மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 12| பெ. கருணாகரன்
மரணம் என்னும் மகாநதி…
மரணத்தை நினைத்துக் கதறி அழுத 13 வயது சிறுவன் ஒருவன். அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிந்தான். அந்த ஆண்டு 1979. அவன் கைக்குக் கிடைத்த அந்தத் துண்டுப் பிரசுரம் அவனைக் கலங்க வைத்தது. அது ஒரு மத நிறுவனத்தின் துண்டுப் பிரசுரம். அதன் தலைப்பு: ‘1979ல் உலகம் அழியுமா?’. ஸ்கைலேப் என்கிற நாசா அனுப்பிய செயற்கைக்கோள் பற்றிய செய்தி அது. ஸ்கைலேப் பூமியில் வந்து மோதப் போவதாகவும் அதனால் உலகம் அழியப் போவதாகவும் அச்சுறுத்தியது அந்தத் துண்டுப் பிரசுரம். அந்த மதத்தின் கடவுளை நம்பினால் அதிலிருந்து தப்பிக்க முடியும் என்று முடிந்திருந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். அது மனதினுள் இனம் தெரியாத பீதியைக் கிளப்ப, கயிற்றுக் கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டு மரண அச்சத்துடன் தேம்பித் தேம்பி அழுதான் அவன். ஒரு பெரிய ஏரோப்பிளேன் போன்ற ஒன்று தலையில் மோதி துடிதுடித்து இறக்கப் போகிறோமே என்கிற அச்சம்தான் ஞானமில்லா அந்தச் சிறுவனின் பெரும் பிரச்சினையாக இருந்தது.
பிறகு, அதேசிறுவன் மரணத்தைப் பற்றிப் பெரும் எதிர்பார்ப்புடன் தன் கல்லூரி நாட்களில் செண்பக மரங்களின் கீழ் உட்கார்ந்து கொண்டு இப்படி எழுதினான்.
‘மரணச் சந்நிதியில் – என்
மவுனப் பெருந்தவங்கள்
உறக்கத் தடங்களிலே – என்
உயிரின் யாத்திரைகள்
சிறகை விரித்துவைத்தே – என்
சின்ன உயிர்ப்பறவை
பறந்திடும் வேளையினை – எதிர்
பார்த்துக் கிடக்கிறது’ – காரணம் மரணம் குறித்த அச்சத்தை விரட்டி, அதனை ஒரு நண்பனாக ஏற்றுக் கொள்ளும் மனத்துணிவை, பக்குவத்தை அவனுக்கு அளித்தவர் மகாகவி பாரதி. மரணம் குறித்து அழுது, பின்னர் அதனையே ஓர் அனுபவமாக நினைத்துக் கவிதை எழுதிய அவன், நான்தான்.
பாரதியைப்போல் மரணத்தைத் தத்துவார்த்தமாக எழுதிக் குவித்த தமிழ்க் கவிஞர் யாரும் இல்லை. அவர் மரணத்தை அச்சுறுத்தும் விஷயமாகக் கையாளவில்லை. அதனை மிகவும் தோழமையோடே எழுதிச் செல்கிறார். வாழ்வு குறித்து அவர் எழுதிய கவிதைகளைப் படிக்கும்போது, மரணம் குறித்த அச்சங்கள் துச்சமாக விலகி நிற்கின்றன. எனக்குத் தெரிந்த பல அறிவாளர்கள் மனச்சோர்வு வரும்போதெல்லாம் பாரதியைப் படித்தே மனச்சோர்விலிருந்து மீண்டெழுகிறார்கள்.
