என்னை காணவில்லை – 16 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 16 | தேவிபாலா

அத்தியாயம் – 16

காஞ்சனாவை தனியாக சந்தித்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை துளசி தந்தாள்.

“ நகையை வித்து தயார் பண்ணின ரெண்டு லட்சத்துல ஒண்ணே முக்கால் லட்சம் செலவாயாச்சு. இனி அந்த கபாலி பணம் கேட்டா, எங்கிட்ட இல்லை.”

“அதுக்கும் அவனே ஆலோசனை சொல்லுவான்.!”

“நான் தப்பான வழில போறேன்னு எனக்கே தெரியுது. ஆனா என் புருஷன் மேல உள்ள சந்தேகம் போக மாட்டேங்குது.”

“நீ ஒரு காரியத்துல இறங்கியாச்சு. இனி பின் வாங்கறது உனக்கே நல்லதில்லை.”

கபாலி, காஞ்சனாவுக்கும் பங்கு பேசியிருந்ததால் அவள் துளசியை மனம் மாற விடாமல் கவனமாக பார்த்தாள். அப்பா, அம்மாவை அப்புறப்படுத்த காஞ்சனாவிடம் ஆலோசனை கேட்டாள். அவள் சொன்னது சரியாக இருக்க, அப்பாவுக்கு ஃபோன் செய்து காஞ்சனாவிடம் தர, காஞ்சனா கரகரப்பான ஆண் குரலில்,

“ டிசம்பர் 24 ராத்திரி உங்க மாப்ளைக்கு வெளில ஆபத்து இருக்கு.!”

பத்மநாபன் பதறி விட்டார். அன்று மாலை ஆறரைக்கு துவாரகா வீடு திரும்ப, இதை சொல்லாமல்,

“ மாப்ளை! நாங்க ரெண்டு பேரும் உங்க கூட சர்ச்சுக்கு வந்து ப்ரேயர்ல கலந்துகறோம்.”

“எதுக்கு மாமா? உங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லையே?”

“உங்களுக்காக பிரார்த்தனை செய்யறது எங்க கடமை. எங்களை வர அனுமதியுங்க மாப்ளை!”

“சரி வாங்க.”

சற்று தள்ளி நின்று இதைக்கேட்ட துளசி முகம் மலர்ந்தது. இரவு உணவு ஆனதும், துவாரகா தயாராக, அப்பா, அம்மா இருவரும் தயார் ஆனார்கள். எட்டு மணிக்கு மூவரும் காரில் ஏறினார்கள். கார் ஓடத்தொடங்கியது. ஓரிடத்தில் காரை நிறுத்தினான் துவாரகா.

“ ஏன் காரை நிறுத்தறீங்க மாப்ளை?”

“இதை ரெண்டு பேரும் பாருங்க.”

துவாரகா ஒரு வீடியோ காட்ட, காஞ்சனாவிடம் பணம் தரும் துளசி.

“ எதுக்கு இவ பணம் தர்றா? ரெண்டு ஐநூறு ரூபாய் கட்டு மாதிரி தெரியுது. அப்படீன்னா ஒரு லட்சமா? யாருக்கு இந்த பணம் போகுது? ஏது இவ கிட்ட இத்தனை பணம்?”

“அவ நகைகளை எனக்கு தெரியாம வித்து வந்த பணம்.”

“அந்த மந்திரவாதிக்கு போகுதா மாப்ளை?”

அப்பா குரலில் கலவரம் தெறிக்க,

“ நீங்க ரெண்டு பேரும் என் கூட ப்ரேயருக்கு வரக்காரணம் இது தானா?”

அந்த ஆண் குரல் டெலிஃபோன் மிரட்டலை அவன் போட்டு காட்டினான். இருவரும் மிரண்டார்கள்.

“ எப்படீ மாப்ளை?”

“உங்களை வீட்லேருந்து அப்புறப்படுத்த இந்த மிரட்டல். எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. உங்களை தேவாலயத்துல இறக்கி விடறேன். உங்க மகள் புத்தி நல்ல வழிக்கு திரும்ப ப்ரே பண்ணுங்க. எனக்கு வெளில வேலை இருக்கு.”

அவர்கள் பீதியின் உச்சிக்கு போனார்கள். அவர்களை சமாதானப்படுத்தி தேவாலயத்தில் இறக்கி விட்டவன் புறப்பட்டான். நேராக வீட்டுக்கு வந்தவன் அந்த ஸ்ப்ரேயை தன் மேல் தெளித்து கொண்டு காலிங் பெல்லை அழுத்த, துளசி வந்து கதவை திறந்தாள். வாசலில் யாரும் இல்லை. அரூபமாக நின்றவன் அவளை கடந்து உள்ளே போய் விட்டான். துளசி குழம்பி போய் வாசலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து விட்டு உள்ளே வந்தாள். படுக்கையறை கதவை தள்ள அது திறக்கவில்லை. உள்ளே போன துவாரகேஷ் எலக்ட்ரானிக் டிவைசில் சில வேலைகளை செய்தான். வெளியே பதட்டமாக துளசி.

