மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 13| பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 13| பெ. கருணாகரன்

காணாமல் போகும் கதைசொல்லிகள்

ரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலமே உறவாடி, வாழ்ந்து, காலம் முழுதும் அவனால் மறக்க முடியாத, நெகிழ்வான  நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள் அவனது, தாத்தா, பாட்டி…’ – என்று ஒருமுறை இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அது கடந்த தலைமுறையின் குரல். இன்றைய தலைமுறை அதன் அர்த்தத்தை  அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.

அந்த தாத்தா, பாட்டிகள் இன்று முதியோர் இல்லத்திலோ, கிராமத்தில் ‘தனிமரமாக’வோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க… ‘பஞ்சம் பிழைக்கும் பரம்பரைகள்’ தங்கள் வாரிசுகளுடன் நகரங்களில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘சொந்தக்காரங்களை விட்டுட்டு நகரங்களுக்கு வரமுடியாது…’ என்று தன் வேர்களைப் பிடுங்கிக் கொண்டு வெளியேற மறுத்து, மூத்தோரே சிலநேரங்களில்  பூர்வீக இடங்களிலேயே இருந்து விடுவது உண்டு. அவர்கள் வரச்சம்மதித்தாலும் ‘உங்களுக்கு நகரம் சரிப்படாது… இங்கேயே இருந்து கொள்ளுங்கள். செலவுக்குப் பணம் அனுப்புகிறேன்…’ என்று அவர்களை கிராமத்திலேயே விட்டுவிட்டு நகரத்துக்கு நகர்ந்து விடும் தலைமுறைக்ள் இன்னொரு வகை.  மூன்றாவது ரகம் முதியோர் இல்லத்துக்குக் கிட்டதட்ட ஆதரவற்றோர் சாயலுடன் குடியேற்றப்படுபவர்கள்.

ஒரு காலத்தில் குடும்பக்கட்டுப்பாடுத் திட்டம் வருவதற்கு முன் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது பத்து பேர்களாவது இருப்பார்கள். நாளெல்லாம் திருவிழாக் கொண்டாட்டமாகக் கூடிக் கலந்து பேசிக் கொண்டு ஒத்திசைவாக ஓடியது வாழ்க்கை. கால மாற்றத்தில் இன்றைய தலைமுறைகள் பல உறவுகளின் அர்த்தமே தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள் கலாசாரத்தில் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்கிற நான்கு உறவுகளில் ஏதேனும் மூன்றை இழந்து, அந்த உறவின் தொடர்ச்சியான தாய்மாமா, அத்தை, அண்ணி, கொழுனன் உள்ளிட்ட ஏராளமான உறவுகள் அனுபவச் சுவடே இல்லாமல் அழிந்து வருகின்றன. ஒற்றைக் குழந்தைகளின் நிலையோ இன்னும் துயரம். அவர்களுக்கு இந்த உறவுகளில் ஒன்று கூட நேரடியாக வாய்க்க வாய்ப்பில்லை. அமைகின்ற உறவெல்லாம் காதைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல தூரத்து அண்ணன், அக்கா, தம்பி, தங்கைதான். ‘தூரத்து’ என்பதால்  அவர்களுட்ன் நெருங்கி உறவாட முடியாமல்,  மனசுக்கு நெருக்கமாகாமல் தூரத்திலேயே அவர்கள் நின்று விடுகிறார்கள்.

ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதியாக நிச்சயிக்கப்பட்ட உறவுகள் தாத்தா, பாட்டிகள். தவிர்க்கவே முடியாத உறவு அது. ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு வழிகளில் தாத்தா, பாட்டிகள் அமைகிறார்கள். அப்பா வழியிலும், அம்மா வழியிலும். ஒவ்வொரு தாத்தா, பாட்டியும் தன் மகன், மகள் மீது செலுத்தியதை விட, தன் பேரப் பிள்ளைகளின் மீதே அதிக அன்பு கொண்டிருப்பார்கள். அதற்கான உளவியல் காரணம் விநோதமானது. பெரும்பாலான பெற்றோர் பத்து வயது வரையில் தன் குழந்தைகள் மீது செலுத்தும் அன்பு அளவில்லாதது.

