அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 9 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 9 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 9

ருந்தின் வீரியத்தோடு தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை  லேசாக அணைத்தவாறு படுத்திருந்த செந்திலுக்கு பல்வேறு யோசனைகள்.

அன்றைக்கு ….

வண்டியில் மோதி விழுந்து உதவி கேட்டவள் எரிந்து கொண்டிருந்த வீட்டைப்பார்த்து மயக்கம் போட்டதும் செந்திலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  ஒருவாறாக கீழப்பூங்குடி வந்து காந்தி கிளினிக் பெரியவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனவன் திரும்பிவர ரெண்டு நாட்களானது

இவர் போனசமயம் அந்தப் பெண் திக்பிரமை பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள்.

டாக்டர் தான் மயக்கம் தெளிந்தது முதலே இப்படித்தான் வெறித்துக் கொண்டிருக்கிறாள் எனவும் அவருடைய ஆலோசனையின் பேரில் அவளையும் காரில் ஏற்றிக்கொண்டு இருவருமாய் அவளுடைய வீடிருந்த வீதிக்குள் நுழைய அவள் பரபரத்தாள். அவள் வீடு மொத்தமும் சாம்பலாகிக் கிடந்தது. அவள் திகைத்து விழித்தாள்.

டாக்டர் இறங்கிப்போய் அங்கே நின்றிருந்தவரிடம்

“என்னப்பா சிவதாணு! சௌக்யமா? உன் புள்ளை இப்போ எப்படியிருக்கான்? “என்று குசலம் விசாரித்தபடியே

“என்னப்பா? எரிஞ்சு போய்க் கிடக்கிற வீட்டை காவகாத்திட்டிருக்கே “

“ஆமாம் டாக்டர். புதுசா வந்திருக்காரே எஸ்.ஐ பலராமன் அவரோட அழிச்சாட்டியம் தாங்க முடியலை. புருசன் கொளுத்திக்கிட்டு செத்துட்டான். அவென் பொஞ்சாதியக் காணோம். அவதான் கொளுத்தியிருப்பா …எப்படியும் இங்கன வருவா. பிடிச்சுட்டு ஸ்டேசன் வந்திடுங்கிறார். நானும் வூட்டுக்கு போனபாடில்லை. அவளும் வந்தபாடில்லை.

ஆமா நீங்க எங்க சாமி….?”

“பேஷண்ட் கார்ல வந்தாங்க.  அவங்களோட அப்படியே தொத்திட்டேன். மேலச்சாவடியிலே ஒருத்தரைப் பாக்கனும். நீ இங்க நிக்கவே எறங்கிட்டேன். சரிப்பா நான் கிளம்புறேன். “

சரிங்க டாக்டர்”

கார் அடுத்த வீதி திருப்பத்தில் நுழைந்து  கீழப்பூங்குடி நோக்கி வேகமெடுத்தது.

அதன்பின்னான நாட்களில் டாக்டரின் அறிவுரையோ வயிற்றிலிருந்த குழந்தையோ எதனாலோ அவள் அமைதியாகிப் போனாள். தன் வேலைகளை செய்தாள்.

கீழப்பூங்குடி கொஞ்சம் பெரிய ஊர்தான். அவசர ஆத்திரத்துக்கு காந்தி கிளீனிக் தான் அபயம்.டாக்டரின் பெயரே மறந்தாச்சு காந்தி டாக்டர்ன்ற அழைப்பும் நின்று டாக்டர்அய்யா வாகி இப்போது  சாமீ என்ற விளிப்பில் நின்றது.

டாக்டரின் ஒரே மகன் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவன் அங்கேயே உயிரிழந்துவிட ஒரே மகனின் மறைவு தாளாமல் மனைவியும் பரலோகம் போய்விட்டார். கால் போன போக்கில் நடந்து கீழப்பூங்குடி வந்தவருக்கு ஸ்மரணை கூட இல்லை. ஆனால்….. ஒரு ஜீவனின் மரண அழைப்பு பிரக்ஞை கொடுத்தது. அவருக்குள் ஒடுங்கிக் கிடந்த மருத்துவனைத் தட்டி யெழுப்பியது.

