மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 11 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 11 | பெ. கருணாகரன்

அத்தியாயம் – 11

கடவுள் வாழும் வீடு!

து மழைக்காலம். அதன் காம்ப்ளிமென்டாக பகல் நேரத்திலும் ரீங்காரமிடும் கொசுக்கள், கொசுவர்த்திச் சுருள், லிக்யூடேட்டர் இவற்றுக்கு அடங்காமல் தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த மழைக்காலக் கொசுக்களைக் கூடச் சமாளித்து விடமுடியும். வெயில் காலங்களிலும் கூட பணியிடங்களில் நம் முன் ரீங்காரமிடும் கொசுக்களைத்தான் சமாளிப்பது பெரும்பாடாகி விடுகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு மனோபாவங்கள் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எல்லோரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையை எதிர்பார்க்க முடிவதில்லை. அதேநேரம் அவற்றைப் புரிந்து வைத்துக் கொள்வது அவசியம். நாம் மிகவும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு நபரே அந்த அலுவலகத்தில் நமக்கு எதிராக காய் நகர்த்தி, நம் ராஜாவை எங்கேயும் நகர முடியாமல் ‘செக் மேட்’ நிலைக்குக் கொண்டு வந்து விழிபிதுங்க வைத்து விடுவதுமுண்டு. மனைவி அமைவது மட்டுமல்ல, அலுவலகம் மற்றும் உடன் பணிபுரியும் சகாக்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். நமக்குக் கிடைக்கும் வரமே நாம் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டால் சாபமாகி விடும் நிலையும் ஏற்பட்டு விடுவதுண்டு.

பத்தாண்டுகளுக்கு முன் எனது நண்பன் மாரிமுத்து  சென்னைக்கு வந்து, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த புதிது. வேலைக்கு அசராதவன். அர்ப்பணிப்புள்ளவன். அதுதான் அவனுக்கு முதல் பணி அனுபவம். மாரிமுத்துவுக்கு அதே அலுவலகத்தில் இரண்டு வருட சீனியர் ஒருவர் நண்பர். அவர் அவனது பக்கத்து ஊர்க்காரர் என்பதால் அவரிடம் நெருக்கம். மாரிமுத்து இரவு பகல் என்று நேரம் பார்க்காமல் ஆறு மாதங்கள் பணியாற்றியதில் அவனுக்கு  முதலாளியிடம் நல்ல பெயர். அவனை அந்த நிறுவனத்தின் செக்ஷன் ஒன்றின் இன்சார்ஜ் ஆக நியமிக்க நிர்வாகம் முடிவெடுத்தது.

இந்த விஷயத்தை நிறுவனம் இவனிடம் கூறுவதற்கு முன்பே அதை மோப்பம் பிடித்த அந்த சீனியருக்குப் பொறாமை வந்து விட்டது. நமக்குப் பின்னால் வேலைக்குச் சேர்ந்தவன் தனி செக்ஷனுக்கு இன்சார்ஜாகப் போவதா? அவர் தனியாக மாரிமுத்துவை அழைத்துச் சென்று, ‘இன்னொரு செக்ஷனின் இன்சார்ஜா உன்னைப் போடப் போறதா கேள்விப்பட்டேன். அது உனக்குப் புரொமோஷன் மாதிரி இருக்கலாம். ஆனால், அது புரொமோஷன் இல்லை. அந்த வேலை ரொம்ப ரிஸ்க் ஆனது. கூடுதலா பொறுப்பு கொடுத்து உன்னை பிரச்சினையில் மாட்டி விட நினைக்கிறாங்க… அது ஒரு ட்ரேப். அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கிட்டா அப்புறம் நிம்மதி போயிடும். ஜாக்கிரதை. எம்டி கூப்பிட்டு இதுபற்றிச் சொன்னார்னா ‘வேண்டாம் சார்’னு மறுத்துடு…’என்று கூறியிருக்கிறார்.