வாழ்வில் ஒவ்வொரு மனிதனையும் நிரந்தரமாகத் தன்னுள் ஈர்ப்பதற்கு முன் தவணைமுறையில் தொட்டுத் தொட்டு விளையாடிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது மரணம். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. சிறுவயதில் மஞ்சள்காமாலை வந்து, எவ்வளவோ மருந்துகள் குடித்தும் குணமாகவில்லை. என் உடலே மஞ்சள் நிறமானது. கண்களின் வெள்ளைப் பகுதிகள் அனைத்தும் மஞ்சளானது. இவன் விரைவில் இறந்துவிடுவான் என்றே பலரும் முடிவெடுத்து விட்டனர். வீடே சோகமயமானது. இந்நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கரிசலாங்கண்ணியுடன் வேறொரு மூலிகை கலந்து தரப்பட்ட ஒரு பச்சிலைக் கலவையில் உயிர் மீண்டேன். ஆனால், மரணத்தின் பகடை விளையாட்டு அத்துடன் நின்று விடவில்லை. அதன் இன்னொரு முயற்சியை இப்போது நினைத்தாலும் முதுகுத் தண்டு ‘சில்’லிடுகிறது.
பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு ஏற்றிச் செல்லும் லாரியில், ‘கரும்பு இழுக்கும்போது, அந்த விபரீதம நிகழ்ந்தது. டிராக்டரில் ஏற்றிச் செல்லும் கரும்பை ஒடிக்கத்தான் முடியும். லாரியில் செல்லும் கரும்பை ஒடிக்க முடியாது. காரணம், அதன் கரும்பு முனைகள் நீளமக இருக்காது. உள்ளே வைத்து இறுக்கிக் கட்டியிருப்பார்கள். ஓடும் லாரியின் பின்பக்கத்தில் ஏறிக் கொண்டு கரும்பை இழுக்க வேண்டும். இது ஒரு வகையில் திருட்டுதான். நமக்குச் சொந்தமில்லாத கொல்லையில் கல்லெறிந்து மாங்காய், நாவல் பழம் பறிப்பதில்லையா? அதுபோல்தான் இதுவும்..
ஒரு மாலை நேரத்தில் ஓடும் லாரியின் பின்பக்கம் ஏறி, நான் கரும்பு இழுத்துப் போட்டுக் கொண்டே வர, பின்னேயே நண்பர்கள் அவற்றைப் பொறுக்கிக் கொண்டே வந்தார்கள். வழியில் லாரி திடீரென்று நின்றது. காரணம் புரியாமல் நான் கரும்பு இழுப்பதிலேயே குறியாக இருந்தேன். நான் கரும்பு இழுப்பதை ரிவ்யூ மிர்ரரில் பார்த்து விட்ட டிரைவர், லாரியை நிறுத்திய விஷயம் எனக்குத் தெரியாது. லாரியிலிருந்து குதித்த டிரைவர் என்னைப் பிடிப்பதற்காகப் பாய்ந்து ஓடி வந்தார். நான் நிலைமையை யூகித்து, சுதாரித்து லாரியிலிருந்து குதித்து எதிர்சாரியில் ஓடத் தொடங்கினேன். அந்த நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. எதிர்திசையில் வேகமாக வந்து கொண்டிருந்தது லாரி ஒன்று. நான் குறுக்கே ஓடி வருவதைப் பார்த்த டிரைவர், சடன்பிரேக் போட, நான் அந்த லாரியில் மோதி, பின்புறமாக மல்லாந்து விழுந்து, அதிர்ந்து அதேநொடியில் நிதானித்து, விழுந்த வேகத்திலேயே மின்னலாய்த் துள்ளியெழுந்து, புயலாய் ஓடித் தப்பித்தேன்.
ஒருமுறை மணிமுக்தா நதி வெள்ளச் சுழலில் சிக்கி உள்ளிழுக்கப்பட்டதும் என்னை யாரோ ஒருவர் தலைமுடியைப் பிடித்து கரைக்கு இழுத்து வந்ததும் மரணத்தின் தீண்டல் விளையாட்டுதான். இப்படியாக வயது பேதமின்றி ஒவ்வொரு மனிதரின் மீதும் மரணம் தன் மாறாத காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நோய் மூலமும் விபத்துக்கள் மூலமும் அது ஒருவனைத் தீண்டிவிட வேண்டும் என்கிற துடிப்போடு தனது தூதுவனை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. விதிவசமாகவோ, மதிவசமாகவோ அதன் பிடியிலிருந்து தப்பி விலகி வந்து கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள்.