வழியிலேயே பிரசவவலி வந்து துடிக்கும் மனைவியைக் கண்டு கையை பிசைந்து கொண்டு நின்ற குடியானவனைக் கண்டவர் பரபரவென செயலில் இறங்கினார். தாயும்சேயும் வேறு வேறானபோது உயிர் வந்தது. இவர் மயங்கி விழுந்தார்.

அதன்பின்பு அந்த மனிதரே மனைவியையும் உதவி செய்தவரையும் தன் வண்டியிலேயே ஏற்றிக் கொண்டு கிராமத்து சுகாதார மையம் போனார்.

மேற்கொண்டு சிகிச்சை முடியவும் தம்பதிகள் குழந்தையுடன் அவரையுமே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். அங்கேயே அவர் தன் சேவையை ஆரம்பித்தார். அப்போதுதான் இவரைத்தேடி வந்தது ராணுவம். இறந்து போன மகனின் உடமைகளையும் மற்றவைகளையும் ஒப்படைத்து விட்டுப்போக யாரோ ஒருவர் ஊடகத்தில் கொளுத்திப்போட கீழப்பூங்குடியும் யார்யார் கண்ணிலோ விழுந்து கொஞ்சம் முழுமை பெற ஆரம்பித்தது. அந்தசமயம் பழக்கமான செந்திலும் இவருக்கு தேவையானதை அவ்வப்போது செய்ய ஒரு மரியாதை கலந்த உறவு மலர்ந்திருந்தது. அன்று மயங்கிக் கிடந்த அலமேலுவை அந்த உரிமையில்தான் விட்டுவிட்டு போனான்.

பின்பு செந்திலின் வருகை ஒரு விதமாக பேசப்பட டாக்டர் தலையிட்டு அலமேலுவிடம் பேச ஆரம்பித்தார். பலராமன் திரும்பி வரமாட்டான் என்பது என்ன நிச்சயம். பிறப்பதும் பெண்ணாகிவிட்டால் நிலைமை என்னாகும். தனிமனுசியாய் கையில் குழந்தையோடு இளமையும் அழகுமாய் நிற்பவளை சமூகம் விட்டு வைக்குமா? பலராமன் விடுவானா இப்படியே பேசி மனதைக் கரைத்தவர் செந்திலுக்கும் அலமேலுவின் மீதிருந்த எண்ணத்தை தெரிந்து கொண்டு கீழப்பூங்குடி அம்மன் கோயிலிலேயே திருமணம் செய்து வைத்தார்.

சின்னுவை முதலில் கையிலேந்தியவரும் செந்தில்தான்.குழந்தை மண்ணில் விழும் முன்னே தன் தாலி அலமேலுவின் கழுத்தில் விழுந்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். தகப்பனாக தானே கையிலெடுத்துக் கொள்ள விரும்பியதை நிறைவேற்றிக் கொண்டார்..

ஆனால்  அக்கா மரகதத்திடமோ அத்தான் ஸ்ரீநிவாசனிடமோ சொல்ல மட்டும் துணியவில்லை..ஏன் நந்தனிடம் கூட கூறாமல் எதனாலோ  மறைத்து விட்டார்.பெரியவரும் ரங்கநாயகியும் என்ன சொல்வார்களோ என்ற கிலேசம் வேறு.

அலமேலுவைப்பற்றி எவரேனும் ஏதும் சொல்லி விட்டால்  தாங்கமுடியாது என்ற அச்சமே அமைதியாயிருக்கத் தூண்டியது.

அதன்பின்பும் கூட தம்பதியர் ஒரு வருடம் ஓடியும் அவரவர் நிலையிலேயே நிற்க மீண்டும் டாக்டர்அய்யாவே அவளிடம் மீண்டும் பேசிப்பேசி மெதுமெதுவே வழிக்குக் கொண்டுவந்தார். மனம் லேசாக நெகிழ்கிற சமயம் டாக்டர் தூக்கத்திலேயே பயணத்தை முடித்துக் கொள்ள மிகவும் உடைந்து போனவள் பற்றுக்கோடாய் செந்திலின் தோளில் தலை சாய்ந்தாள்.

