என்னை காணவில்லை – 14 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 14 | தேவிபாலா

அத்தியாயம் – 14

துவாரகா, தன் கம்பெனியில் மேற் படி மின்னணு சாதனங்களை சேர்மன் அறையில் பொருத்த, சீனியர் அதிகாரிகள் சிலர் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து செய்த துரோகம் கண்டு பிடிக்கப்பட, அத்தனை பேரையும் சேர்மன் வேலையை விட்டு நீக்க, அவர்கள் எதிர்க்க, போலீஸ் வரை சேர்மன் போக, அந்த பிரச்னை பெரிதாகி, துவாரகேஷ் தலையிட்டு அதை சரி செய்தான். அதனால் வேலையை இழந்த சீனியர்கள் துவாரகேஷின் நிரந்தர எதிரிகள் ஆனார்கள். அவனை எப்படி பழி தீர்க்கலாம் என கூடிப்பேசி துவாரகாவுக்கு எதிராக சதி திட்டம் உருவாக, சேர்மன் அழைத்திருந்தார்.

“ துவாரகா! உங்களுக்கு எதிரா பெரிய சதி வலையை விரிக்கறாங்க. உங்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யறேன்.”

“சார், அதெல்லாம் வேண்டாம். இப்பல்லாம் யாரையும் நம்பற மாதிரி இல்லை. நான் பாத்துக்கறேன்.”

“இனிமே இந்த டிவைஸ் தேவையில்லையா துவாரகா?”

“இருக்கட்டும் சார். அது தொடர்பா ஆகற பராமரிப்பு அதிகமில்லை.”

“சரி, ஒரு வெளி நாட்டு வாய்ப்பு திரும்பவும் வருது. போறீங்களா?”

“இன்னும் ஆறு மாசங்களுக்கு முடியாது சார். அப்புறமா யோசிக்கலாம்.”

“ இந்த கம்பெனி முன்னேறவும், பல புது ப்ராஜக்டுகளை கொண்டு வந்து, போட்டி கம்பெனிகளை தலை தூக்க விடாம செஞ்சு, எதிரிகளை விஞ்ஞான முறைப்படி தோலுரிச்சு…அப்பப்பா! நீங்க சாதிச்சது கொஞ்சமில்லை துவாரகா. நீங்க இல்லைன்னா, நம்ம கம்பெனியே ஆட்டம் கண்டிருக்கும். உங்களை விடவே எனக்கும் மனசில்லை.”

“சார், எனக்கும் பெரிய வடிகாலே நம்ம கம்பெனி தான்.!”

மின்னணு பற்றி நிறைய பேசி விட்டு ஃபோனை எடுக்க, அது வெகு நேரமாக அணைந்திருந்ததை அப்போது தான் துவாரகா கவனித்தான். அதை உயிர்ப்பித்தான். அந்த நேரம் வீட்டில் காஞ்சனா, துளசியை அழைத்த ஃபோனை அப்பா எடுக்க, துளசி வந்து விட்டாள். பதட்டமாக இருந்தாள்.

“ என் ஃபோன் அடிச்சதா?”

“நான் எடுத்தேன். அதுக்குள்ள கட் ஆயிடுச்சு.!”

துளசி சந்தேகமாக அப்பாவை பார்த்து விட்டு, காஞ்சனாவுக்கு ஃபோன் செய்தாள். அவள் அதே தகவலை சொல்ல,

“ இதோ, பத்து நிமிஷத்துல வர்றேன். நான் வந்த பிறகு அபிஷேகம் தொடங்கலாம்.”

அவள் புறப்பட,

“நானும் அம்மாவும் உன் கூட வர்றோம் துளசி!”

“தேவையில்லை. என் கூட யார் வந்தாலும் நீங்க வரக்கூடாது. உங்களை பார்த்தாலே வெறுப்பா இருக்கு.”

அவள் கோபமாக வெளியேற, அப்பா தயார் ஆனார்.

“ நானும் வரட்டுமா?”

“வேண்டாம் நளினி. பேச நேரமில்லை. நான் மாப்ளைக்கும் முயற்சி பண்றேன். நீ பயப்படாதே.”

அப்பா வெளியே வந்து துளசி அறியாமல் அவளை பின் தொடர்ந்தார். நீல நிற காரை அவரும் பார்த்து விட்டார். அந்த காருக்குள் இருந்து காஞ்சனா கை காட்ட, துளசி காரை நெருங்க, அப்பா படக்கென ஒரு ஆட்டோவுக்குள் புகுந்து,

“அந்த நீல நிற வேகன் ஆர் வண்டியை ஃபாலோ பண்ணுங்க. தவற விட்ராதீங்க.!”

காருக்குள் துளசி ஏற, காரை எடுக்க சொன்னாள் காஞ்சனா.

“ முதல்ல ஃபோனை எடுத்தது யாரு?”

“எங்கப்பாதான். ஆனா கட் ஆயிடுச்சுனு சொன்னார்.”

“அவர் தானே வசிய மருந்தை சாப்ட்டு உங்கம்மா கூட குஜாலா..”

“போதும் காஞ்சனா..”