வளரும் குழந்தைகள் புதிய நண்பர்களுடன், சுய முடிவுகளுடன் சிறிது சிறிதாக அவர்களிடமிருந்து விலகுகிறார்கள். சிறுவயதில் தான் சொன்னதைக் கேட்டு நடந்தவன் வளர்ந்த பிறகு, ‘தன் வழி தனி வழி…’ என்று செல்வதைக் கண்டு சிறிய ஏமாற்றம் அவர்களுக்குள் எட்டிப் பார்க்கிறது. அந்த ஏமாற்றம் ஆதங்கமாக அவர்களது மனதுக்கு புதைந்து கிடக்கிறது. தன் பேரன், அல்லது பேத்தியைக் கைகளில் வாங்கும்போது, அந்த முதிர்ந்த இதயத்துக்குள் தன் சிறுவயது மகனை, மகளைத் தூக்கிப் பார்க்கும் சிலிர்ப்பே ஏற்படுகிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, தங்களிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்கிய வாரிசின் பால்ய கால பிம்பமாகவே தங்கள் பேரக் குழந்தையைக் காண்கிறார்கள். சிறுவயதில் தங்கள் வாரிசுகளின் மீது வைத்த அதே பாசத்தை அந்தச் சிறுகுழந்தையின் மீதும் செலுத்துகிறார்கள்.

தாத்தா, பாட்டி என்கிற அந்த ஜீவன்கள் ஒரு வீட்டின் பாதுகாவலர்கள். ஆலோசகர்கள். வழிகாட்டிகள். அனுபவ மருத்துவர்கள். இவற்றுக்கு மேலாக கதைசொல்லி குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நல்ல நண்பர்கள். ஆசான்கள். தாத்தா பாட்டியிடம் கதை கேட்காத தலைமுறைகள் துரதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும்.

இன்றைய குழந்தைகள் வீடியோ கேம், செல்போன், தொலைக்காட்சி இவைகளில் முடங்கிப் போய் விட்டதாய் புலம்பி, அலுத்துக் கொள்ளும் யாரும் யோசித்தால்  ஒரு விஷயம் புலப்படும். ஒரு குழந்தையின் வாழ்வில் பல்வேறு ஆரோக்கியமான பாத்திரங்கள் வகித்து ஆளுமை செலுத்தும் தாத்தா, பாட்டிகள் இல்லாத வெற்றிடம்தான் இத்தகைய சூழலுக்கு அந்தக் குழந்தைகளை கொண்டு செல்கிறது.

தாத்தாவின் நெகிழ்ச்சியான அன்புக்கு எங்கள் தெருவில் இருந்த பெரியவர் ராமச்சந்திரனை உதாரணமாகச் சொல்லலாம். அவருக்குக் காது கேட்காது. அவரது பேரன் முறுக்கு சாப்பிடும்போதெல்லாம் அவர் தன் காதில் ஹியரிங் எய்டு பொருத்திக் கொள்வார். தன் பேரன் முறுக்கு சாப்பிடும்போது எழும் கரக் முரக் சத்தத்தைக் கேட்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம். அது அவருக்கு ஜேசுதாஸ் குரல் போல் தோன்றியிக்க வேண்டும். அந்த நேரத்தில் அவரது விழிகளின் ஓரத்தில் ஈரம் கூட எட்டிப் பார்க்கும். அந்தக் குழந்தையின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்திருக்க வேண்டும்?