டாக்டர் தன்னுடைய கிளினிக் இருந்த வீட்டை அவள் மீது எழுதி வைத்திருந்தார். அவள் இன்னமும் சுக்கலாய் உடைந்தாள்.

அலமேலு விருப்பப் படியே அதை மருத்துவமனையாக்கி வேறு சில மருத்துவர்களை பணிக்கமர்த்திக் கொண்டான்.

இனியும் தனியே அவளிருப்பது சரியல்ல என நினைத்து தன் அக்கா மரகதத்திடம் சொல்லவும் மனமின்றி  கண்பார்வையிலேயே இருக்கும் படி இரண்டு ஊர் தாண்டி வீடெடுத்து  செவத்தையா மருதவள்ளியை உதவிக்கு வைத்து  குடும்பம் நடத்த ஆரம்பித்தான். இதோ…

நான்கு மாத கர்ப்பிணி செந்திலின் மனைவி.அடிபட்டுக் கொண்டு வந்து நின்று உயிரையே உருவிப் போட்டு விட்டாள்.

யோசனை முடியாமலேயே செந்திலும் உறங்கிப்போய் விட்டான் ஒருவழியாக..

நாட்கள் மற்றவர்களுக்கு எப்படியோ நந்தன் தம்பதிக்கு வேகமாகப் பறந்தன. தினமும் பகலெல்லாம்  களத்துமேடு மில்லு பிஸினஸ் என்று வழக்கம் போலவே நகர்ந்தாலும் இரவு தினம் ஒரு புதுமையில் குளிப்பாட்டியது. நிலவழகியும் நந்தன் சக்ரவர்த்தியும் தனியொரு மாயா லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

ஆம்….உறக்கம் விற்று காதல் கற்று ஜோடிப் பறவைகளாய்  சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தனர்.

அன்று… பெரியவர் தவிர ஆண்கள்  அனைவருமே வெளிவேலைகளில் பிஸியாகியிருக்க நிலவழகியுமே வயலுக்குப் போனவள்.

மதியஉணவுக்காக வீடு வந்தாள்.

 “பொன்னிக்கா சாப்பாடு எடுத்துவையுங்கக்கா. பசி கொல்லுது.ஒரு சின்னக் குளியல் போட்டுட்டு ஓடி வந்திடுறேன். “

சாப்பாட்டு மேஜையிலமர்ந்து சாதத்தை பிசைந்து வாயருகே கொண்டு போனவள்

“அக்கா! பாட்டி அத்தையெல்லாம் சாப்பிட்டாச்சா?

“சாப்புட்டாங்கம்மா. தீபாம்மாவுக்கு தான் கொஞ்சம் முடியலைன்னு கசாயம் வச்சுத் தந்தேன். “

“என்னாச்சுக்கா? “

“சூட்டுவலின்னு நெனைக்கேன்”

“இப்போ எங்க அத்தையும் பாட்டியும்? “

“தீபாம்மா ரூமிலேதானிருக்கிறாங்கம்மா”

நிலாம்மா எங்கே போறிங்க சாப்பிட்டு போங்க.

“ஒரு நிமிசம்க்கா பார்த்துட்டுவந்திடுறேன். “

நிலா வேகமாக தீபாவின் அறைக்குள் நுழையுமுன்னே அவளின் அலறல்கேட்டது. நிலவழகி நடுங்கிப் போனாள்.உடல் ஆடியது. ஒரு உயிர் வெளியே வருவதற்கு எத்தனை வேதனை..ம்மா!

“பாட்டி! என்னாச்சு! “

“பொய்வலின்னு தான் நினைச்சேன்…… இன்னும் நாளிருக்கேன்னு…”

“நிலா! என்னம்மா இது எல்லோரும் வெளியே போயிருக்கிறாங்களே! வண்டி எடுக்கக் கூட யாருமில்லையே போனையும் எடுத்தபாடில்லே “

“அத்தை…அழாதீங்க! ஏதாவது பண்ணலாம். தீபாண்ணியை பாருங்க முதல்லே”

பாட்டி! ஆஸ்பத்திரிக்கே போயிடலாம் தேவையானதை எடுத்துக் கிடுங்க “

என்றவள் ஆம்புலன்சுக்கு முயற்சி செய்தாள். அந்த மருத்துவ மனையின் ஒரே ஆம்புலன்ஸ் ரிப்பேர் என்று அந்தப்பக்கம் வருத்தம் தெரிவிக்க நிலா குழம்பினாள்.

