என்னை காணவில்லை – 17 | தேவிபாலா
அத்தியாயம் – 17
2024 ஜனவரி மாதம் பிறந்து விட்டது. துளசி இந்த நாலைந்து நாட்களில் வீட்டை விட்டே வெளியே போகவில்லை. அந்த டிசம்பர் 24 க்கு பிறகு அவள் ஒரு நிலையில் இல்லை. அந்த இரவு கபாலியை அடித்து போலீஸ் இழுத்துப்போனது, பறந்து பறந்து தாக்கிய உருட்டுக்கட்டை, அவளுக்குள் ஒரு பீதியை கிளப்ப, மறு நாள் காலை அப்பா, அம்மா பிரார்த்தனை முடித்து வீடு திரும்ப, எதுவும் நடக்காதது போல மாமியார் தந்த காபியை குடித்தான் துவாரகா. இந்த மாய மந்திரங்கள் நடக்கும் போது, கபாலியை போலீஸ் இழுத்து போனது எதற்கும் தனக்கு தொடர்பில்லை என்பது போல இருந்தான் துவாரகா. துளசி நடுங்கி போயிருந்தாள்.
“ அத்தே! எனக்கு கண் எரியுது.!”
“எந்த நேரமும் கம்ப்யூட்டர்ல வேலை பாக்கறீங்க மாப்ளை. எண்ணை தேச்சு குளிச்சா சரியாகும். வாங்க நான் எண்ணை தேச்சு விடறேன்.”
ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு வந்து துவாரகா உட்கார, மாமனார் அருகில் வந்தார்.
“ நாங்க ராத்திரி தேவாலயத்துல உங்களுக்காக பிரார்த்தனைல இருந்தாலும், மனசுல பயம். உங்களை யாரும் எதுவும் செஞ்சிடக்கூடாதேனு. அந்த மந்திரவாதி வந்தானா வீட்டுக்கு?”
“ நான் வீட்டுக்கே வரலியே மாமா. ஆனா அவன் வந்திருக்கான்!”
அவன் சொல்வதை கதவோரம் வந்து நின்று கேட்டாள் துளசி.
“ நீ எண்ணையை தேய்டி. தலையை முடிச்சிட்டு, ஒடம்புக்கும் தேச்சு விடு.!”
‘இவர் வீட்டுக்கே வராம என்னல்லாம் நடக்குது இங்கே? சூன்யம் வச்சிருக்காரா?’
துளசி யோசிக்க,
“மாமா! நான் சந்தேகப்பட்டு என் நண்பன் மூலம், போலீசுக்கு தகவல் தர சொன்னேன். நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு. ஒரு மந்திரவாதியை இந்த வீட்ல வச்சு போலீஸ் கைது பண்ணியிருக்கு.!”
“பார்த்தீங்களா? உங்களை கொல்லத்தான் சதி நடந்திருக்கு. நல்ல காலம், நீங்க வீட்டுக்கு வரலை. தப்பிச்சீங்க.!”
மாமியார் உடம்புக்கு எண்ணை தேய்க்க, துவாரகா நெளிந்தான்.
“கூச்சமா இருக்கா மாப்ளே? நானும் உங்கம்மா தான்.”
“அதுல சந்தேகம் இல்லை அத்தே. பாவம் எங்கம்மா. நான் இருக்க, முதியோர் இல்லத்துல விடற அவலம். அத்தே! கூச்சம், பயம், வெக்கம், மற்ற உணர்ச்சிகள் எதுவும் என் உடம்புல இல்லை. நான் ஜடமாகி ரொம்ப நாட்களாச்சு. நடைப்பிணம்.!”
மாமா, அத்தை இருவரும் அழுது விட்டார்கள். துளசி வேகமாக வெளியே வந்தாள்.
“ ரொம்ப நல்லாருக்கு. அவர் ஒடம்புல எல்லா பாகத்தையும் தொட்டு எண்ணை தேய்க்கறியா? அதுல உனக்கொரு சந்தோஷமா? நீ அம்மாவா? வேற ஏதாவதா?”
அப்பா எழுந்து வந்து அவளை ஓங்கி அறைந்தார். துளசி தூரப்போய் விழுந்தாள். யாரும் இதை எதிர் பார்க்கவில்லை.