எந்த வீட்டிலேனும் மாலை சூட்டப்பட்ட ஒரு குழந்தையின் புகைப்படத்தைப் பார்க்க நேரும்போது, மனதுக்குள் ஒரு சுரீர் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அந்தக் குழந்தையின் இழப்பு அந்த வீட்டில் எத்தகைய சோகச் சித்திரத்தை வரைந்திருக்கும் என்பதை அனுமானித்து உறையும் மனசு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த இழப்பின் வடு அந்த வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். ‘அந்தக் குழந்தை இன்றிருந்தால்..?’ என்று கற்பனைகள் விரியும். ‘காலேஜ் முடிச்சிருக்கும். கல்யாணம் நடந்திருக்கும்…’ என்றெல்லாம் பெற்றவர்களின் நினைவுகளில் அந்தக் குழந்தையும் சேர்ந்தே வளர்கிறது. பெற்றோரைப் பொறுத்தவரை அது இறப்பதில்லை. தாய், தந்தையரின் நினைவுகளில் அவர்களும் ஒரு குழந்தையாக வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டிலும் மாலை சூட்டப்பட்ட 13 வயது சிறுமியின் புகைப்படம் உண்டு. பொங்கல் தினத்தன்று பிறந்த என் அக்கா பார்வதியின் புகைப்படம் அது. எனக்கு எட்டு வயதிருக்கும்போது, அக்கா மறைந்து போனார். அவர் இருப்பின் பதிவுகள் இன்னும் இதயத்தில ஈரமாய் பதிந்திருக்க, இழப்பின் வலி என்னவென்றே புரியாத பால்ய வயதில் அவர் மறைந்தார். நேற்றுவரை என்னுடன் விளையாடிக் கொண்டும், சண்டையடித்துக் கொண்டுமிருந்த ஒரு ஜீவன், திடீரென்று சொந்த பந்தங்கள் சூழ வீட்டிலிருந்து கண்ணீர், கம்பலையோடு விடைபெறும் சோகம் – கொடுமை.
அவரது மறைவுக்குப் பிறகு விளையாட்டுக்கு ஒரு கை குறையும் போதும், உணவுண்ண உட்காரும்போதும், படுக்கையில் படுக்கும்போதும், மிக நீண்ட நாட்கள் அந்த வெறுமையை என் மனம் உணர்ந்து கொண்டே இருந்தது. தலைச்சன் மகள் இரண்டாவது தாய் என்பார்கள். அந்த இரண்டாவது தாயின் இழப்பு நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் இன்னும் ஈரமாக மனதை அழுத்திக் கொண்டே இருக்கிறது. பால்யத்தில் மறையும் குழந்தைகள் பௌதீக ரீதியாகவே மறைகிறார்கள். அவர்கள் பெற்றோருடன் உடன்பிறந்தவர்களுடன் மானசீகமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் குழந்தைகளைவிட, இற்ந்து போன குழந்தைகளின் மீதுதான் பெற்றோர் அதிக பாசம் வைத்திருக்கிறார்கள்.
