மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 10 | பெ. கருணாகரன்
“சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும்”
‘விழிகள் விண்மீன்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்’ – இது முதிர்கன்னியைப் பற்றி எழுதப்பட்ட ஓர் ஈரக் கவிதை. முதிர்கன்னிகள் மட்டுமல்ல, முதிர்கண்ணர்களின் கதைகளும் ஈரம் ததும்பக் கூடியவையே. அக்கா, தங்கைகளின் திருமணம் தள்ளிப் போவதே பெரும்பாலான தாமதத் திருமணங்களுக்குக் காரணமாக இருந்தாலும், இன்னும் பல்வேறு சமூகக் காரணங்களும் திருமணத்தைத் தள்ளிப் போட வைக்கின்றன. நான் பார்த்த, நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட முதிர்கண்ணர்களின் நெகிழ்ச்சிக் கதைகளைப் பார்ப்போமா?
மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. அந்தப் பெரியவர் அந்த 5 வயதுக் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு, நடுத்தர வயதுடைய பெண்ணை அழைத்துக் கொண்டு, வேகமாக வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு மூதாட்டி ‘பேரனை மழையில் நனைய வெச்சி ஏன் கூட்டிட்டுப் போறீங்க? ஒதுங்கி நின்னு தூறல் நின்ன பிறகுதான் போறது தான?’ என்றார். அதற்கு அந்த முதியவர் அந்த மூதாட்டியைத் திரும்பிப்பார்த்துச் சொன்னார். ‘இது பேரன் இல்லே… என் மகன்…’ அந்த மூதாட்டியின் முகத்தில மெல்லிய அதிர்ச்சி. அந்தப் பெரியவர் முகத்திலோ வாட்டம். இன்னும் எத்தனை தாமதத் திருமணத் தந்தைகள் வெளியில் இதுபோல் சங்கடங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்களோ?
ஐம்பத்தைந்து வயதாகும் ராஜேந்திரனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பணி. கம்யூனிசத்தில் ஆர்வமுள்ள அவர் தொழிற்சங்கப் பணிகளில் ஓயாமல் ஓடிக் கொண்டே இருந்ததில் திருமணம் குறித்த ஆர்வமோ எண்ணமோ ஏற்படவே இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகளுக்கெல்லாம் திருமணம் ஆகி செட்டிலாகிவிட, அவர் தொழிற்சங்கப் பணிகளிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். ஒருநாள் அவருக்கு உடல்நலம் குன்றியது. டைபாய்ட். அப்போது அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லை. மிகவும் மனம் தளர்ந்து போனார். அண்ணன், தம்பி எப்போதாவது வந்து பார்த்து நலம் விசாரித்துச் செல்வதோடு சரி. இது அவருக்குள் பெரும் தனிமை உணர்ச்சியை உண்டாக்கியது. குடும்பம் பற்றிய ஏக்கம் அவருக்குள் முதல் முறையாக எட்டிப் பார்த்தது. நமக்கென்று ஒரு குடும்பம் இருந்திருந்தால், இத்தகைய தனிமைச் சூழல் ஏற்பட்டிருக்காதே என்று வருந்தினார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்தபோது, வயது ஐம்பத்தைந்து.
‘ எனக்கு இப்ப ஏற்பட்டிருக்கும் திருமண ஆசை உடல் சார்ந்ததல்ல… எனக்காக ஒரு ஜீவன் வேணும். ஒருத்தனின் அப்பா, அம்மாவுக்குப் பிறகு அவனுக்காக சுயநலமில்லாமல் செயல்படும் ஒரு ஜீவன் அவனது மனைவியாகத்தான் இருக்க முடியும். என் இளவயது உடல்பலம், மனவலிமை எல்லாம் குறைந்து கொஞ்சம் நெகிழ்ச்சியா உணருது மனசு. ஒரு பெண் அது ஐம்பது வயதான பெண்ணாக இருந்தாலும் கூட பரவாயில்லை. எனக்காகவே வாழக் கூடிய ஜீவன் தேவை… இதில் தப்பில்லைன்னு நினைக்கிறேன்…’ என்கிறார் அந்தத் தோழர்.