மறுநாள் மாரிமுத்துவின் முதலாளி அவனைத் தனது அறைக்கு அழைத்து,  வாழ்த்துகள் சொல்லி, அந்த செக்ஷனின் இன்சார்ஜாக அவனை நியமிக்கப் போகும் விஷயத்தைச் சொன்னபோது, இவன், ‘சார்… அது ரொம்ப பெரிய பொறுப்பா தெரியுது. அதை மேனேஜ் பண்ற அளவுக்கு எனக்கு இன்னும் அனுபவம் வரலைன்னு நினைக்கிறேன்…’ என்றிருக்கிறான். அவன் கூறியதைக் கேட்டுப் புன்னகையுடன் அவனது எம்டி அனுப்பி வைத்தார். அன்று மதியம், அலுவலகத்தில் அவன் கேள்விப்பட்ட விஷயம் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த செக்ஷனின் இன்சார்ஜாக மாரிமுத்துவின் நண்பனை நிர்வாகம் நிர்ணயித்தது. அந்த வேலை ரிஸ்க் என்று, இவனை அச்சுறுத்திய அந்த சீனியர் அது குறித்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவனுக்கு ஓட்டலில் ட்ரீட் கொடுத்தார். தன் விதியை நொந்து கொண்டே இவனும் போய் பிரியாணி சாப்பிட்டு வந்திருக்கிறான்.

இப்போது மாரிமுத்து வேறொரு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பிலிருந்கிறான். அந்த அனுபவத்துக்குப் பிறகு அவனிடம் எத்தகைய பணி ஒப்படைக்கப்பட்டாலும் தயங்காமல் அஞ்சாமல் ஏற்றுச் செய்து முடித்து விடுவான். ‘வாய்ப்புகள் வரும்போது, துணிச்சலுடன் ஏற்க வேண்டும். இல்லையென்றால் அதனை வேறு யாராவது பறித்துக் கொண்டு போய்விடுவார்கள்’ என்று கூறும் மாரிமுத்து, அன்றிலிருந்து யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை.

குடும்பம் மாதிரி செயல்படும் அலுவலகங்களும் உண்டு. அந்த நிறுவனங்களில் பணியாற்றுவது அற்புதமான அனுபவம். தன் ஊழியர் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையைத் தனக்கு ஏற்பட்டதாக நினைக்கும் நிர்வாகிகளும் உண்டு. உதாரணத்துக்கு ஒரு சம்பவம். அந்த அலுவலகத்தில் மதியம் மூன்று மணி சுமாருக்கு  ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்துவிட, அந்த நிறுவனத்தின் நிர்வாகி அவரைத் தனது காரில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். இத்தகைய சூழலில் முதலாளியே இதுபோன்று நேரடியாகச் செல்ல மாட்டார் என்பதுதான் பொது நடைமுறை. ஊழியரைப் பரிசோதித்த மருத்துவர், பிரிஸ்கிரிப்ஷன் சீட்டில் ‘ONE FULL MEAL’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அந்த நிர்வாகி குழப்பத்துடன் டாக்டரைப் பார்க்க அவரோ, ‘இன்னும் இவர் சாப்பிடலை. இது பசி மயக்கம். சாப்பாடு வாங்கிக் கொடுங்க…’ என்றவுடன் பதறிவிட்டார் அந்த நிர்வாகி. வரும் வழியில் அவருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அந்த ஊழியரிடம் பேசிக் கொண்டே வந்தபோது, தனது கமிட்மெண்ட்களையெல்லாம் கூறிக் கொண்டே வந்திருக்கிறார் அந்த ஊழியர். தான் வாங்கும் ஊதியம் போதுமானதாய் இல்லை என்று அவர் கூற, அந்த மாதத்திலிருந்து ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளித்தார் அந்த நிர்வாகி.

ஒரு நிறுவனம் என்பது எப்போது கடவுள் வாழும் வீடாகிறதென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர் இரவில் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதனை விடுத்து தினமும் ஒரு கவலையுடன் தூக்கமின்றித் தவிக்க நேர்ந்தால்…?

