவளுக்குத் தெரியாம செஞ்ச்சிருந்தா?”

“அது எப்படி?”

“ஆர்டிஃபிஷியல் இன் செமினேஷன்”

பிருந்தா சொல்லவும் அதிர்ந்து போனார் மணிமாறன்!

(-தொடரும்…)

முந்தையபகுதி – 15 | அடுத்தபகுதி – 17

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...