தொழிற்சங்க ஆர்வத்தில் தன் திருமணத்தை மறந்துபோன ராஜேந்திரன் கதை இப்படியென்றால், தன் உடல்நலம் குன்றிய தந்தையின் மேலிருந்த அக்கறையினால் திருமணத்தைத் தள்ளிவைத்த புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜின் கதை நெகிழ்ச்சியானது. அவருக்கு இருபத்தைந்து வயதாயிருக்கும்போது, அவரது தந்தைக்கு பக்கவாதம் வந்தது. அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தான் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்காது என்று முடிவெடுத்தார் செல்வராஜ். தன் தந்தையின் சிகிச்சையில் முழு கவனம் செலுத்தினார். திருச்சி, மதுரை என்று தந்தையை சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு அலைந்தவர், இறுதியில் தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காகவே சென்னைக்குக் குடிவந்தார். இடையில் தந்தைக்கு கிட்னி பிரச்சினையும் சேர்ந்து கொள்ள பெரும் சிகிச்சைப் போராட்டமே நடத்தினார். கடந்த ஆண்டு அவரது தந்தை இறந்து போனார். அப்போது அவருக்கு நாற்பத்தைந்து வயது. திருமணம் செய்து கொள்வதென்று முடிவெடுத்திருக்கிறார். 45 வயதில் பெண் அமைவதில்தான் சிக்கல். ‘எனக்காக ஒரு பெண் எங்கேயாவது பிறந்திருப்பார். அவர் விரைவில் என் கரம் பிடிப்பார்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் செல்வராஜ்.
விழுப்புரத்தைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் வாழ்க்கை நெகிழ்ச்சியானது. வணக்கத்துக்குரியது. இவருக்கு மூன்று தங்கைகள். அவர்களுக்குத் திருமணம் முடிந்தபோது, இவருக்கு வயது நாற்பத்தெட்டு. இந்த வயதுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள அவருக்கு விருப்பமில்லை. உடனிருந்த தாயும் இறந்துவிட, தனிமரமானார் சோமு. அம்மா, தங்கைகள் என்று குதூகலமாய் இருந்த வீடு, யாருமற்று வெறிசோடிக் கிடந்தது. இந்த நிலையில்தான் அவர் ஒரு முடிவெடுத்தார். அதன்படி, மூன்று ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டார்.
‘அம்மா போயிட்ட பிறகு ஏற்பட்ட தனிமையை என்னால் தாங்கிக்க முடியலை. தங்கச்சிகள் இருந்தாலும் அவங்களுக்கென்று குடும்பம், குழந்தைகள்னு செட்டிலாயிட்ட பிறகு, அவங்களோடு போய் ஒட்டிக்கிறதும் நியாயமாப்படலை. எனக்குன்னு ஆட்கள் வேணும்தானே? அதான் இப்படி ஒரு முடிவு. மனசுக்குச் சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. மூணு குழந்தைகளுக்கும் இப்போ நாலு, அஞ்சு வயசு ஆகுது. ஒருநாள் தள்ளாமை வரும்போது, இந்தக் குழந்தைகளில் ஏதேனும் ஒன்று எனக்குத் தோள் கொடுக்கும். அந்த வயதில் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். அது யாருடைய தோளாக இருந்தால் என்ன? நம்மை நேசிக்கும் ஒருத்தரோட தோள்… அது போதும்…’ என்று கூறுகிறார் சோமு.
சோமு தத்தெடுத்த மூன்று குழந்தைகளுமே ஆண் குழந்தைகள்தான். ‘ஏன் பெண் குழந்தைகளைத் தத்தெடுக்கவில்லை?’ என்று கேட்டபோது, ‘நியாயமான கேள்வி. அப்பா இல்லாத நிலையில் என் தங்கைகளுக்கு நான்தான் திருமணம் செய்து வைத்தேன். மாப்பிள்ளை தேடுவது சாதாரண விஷயமில்லை. நல்ல வரனா அமையணும். நேர்மையானவங்களா, நல்லா வெச்சு வாழக் கூடியவனா இருக்கணும். இதைலாம் என் தங்கைகளுக்குப் பார்த்துப் பார்த்து மாப்பிள்ளை தேடி முடிச்சேன். அப்போ உடம்பில் தெம்பிருந்தது. இப்போ நான் பெண் குழந்தையைத் தத்தெடுத்தால், அந்தக் குழந்தை கல்யாண வயசுக்கு வந்து நிற்கும்போது, எனக்கு அறுபத்தைந்து வயதாகும். அந்த வயதில் அந்தப் பெண்ணுக்கு நல்ல வரனைத் தேட முடியுமா? மாப்பிள்ளை சரியில்லைன்னு சொல்லி அந்தப் பெண் கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நின்றால், அந்த தள்ளாத வயதில் அதைத் தாங்கிக்கத்தான் முடியுமா? அதைலாம் யோசிச்சுத்தான் ஆண் குழந்தைகளா தத்தெடுத்தேன்…’ என்று கூறி நெகிழ வைக்கிறார் தி கிரேட் சோமு.