என் தெருவில் உறவினர் ஒருவர். அவருக்கு புற்றுநோய். அந்தநோய் வந்தபிறகு அவர் தன் மனைவியைக் கடுஞ்சொல்லால் திட்டுவது, குழந்தைகளை காரணமின்றி அடிப்பது என்று நடந்து கொள்ளத் தொடங்கினார். அவர் அத்தகைய இயல்பு கொண்டவரல்ல. மிகவும் அன்பானவர். குடும்பத்தினர் மீது பாசமுள்ளவர். ஆனால், தனக்கு நோய் இருப்பது தெரிந்தவுடன் முற்று முழுதாக அவரது குணாதிசயம் மாறிவிட்டது. உறவினர்கள் அவரை கண்டிக்கவில்லை. தனக்கு நோய் இருக்கும் மன அழுத்தத்ததால்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார். அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். சில மாதங்கள் ஓடின. அவருக்கு நோய் முற்றி, மரணப்படுக்கையில் விழுந்தார். இன்னும் சில தினங்களில் இறந்து விடுவார் என்கிற நிலையில் தன் மனைவியிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
‘நான் கடந்த சில மாதங்களாக உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டேன். அப்படி நடந்துக்கிட்டாலும் எனக்குள்ளே அழுதது எனக்குத்தான் தெரியும். நான் நோயில் துன்பப்படுறதைப் பார்த்து நீங்க வருந்தக் கூடாது. என் இழப்பு உங்களுக்குப் பெரிய சோகமாக இருக்க் கூடாது. என் மேலே ஒரு வெறுப்பு, எரிச்சல் உங்களுக்கு வரணும். இவன் சீக்கிரம் போய்ச் சேரணும்னு நீங்க நினைக்கணும்னுதான் அப்படி நடந்துக்கிட்டேன். மன்னிச்சுடு…’ என்று கூறி அவர் கண்ணீர் வடித்திருக்கிறார். சில தினங்களில் அவர் இறந்துவிட்டார்.
அதை இப்போது, கூட அவரது மனைவி கூறும்போது, ‘பாவி மனுஷன் அந்த விஷயத்தைச் சொல்லாமலே போயிருக்கலாமே…’ என்று சொல்லிக் கண் கலங்குவார்.
‘யாரோ காணும் பெருங்கனவில் நானோர் சிறுபாத்திரம். அவர் உறக்கம் கலைந்தெழும்போது கலையும் கனவில் நான் நீர்த்திவலையாய் மறைந்து போகலாம். மீண்டும் அவர் மறுநாள் உறங்கக் கூடும். அப்போது வேறொரு கனவில் வேறு பாத்திரங்கள் இடம்பெறக் கூடும். தான் யார் கனவின் பாத்திரம் என்பதை அறிந்து கொள்ளாமலே மலர்ந்து மணந்து கொண்டிருக்கிறது இந்தப் பொய்க்கனவுப்பூ.’ – கல்லூரி நாட்களில் ‘நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ…’ என்ற பாரதியாரின் வரிகளால் உசுப்பப்பட்டு நான் எழுதிய சொற்சித்திரம் இது. மரணம் குறித்து யோசிக்க ஆரம்பித்தாலே அது பெரும் ஆர்வத்தையும் விநோதக் கற்பனைகளையும் கிளறிக் கொண்டே இருக்கிறது. அது கற்பனைகளின் கஜானாவாக ஜொலிக்கிறது. கண்டவர் விண்டிலாத காரணத்தால் அது குறித்த யூகங்களில் சுவாரஸ்யங்கள் அதிகரிக்கின்றன. மனிதச் சமூகத்தால் வெல்லவே முடியாத நிகழ்வு அது. என்றாலும் அதனை வென்று விடவேண்டும் என்றே மனம் துடிக்கிறது.
அந்தத் துடிப்பை ஓர் ஏளனப் புன்னகையுடன் எதிர்கொண்டு, மரணம் என்னும் மகாநதி கம்பீரமாக ஓய்வின்றி ஓடிக் கொண்டே இருக்கிறது. சராசரிகள் அந்த நதியில் மூழ்கி புதைந்து போகிறார்கள். வாழ்நாளில் சமூகத்துக்காக ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்கும் சிந்தனையாளர்கள், போராளிகள் அதில் ஒரு படகு போல மூழ்காமல் மேலே மிதந்து ஜலஉலா வருகிறார்கள்.