“ உன் ஆபாச சிந்தனையை நீ சாகற வரைக்கும் விட மாட்டியா? ‘நான் மரத்து போயாச்சு..நடைப்பிணமா வாழறேன்னு’ அவர் சொல்றதை கேட்டு நாங்க ரெண்டு பேரும் ரத்தக்கண்ணீர் வடிக்கறோம். என்னை பக்கத்துல வச்சிட்டுத்தான் உங்கம்மா மாப்ளைக்கு எண்ணை தேய்க்கறா. நாங்க யாரும் எதுக்கும் அலையலை. அவரை நாங்க எங்க குழந்தையா நினைக்கறோம். உனக்கு அந்த ஒரு எண்ணம் தானாடீ? அந்த நோக்கத்தோட தான் மனுஷங்களை பார்ப்பியா?”
“போதும் அத்தே!”
“அவ கெடக்கா மாப்ளை. இந்த வீட்ல அவளுக்கு மட்டும் தான் விகார புத்தி”
“நான் அதுக்கு சொல்லலை. இத்தனை பேசறாளே. நேத்து ராத்திரி அந்த மந்திரவாதி எந்த கோலத்துல இந்த வீட்டுக்கு வந்தான் தெரியுமா? முழு நிர்வாணமா!”
அப்பா, அம்மா இருவரும் அலறி விட்டார்கள்.
“ என்ன சொல்றீங்க மாப்ளே?”
“அந்த காஞ்சனா உதவியோட என்னை வசியப்படுத்த, அந்த மந்திரவாதியை இவ தேடி போயிருக்கா. அவன் எப்பவுமே அப்படித்தான் இருப்பானாம். இது வரைக்கும் அவனுக்காக கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் இவ செலவழிச்சாச்சு.”
பெரியவர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி. அம்மா, துளசியை நெருங்கினாள். அவளை அருவருப்புடன் பார்த்தாள்.
“ உன்னை இந்த கர்ப்பத்துல சுமந்த காரணமா, என் மேலயே எனக்கு வெறுப்பு வருதுடி. தாய் ஸ்தானத்துல இருந்து ஒரு மாப்ளைக்கு நான் எண்ணை தேய்க்கும் போது, என்னை தரக்குறைவா விமர்சனம் பண்றே நீ. மாப்ளை மேல சதா சந்தேகம். அவரோட அம்மாவை கூட நீ கேவலமா பேசியிருக்கே. அந்த சுஷ்மாவை அசிங்கப்படுத்தியிருக்கே. இப்ப எதுக்குடி மந்திரவாதியை தேடிப்போனே. ஒரு அந்நிய ஆம்பளை, முன்னப்பின்ன தெரியாதவன், நடு நிசில ஆபாச கோலத்துல இந்த வீட்டுக்கு எதுக்குடி வந்தான்? சொல்லுடி!”
“மத்தவங்களை ஆபாசமா பேசற நம்ம மகள் எதுக்கும் துணிஞ்சவடி.!
“இல்லை மாமா. துளசி அப்படிப்பட்டவ இல்லை. அவளுக்கு அந்த மாதிரி எண்ணம் துளியும் கிடையாது.!”
“பார்த்தியாடி அவரை. இப்பவும் உன்னை நம்பறார். ஆனா நீ அவரை இப்பவும் அசிங்கப்படுத்தறே. அவரை கொல்லத்தான் மந்திரவாதியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே.!”
“இல்லை..இல்லை..இல்லை..என் புருஷனை நானே கொல்லுவேனா?”
“சொல்லால செயலால சாகடிக்கறது, உயிரை எடுக்கறதை விட மோசம்.!”
“இருங்க அத்தே. அதில்லை. இந்த வீட்ல இவளுக்கு எதிரா நான் சூன்யம் வச்சிருக்கேன்னு இவ சந்தேகப்படறா. அதை கண்டு பிடிக்க மந்திரவாதியை கூட்டிட்டு வந்திருக்கா.!”
ஆடிப்போனாள் துளசி.
