மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 9 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 9 | பெ. கருணாகரன்

அத்தியாயம் – 09

முகநூல் மாயாவிகள்

 ‘ஊர் நண்பன் ஊற்றுத் தண்ணீர் மாதிரி. முகநூல் நண்பன் ஆற்றுத் தண்ணீர் மாதிரி. ஊற்றுத் தண்ணீர் ஓடி விடாமல் உடனிருக்கும். ஆற்றுத் தண்ணீர் தன் வழியில் ஓடிக் கொண்டே இருக்கும்.  இந்த ஆற்று நீரில் இன்னொரு வகை உண்டு. அது காட்டாறு. அவை முகநூலின் ஃபேக் ஐடிகள். எங்கு மடு உள்ளது? எங்கு சுழல் உள்ளது என்றெல்லாம் கணிக்கவே முடியாது.

ஊரும் தெரியாது. பேரும் தெரியாது. போட்டோவும் இருக்காது. ஆனால் நட்பழைப்பு வரும். அதை ஏற்றுக் கொண்டால் அதன் பிறகுதான் ரணகளக் கச்சேரி ஆரம்பமாகும். எல்லா ஃபேக் ஐடிகளும் அபாயமானவை அல்ல. நல்லது செய்யும் பேக்டீரியாக்களைப் போல நல்லது செய்யும் ஃபேக் ஐடிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மருத்துவம், உணவு, பகுத்தறிவு, பெண்ணியம் போன்ற பயனுள்ள பதிவுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் கொஞ்சம் வில்லங்கமான ஃபேக் ஐடிகளையும் அவைகளிடம் ஏமாந்தவர்களின் அனுபவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

பல்பானந்தா

முதலில் தமாஷாகவே ஆரம்பிப்போம். நண்பர் சிரிப்பானந்தாவை பலருக்கும் தெரிந்திருக்கும். மற்றவர்களைச் சிரிக்க வைப்பதற்காகவே இந்தப் பிறவி எடுத்திருப்பதாகக் கூறுவார். முகநூலில் ஒரு ஃபேக் ஐடி  ஒன்று அவரது போன் எண் வாங்கி போன் செய்திருக்கிறது.  ‘சிரிப்பு யோகா பற்றி பேச வேண்டும். அண்ணா நகர் டவர் பார்க் வர முடியுமா?’ என்று கேட்டது. சிரிப்பு யோகா பற்றி என்றதும் இவரும் மிகவும் குஷியாக  குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே போய் அங்கே உட்கார்ந்து விட்டார். நேரம் ஓடியது. ஆள் வரவில்லை.  எனவே அந்த நண்பரின் எண்ணுக்கு போன் செய்தார். ஸ்விட்ச் ஆஃப். இருந்தாலும் அவர் வந்து விடுவார் என்கிற நம்பிகையுடன் காத்திருந்தார் சிரிப்பானந்தா. மூன்று மணி நேரம் கழித்து போன் வந்தது. எடுத்துப் பேசுவதற்குள்,  எதிர் முனை  ‘ஹிஹிஹி…’ என்று சிரித்துவிட்டு கட் செய்து விட்டது.  மீண்டும் முயற்சித்தபோது, ஸ்விட்ச் ஆஃப். சிரிப்பானந்தா ‘பல்பானந்தா’ ஆன தினம் அது.  அதன் பிறகு அந்த ஐடி நிரந்தரமாக டீ ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது.

“இந்த விளையாட்டில் அந்த ஃபேக்குக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை. பொழுதுபோக்குக்காக முகநூல் வரும் இவர்கள் முகநூலுக்கு வெளியிலும் பொழுதுபோக்கைத் தேடுகிறார்கள் போலும். என்னைக் காத்திருக்க வைத்த  அந்த ஃபேக் அருகில் எங்கேயாவது அமர்ந்து  என்னைக் கண்காணித்து ரசித்திருக்கவும் கூடும். எப்படியோ என்னால் அவர் சந்தோஷப்பட்டால் சரி…’’ என்று கூறிச் சிரிக்கிறார் சிரிப்பானந்தா.