தந்தை வழி தாத்தாக்களும் பாட்டிகளும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு அம்மாக்களே பெரும்பாலும் காரணமாகிறார்கள். மாமியார், மருமகள் ஈகோ லடாய்தான் வயது முதிர்ந்த அந்த ஜீவன்களை வீட்டிலிருந்து வெளியேற வைக்கிறது. அடையாறு முதியோர் இல்லத்தில் இருக்கும் புஷ்பவல்லியின்அனுபவம் துயரமானது. அவர் ஓய்வுபெற்ற ஆசிரியை.  கணவரை இழந்த அவர் மைலாப்பூரில் தன் மகன் வீட்டில் வசித்து வந்தார். தன் இரண்டு பேரன்களின் மீதும் அலாதி பாசம் செலுத்தியவர். மருமகள் அரசு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஆரம்பத்திலிருந்தே தன் மாமியார் மீது மருமகள் எரிந்து விழுந்து கொண்டே இருந்திருக்கிறார். ‘நீங்கல்லாம் அந்தக் காலம். தொணதொணன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருக்காதீங்க. நீங்க டீச்சர் வேலை பார்த்திருக்கலாம். என்கிட்டேயும் டீச்சர் மாதிரி நடந்துக்காதீங்க…’ என்று தொட்டதற்கெல்லாம் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார். இதெல்லாம் புஷ்பவல்லியை மிகவும் மனவருத்தத்துக்கு ஆளாக்கியது. அவரது மகன் அதனைக் கண்டு கொள்வதில்லை. ‘அட்ஜஸ்ட் பண்ணிப் போம்மா…’ என்பதே அவரது அணுகுமுறையாக இருந்திருக்கிறது. இந்நிலையில் அந்த வீட்டிலிருந்து வெளியேறி தான் முதியோர் இல்லத்தில் சேர நேர்ந்த சூழலை விளக்குகிறார் புஷ்பவல்லி.

‘ரெண்டுப் பேரக் குழந்தைகளும் என்கிட்டே அன்பா இருப்பாங்க. இது என் மருமகளுக்கு ஏனோ பிடிக்கலே… அம்மா சொன்னால் கேட்காத குழந்தைகள் நான் சொன்னால் கேட்கும். இது என் மீதான எரிச்சலை அதிகமாக்கிட்டே இருந்தது. என் பென்ஷன் பணத்திலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு நான் தின்பதற்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பேன். அதுக்கும் என் மருமகள் எதிர்ப்பு காட்டுவார். ஒருமுறை கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்ததற்கு ‘இது உங்க காலம் மாதிரி இல்லை. கண்டதை வாங்கிக் கொடுத்து குழந்தைகளை நோயாளி ஆக்காதீங்க…’ என்பாள். கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் சொத்தைப் பல் வரும் என்பது அவளது கருத்து. ஆனால், ஓட்டலில் பரோட்டா, ஜங்க் ஃபுட் எல்லாம் அவள் வாங்கித் தருவாள். அதுதான் உடம்புக்குக் கெடுதல் என்று சொல்ல நினைப்பேன். ஆனால், சொன்னால் அதை வைத்துப் பிரச்சினை பண்ணுவாள் என்று கூறாமல் விட்டுவிடுவேன்.

அப்படிதான் ஒருநாள் அந்தக் குழந்தைகள் கேட்டாங்கன்னு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்தேன். சாயங்காலம் குழந்தைகள் வெள்ளந்தியா ‘பாட்டி ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாங்க…’ என்று சொல்லி விட, வானத்துக்கும் பூமிக்கும் குதித்து விட்டாள். ‘என் புள்ளைகளைக் கண்டதை வாங்கிக் கொடுத்துக் கொல்லாமல் விடமாட்டீங்கங்களா…?’ என்று அவள் கூறிய ஒரு வார்த்தைதான் என் மனசை சுருக்குன்னு குத்திச்சு. அந்த வார்த்தைகளைக் கேட்டு நான் கண் கலங்கி அழுதுட்டேன். ஒரு பாட்டி தன் பேரப் பிள்ளையைக் கொல்வாளா? என்னால் தாங்க முடியலே… உடனே முடிவெடுத்து விசாரிச்சு இங்கே வந்துட்டேன். இப்போ அந்தப் பேரப் புள்ளைங்க காலேஜ்ல படிக்கிறாங்க. மாசா மாசம் மறக்காம என்னை வந்து பார்ப்பாங்க. என் மகன் எப்பவாவது வருவான். மருமகள் எட்டிக் கூடப் பார்க்கிறது கிடையாது… ஆபீஸில் உயர் அதிகாரி, ஹெச்ஆர் ஆகியோர் கடுமையாக நடந்து கொள்ளும்போது, பேசும்போது அதையெல்லாம் சகித்துக் கொள்ளும் இவர்களால் தன் கணவனை ஈன்றெடுத்தவள் சொல்லும் ஆலோசனைகளை ஈகோவோடு எடுத்துக் கொள்கிறார்கள்… வேற்றாள் திட்டும்போது அதனை மவுனமாக ஏற்றுக் கொள்ளும் அவர்களால் சொந்த மாமியர் அன்புடன் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான் விநோத முரணாகத் தெரிகிறது…’ என்று வேதனைப்பட்டார் புஷ்பவல்லி.