“ இவன் அந்த இரவில் வீட்டிலும் இல்லை. ஆனால் மந்திரவாதி அடி வாங்கியதும், போலீஸ் வந்ததும், சூன்யம் இருப்பதாக நான் சந்தேகப்பட்டதும், அதை கண்டு பிடிக்க மந்திரவாதி வந்ததும் எப்படி இவருக்கு தெரிந்தது?”
“நீங்க இவளுக்கு சூன்யம் வைக்கறதா இவளுக்கு சந்தேகமா? இன்னும் உங்க மேல இவ என்னல்லாம் சந்தேகப்படப்போறா? இவளை வீட்டை விட்டு விரட்டுங்க மாப்ளை. இவளுக்கு உத்யோகம் இல்லை. கையில பணம் இல்லை. உங்க தயவுல இருந்து கிட்டேஉங்களை ஆட்டி வைக்கறா. இவளை அறுத்துக்கட்டுங்க. வெளி நாட்டு வாய்ப்பு வந்ததா சொன்னீங்களே. போயிடுங்க. அந்த சுஷ்மாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிடுங்க. இவளை தண்டிக்காம விடாதீங்க.”
“வேண்டாம் மாமா. கொடைல உள்ள என் குழந்தைகளை மாசம் ஒரு முறை பாக்கணும். இல்லத்துல இருக்கற அம்மாவை, வாரத்துக்கு ரெண்டு முறை பாக்கணும். என் சகோதரிகள், என் மேல உயிரையே வச்சிருக்கற நீங்க ரெண்டு பேர்…இப்பிடி உங்களையெல்லாம் விட்டுட்டு எப்படீ மாமா நான் வெளி நாட்டுக்கு போக முடியும்?”
“பாவி..பாவி..எப்பேற்பட்ட தங்கமான புருஷனை நீ வதைக்கறே. நீயெல்லாம் உயிரோடவே இருக்கக்கூடாது. என் கையால உன் கழுத்தை நெரிச்சு நானே கொன்னுர்றேன்.”
அவர் பாய்ந்து வந்து கழுத்தை பிடிக்க, துவாரகா வந்து அவரை விலக்கினான்.
“ விடுங்க மாப்ளே! இவ உயிரோட இருக்கற வரைக்கும் உங்க வாழ்க்கைல நிம்மதி இருக்காது. இவளை நான் கொன்னுட்டா, உங்களுக்கு விடுதலை.”
“வாங்க மாமா இப்படி. கடைசி காலத்துல கொலைப்பழி சுமந்து நீங்க ஜெயிலுக்கு போகணுமா? உணர்ச்சி வசப்பட்ட காரணமா பிரச்னைகள் பெரிசாகுமே ஒழிய, தீர்வு கிடைக்காது மாமா. நான் நிறைய பட்டும் எப்படி உயிர் வாழறேன். அவளோட சந்தேகமும், பாலியல் தொடர்பான ஒரு மூர்க்க சிந்தனையும், யாரும் யோசிக்காத எல்லைக்கு அவளை கொண்டு போயிருக்கு. இதோட முடிவு எனக்கும் தெரியலை.!”
“இல்லை மாப்ளை. இவளுக்கு மூளை கலங்கியிருக்கு. இவளை மென்டல் ஆஸ்பத்திரில சேர்க்கணும். இதுக்கு ஒரே தீர்வு அது தான் மாப்ளே!”
துளசியை வைத்துக்கொண்டே மூவரும் உரக்கப்பேச, துளசி அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவளுக்குள் அழகான புருஷனை பற்றிய பாலியல் சந்தேகம் வேர் பிடித்து அந்த விஷம் உடம்பு முழுக்க ஒரு இச்சாதாரி நாகம் போல பரவி விட்டதால், அதிலிருந்து அவளால் மீண்டு வர முடியவில்லை. அவள் வெகு தூரம் போய் விட்டாள். அவளிடம் இருந்த ஒரே கேள்வி, எப்படி காலடி சுவடுகள், ஆள் இல்லாமல் வருகிறது? மந்திர வாதியை பறந்து வந்த உருட்டுக்கட்டை எப்படி அடித்தது? சட்டை மட்டும் அந்தரத்தில் தவழ்ந்து வந்தது, சுஷ்மாவுடன் துவாரகா செய்யும் சல்லாபம் வெறும் குரலாக..வீட்டுக்கே துவாரகேஷ் வராமல் எல்லாம் தெரிந்தது எப்படி?”