அக்காவுக்குக் கல்யாணம்

சிரிப்பானந்தா அனுபவம் காமெடி என்றால் வளைகுடா நண்பர் ஒருவரின் அனுபவம் ட்ராஜடி. அவருக்கு ஒரு பெண் ஃபேக் ஐடியிடம் நட்பு மலர்ந்தது. கொஞ்ச நாட்கள் உள்பெட்டியில் வந்து பேசிக் கொண்டிருந்த அந்த ஃபேக் ஐடி, அவரைப் பற்றி ஆணழகன் என்றெல்லாம் வர்ணித்திருக்கிறது. ஒரு மாதம் கழிந்த பிறகு, ஒருமுறை தனது போன் எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லியிருக்கிறது. நம் ஆளும் சின்சியராகப் பேச, அந்த ஐடி தன் அக்காவுக்குக் கல்யாணம். ஐம்பதாயிரம் ரூபாய் கடனாகத் தேவை என்று கண்ணீருடன் கேட்டிருக்கிறது. மனம் இளகிய நண்பரும் இருபதாயிரம் தருவதாகக் கூறியிருக்கிறார். அந்தப் பெண் தன் பெயர் முகவரியைக் கூறியிருக்கிறது.  தன் நண்பரிடம் பணம் கொடுத்து அனுப்புவதாக நண்பர் கூறியபோது, ‘வேண்டாம். வீட்டில் சத்தம் போடுவாங்க. உங்க நண்பர் முகவரி கொடுங்க. நான் போய் வாங்கிக் கொள்கிறேன்’  என்று கூறியிருக்கிறது. சென்னையில் தன் நண்பரின் முகவரியைக் கொடுதிருக்கிறார். அன்று மாலையே நண்பருக்குச் சென்னை நண்பர் போன் செய்து ‘நீ சொன்ன பொண்ணின் அண்ணன் வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டார்…’ என்று தகவல் கூறியிருக்கிறார். வளைகுடா நண்பர் அந்தப் பெண்ணின் நம்பருக்கு போன் செய்தபோது, அந்த போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணின் முகநூல் கணக்கும் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து என்னிடம் கூறிய அந்த நண்பர், ‘அந்தக் குரல் பெண் குரலாக இருந்ததால் நம்பினேன். ஆனால், அது நிச்சயம் ஆணாகத்தான் இருக்கும். மிமிக்ரி தெரிஞ்ச ஒருத்தனாத்தான் இருக்கணும்…’ என்கிறார்.

ஒருத்தருக்கு 25 ஐடி

ஃபேக் ஐடிகளைப் பற்றிக் கேள்விப்படும் தகவல்கள் சில சுவையாகவும் இருக்கின்றன. அவர்களில் பலர் புத்திசாலிகள். சில ஐடிகளின் பெயர்கள் மிகவும் ரசிக்கும்படி ரசனையாகவும் இருக்கின்றன. என்றாலும் பெயர்களை வைத்தோ, அவர்களின் பதிவுகளை வைத்தோ அவர்களது இயல்புகளைப் பொதுவாகத் தீர்மானித்து விடமுடிவதில்லை.

ஒரு ஐடி வைத்திருப்பவர்களே பாஸ்வேர்டை சமயங்களில் மறந்து பேய் முழி முழிக்கிறார்கள். சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன அதிர்ச்சிகரமான விஷயம், அவரது நண்பர் ஒருவர் இருபத்தைந்துக்கும் மேல் ஃபேக் ஐடிகள் வைத்திருக்கிறார் என்பதே. எப்படிதான் மெயின்டெய்ன் செய்கிறார்களோ? இவ்வளவு ஐடிகளை வைத்துக் கொண்டு என்னதான் பண்ணுவார்களாம்? அதில் ஒரு முகநூல் அரசியல் உள்ளது என்றார் நண்பர். அது என்ன என்று ஆர்வமானபோது, அவர் கூறியவை.