இது கோவையில் அரசு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் என் முகநூல் தோழி ஒருவரது அனுபவம். அவ்ரது இம்மீடியட் பாஸ் ஒரு பெண். அவருக்குக் கீழ் இருக்கும் எல்லோரும் அவருக்குச் சலாம் அடிக்க வேண்டும். அவர் கட்டியிருக்கும் புடவையைப் பாராட்ட வேண்டும். காதில் அணிந்திருக்கும் கம்மல் ஜொலிக்கிறது என்று சொல்ல வேண்டும். வார இறுதி நாட்களில் வீட்டில் செய்யும் தின்பண்டங்களைக் கொண்டு வந்து தரவேண்டும். மதிய உணவில் ஸ்பெஷலாக ஏதாவது செய்திருந்தால் அவருக்குத் தனி டப்பாவில் அடைத்து கொடுக்க வேண்டும். இத்தகைய ‘சம்பிரதாயங்களில்’ நமது தோழிக்கு உடன்பாடில்லை.

இதனால், தோழியின் வேலைகளில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார் அந்த பாஸ். தோழியைக் காணும் போதெல்லாம் நெற்றிக் கண்ணைத் திறந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருப்பார். இந்த ‘மொக்கை பாஸை’ எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார் நமது தோழி. தினமும் படுத்தால் தூங்க முடிவதில்லை. அப்படியே அசந்து தூங்கினாலும் கனவில் அவர் வந்து மிரட்டிக் கொண்டிருந்தார். இதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடந்தார். இதனால் வேலையில் நிறைய தவறுகள் நேர்ந்தன. அது இன்னும்  இவருக்கு எதிராக மொக்கை பாஸ் கோபப்படக் காரணமாயிற்று.

ஒருநாள் மதிய உணவு நேரத்தில், ‘அவங்க உன் மேலே எரிச்சல் படக்காரணம் அவங்க கட்டியிருக்கிற புடவையை நீ பாராட்டலை.  நீ அவங்க கேபினுக்குள் போய் விஷ் பண்ணலைங்கிறதுதான். இதில் உனக்கு என்ன குறைஞ்சிடப் போவுது..?’ என்றிருக்கிறார் ஒரு தோழி.

அதற்கு நம் தோழி, ‘நான் ஏன் அப்படி அவங்க முன்னாடி பொய்யா வழியணும்? அவங்க என்ன மகாராணியா? கூழைக் குப்பிடு போடறதுக்கு? வீ ஆர் கலீக்ஸ்…. நான் என் இயல்புபடிதான் இருக்க முடியும்…’ என்றிருக்கிறார். இவர் கூறிய பதிலை அந்தத் தோழி அந்த பாஸிடம் போய் சொல்லியிருக்கிறார்.

இதனால் பாஸ இவர் மீது இன்னும் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். ஒருநாள் அவர் தயாரித்த கடிதம் ஒன்றில் தவறு நேர்ந்துவிட, அந்த கடிதத்தில் ‘ஒரு கடிதம் எப்படி இருக்க் கூடாது என்பதற்கு உதாரணம் இந்தக் கடிதம்’ என்று குறிப்பெழுதி அவர் பெயரையும் குறிப்பிட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டி விட்டார். இது மிகப் பெரிய மனஉளைச்சலுக்கு தோழியை ஆளாக்கியிருக்கிறது. உடல் நலம் சரியில்லாமல், இரண்டு நாள் அலுவலகம் போகவில்லை. இறுதியில் ஒரு வழியாக அரசியல்வாதிகளையெல்லாம் பிடித்து கடந்த ஆண்டு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு சேலத்துக்கு வந்த பிறகுதான் நிம்மதி மூச்சே அவருக்கு வந்திருக்கிறது.