‘ ஏன் கதவு திறக்க மாட்டேங்குது? இங்கே தானே தீய சக்தி இருக்கு? பூஜையை கபாலி இங்கே தானே நடத்தணும்? கபாலி வந்து தான் கதவை திறக்கணுமா?’

படக்கென கதவு திறந்தது. உள்ளே வந்தாள் துளசி. மழை ஈரத்துக்கு கெட்டியா மூடியிருக்கும் ஒரு வேளை. நேரம் இரவு பத்து. துளசி அறையை விட்டு வெளியே வர, ஒரு பெண்ணின் கலகலப்பான சிரிப்பு சத்தம் கேட்டது.

“ கூச்சமா இருக்கு துவாரகா. விடுங்களேன். இதையெல்லாம் துளசி கிட்ட வச்சுக்குங்க.”

“ துளசியா? ஒரு பொம்பளைக்கு உள்ள நளினம், வசீகரம், அழகு, எதுவும் இல்லாத ஜென்மம். நானும் இத்தனை நாள் மரத்துத்தான் போயிருந்தேன். நீ வந்தப்புறம் தான் உயிர்ப்பே வந்திருக்கு எனக்கு.!”

‘அறையில் யாரும் இல்லை. ஆனால் இது சுஷ்மா குரல் போல இருக்கே!’

உள்ளே அக்னி புறப்பட்டது. அதே சமயம் பீதி கவ்வியது.

“ துவாரகா, சுஷ்மா இருவரும் இல்லை. ஸ்பீக்கர் போன்ற எதுவும் இல்லை. ஆனால் தெளிவான காதல் மொழிகள்.”

கபாலியை நடு நிசியில் அழைப்பது தப்போ என தோன்றியது. ஆனால் அது சரியென்று மனசு சொன்னது. இந்த அறையில் ஏதோ ஒரு விபரீதம் நிச்சயமா இருக்கு. அதை கண்டு பிடிச்சே ஆகணும். காஞ்சனாவுக்கு ஃபோன் செய்தாள்.

“ நீயும் கபாலி கூட வா. நடுநிசி பூஜை நடந்தே ஆகணும். நிச்சயமா என் புருஷன் எனக்கு சூன்யம் வச்சிருக்கான். அவன் தோலை உரிக்காம நான் விட மாட்டேன். நீ உடனே வா காஞ்சனா.!”

அரூபமாக இருந்த துவாரகா சகலமும் கேட்டான்.  சுஷ்மாவின் வசனங்களை வைத்து ஆடிய ஆட்டத்தில் நடக்கப்போவது வெளியே வந்து விட்டது.

“ இவள் திருந்த மாட்டாள்.”

துவாரகா வெறுப்பின் உச்சிக்கு வந்து விட்டான்.

‘ இவளுக்காக நான், என்னோட அறிவை இந்த அளவுக்கு வீணாக்கணுமா?’

ஒரு கேள்வி புறப்பட்டாலும், ஒரு மனைவி இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இறங்க முடியுமா? கணவன்..மனைவி உறவில் ஆரம்ப பதினைந்து ஆண்டுகளுக்கு உடம்பு தான் பிரதானமாக இருக்கும். ஆனால் மனசு விழிக்கும் போது உடல் இரண்டாம் பட்சமாகும். அதன் பிறகு ஒரு கட்டத்தில் மனைவியே தாயாவாள். புனிதம் அரங்கேறுவது இங்கே தான். தாம்பத்ய சுத்தத்தை புரிந்து கொள்ளாத ஒரு பேய்க்கு தாலி கட்டி, இந்த அளவுக்கு சீரழிந்தவன் இந்த உலகில் நான் ஒருவன் தான்.

“ அந்த மந்திரவாதி வந்து என்ன செய்யப்போகிறான்? இது மாந்த்ரீகத்துக்கும், விஞ்ஞானத்துக்கும் நடக்கும் விபரீத யுத்தம். இதனால் புனிதமான தாம்பத்யம் ஜெயிக்க போகிறதா? சிதைய போகிறதா?”

முதலில் ஆத்திரம், வெறுப்பு, விரக்தி, எதற்காக இந்த வாழ்க்கை என்ற சலிப்பு வந்தாலும், இந்த போராட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது.

முதலில் காஞ்சனா வந்து விட்டாள். நள்ளிரவு பதினொன்று ஐம்பதுக்கு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்க, வாசலுக்கு பதட்டமாக ஓடி வந்தாள் துளசி. அதே நிர்வாண கோலத்தில் கபாலி இறங்கினான். யாராவது பார்த்து விட போகிறார்களே என துளசி பதறி ஒரு நொடி செத்தே போனாள்.

“ சீக்கிரம் உள்ளே வாங்க!”

அவன் கையை பிடித்து இழுத்து உள்ளே கொண்டு வந்தாள் துளசி. உள் அறையிலிருந்து பார்த்தான் துவாரகேஷ். அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனான்.

“ இந்த நிலைக்கா துளசி இறங்கி விட்டாள்?”

ஆயிரம் சந்தேகம் புருஷன் மேல் இருந்தாலும், துளசி ஆபாசமான பெண் அல்ல. அருவருப்பாக இருந்தது.