அரசியல் கட்சிகள் மாநாடு போடும்போது, வாழ்க கோஷம் போடுவதற்காக பிரியாணி,  குவார்ட்டர் வாங்கிக் கொடுத்து தொண்டர்களைச் சேர்ப்பதில்லையா? அதுபோல்தான் இதுவுமாம். இவர்கள் போடும் ஸ்டேடஸ்களுக்கு அதிகமாகக் கமெண்ட் போடுபவர்கள் இந்த ஃபேக்குகள்தான். ‘கலக்கிட்டீங்க தலைவா…. உங்களை நண்பராய் அடைய கொடுத்து வெச்சிருக்கணும்…’  என்றெல்லாம் தனக்குத் தானே கமெண்ட்கள் போட்டு, தான் ஓர் அப்பாடக்கர் என்பதை நிரூபிப்பதற்காகவே இவ்வளவு ஃபேக்குகளாம். அந்த ஃபேக் ஐடிகளின் டைம் லைன் பார்த்தால் எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கும். தவிர, அந்த ஐடிக்கு நண்பர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பார்கள் என்றார் அந்த நண்பர்.

மாமு, நீங்க ரொம்ப அழகு!

பொதுவாக ஃபேக் ஐடிக்கள் பற்றிய குற்றச்சாட்டுகளில் பாலியல் பற்றியவைதான் அதிகம் இருக்கும். என் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த வில்லங்கமான அனுபவம் இது. அந்த நண்பருக்கு ஓர் பெண் ஃபேக் ஐடியில் இருந்து நட்பழைப்பு. முதலில் ‘மாமு, நீங்க ரொம்ப அழகு’ என்றது. ‘எனக்குத் திருமணம் ஆகி விட்டது’  என்று நண்பர் சொல்ல, ‘ச்ச்சோ வாட்? ச்சோ க்யூட்…’ என்று பதில் வந்திருக்கிறது கிறக்கமாக.  ‘உங்களை நான் ரசிக்கிறேன்’ என்று மாலையில் மெசேஜ். காலை, மாலை வணக்கத் தொல்லைகள். நண்பர் பதிலே சொல்லாமல் கண்டு கொள்ளாமல் இருந்தார். திடீரென்று ஒருநாள் அந்த ஐடியிலிருந்து மெசேஜ். ‘நான் பெண் இல்லை தெரியுமா? நான் ஓர் ஆண். இருந்தாலும் உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. நான் படித்து, ஐடியில் நல்ல வேலையில் இருக்கிறேன். நாம் நேரில் சந்திக்கணும்…’ என்று கூறி சென்னையில் ஒரு முகவரியையும் அவர் கொடுத்திருக்கிறார். நண்பர் தலையில் அடித்துக் கொண்டு, அந்த ஐடியை பிளாக்கே செய்து விட்டார். அடுத்த நாளே இன்னொரு ஃபேக் ஐடியிலிருந்து நண்பருக்கு மெசேஜ்.

‘என் ஃபேக் ஐடிகளை நீங்கள் பிளாக் செய்யலாம். ஆனால், எனது ஒரிஜினல் ஐடியில் நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தே உங்களை நான் தினமும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்…’ என்று. என்ன கொடுமை சரவணா இது.

ஃபேக்குகள் பலவிதம்

இன்னும் சிலவகை ஃபேக் ஐடிகள் உண்டு. இது ஒருவரைப் பற்றி ஒற்றறிவதற்காக. தனது காதலன், காதலி, மனைவி, கணவரை கண்காணிக்கவே இத்தகைய ஃபேக் ஐடிகள் தொடங்கபடுகின்றன.