இப்போதெல்லாம் மாதா மாதம் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுக்கென்று கணிசமான தொகை செலவாகிறது. ஆனால், அனுபவம் நிறைந்த பாட்டிகள் இருக்கும் குடும்பங்களில் அத்தகைய செலவுகள் இருக்காது. அவர்களது கைவைத்தியம் அந்தக் குழந்தைகள் மருத்துவமனைக்குச் செல்லாமல் தடுத்து விடுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் என் ஹவுஸ் ஓனர் மகனுக்கு தொடை இடுக்கில் ஒரு கட்டி வந்தது. குழந்தையால் நடக்கவே முடியவில்லை. வலியில் இரவெல்லாம் தூங்கவே இல்லை. மறுநாள் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று காட்டியபோது, அதனை அறுவைச் சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதற்கு நான்காயிரம் ரூபாய் செலவாகும் என்றிருக்கிறார்கள்.

எங்களுடன் தங்கியிருந்த எங்கள் அம்மா அந்தப் பையனைப்போய்ப் பார்த்தார். ‘ஆபரேஷன்லாம் வேணாம்… இதுக்கு ஒரு கைவைத்தியம் இருக்கு…’ என்று கூறிய என் அம்மா, கடைக்குப் போய் ஒரு வாழைப்பழம் வாங்கி வந்தார். வாழைப்பழத்தை உறித்து அந்தப் பையனைச் சாப்பிடச் சொன்னார். வாழைப்பழத் தோலை நெருப்பில் வாட்டி சுட்டார். அது காய்ந்து கொஞ்சம் வதங்கிக் கருகிய பிறகு, வெந்து கொண்டிருந்த சாதத்திலிருந்து அரைவேக்காட்டில் கொஞ்சம் எடுத்து, வாழைப்பழத் தோலின் மீது வைத்து, அதனை அந்தப் பையனின் தொடையிடுக்கில் வைத்துக் கட்டி விட்டார். நினைக்கும்போது, என்னால் இன்னும் அதை நம்பத்தான் முடியவில்லை. மறுநாள் காலையிலேயே கட்டி அமுங்கிவிட்டது.

இதேபோல் இன்னொரு சம்பவம். சென்னையில் எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சரஸ்வதியின் அனுபவம் இது. “சில வருடங்களுக்கு முன் என் கணவர், நகச்சுத்தி வந்து படாதபாடு பட்டார்… என்ன வைத்தியம் பண்றதுன்னு தெரியலே. எலுமிச்சம் பழத்தைச் சொருகி வைத்தும் அது சரியாகலே. கடைசியா  டாக்டர்கிட்ட போய்க் காட்டினோம். சின்னதா சர்ஜரி பண்ணணும்ன்னு டாக்டர் சொல்லிட்டார். அப்புறம் வீட்டுக்கு வந்துட்டோம். அவரோ வலியில துடிக்கறார் பாவம்… ஊருக்குப் போயிருந்த பெரியம்மா அன்னிக்குதான் வந்தாங்க…

‘இது என்னாடி கூத்தா இருக்கு…  நவச்சுத்துக்கு ஆப்பரேசனா…?’ன்னு வியந்து, ‘இரு வாரேன்’னு சொல்லிட்டு உள்ளே போனாங்க.