“ எது அந்த ரூம்? ஒரு அறையா? இல்லை வீடு முழுக்க துர் தேவதை நடமாட்டம் இருக்கா?”

“அதை நீதான் கண்டு பிடிக்கணும்!”

கபாலி படுக்கையறையில் நுழைந்தான். அந்த அறை முழுக்க நடந்தான். கால்களும், கண்களும் அந்த அறையை அளக்க, அரூபமாக பீரோ கதவை திறந்தான் துவாரகா. துளசி கண்களுக்கு அது தனியாக திறக்க, அதிலிருந்து ஒரு உருட்டுக்கட்டை வெளியே வர, கபாலி திரும்ப, அது வேகமாக வந்து கபாலியின் இடுப்புக்கு கீழே ஆவேச அடிகளாக இறங்க, இதை எதிர் பாராத கபாலி சுதாரித்து கொள்வதற்குள் அடி சரமாரியாக இறங்கியது.

“ வெக்கம் கெட்ட நாயே! ரெண்டு பெண்கள் இருக்கற அறைல இப்படி ஒரு கோலமாடா? உன் மாந்த்ரீகத்தை காட்டுடா. நீ உயிரோட வெளில போறியான்னு பாக்கறேன். !”

துவாரகேஷ் தன் குரலை கரகரப்பாக்கி, தொடர்ந்து அடிக்க, கபாலி வெளியே ஓடி வர, அந்த அறை கதவு சாத்திக்கொண்டது. கபாலி வெளியே வந்து விழுந்தான். துளசியும், காஞ்சனாவும் ஏறத்தாழ மயக்க நிலைக்கு வந்து விட்டார்கள். கபாலிக்கு சரியான அடி. கை ஊன்றி எழ முடியாத அளவுக்கு காயங்கள். இதை கபாலி கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. துளசி கடுப்பாகி விட்டாள்.

“ உனக்கு வெக்கமால்லை? அடி வாங்கிட்டு எதுவும் செய்யாம நிக்கறே?”

“வாயை மூடு. நிச்சயமா தீய சக்தி உள்ளே இருக்கு. நான் பூஜைல ஒக்காந்தா என் கண்களுக்கு அது தெரியும். அதுக்குள்ள சரமாரியா அடி வாங்கிட்டேனே. எனக்கு கணிக்க அவகாசம் இல்லையே?”

“உங்கிட்ட எந்த சக்தியும் இல்லை. பணம் பறிக்கற மோசடி ஆசாமி நீ. உன்னை நான் சும்மா விட மாட்டேன்.”

துளசி கூச்சல் போட

ஏற்கனவே துவாரகா தன் போலீஸ் நண்பனுக்கு தகவல் தந்திருந்தான்.

“ என் வீட்ல நடுராத்திரி ஒரு விபரீதம் நடக்கப்போகுது. அந்த நேரத்துல நான் சர்ச்ல இருப்பேன். நீ போய் அட்டெண்ட் பண்ணு.!”

இங்கே கபாலி கடுப்பாகி,

“ உன் வீட்டுக்கு வரவழைச்சு, என்னை கேவலப்படுத்திட்டே. என் சக்தி உனக்கு தெரியாது. நாளைய விடியல் உனக்கு ரொம்ப மோசமா இருக்கும்.”

மறுபடியும் கதவு திறக்க, உருட்டுக்கட்டை பறந்து வந்து அவனது முக்கியத்தை தாக்க, கபாலி துடித்து கீழே விழ, காலிங் பெல் அடிக்க, துளசி வந்து ‘மேஜிக் ஐ’ வழியாக பார்க்க, இரண்டு போலீஸ் உடைகள். துளசி உடனே கதவை திறந்தாள்.

“ சரியான நேரத்துக்கு வந்தீங்க சார். இவன் உள்ளே புகுந்து ரகளை பண்றான்.”

கபாலியை அள்ளி தூக்கியது போலீஸ்.

“ சார்! நிச்சயமா பைத்தியம் தான். இல்லைன்னா இப்படி இருப்பானா?”

“ஜீப்ல ஏத்துய்யா! விபரீதம் நடு நிசில எங்க வீட்ல நடக்கப்போகுதுன்னு துவாரகேஷ் சரியாத்தான் சொன்னார்.”

துளசிக்கு அதிர்ச்சி அதிகமானது.

“ இவருக்கு எப்படி தெரிஞ்சுது?”

கபாலி துளசியை கொலை பார்வை பார்க்க, அவனை போலீஸ் இழுத்து போக, அறைக்குள் யாருமில்லாமல் உருட்டுக்கட்டை எப்படி வந்து கபாலியை சரமாரியாக தாக்கியது? விபரீதம் நடப்பது முன் கூட்டியே எப்படி துவாரகாவுக்கு தெரிந்தது?

விடை தெரியாத கேள்விகளுடன் துளசிக்கு 2024 புத்தாண்டு ஆரம்பமானது.

(தொடரும்…)

முந்தையபகுதி – 15 | அடுத்தபகுதி – 17

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...