என்னை காணவில்லை – 15 | தேவிபாலா
அத்தியாயம் – 15
மந்திரவாதி கபாலியின் இருப்பிடத்துக்கு துளசியும், காஞ்சனாவும் வந்து விட்டார்கள். துவாரகா முறையாக உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே வந்து நடுவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மாமனார் பத்மநாபன் நீல காரை தவற விட்டார். ரௌடிகளை சமாளித்து துவாரகா திரும்ப, ஜி.பி.எஸ் இணைப்பு துண்டானது.
“ மாமா! நடுவுல இடையூறு வந்த காரணமா துளசியை பின் தொடர முடியலை. நீங்க வீடு திரும்புங்க. நானும் வந்திர்றேன்!”
அதே நேரம் கபாலியின் பண்ணை வீட்டுக்குள் இருவரும் நுழைந்தார்கள். கபாலி பதினைந்து நிமிஷங்கள் தாமதித்து அழைத்தான். அதே முற்றும் துறந்த தோற்றம்.
“ ஏன் அதுக்குள்ள வந்திருக்கே?”
“என் புருஷனுக்கு குடுத்த வசிய மருந்தை அப்பா சாப்பிட்டார்.!”
கபாலி உரக்க சிரித்தான்.
“ இத்தனை வருஷம் கழிச்சு உனக்கு சகோதர யோகமா?”
“விளையாடாதே. அருவருப்பா இருக்கு. எனக்கு பத்திக்கிட்டு எரியுது.”
“எது அருவருப்பு? எல்லாம் நிறைஞ்ச ஒரு புருஷனை தக்க வச்சுக்க உனக்கு துப்பில்லை. என்னிக்கோ உன்னை விட்டுட்டு அவன் ஓடியிருக்கணும். இப்பவும் உன்னை அறுத்து கட்டாம வாழற அவனுக்கு கோயில் கட்டி கும்பிடணும்.!”
“வாயை மூடு. அவருக்கு நீ தனியா ரசிகர் மன்றம் திறக்கலாம். உங்கிட்ட நான் சும்மா வரலை. சொளையா பணம் தந்திருக்கேன். அதுக்கான வேலைகளை செய்.!”
காஞ்சனா பதறி விட்டாள்.
“ நீ யார் கிட்ட பேசறேன்னு தெரியுதா? உன் வெறி புடிச்ச புத்தியை இங்கே காட்டினா ரெண்டு பேரும் திரும்பி போக முடியாது இங்கிருந்து. புரியுதா?”
“உன் புருஷனை பாழாப்போன இந்த தேகத்துக்காக, பாலுணர்ச்சியை வச்சு சந்தேகப்படறியே. உனக்கு காரியம் ஆகணும்னு அம்மணமா நிக்கற என் எதிர்ல நிக்கறியே. நான் அந்நிய ஆம்பளை தானே? உன் புருஷனை நடத்தை கெட்டவனா நினைச்சு இத்தனை வருஷங்களா சித்ரவதை செய்யறியே! நீ எதுல சேர்த்தி?”
துளசி ஆடிப்போனாள்.
“ உனக்கு நான் தந்த வசிய மருந்தை ஒழுங்கா உன் புருஷனுக்கு தர துப்பில்லை. எங்கிட்ட சண்டை போடறியா? இந்த எல்லையை நீ தாண்ட மாட்டே. காஞ்சனா! இவளை கூட்டிட்டு வந்த நீயும், திரும்பி போக மாட்டே.!”
காஞ்சனா நடுங்கி விட்டாள்.
“ என்னை எதுவும் செஞ்சிடாதே கபாலி. இவ யாருக்கும் அடங்க மாட்டா. இவளை நீ என்ன வேணும்னாலும் செஞ்சுகோ.!”
துளசிக்கு இப்போது நடுக்கம் வந்தது. கபாலியின் காலில் விழுந்தாள்.