விரலி மஞ்சள் ஒன்று, வெள்ளை வேட்டி (பருத்தி) துணி சின்னதா கையளவு ஒரு துணுக்கு எடுத்து  இரண்டையும் அம்மியில் வைத்து பொடி செய்து, அந்தப் பொடியில் (தண்ணீர் சேர்க்காமல்) சிறிதளவு எடுத்து இன்னொரு வேட்டித் துணுக்கில் வைத்து அதை அப்படியே நகச்சுத்தி வந்த விரலில் வைத்துக் கட்டிவிட்டார்கள். ஒரே இரவுதான். எலுமிச்சம்பழம் போல் வீங்கியிருந்த விரல் சப்பென்று வத்திப் போயிருச்சு. விரலில் இருந்த சீழை மஞ்சள் உறிஞ்சி எடுத்துவிட்டது.  இன்னும் சொல்லப் போனால், அடுத்த வேளைக்கு அந்தப் பொடியை உபயோகிக்கும் நிலை கூட வரவே இல்லை… அவ்வளவு பர்ஃபெக்ட் வைத்தியம்.

தாத்தா, பாட்டிகள் அருகில் இல்லாத காரணத்தால் சின்ன சின்ன பிரச்சினைகளுக்குக் கூட இன்றைய மருத்துவம் நம்மை அச்சுறுத்தியே பணத்தை வழிப்பறி செய்கிறது…” என்றார் சரஸ்வதி.

கதை கேட்டு வளர்தல் என்பது நம் கலாசாரத்துள் ஒன்று. அந்தக் கலாச்சாரத்தைக் காலந்தோறும் கட்டிக் காத்தவர்கள். தாத்தா, பாட்டிகளே. ‘பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. பெர்ய் சொல்லக் கூடாது’ என்றெல்லாம் ஒவ்வொரு கதையும் ஏதேனும் நீதியைச் சொல்வதாக இருக்கும். அதனால் சிறுவயதிலேயே குழந்தைகளின் இதயங்களில் நற்பண்புகள் ஊன்றப்பட்டன.

‘ஓர் ஊரில் ஒரு ராஜா. அவர் காட்டுக்குக் குதிரையில் வேட்டையாடக் கிள்மபுகிறார்…’ என்று பாட்டி கதை சொல்ல ஆரம்பித்ததும் மனத் திரையில் ராஜா குதிரையில் கிளம்பும் காட்சி ஓடி, குதிரையின் குளம்பொலி ஓசை காதுகளில் ஒலிக்க ஆரம்பித்து விடும். இத்தகைய நிகழ்வுகள் குழந்தைகளை கற்பனை வளம் நிறைந்தவர்களாக வைத்தினருந்தன. ஆனால், இன்று தாத்தா, பாட்டிகள் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆட்கள் இல்லை. அவர்கள் பார்க்கும் கார்ட்டூன் படங்களின் கதைகள் எல்லாம் மறைமுகமான அவர்களிடம் முரட்டுத்தனத்தையே வளர்க்கின்றன. இதுதவிர,  இன்ட்ராக்ஷன் உள்ள வீடியோ கேம்கள், பிளே ஸ்டேஷன் விளையாட்டுக்கள் எல்லாமே வன்முறையைத் தூண்டுவதாகவே இருக்கின்றன. குழந்தைகளின் மனதில் வன்மத்தையே வளர்க்கின்றன.