உதாரணத்துக்கு, என்  தோழி ஒருவருக்கு நடந்த  தமாஷான அனுபவம்.  அவர் முகநூல் ஆண் நண்பர் (ஒரிஜினல் ஐடிதான்) ஒருவருடன் அடிக்கடி இரவில் சாட் செய்து கொண்டிருப்பார். எல்லாம் ஜாலியான படு மொக்கைகள்தான்.  ஒருநாள் ‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. லவ் பண்ணலாமா?’ என்று கேட்டிருக்கிறான். தோழிக்கு முகநூல் மூலம்தான் அவன் பழக்கம். நேரில் பார்த்ததில்லை. ஆள் எப்படி என்று தெரியாமல் எதையும் பேசக் கூடாது என்று முடிவெடுத்தவர், இரண்டு நாட்கள் அதற்குப் பதிலே சொல்லாமல் வேறு விஷயங்கள் பற்றியே சாட்டில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.  ஆனால், அவனோ அதுகுறித்தே விடாமல் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.  அவன் கேரக்டரை எப்படி  கண்டு பிடிப்பது என்று யோசித்தபோது, திடீரென்று அவருக்கு அந்த யோசனை தோன்றியது.  ஒரு பெண் பெயரில் ஃபேக் ஐடி ஆரம்பித்தார்.

இரவு 11 மணிக்கு அவனுடன் சாட் செய்து கொண்டிருக்கும் நேரமாகப் பார்த்து  ரெக்யூஸ்ட் கொடுத்திருக்கிறார். அடுத்த நிமிடமே பார்ட்டி அக்செப்ட் கொடுத்து விட்டான்.  உடனே,  ‘ஹாய்… ஹவ் ஆர்யூ… யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட்…’ என்று  மெசேஜ் அனுப்பியுள்ளார். உடனே அவனிடமிருந்து பதில் வந்ததுடன்,  அந்த ஃபேக் ஐடியுடன் சாட் செய்யவும் ஆரம்பித்து விட்டான். அங்கு சாட் செய்து கொண்டே, என் தோழிக்கு, ‘எனக்குத் தூக்கம் வருது. தூங்கப் போறேன்…’ என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளான். அப்படி செய்தி அனுப்பியவன், தொடர்ந்து என் தோழியின் ஃபேக் ஐடியுடன் கடலை பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்,. எதிரே சாட் பண்ணுவது தான் காதலிக்கும் பெண் என்று தெரியாமல். இத்தனைக்கும் தன் ஐடியை ஆஃப்லைனுக்கு வேறு மாற்றிவிட்டிருக்கிறான் அந்த எமகாதகன். ஒரு கட்டத்தில் ரொம்பவும் ஆபாசமாக அவன் பேச ஆரம்பிக்கவே, அந்த ஃபேக் ஐடியிலேயே தான் யார் என்கிற விவரத்தைச் சொல்லி, ‘இனியும் என்னுடன் வாலாட்டாதே. இல்லை ஸ்கிரீன் ஷாட் போட்டு உன் மானத்தை வாங்கி விடுவேன்’ என்று மிரட்டி விட்டு, அவனை பிளாக் செய்து விட்டார்.

சிப்பு சிப்பா வருதே!