‘கடந்த பதினைந்து வருட சர்வீசில் ஆண் அதிகாரிகளிடம் இதுபோன்ற பிரச்சினைகள் வந்ததே இல்லை. பெண் அதிகாரிகளிடம் குறிப்பாகப் பெண்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சினைகள் வருகின்றன. இது எந்த மாதிரி மனோபாவம் என்று தெரியவில்லை…’ என்கிறார் அந்தத் தோழி.

சில அலுவலகங்களில் ‘உங்களைப் பற்றி எம்டியிடம் உயர்வாகச் சொல்லியிருக்கிறேன். அவர் உங்களிடம் இந்த, இந்த வேலைகளை முடிக்கச் சொன்னார்…’ என்று வேலைகளை வாங்கிக் கொள்ளும் இம்மீடியட் பாஸ், எம்டியிடம் அவர் குறித்து எதுவும் கூறியிருக்க மாட்டார். வேலைகளை வெற்றிகரமாக வாங்கிக் கொண்டு, தான் எம்டியிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டு ஒதுங்கி விடுவார். இது போன்ற இம்மீடியட் பாஸ்களிடம் சிக்கியவர்களுக்கு வாழ்வில் உயர்வு என்பது சந்தேகமே. இம்மீடியட் பாஸ்கள் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரமே.

 ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி நம் திறமையை உசுப்பேற்றி மேன்மை நிலைக்குக் கொண்டு சென்ற பல தலைவர்களை நான் சந்தித்திருக்கிறேன். சந்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரு நிருபர் எழுதும் கட்டுரை நன்றாக இருந்து விட்டால், ‘நீங்கள் இந்த நிறுவனத்தின் சொத்து’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பெழுதி, உச்சி முகரும் தாயுள்ளம் கொண்ட தலைவர்களையும் கண்டு கண்கலங்கிக் கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

எந்தப் பிரச்னையும் யாருக்கும் மனவருத்தம் இல்லாமல் உறுத்தல், வலி இல்லாமல் அப்போதே அதை முடித்துவிட வேண்டியதுதான் ஒரு நல்ல தலைமைப் பண்புக்கு அடையாளமாய் இருக்க முடியும். முன்பு நான் பணியாற்றிய அலுவலகம் ஒன்றில் ஒரு கிராஃபிக் டிசைனர் வேலையை இழுத்துக் கொண்டே இருந்தார். எனக்கு டெட்லைன் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் அந்த கிராபிக் டிசைனரிடம் அந்த நேரத்தில் சற்றுக் கடுமையாக நடந்து கொண்டேன். இதனால் அவர் சற்று அப்செட்.

அவர் தன்னுடன் பணியாற்றும் இன்னொரு நண்பரிடம் என்னைப் பற்றி  கொஞ்சம் கடுமையாக கமெண்ட் செய்திருக்கிறார். இவர் கூறியதைக் கேட்டுக் கொண்ட அந்த நண்பர், அவர் கூறியதை கமா, ஃபுல்ஸ்டாப் ஒன்று கூட விடாமல் மறுநாள் என்னிடம் வந்து வாசித்தார்.

நான் அவரிடம் சொன்னேன். ‘நான் அவரிடம் கடுமையாய் நடந்து கொண்டது டெட்லைனுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக. அவர் என்னைப் பற்றி விமர்சனம் பண்ணியது தன் மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக. அப்படி அவர் என்னைப் பற்றிப் பேசாமல் இருந்திருந்தால் தேவையில்லாத மன உளைச்சல்… அவரால் நேற்று இரவு தூங்க முடியாமல் கூட போயிருக்கலாம். அந்த மனஅழுத்தம் மறுநாள் வேலையில் வெளிப்படும். ஒருவகையில் பார்த்தால், நான் கடுமையாக நடந்து கொண்டதும், அவர் என்னைப் பற்றி கமெண்ட் செய்ததும் ஒரே விஷயத்துக்காகத்தான். வேலையை நேரத்துக்கு முடிக்கணும். அவர் கமெண்ட் செய்தார்னு வேலை மெனக்கெட்டு ஒரு விஷயத்தை என் கவனத்துக்குக் கொண்டு வர்றீங்களே… இது எதில் சேர்த்தி? வேலைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? போய் வேலையைப் பாருங்க…’ என்று அவரிடம் நான் கூறியதுடன்,  அந்த கிராஃபிக் டிசைனரிடம் சென்று நான் ‘ஸாரி…’ சொன்னேன். அவர் கண்கலங்கி விட்டார். ‘சார்… எதுக்கு பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு… ’ என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டார். பிரச்சினை அத்தோடு தீர்ந்தது. ‘என்னைப் பற்றி கடுமையாக கமெண்ட் செய்தாயா?’ என்று வன்மம் கொண்டால், அது பணிச் சூழலை பாதிக்கக் கூடியதாகவே அமையும். யாருக்கும் நிம்மதி இருக்காது.