செல்வி சங்கர் என்ற நண்பருடன் இது குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறினார். ‘நம் குழந்தைகள் பெரும்பாலும் தாத்தா பாட்டி குண நலன்களை கொண்டிருப்பது ஜெனெடிகல் உண்மை…  நான் என் அம்மா சொன்னா கேட்கமாட்டேன்…அதே விஷயத்த அம்மாச்சி சொன்னா உடனே கேட்பேன்.  தாத்தாவுக்கும் அம்மாச்சிக்கும் எங்க மேல் கொள்ளைப் பிரியம். எப்போடா லீவு வரும்ன்னு காத்திருப்போம்,

பாட்டி வீட்டில் விதவிதமா சமைச்சுக் குடுப்பாங்க. தின்பண்டங்கள் வீட்டிலேயே செஞ்சுத் தருவாங்க.  அவங்க குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தாங்க என்பதை கதைமாதிரி சொல்வார் எங்க அம்மாச்சி.  பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. வீட்டு ஆண்கள் தவிர பிற ஆண்களுடன் பேசக்கூடாது . ஆத்துக்கு தண்ணி எடுக்கப்போனா அரைமணியில வந்துரணும்..  ‘இப்போ நீ அப்படியா இருக்கே? எவ்வளவு சுதந்திரம் இருக்கு, உங்கம்மா சின்னவளா இருக்கும்போது எவ்வளவு கட்டுப்பாடுகள் தெரியுமா? அம்மா சொல்ற பேச்சைக் கேளு கண்ணு…’ என்றெல்லாம் மனம் கோணாமல் நெறிபடுத்துவார் அம்மாச்சி.

இதையே எங்கம்மா  சொல்லியிருந்தா போங்கம்மான்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்… ஆனா, அம்மாச்சி சொன்னதால அப்போதே மனதில் கொண்டேன்… அப்படி ஒரு பந்தம்…

தாத்தா எங்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் குடுப்பார்.   அப்படிச் சுவாரஸ்யமா  கதை சொல்லுவார். சரித்திரக்கதை சித்திரக் குள்ளன் கதை, விக்கிரமாதித்யன் கதை, ராமாயணக் கதை, மகாபாரதக் கதை என்று தாத்தாவுடன் எங்கள் பொழுதுகள் சுவாரசியமாகப் போகும்.

சளியா… இருமலா…?  சித்தரத்தை பொடி செஞ்சு துளிமிளகு சேர்த்து பாலுடன் குடி.

காய்ச்சலா?   வெந்தயம் சீரகம் போட்டு புழுங்கல் அரிசி கஞ்சியைக் குடி.

லேசா அடிபட்டு தோல் சிராய்ச்சிடுச்சா?  கெணத்துப்பூண்டு இலைய நசுக்கி சாறைத் தடவு         -இப்படியான வீட்டு மருத்துவம் அவர்களோடது. அம்மாச்சியிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள்தான் நான் வளர்ந்த பிறகு என் குழந்தைகளை நான் நல்லபடியா வளர்க்க உதவியாக இருந்தன. சுருக்கமாகச் சொன்னால் இன்றைய தலைமுறையில்  அந்த முதிர்ந்த இதயங்களை, விலைமதிப்பில்லா பொக்கிஷத்தை நம் கண்ணெதிரில் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்…” என்றார் செல்வி.

ஒவ்வொரு மனிதனும் உறவு அனுபவங்கள், உறவாடல்கள், பகிர்ந்து கொள்ளல்  இல்லாமல் தனித்தனித் தீவுகளாகிக் கொண்டிருக்கும் அவலம்தான் இன்றைய நவீன நாட்களில் நாளும் அதிகரித்து வருகிறது. கால மாறுபாட்டில் இது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால், குறைக்க முடியும்.

கால வெள்ளம் எவ்வளவோ விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை  உண்டு செரித்து முடித்து, ஓடிக் கொண்டிருக்கிறது. தாத்தா, பாட்டிகளுடனான நெகிழ்ச்சியான வாழ்க்கை அனுபவமும் அப்படி ஆகி விடக்கூடாது. பெற்றோரை உடன் வைத்துக் கொள்வோம். அவர்கள் மூலம் நம் குழந்தைகளுக்குப் புதியதோர் உலகத்தைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்துவோம்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி – 14

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...