“சரி, ஏன் கபாலியை சந்திக்க இத்தனை அவசரம்?”

“அதை அங்கே வந்து சொல்றேன். பேசாம வா.”

கணிசமான இடைவெளியில் அப்பா ஆட்டோவை பின் தொடர்ந்த படி, தன் ஃபோன் மூலமாக துவாரகா வாட்ஸ் அப்புக்கு சகல தகவல்களையும் அனுப்பினார். துவாரகா பார்த்து விட்டான். சேர்மனிடம் சொல்லிக்கொண்டு அவசரமாக வெளியே வந்தான். அவருக்கு ஃபோன் செய்தான். முதல்ல வசிய மருந்து, இப்போ மந்திரவாதியை சந்திக்க துளசி போகிறாள் என்பது வரை சொல்ல,

“ மாமா! முடிஞ்சா அந்த கார் நம்பரை எனக்கு அனுப்புங்க. நான் ஒரு லிங்க் உங்களுக்கு அனுப்பறேன். அதை நீங்க ஆபரேட் பண்ணினா, துளசி கார் போறதும், நீங்க ஃபாலோ பண்றதும் எனக்கு வந்துடும். அதை வச்சு நான் வந்துர்றேன்.”

உடனே அவன் லிங்க் அனுப்ப, அதை அப்பா ஆபரேட் செய்தார். துவாரகா அங்கே காரில் ஏறி உள்ளேயிருந்த மேப்பை, ப்ளூ டூத் மூலம் இயக்கி, காரையும் எடுத்தான். காதில் கருவியை செருகி கொண்டான். மாமனாருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே வந்தான். அவர் ஆச்சர்யப்பட்டார்.

‘ எப்பேற்பட்ட புத்திசாலி. எந்த எல்லைக்குள்ளும் தன் விஞ்ஞான அறிவுடன் புகுந்து விடும் ஆற்றல் பெற்றவன். பணம், பதவி, அழகு, சகலமும் கடந்த அசாத்திய புத்தி இத்தனையும் ஒரே நபருக்கு வாய்க்குமா? அப்படி வாய்த்த ஒருவனை கணவனாக அடைந்த துளசி எப்பேற்பட்ட பாக்கியசாலி. அதை ஏன் அவள் புரிந்து கொள்ளாமல் அவனை நரகத்தில் தள்ளி, தானும் சந்தேக புத்தியால், ஒரு மன நோயாளியை விட மோசமாகி, குடும்பத்தையே குழியில் தள்ள பார்க்கிறாளே?’

மனசு வலித்தது. அவளுக்கு அப்பாவாக வாழ்வது அவமானமாக இருந்தது.

அதே நேரம் காரை ஓட்டிக்கொண்டிருந்த துவாரகா, வேகமாக யோசிக்க தொடங்கினான்.

‘ வசிய மருந்து எதுக்கு? அவளை நான் தொடாம மரத்துப்போய் விலகி நிக்கற காரணமா, என்னை தன் வசப்படுத்த, மந்திரவாதியோட துணையை நாடறாளா?’

சுஷ்மா சொன்னது காதில் ஒலித்தது.

“ அந்த காஞ்சனா ரொம்ப மோசமான கிரிமினல் துவாரகா. அவ எதுக்கும் துணிஞ்சவ. அவ கூட துளசிக்குள்ள நட்பு நல்லதல்ல.”

‘என்னை இத்தனை நாள் சித்ரவதை செஞ்சிட்டு, அடுத்த கட்ட டார்ச்சருக்கு ஆள் தேடறாளா துளசி? இதை தடுத்தே ஆகணும். இப்படிப்பட்டவளுக்கு பாடம் புகட்ட, நான் என் விஞ்ஞான அறிவை வீணாக்கணுமா? இவளை சத்யமா மாற்ற முடியாது. சேர்மன் சொன்ன வெளி நாட்டு வாய்ப்பை ஏத்துக்கிட்டு உடனே போனா நிரந்தர விடுதலை’

மனசு அவசரமாக யோசிக்க, மாமனாரின் அழைப்பு.

“ அந்த காரை நான் தவற விட்டுட்டேன் மாப்ளை.!”

“ கவலைப்படாதீங்க. அது என் பார்வைல தான்  இருக்கு. நான் உங்களுக்கு கெய்ட் பண்றேன் மாமா. இல்லைன்னா நீங்க திரும்பி போயிடுங்க வீட்டுக்கு. இதை நான் பாத்துக்கறேன்.”

“இல்லை மாப்ளை. இதுல உங்களை தனியா விட நான் தயாரா இல்லை. சந்தேகம் உச்சத்துக்கு போய் உங்களுக்கு வசிய மருந்து வைக்க ஒரு மந்திரவாதி உதவியை நாடற அளவுக்கு துளசி கேவலமா போறான்னா, அவளால உங்களுக்கு எந்த ஆபத்தும் வரலாம். தன்னை தொடாத புருஷன் இனி யாரையும் தொடக்கூடாதுன்னு துளசி எந்த கேவலத்துக்கும் இறங்குவா. நான் வருவேன்.!”