“மந்திரவாதி பற்றி, என்னை தாண்டி எல்லாம் தெரிந்தவள் காஞ்சனா ஒருத்தி தான். அவள் எனக்கெதிராக வேலை பார்க்கிறாளா? அவளுக்கும் துவாரகா மேல் ஒரு கண் உண்டு. மந்திரவாதியிடம் அவள் செய்யும் சேட்டை..அவளை நம்பலாமா? கூடாதா?”
“நிச்சயமாக இந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுடம் இருக்கு. அதுக்கும், துவாரகேஷூக்கும் நிச்சயமா தொடர்பு இருக்கு. கண்டு பிடிக்கணும்.”
சேர்மன் அழைக்க, துவாரகேஷ் புறப்பட்டு போய் விட்டான். அம்மா துளசியிடம் வந்தாள்.
“ உங்கிட்ட பேசவே எனக்கு பிடிக்கலை. ஆனாலும் இது கடைசி எச்சரிக்கை, நான் உன் அம்மாவா இருக்கற காரணமா. உன் புருஷன் மேல பழி சுமத்தி, ஒரு நிர்வாண மந்திரவாதியை நீ வீட்டுக்கு கொண்டு வந்திருக்கே, நடுநிசில. அவன் உன்னை ஏதாவது செஞ்சிருந்தா, உன் கதி என்ன? நல்ல புருஷனை நம்பாம, நாறிப்போனவங்ளை நம்புவியா? வேண்டாம்டி. இப்பக்கூட தப்பாகலை. திருந்திடு.”
அந்த உருட்டு கட்டையை எடுத்து வந்தாள் துளசி. நடந்த அத்தனை கண் கட்டு வித்தைகளையும் சொன்னாள்.
“ இங்கே..இந்த ரூம்ல ஏதோ ஒரு சூன்ய சக்தி இருக்கு. என்னால நிம்மதியா இருக்க முடியலை. அதை நான் கண்டு பிடிக்கணும்.!”
“நானும் அப்பாவும் இந்த வீட்ல தானே இருக்கோம். எங்க கண்களுக்கு எதுவும் தெரியலியே. நீ மாப்ளையை அளவுக்கு மீறி தண்டிக்கற காரணமா, கடவுள் உன்னை தண்டிக்குது. நம்ம வீட்டு தெய்வம் சினிமா பார்த்திருக்கியா? அதுல அப்பாவி பெண்ணை அவ புருஷன் கொல்லுவான். அம்மனே அவ ரூபத்துல வந்து அவனை ஆட்டி வைக்கும். அது மாதிரி உன் ரூம்ல நடக்குது.!”
“என் காதுல பூ சுத்தறியா நீ? உன் மாப்ளை நல்லவர் இல்லை. எல்லாம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. என்னமோ செய்யறார். அவர் என்ன செய்யறார்னு நான் கண்டு பிடிக்கறேன்.”
“அவர் மூர்க்கனா இருந்தா, உன்னை கொன்னு போட்டுட்டு, அடுத்த வாழ்க்கைக்கு தயாராயிருப்பார். நல்லவரா இருக்கற காரணமா மேலும் மேலும் பழி சுமத்தறியா, சண்டாளி.!”
துளசி, காஞ்சனாவுக்கு ஃபோன் செய்து, அவளை வெளியே வரச்சொன்னாள். காஞ்சனா வந்தாள்.
“ இதப்பாரு துளசி! மந்திரவாதி, போலீசை சரிக்கட்டி வெளில வந்துடுவான். அவன் வெளில வந்ததும், தான் பட்ட அவமானத்துக்கு உன்னை சும்மா விட மாட்டான். நீ அழிஞ்சே. நான் அவன் கால்ல விழுந்து அவனை சரி பண்ணிடுவேன். நீ இனிமே என்னை பார்க்க வராதே.!”
அவள் சொன்னது போல ஏதோ செய்து, கபாலி மறு நாளே வெளியே வந்து விட்டான். காஞ்சனாவை உடனே வரும் படி அழைத்தான்.
(தொடரும்…)
முந்தையபகுதி – 16 | அடுத்தபகுதி – 18