பாரதியார், ‘காலா உனைச் சிறுபுல் என மதிக்கிறேன் – என்
காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்’ எனப்பாடியது மரணத்துக்குப் பின்னான தன் இருப்பு, படகு போன்றது என்பதை உணர்ந்த காரணத்தால்தான். என் இலக்கிய நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ‘பாரதி, தன் பௌதீக உடம்பின் அழிவை மரணமாக நினைக்கவில்லை. உடல் ரீதியான மரணத்தை வெல்ல முடியாது என்பதைத் தெரியாதவரல்ல அவர். அவர் பாடியது, நிலைத்த வாழ்வு கொண்ட தன் கவிதைகளை… இறவா வரம் கொண்ட தன் கவிஞர் என்னும் பிம்பத்தைப் பற்றி. பாரதி போன்ற சிலருக்குத்தான் மரணமிலாப் பெருவாழ்வு சாத்தியம்…’ என்றார்.
ஆதிசங்கரரின் ‘புனரபி ஜனனம்… புனரபி மரணம்…’ என்கிற வரிகள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. அதேநேரம் மனதளவில் மரணம் குறித்த அச்சம் போக்கி ஆற்றாமையை நீக்கி ஆறுதல் அளிப்பதால் அந்த வரிகள் எனக்குப் பிடிக்கும். ‘காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைவனலாம் காண்பமன்றோ?’ என்கிற பாரதியின் தர்க்கம் செரிந்த அந்த வரிகளும் மரணம் குறித்த அச்சத்தைத் தகர்த்தெறியும் வரிகள். ஆதிசங்கரருடையது அத்வைத சாரம். பாரதியாருடையது துவைத ஆரம். தத்துவ விசாரணைக்குள் நுழைந்தால் அது மற்றொன்று விரித்த குற்றமாகி விடும். இரண்டின் அடிப்படைத் தத்துவங்களும் வேறு வேறு. எனினும் இணைகோடுகளிலேயே இரண்டும் பயணிக்கின்றன. மறைந்து மறுபடி பிறப்பது மறுபிறப்பு. மறைந்தும் மறையாமல் வாழ்வது இன்னொரு வாழ்வு. அது மரணமிலாப் பெருவாழ்வு.
உயிர் வாழ்தல், சுவாசித்தல் மட்டுமேயல்ல. புரண்டு படுப்பவன் சுவாசித்துக் கொண்டிருக்கும்போதே செத்துப் போகிறான். புயலாய்ச் சுழன்று உழைப்பவன் செத்தும் உயிர்வாழ்கிறான். சராசரிகளுக்கு உயிர்வாழ்தல் என்பது உடம்புக்கும் உயிருக்குமான சுவாச ஒப்பந்தம் மட்டுமே. சாதனையாளர்களுக்கோ அதையும் தாண்டிய நெடும் பயணம் அது. சமூகத்தின் நன்மைக்காக யோசிப்பவன் ஒரு நொடியும் ஓய்வதே இல்லை. சுயவாழ்வுச் சுகத்துக்காக வாழ்பவனை சமூகம் தனது எச்சில் திவலைகளிலேயே மூழ்கடித்துச் சாகடித்து விடுகிறது. மரணமிலாப் பெருவாழ்வு, சமூகத்துக்கு ஓய்வின்றி உழைப்பவர்களுக்கே அது சாத்தியம்.
கடமையை முடித்த மனிதர்களே மரணம் குறித்த அச்சமற்றவர்களாய் துணிந்து நிற்கிறார்கள். எல்லைக்கோட்டில் உயிரைத் துச்சமாய் நினைத்துப் போராடும் ராணுவ வீரனின் துணிச்சலுக்குப் பின்னணியில் இருப்பது அவரது தேசச் சேவையும் அதன் மீதான பற்றுமே. அரசியலிலும், அரசுத்துறையிலும் அத்தகைய நேர்மையாளர்களைக் காணும்போது, வணங்கவே தோன்றுகிறது.
மரணத்தை வெல்லும் ஒரே மார்க்கம் மதங்களின் மார்க்கமல்ல. அது, உழைப்பின் மார்க்கம். அந்த உழைப்பு சமூகத்துக்கானதாய் இருக்கும்போது, மரணம் அவர்களது கால்களில் மண்டியிட்டு மலர்தூவுகிறது.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13