பிறகு முடிவுக்கு வந்தவளாய் கார் சாவியைக் கையிலெடுத்தாள்.

“பாட்டி தீபாண்ணியை அழைச்சிட்டு வாங்க பொன்னிக்கா உதவி பண்ணுங்க”

என்றபடியே ஷெட்டில் நின்று கொண்டிருந்த பெரிய வண்டியை வெளியே எடுத்தாள்.

” தீபா பொன்னியையும் அம்மாவையும் பிடிச்சுட்டே நட ..”கையோடு பூஜையறையிலிருந்து எடுத்து வந்த திருநீறை பூசிவிட்டார். ரங்கநாயகி.

“அய்யய்யோ! நீயா வண்டி ஓட்டப்போற? வெளங்கிடும் போ? இதுஎன்ன உன்னோட ஸ்கூட்டின்னு நினைச்சியா? காரும்மா காரு! எங்கனா போய் இடிச்சு வைக்கறதுக்கா? “

மஞ்சு உரக்கக் கூவினாள்.

“மஞ்சு! உன் திருவாயை மூடறியா? .”

“ஒரு நல்ல வார்த்தை வராது இந்தம்மா வாயிலேருந்து. மஞ்சும்மா கொஞ்சம் நகருங்க. வயுத்துபுள்ளைக்காரி நோவு தாளாம வர்ரா! வழிய மறிக்காம தள்ளுங்க”

பொன்னி சடைத்துக் கொள்ள மஞ்சு முறைக்க மரகதம்  தீபாவோடு ஏறிக் கொண்டாள்.  பாட்டியும் ஏறியதும் பொன்னி உள்ளிருந்து மீண்டும் ஓடி வந்தாள். கையிலிருந்த எலுமிச்சம் பழங்களை டயருக்கடியில் வைத்து விட்டு

” நிலாம்மா புறப்படுங்க”

 எனும் போதே மஞ்சுவும் ஓடிவந்து தொற்றிக் கொண்டாள்.

“ம்க்கும்! நிலாம்மா! ஏழரையும் ஏறிடுச்சு பார்த்து போயிட்டு வாங்க! “

“இவ வேலைக்காரியா இல்லை எஜமானியா? எல்லாம் இந்தப் பெரிசுங்க கொடுக்கிற எடம் கை நீட்டி சம்பளம் வாங்கற நாயெல்லாம் கண்டதையும் பேசுது “

தீபாவின் வேதனைக்குரலில் மஞ்சுவையோ அவள் பேச்சையோ  சட்டைசெய்யும் நிலையில் யாரும் இல்லை. டாஷ் போர்டின் முன்னிருந்த சாயி படத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்ட நிலா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

“நிலா! வண்டியோட்டி பழக்கமிருக்கா? பத்திரமா போய் சேர்ந்துடுவோம் தானே …தீபாவுக்கு கூடவே எல்லோரையும் கம்பெனி கொடுக்கிறாப்போல வச்சிட மாட்டே தானே! “

“மஞ்சு! இன்னும் ஒரு வார்த்தை பேசுன இந்த ரங்கநாயகியோட ரௌத்திரத்தை பார்க்க வேண்டியிருக்கும். மூடு வாயை! வண்டியோட்றவளை நிம்மதியா ஓட்ட விடு. ஒன்னுத்துக்கும் உதவலைன்னாலும் செய்றவங்களுக்கு உபத்திரம் தராம இரு”

நிலா வாயே திறக்கவில்லை. கண்களை பாதையில் பதித்து கவனம் வைத்தாள். மனதில் இவர்களை பத்திரமாக சேர்க்க வேண்டியது தன் கடமை  என்றுணர்ந்தவளாய் சாய்ராம் சாய்ராம் என்று ஜபித்தபடி வண்டியை வேகமெடுத்தாள்.