“ என்னை ஒண்ணும் செஞ்சிடாதே. நான் இனி உன்னை எதிர்க்க மாட்டேன். வசிய மருந்து மட்டுமே என் பிரச்னை இல்லை. என் வீட்ல தீய சக்தி நடமாடுது.!”
“உன்னை விட ஒரு தீய சக்தி இருக்கா என்ன?”
“எனக்கு வீட்டுக்குள்ள வாழவே பயம்மா இருக்கு. அந்த பயத்தை போக்கணும்.”
“உன் மாமியார், பசங்க பயந்து ஓடியாச்சு. உன் புருஷன் இன்னும் ஓடலை. நீ, பயம்னு சொன்னா யார் நம்பறது?”
“காஞ்சனா! நீயாவது சொல்லேன்.!”
“உன்னை கூட்டிட்டு வந்து உயிரோட திரும்பணுமேன்னு நான் நடுங்கிட்டிருக்கேன். கபாலி நினைக்கறதை செய்யட்டும்.!”
“சரி சொல்லு.!”
வீட்டில் சட்டை தனியாக வந்தது, தரையில் ஈர காலடி சுவடுகள், துவாரகாவின் குரல் மட்டும் என வரிசையாக அடுக்கினாள். மாமியாருக்கும் இது மாதிரி ஒரு அனுபவம் உண்டானதை சொன்னாள். எதையும் விடவில்லை. கபாலி மௌனமாக இருந்தான்.
“ ஏன் இந்த மாதிரி நடக்குது? என் புருஷனே எனக்கெதிரா சூன்யம் வைக்கறாரா? அதனால தான் தன் அம்மா, குழந்தைகளை அப்புறப்படுத்தறாரா?”
கபாலி புருவம் உயர்த்தினான்.
“ என்னை காப்பாற்று.”
“இதப்பாரு, எந்த தீய சக்தியா இருந்தாலும் என்னால முறியடிக்க முடியும். ஆனா அதுக்கு லட்சக்கணக்குல செலவாகும். உங்கிட்ட பணம் இருக்கா? உன்னால முடியுமா? இலவசமா நான் யாருக்கும் எதையும் செய்ய மாட்டேன்.!”
“லட்சக்கணக்குன்னா?”
“குறைஞ்ச பட்சம் இருபத்தி அஞ்சு லட்சம். முடியுமா? சத்யமா உன்னால முடியாது. உனக்கு உத்யோகம் இல்லை. அதனால வருமானம் இல்லை. வீடு, கார், வேற என்னல்லாம் சொத்துக்கள் இருக்கோ, அத்தனையும் உன் புருஷன் பேர்ல. வெறும் நூறு ரூபாய்க்கு வக்கில்லாத நீ, இங்கே வந்து நிக்கறியா? போ..போ..!”
அவமானத்தில் சுருங்கி போனாள் துளசி.
“ நானே உனக்கு வழி சொல்ல முடியும். ஆனா அது கடுமையா இருக்கும். கேள்வி கேக்காம நீ ஒப்புக்கிட்டா நான் உதவறேன்.”
“நான் கேள்வி கேக்க மாட்டேன். வழியை சொல்லு.!”
காஞ்சனா பயத்துடன் பார்த்தாள்.
“ உன் வீட்டுக்கு நான் வரணும். ராத்திரி நேரத்துல ஒரு சின்ன பூஜையை நடத்தணும்.!”
“அய்யோ எப்படீ? இந்த தோற்றத்துலயா நீ வருவே?”
“ஆமாம். நடுநிசிக்கு கொஞ்சம் முன்னால வருவேன், இதே நிலைல. அது பிரதோஷ நாளா இருக்கணும். உன் புருஷன், வீட்ல இருக்க கூடாது. நடுநிசிக்கு பூஜை தொடங்கினா, ஒரு மணி நேர பூஜை. அதுல எந்த விதமான தீய சக்தி உன் வீட்ல இருக்குன்னு எனக்கு தெரிஞ்சிடும். இதுக்கு லட்ச ரூபாய் செலவாகும். அப்புறமா அதை விரட்ட என்ன செய்யணும்னு நான் சொல்றேன்.”