நண்பரின் நண்பர் ஒருவர் நடிகரின் படம் வைத்துக் கொண்டு ஃபேக் ஐடி தயாரித்து, தன் காதலி ஐடிக்குப்போய் ‘நான் உன் காதலனின் உரவினர். தம்பி முரை வேண்டும். உன்னை பற்றி அவன் நிறைய சொல்லிருக்கான். அவன் ரொம்ப நல்லவன். எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.’ என்றெல்லாம் சர்ட்டிபிகேட் கொடுத்து தன் இமேஜை பில்டப் செய்து கொள்ள  முயற்சிக்க, அதன்பிறகுதான் அந்தப் பெண்ணுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது.  தனது காதலன் தமிழில் செய்யும் ற, ர தவறுகளை வைத்தே இவனே அவன் என்று கண்டு பிடித்து விட்டார். அப்புறம் என்ன பிளாக்தான். மண்டகப்படிதான்.  இன்னும் அந்த பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு நண்பர் தான் காதலிக்கும் பெண்ணுடன் மனஸ்தாபம் வரும்போது அவரை பிளாக் பண்ணிவிட்டு, கோபமாக இருப்பது மாதிரியே பில்டப் செய்து கொண்டு, இன்னொரு ஃபேக் ஐடியில் போய் அவர் என்ன போஸ்ட் போடுகிறார்.  யார் யாருக்கேல்லாம்  லைக் கொடுக்கிறார் என்று நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்.  இப்படியாக இன்னும் இன்னும் ஃபேக் ஐடி தொடர்பான அனுபவங்களைக் கேட்க கேட்க ஏராளமாக நீண்டு கொண்டே செல்கின்றன. இவர்களில் அரசு அலுவலர்களும் தாங்கள் யார் என்று காட்டிக் கொள்ளாமல் களம் இறங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு த்ரில்லுக்காக சிலரும் கமெண்ட்டுகளில் ஒரிஜினல் பெயரில்போய் கடுமையாக எழுத முடியாது என்பதற்காக சிலரும் முகங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஃபேக் ஐடிகள் தங்கள் முகத்தை, தங்களைப் பற்றிய தகவல்களை மறைக்க நிறைய நியாயங்கள் அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

பாதுகாப்பாக இயங்குவது எப்படி?

பொதுவாக ஃபேக் ஐடிகள் பெண்களின் பெயரில்தான் அதிகம் ஆரம்பிக்கப்படுகின்றன. காரணம், முகநூல் போன்ற பொதுவெளியில் தன் புகைப்படத்தை வெளியிடுவது பாதுகாப்பில்லை என்பதாலும் தன் கணவர், குழந்தைகள் வேண்டாம் என்று நினைக்கிற காரணத்தாலும் பெண்களில் பலர் தங்கள் போட்டோக்கள் வைத்து ஐடி ஆரம்பிப்பதில்லை. இதனையேதான் பெண் பெயரிலிருக்கும் ஃபேக் ஐடிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய காரணத்தால் போட்டோ இல்லாமல் ஒரு பெண் ஐடியிலிருந்து நட்பழைப்பு வரும்போது, அதை ஏற்றுக் கொள்பவர்களே அதிகம். இங்குதான் ஆண்களும் பெண்கள் பெயரில் உள்நுழைந்து விடுகிறார்கள்.

முகநூலில் பாதுகாப்பாக இயங்குவது எப்படி? நண்பர் ஒருவர் கூறும் சில ஆலோசனைகள்.

ஃபேக் ஐடி என்றல்ல, அதிகம் அறிமுகமில்லாத முகநூல் ஒரிஜினல் ஐடி நண்பர்களிடமும் தன்னைப் பற்றிய (குறிப்பாகப் பெண்கள்) பர்சனல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. புரொபைல் படங்களை ஒன்லி மீ செட்டிங்கில் வைத்துக் கொள்வதும் பாதுகாப்பானது. இன்பாக்ஸில் தேவையான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள். வில்லங்கமான விவகாரங்களைப் பற்றிப் பேசினால் அது நாளை ஸ்கிரீன் ஷாட் ஆகும் ஆபத்தும் உண்டு என்கிறார் அவர்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

நமது நட்பைத் தீர்மானிக்கும் உரிமை நம்மிடம் இருக்கிறது. இருக்கிற நண்பர்களே நம் முகநூல் சுவருக்கு அதிகம் வருவதில்லை. இதில் ஃபேக் ஐடியான புது நண்பர்கள் வந்து என்ன செய்து விடப் போகிறார்கள்? அதிக மார்க் எடுத்தல் கௌரவம் என்கிற மனோபாவம் மாதிரி அதிக கமெண்ட், லைக் வாங்குவதும் ஒரு போதையாகப் பரவியுள்ளது முகநூலில். தனக்கு கமெண்ட் போட நிறைய ஆட்கள் வேண்டும் என்பதற்காக வருகிறவர்களுக்கெல்லாம் வரவேற்பு சொல்லும் மனச்சூழலில்தான் இத்தகைய ஃபேக்குகள் அனுமதிக்கப்படுகிறார்கள். போட்டோ இல்லாதவர்களிடமிருந்து அழைப்பு வந்தால், நீங்கள் யார்? உங்கள் உண்மை பெயர் என்ன என்கிற தகவலைக் கேட்டுப் பெறலாம். தவறில்லை. தர மறுக்கிற நண்பர்களிடம் ஒட்டி உறவாட ஒன்றுமில்லை. அவர்கள் அழைப்பை சற்றும் யோசிக்காமல் நீக்கி விடலாம். ஒன்றும் குடி முழுகி விடாது. சந்தேகம் தோன்றும் இடங்களில் விலகிச் செல்லுதலே   சாதுர்யம்.