“சரி வாங்க. உங்களை நான் வழி நடத்தறேன்.”

துவாரகா சொல்லிக்கொண்டே வர மாமனார் அதை பின் பற்ற, ஓரிடத்தில் துவாரகேஷின் காரை மடக்கிய படி வழியில் ஒரு கார் நிற்க, பல முறை துவாரகேஷ் ஹாரன் அடிக்க, அந்த காரிலிருந்து மூன்று ஆட்கள் இறங்கினார்கள். அவர்களது தோற்றமே அவர்கள் அடியாட்கள் என்றது. துவாரகேஷ் இறங்கினான்.

“ யார் நீங்க? எதுக்கு என் காரை மறிக்கறீங்க?”

அதில் ஒரு ஆள் துவாரகேஷை வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்ப,

“ இவனே தான். கொல்ல வேண்டாம். உசிரு மட்டும் இருக்கட்டும். மற்ற படி எதை வேணும்னாலும் ஊனமாக்குங்க.”

அவர்கள் கையில் ஆயுதத்துடன் இவனை நோக்கி நடந்து வர, துவாரகேஷ் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்ப்ரேயை வெளியே எடுத்தான்.

“ டேய், அவனும் கையில எதையோ எடுக்கறான். நாம தாமதிக்க கூடாது. ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.”

அவர்கள் அடுத்த அடியை வேகமாக எடுத்து வைக்க, துவாரகேஷ் திரும்பி தன் காரை நோக்கி நடந்தான். டிரைவிங் சீட் திறந்து அதில் உட்கார்ந்து கதவை மூடினான்.

“ டேய், காரை நம்ம மேல ஏத்தப்போறானா?”

துவாரகேஷ் காரில் இருந்த சின்ன ஒரு பட்டனை அழுத்தினான். ஸ்ப்ரேயை தன் மேல் தெளித்து கொண்டான். அவர்கள் காரை நெருங்கி விட்டார்கள்.

“ இழுத்து வெளில போட்டு அடி மாப்ளே!”

ஒருவன் பாய்ந்து வந்து கார்க்கதவை திறக்க, ட்ரைவிங் சீட்டில் யாருமில்லை.

“ காருக்குள்ள ஏறறதை கண்ணால பார்த்தமே. இப்ப சீட் காலியா இருக்கே. எங்கடா போனான்?”

எல்லா கதவுகளையும் திறந்து காருக்குள் அவர்கள் பார்க்க, யாருமில்லை. கார் சீட்டின் அடியில், டிக்கியில் என அவர்கள் தேட எங்கும் அவன் இல்லை.

“ அவன் காருக்குள்ள ஏறி ஒக்கார்றதை எல்லாரும் பார்த்தோமேடா. எங்கடா மாயமா மறைஞ்சான்?”

அவர்கள் மூன்று பேரும் கீழே இறங்கி காரசாரமாக விவாதம் செய்ய,  காரின் நாலு கதவுகளும் ஒவ்வொன்றாக சாத்திக்கொள்ள, காரின் வின்டோ கண்ணாடிகள் ஏற, கார் ஸ்டார்ட் ஆனது.

“ கார் கிளம்புது. ஆனா உள்ளே யாருமில்லைடா.!” இரண்டு பேர் அலற, கார் சரக்கென நகர, அவர்கள் மேல் கார் ஏறி விடுமோ என அவர்கள் பயந்து ஒதுங்க, ஆளில்லாத கார் அழகாக வேகம் பிடித்து சீராக ஓடத்தொடங்கியது. இவர்கள் மிரண்டு தலை சுற்றியது. அதற்குள் ஃபோன் வர,

“என்னடா? அவனை அடிச்சீங்களா? இல்லை போட்டாச்சா?”

“தலைவா! அவன் ஒரு மாயாவி. திடீர்னு காணாம போயிட்டான். கார் மட்டும் ஆளில்லாம தனியா ஓடுது. எங்களுக்கு கலவரமா இருக்கு.!”

“கார் தனியா போகுதா? என்னடா உளர்றீங்க?”

அதற்குள் ஏதோ சத்தம் கேட்க, இவர்கள் திரும்ப, போன கார், ரிவர்சில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இவர்கள் மேல் மோதும் வேகம். இவர்களை கடந்து கார் அதே ரிவர்சில் போக, இப்போதும் காருக்குள் யாரும் இல்லை. அவர்கள் மிரண்டு தன்  காருக்குள் ஏற, அதை ஸ்டார்ட் செய்ய, ஆளில்லாத கார் குறுக்கே வந்து நின்றது. ஒரு நபரின் ஃபோன் அடிக்க, அவன் எடுக்க,

“ நீங்க என் காரை மடக்கற மாதிரி உங்க காரை மடக்க எனக்கு தெரியாதா? இப்ப உங்க காரை இடிச்சு நொறுக்கட்டுமா?”

“அய்யோ! இது பேய் தான். !”

அவர்கள் மூன்று பேரும் காரை விட்டு இறங்கி, தலை தெறிக்க ஓடினார்கள். டிவைசை அணைத்து விட்டு காரை விட்டு இறங்கி சிரித்தான் துவாரகேஷ்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...