“என்னிக்கு பிரதோஷம்?”
கபாலி ஏதோ கணக்கிட்டான்.
“ டிசம்பர் 24, ஞாயித்து கிழமை. அந்த ராத்திரி பூஜையை நடத்தணும். முடியுமா? பிரதோஷ நாள்ள தான் நடத்தணும். அப்பத்தான் துர்சக்தியை இனம் காண முடியும்.!”
துளசி யோசித்தாள். சட்டென முகம் மலர்ந்தது.
டிசம்பர் 24, ராத்திரி கிறிஸ்துமசுக்கு முதல் நாள். துவாரகா அவரோட கிறிஸ்தவ நண்பர்களோட தேவாலயத்துக்கு போவார். ராத்திரி எட்டுக்கு போனா, காலைல எட்டு மணிக்குத்தான் சர்ச்சை விட்டு வெளியே வருவாங்க. அன்னிக்கு தடையில்லை.”
“சரி, லட்ச ரூபாயை நாளைக்கே காஞ்சனா கிட்ட குடுத்தனுப்பு. வேண்டியதை நான் செய்யறேன்.!”
இருவரும் வெளியே வந்தார்கள்.
“ அப்பாடி, தப்பிச்சோம். கபாலி கிட்ட நீ பேசின பேச்சுக்கு நம்மை அவன் உயிரோட விட்டதே பெரிசு. அவனால எதுவும் முடியும்.”
காரில் ஏறி கண்களை மூடிக்கொண்டாள் துளசி. கபாலியின் குரல் காதுக்குள் ஒலித்தது.
“உன் புருஷன் நடத்தைல சந்தேகப்படறியே. அம்மணமா நிக்கற அந்நிய ஆம்பளை எதிர்ல நிக்கற நீ எதுல சேர்த்தி?”
உடம்பு முழுக்க ஊசி குத்துவதை போல இருந்தது துளசிக்கு.
“சந்தேகத்தின் உச்சிக்கு போய், நான் எடுக்கும் முடிவுகள் எல்லாமே தப்பா? என்ன யோசித்தாலும் என்னால் ஏன் மீண்டு வர முடியவில்லை?”
அதே நேரம், அந்த அடியாட்களை அனுப்பிய, துவாராகாவால் பாதிக்கப்பட்ட உயர் அதிகாரிகள், எதிரே அடியாட்கள் வந்து விழுந்தார்கள். ஆள் இல்லாமல் கார் ஓடிய கதையை சொல்லி, அவன் எப்படி மாயமாக மறைந்தான் என தெரியவில்லை என்றார்கள்.
“ அவன் இந்த மாதிரி ஏதோ செஞ்சு தான், எங்களோட அத்தனை மோசடி வேலைகளையும் சேர்மனுக்கு அம்பலப்படுத்தி எங்களை வேலையை விட்டு தூக்கினான். அவன் மின்னணு விஞ்ஞானத்துல பெரிய மேதை. என்ன செய்யறான்னு கண்டு பிடிக்கணும்.”
இதை இவர்கள் சொல்லும் நேரம், சுஷ்மாவுடன் ஒரு உணவகத்தில் இருந்தான் துவாரகா. காரை வைத்து அடியாட்களுக்கு அவன் வித்தை காட்டியதை சொன்னதும் சுஷ்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ ஆனா எனக்கு பயம்மா இருக்கு துவாரகா.”
“என்ன பயம் சுஷ்மா?”
“உங்க விஞ்ஞான விளையாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா துளசி, மந்திரவாதியை போய் பாக்கற அளவுக்கு துணிஞ்சிட்டாளே. அவ புத்தி ஏன் இப்படி கெட்டு போகணும்? தான் பெற்ற குழந்தைகளை பிரிஞ்சதை பற்றிக்கூட கவலைப்படாம, புருஷனை தண்டிக்க, மாந்த்ரீகம் வரைக்குமா ஒரு மனைவி போவா? நம்பவே முடியலை துவாரகா.”