ஃபேக் ஐடி சட்டபூர்வமானதா?

அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் இணைய சட்ட வழக்கறிஞர் ஹன்ஸாவிடம் ‘ஃபேக் ஐடி சட்ட வரம்புக்கு உட்பட்டதா?’ என்று கேட்டபோது,

“Fake ID என்றாலே நாம் எதிர்மறையாகவே பார்க்கக் கற்றிருக்கிறோம்.  உண்மையில் நாம் குறிப்பிடும் அந்த ஐடிக்கள் தன்னைப் பற்றிய தகவல்களைத் தர விரும்பாதவை அவ்வளவே.

ஒரு ID என்பது அதன் நோக்கத்தைப் பொறுத்தே ஃபேக் ஐடியா, அல்லது மறைக்கப்பட்ட ஐடியா, புனைவு ஐடியா என இனம் காண முடியும்.

ஒரு பிரபலம் தன் பிரபல்யத்தை மறைத்து ஊரோடு ஊராக இருக்க நினைத்தால் அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இது போன்ற தகவல் மறைக்கப்பட்ட ஐடி மட்டுமே.

மறைக்கப்பட்ட ஐடி: தன்னைக் குறித்த தகவல் அனைத்தையும் மறைத்து, ஆனால் தான் மறைத்ததையும் ஒப்புக் கொள்ளும் ஐடி.  இது இன்றைய சட்டப்படி லீகல்

புனைவு ஐடி 1: தன் பெயர், ஊர், புகைப்படம் என எதாவது ஒரு தகவலை மட்டும் மாற்றி வேறு பிம்பத்தின் கீழ் இருக்கும் ஐடி. இதிலும் ஏமாற்றும் எண்ணம் இல்லாமலிருந்தால் இதுவும் இன்றைய சட்டப்படி லீகல்.

புனைவு ஐடி 2: சொல்லும் தகவல் அத்தனையும் புனையப்பட்டது. ஆனால், உண்மை என்பது போலவே செயல்படுவார், இதில் ஏமாற்றும் எண்ணம் உண்டு.  எனவே இது இல்லீகல்.

ஆக அந்த ஐடியின் நோக்கத்தை வைத்தே அல்லது அதன் செயல்பாட்டை வைத்தே அது லீகலா இல்லீகலா என்று சொல்ல முடியும்.

அது போக, எல்லா தகவல்களும் புனைவு. ஆனால், நல்ல கருத்துக்களை, மருத்துவ குறிப்புகளைச் சொல்லும் ஐடிக்களும் உண்டு எனினும், அவர்கள் தரும் குறிப்புகள் முழுதும் நம்பத்தக்கவை அல்ல. ஏனெனில், எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் அக்கவுண்டை க்ளோஸ் செய்துவிட்டுப் போய்விடலாம்,. ‘எந்த தடயமும் இன்றி’.  மேலும் Fack ID என்பதே இல்லீகல் அல்ல. குற்ற மனம், குற்றச் செயல் இருந்தால், செய்த குற்றத்தைப் பொறுத்தே தண்டனை அமையும்.  திருட்டு நடக்கும் வரை எவரும் திருடன் அல்ல தானே?” என்கிறார்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 8 | அடுத்தபகுதி – 10

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...