சென்னையைச் சேர்ந்த நாராயணனுக்குத் திருமணம் தள்ளிப் போகவில்லை. அவரே தள்ளி வைத்துக் கொண்டார். நிரந்தர வேலையில்லை. கிடைக்கும் வேலைகளோ சொற்ப சம்பளத்தில். இந்தத் தற்காலிக வேலைகளை நம்பி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவரைத் துன்புறுத்தக் கூடாது என்கிற தீர்மானத்துக்கு வந்தவர், பெண் தேடுவதைவிட நல்ல வேலை தேடுவதே முக்கியம் என்று வேலை தேடும் வேட்டையில் ஈடுபட்டார். வேலை கிடைத்தது. ஆனால், மாதம் பதினைந்தாயிரம் ரூபாயாவது வேண்டும் என்கிற அவரது ‘கனவு வேலை’தான் கிடைக்கவே இல்லை. இதனிடைய காலம் காத்திருக்காமால் ஓடியது. நாற்பது வயதான நிலையில் வெறுத்துப் போனார். வளசரவாக்கத்தில் ஒரு சிறிய இடத்தில் பெட்டிக்கடை போட்டார். வியாபாரம் சிறிது சிறிதாக வளர, இன்று அவர் தினமும் சுமார் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். தலையில் பாதி முடியைக் காணவில்லை. இப்போது நாற்பத்தெட்டு வயது அவருக்கு. திருமணம் செய்து கொள்ள ஆர்வமாகப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார். பெண்தான் அமையவில்லை.
‘பெண்ணை கஷ்டத்தில் தவிக்க வைக்காம கண் கலங்காம பார்த்துக்கணும்னு நினைச்சேன். அது வெறும் பொருளாதாரம் மட்டுமே சார்ந்த விஷயம். இப்போ பணம் இருக்கு. வயசு இல்லை. இருந்தாலும் என்ன, என் வயசுக்கு ஏற்ப நாற்பது வயசுக்கு மேலே இருக்கிற மாதிரி பெண் பார்க்கச் சொல்லியிருக்கேன். அதுதான் சிரமமா இருக்கு….’ என்கிறார் ஏக்கத்துடன். காத்திருங்க மாப்பிள்ளை… கைப்பிடிக்க ஒரு தோழி கண்டிப்பா வருவார்.
நல்ல வரன்கள் தள்ளிப்போக பொருளாதாரம் பல இடங்களில் தடையாக இருப்பதுண்டு. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பொருளாதார நிலையில் திருமணம் தள்ளிப் போகும். ஆனால், என் நண்பர் பாண்டியனின் நிலைமையோ வேறு. நல்ல வசதியான இடம். அவருக்கு முப்பத்தைந்து வயதாகிறது. அவரது தங்கைக்கு இப்போது முப்பது வயது. மல்டி நேஷனல் கம்பெனியொன்றில் உயர் பதவியில் இருக்கிறார் அவரது தங்கை. மாதம் அறுபதாயிரம் சம்பளம். பாண்டியனின் பிரச்னை அவரது தங்கைதான். நல்ல அழகு. நல்ல சம்பளம். அந்தப் பெண்ணுக்கு நல்ல வரன்கள் அமையவே செய்கின்றன. ஆனால், என்னதான் பிரச்னை?