இந்த அணுகுமுறை தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியம் எனது நண்பன் தன் முதலாளி பற்றிக் கூறியதிலிருந்து நான் கற்றுக் கொண்டதாகும். வலுவில்லாதவன் வலுவுள்ளவனைப் பலவீனப்படுத்தி தன் பலத்தை பேலன்ஸ் செய்து கொள்கிறான். நேர்மையில்லாதவன் அடுத்தவனை நேர்மையற்றவன் என்று பிரசாரம் செய்து தன் நேர்மையின்மையை பேலன்ஸ் செய்து கொள்கிறான். இத்தகைய குறுக்குவழிப் புத்திசாலித்தனங்கள் சில நிறுவனங்களில் எடுபடுவதில்லை என்பதே ஆறுதலான விஷயம்.

என் நண்பன் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் நிர்வாகியின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. அவரிடம் யாராவது புகார் எடுத்துச் சென்றால், யாரைப் பற்றி புகார் செய்யப்பட்டதோ அவரையும் அழைப்பார். புகார் செய்தவர், புகாருக்குட்பட்டவர் இருவரையும் ஒன்றாக வைத்துக் கொண்டேதான் விசாரிப்பார். ‘உங்களைப் பற்றி இவர் ஏதோ புகார் சொல்றாரு. இதுக்கு உங்க விளக்கம் என்ன?’ என்று கூறிவிட்டு, புகார் செய்தவரை மீண்டும் சம்பந்தப்பட்டவரின் எதிரிலேயே அதனைக் கூறச் சொல்வார். புகார் அளித்தவர் மென்று விழுங்கி அதனைச் சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு விழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும்.

கடைசியில் அவர் இப்படிக் கூறுவார். ‘இது ஒரு நிறுவனம். இதில் கோ ஆர்டினேஷன் முக்கியம். இந்த மாதிரி புகார்கள் கோ ஆர்டினேஷனை கெடுத்துடும்.  இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. அவரிடம் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் அவரிடமே நேரில் பேசிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதே ஆரோக்கியம். நீங்க இந்தியர், அவர் பாகிஸ்தானியர் மாதிரியான மனோநிலை தவறு. ஆல் வீ ஆர் இன்  ஒன் ரூஃப். மற்றபடி, இதுபோன்ற ரகசியப் புகார்களுக்கு நான் ஆக்ஷன் எடுத்தால், அது அந்தத் தனிநபரின் நிம்மதியைக் கெடுக்கும். இந்த நிறுவனத்தின் மீது அவர் வைத்திக்கும் நம்பிக்கையைக் குறைக்கும். அதனால் அவரது பர்ஃபாமென்ஸ் குறையும். அது இந்த நிறுவனத்தின் பணித்திறனை, உற்பத்தியைப் பாதிக்கும்…’ என்று கூறிவிட்டு, தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவாராம். அந்த நிறுவனத்தில் யாரும் யாரைப் பற்றியும் புகார் செய்வதே இல்லை என்பதே ஆரோக்கியமான விஷயம் தானே.

-(தொடரும்…)

முந்தையபகுதி – 10 | அடுத்தபகுதி – 12 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...