“புத்தி கெட்டு போய், என்னை முடக்க நினைக்கறா. அது க்ரிமினல் எல்லைக்குள்ளே அவளை கொண்டு போயிருக்கு. விஞ்ஞானத்தை வச்சு அவளுக்கு கலவரமூட்டி வழிக்கு கொண்டு வர நான் நினைக்கறது தப்பா சுஷ்மா? நீயே சொல்லு.!”
“உங்க விஞ்ஞானம் யார் உயிருக்கும் ஆபத்தை தராது. ஆனா துளசி மந்திரவாதியை சந்திக்கறது நல்லதா? உங்களை அவ பின்னால மட்டுமே அலைய வைக்க நினைச்சு, உங்க உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிட்டா? அவ புத்தி கெட்டு பாதை மாறிப்போறது சரியா? அதை தடுக்க வேண்டாமா?”
“யார் அந்த மந்திரவாதின்னு தெரிஞ்சுகத்தான் நானும் மாமாவும் புறப்பட்டோம். நடுவுல கம்பெனி எதிரிகள் புகுந்து கலைச்சிட்டாங்க. நான் கண்டு பிடிச்சிடுவேன் சுஷ்மா. நான் உனக்கு சொல்லி தர்ற மாதிரி நீ பேசி அதை ரெக்கார்ட் பண்ணி தரணும் சுஷ்மா. ஸாரி, உன்னை தவிர யாரும் எனக்கு ஒத்துழைக்க முடியாது.”
“உன் நிம்மதிக்காக, சந்தோஷத்துக்காக நான் எதையும் செய்யத்தயார் துவாரகா. உன்னை விட ஒரு உத்தம நண்பன் யாருக்கு கிடைக்கும்?”
அவன் சொல்லி கொடுத்ததை, சொல்லி தந்த மாடுலேஷனில் சுஷ்மா பேச அதை பதிவு செய்தான் துவாரகா. அவளுக்கு நன்றி சொல்லி புறப்பட்டான். வீட்டுக்கு அவன் வந்தும் துளசி வரவில்லை. மாமா வேதனைப்பட,
“ எந்த பயமும் வேண்டாம் மாமா. இதை நான் பாத்துக்கறேன்.”
அவனது விஞ்ஞான விளையாட்டு எதுவும் அவர்களுக்கு தெரியாது. துளசி இரவு எட்டு மணிக்கு வந்தாள். யாரும் எதுவும் அவளை கேட்கவில்லை. அம்மா செய்து வைத்திருந்த உணவை சாப்பிட்டாள். தன் அறைக்குள் நுழைந்தாள். அங்கே இருக்கவே பயம்மாக இருந்தது. ஆனாலும் டிசம்பர் 24, துவாரகாவை அப்புறப்படுத்த வேண்டும். அவன் போவானா?
துவாரகா வந்தான் உள்ளே. தலகாணி, பெட்ஷீட்டை எடுத்து கொண்டான்.
“ நீங்க போக வேண்டாம். நான் கொஞ்சம் பேசணும்.!”
“உங்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை.”
“நாளை மறு நாள் டிசம்பர் 24. நீங்க ராத்திரி ப்ரேயர்ல கலந்துக சர்ச் போவீங்களா?”
“வழக்கமா போறது தானே? எதுக்கு இந்த கேள்வி?”
“ என் வாழ்க்கை, உங்க கூட சந்தோஷமா இருக்கணும்னு இருபத்தி அஞ்சு மெழுகு வர்த்தி ஏத்துங்க.!”
“ நம்ம புத்தில தான் எல்லாம் இருக்கு. வத்தில எதுவும் இல்லை.”
அவன் வெளியேற, துளசிக்கு அவன் போவான் என்பது உறுதியாகி விட்டது.
“ அப்பா, அம்மாவை எப்படி விலக்குவது? கபாலி வரும் நேரம் அவர்கள் இருக்கக்கூடாதே. என்ன செய்யலாம்?”
மூளையை கசக்கி கொள்ள ஆரம்பித்தாள்.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16