‘எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்…’ என்று அந்தப் பெண் மறுப்பதே காரணம். தங்கை கல்யாணம் முடிந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார் பாண்டியன். அந்தப் பெண்ணோ ‘இப்போ அந்தக் காலம் மாதிரி இல்லே. தங்கைக்குக் கல்யாணம் செய்த பிறகுதான் அண்ணன் கல்யாணம் பண்ணிக்கணும்னு அப்போ சொன்னது, கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போற பெண் புருஷனைத் தனிக்குடித்தனம் கூட்டிட்டுப்போய் தங்கைகளுக்குத் திருமணம் ஆகாத நிலையை ஏற்படுத்தி விடுவாள் என்பதற்காகதான் அப்படி ஓர் ஏற்பாடு. நம் நிலை அதுவா? நோ சென்டிமெண்ட்ஸ்… அந்தப் பழைய நடைமுறைகளையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கும் அண்ணியைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு…’ என்று அந்தப் பெண் ஒருநாள் குறும்பாகக் கூற, தன் முடிவை மாற்றிக் கொள்ள முடியாமல் நொந்து போயிருக்கிறார் பாண்டியன்.
பாண்டியனின் தங்கை அப்படிச் சொன்னார் என்றால், அண்ணனின் திருமணத்தை முன்னின்று நடத்தியே காட்டியிருக்கிறார்கள் இரண்டு தங்கைகள். என் நண்பர் சந்திரசேகரன் கூறிய அனுபவம் இது. திருப்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். அவருக்கு இரணடு தங்கைகள். கணேஷ் பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்துதான் அவரது இரண்டு தங்கைகளும் பிறந்தார்கள். இருவருக்கும் இருபத்தாறு, இருபத்தேழு வயது. திருப்பூரில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸில் வேலை பார்க்கிறார்கள். கணேஷுக்கு முப்பத்து ஐந்து வயது. தங்கைகளுக்குத் திருமணமாகாத நிலையில் இவரது திருமணமும் தள்ளிக் கொண்டே இருந்தது.
பெண்களுக்கு அமையும் வரன்கள் எல்லாம் அவர்களது பொருளாதார எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில் வரன் வீட்டிலிருந்து பதில் கூட வருவதில்லை. இந்த நிலையில்தான் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை கணேஷின் இரண்டு தங்கைகளுக்கும் அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் யாருக்கோ காத்திருந்தனர். சிறிதுநேரத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உள்ளே நுழைய இருவரின் முகமும் மலர்ந்தது. எழுந்து சென்று அவரது கைகளைப் பிடித்து, ‘வாங்க அண்ணி…’ என்று வரவேற்று அழைத்து வந்தனர். கணேஷுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை.
மூத்த தங்கைதான் பேசத் தொடங்கினார். ‘எங்க கல்யாணத்துக்காக உன் கல்யாணம் தள்ளிப் போகறது எஙகளுக்குச் சம்மதம் இல்லைண்ணா. எப்படியா இருந்தாலும் எங்களுக்கு ஒருநாள் கல்யாணம் நடக்கும். எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு உனக்குக் கல்யாணம் ஆகும்போது முப்பத்தேழு, முப்பத்தெட்டு வயசாகிடும் உனக்கு. இப்பவே பாரு… தலையிலே அங்கங்கே நரைக்க ஆரம்பிச்சுட்டுது… எங்களுக்காக காத்திருந்து நீ லேட் மேரேஜ் பண்ணிக்கிறதில் எங்களுக்கு விருப்பமில்லை. அதனாலதான் நானும் இவளும் சேர்ந்து முடிவு பண்ணி உன்னைக் கேட்காமலே உனக்குப் பெண் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். இவங்க பேரு தங்கமணி. குணத்திலும் தங்கம். எங்க கார்மெண்ட்ஸ்லதான் வொர்க் பண்றாங்க. இவங்களை ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போயிடுச்சு. உன் போட்டோவைக் காட்டி சம்மதம் கேட்டோம். அவங்களுக்கும் உன்னைப் பிடிச்சுட்டது. அதான் நேரில் ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கிறதுக்காகக் கூட்டி வந்தோம்… எங்களுக்காக நீ உன் கல்யாணத்தைத் தள்ளி வைக்க வேண்டாம். நீ சம்மதம் சொன்னால் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்…’ என்றிருக்கிறார்கள். கணேஷ் மறுத்துப் பார்த்தார். அவர்கள் விடுவதாய் இல்லை. இறுதியில் அரைமனதுடன் அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த சில தினங்களில் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்திருக்கிறது. அதன்பிறகு தங்கமணியே அந்த இரண்டு பெண்களுக்கும் வரன் பார்த்து, திருமணம் முடித்து வைத்திருக்கிறார். கிரேட் சிஸ்டர்ஸ்!
( – தொடரும்…)
முந்தையபகுதி – 09 | அடுத்தபகுதி – 11