அரைமணிநேரப் பயணம் தான் என்றாலும் செத்து செத்துப் பிழைத்தாள் நிலா. பிறந்த வீட்டிலும் கார் இருக்கிறது. ஓட்டியிருக்கிறாள் தான். ஆனால் அது  குழந்தையைப் போல் சொன்ன பேச்சைக் கேட்கும் இதுவோ போலிரோ வண்டி. கறுப்பு நிறச் சிறுத்தை போல பாய்ந்தது.

வரும்போதே சொல்லியிருந்ததினால் ஸ்ட்ரெச்சருடன் தாதியரும் தயாராக இருக்க அனைவரும் கீழேயிறங்க இவள் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு ஸ்டிரிங்கின் மீது சாய்ந்து அழுதாள். மனதின் அழுத்தம் அழுகையில் கரைந்து விட மனசு லேசானது.

 தீபலெஷ்மி சிகிச்சையறைக்குள் போய் விட்டிருந்தாள்.

பெரிய பெரிய மூச்செடுத்தவள் கிறக்கமாய் வர காரிடாரின் நீள பெஞ்சில் முழங்கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு முகத்தைப் பதித்தவள் அரைமயக்கத்தில் ஆழ்ந்தாள்.

“பெரியம்மா! நல்ல நேரத்திலே கொண்டு வந்தீட்டீங்க! லேபர் பெயின்தான். பனிக்குடம்  உடைஞ்சிடுச்சு இப்போ ஆபரேஷன் பண்ணனும்.”

போகிறபோக்கில் செவிலி ஒருத்தி சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினாள்.

“அத்தே “

“மரகதம்”

மஞ்சு இதெதுவுமே காதில் போட்டுக் கொள்ளாமல் அந்த சூழலை அசூயை அருவருப்புடன் பார்த்தபடியிருந்தாள்.

பாட்டியும் மரகதமும் வேகவேகமாய் வீட்டு ஆண்களுக்கும் சம்பந்தி வீட்டுக்கும் போன் போட்டனர்.

காற்று வேகம் மனோவேகமாய் முதலில் வந்து சேர்ந்தவன் நந்தன் தான்.

“என்னம்மாச்சு? இன்னும் மூணுவாரத்துக்கு மேலே நாளிருக்குன்னு  சொன்னீங்க?”

“! மழைப்பேறும் மகப்பேறும் நம்ம கையிலாடா இருக்கு. “

“நந்தா ஆபரேஷன் பண்ணனுமாம்? பயமாயிருக்கு. தீபாவுக்கு பூஞ்சை உடம்புடா”

“ஒன்னும் ஆகாது. தைர்யமாயிருங்க மாப்பிள்ளைக்கு பேசிட்டிங்களா.”

“பேசிட்டேன்பா”

“ஆமாம் நம்ம பொலிரோ நிக்குது ? யாரு ஓட்டுனது”

“நந்தா…உன் பெண்டாட்டி தான்டா? கிருஷ்ணனுக்கு சத்யபாமா தேர் ஓட்டினாற்போல ஓட்டிக்கிட்டு வந்தா பாரு…என்வீட்டு வீரலஷ்மிடா அவ! வரும்போதே ஆஸ்பத்திரிக்கு விவரம் பேசிட்டா…இங்கிலீஷ்ல பொளந்து கட்டிடாடா.  அதுக்கே பயந்திட்டாங்க போல..வரும்போதே இங்கே எல்லோரும் ரெடியா நின்னாங்கடா “

‘க்கூம்! இங்கிலிசுல பொளந்தா.  இந்தம்மா பார்த்தாங்க. ஹலோஹலோன்னாலே போதுமே இங்கிலீசுன்னு வாயப்பொளக்கும் இந்தப் பெரிசு ‘என்று நொடித்தவளை அவள் மனசாட்சி இடித்தது.

‘அவ அருமையா ஸ்டைலா பேசுனா காரையும் ஓட்டிக்கிட்டு உனக்கு பாராட்ட மனசு வரலைன்னாலும் மூடு’ என்று ஒரு குட்டு வைத்தது.

“எங்கம்மா உங்க மருமவ”

“அங்கே பாரு ஓஞ்சிப் போயி கிடக்கிறதை “

” நந்தா! அவ சாப்பிடலைப்பா. கூட்டிப்போயி சாப்பிட வைய்யா “

மனைவியை நெருங்கி உச்சந்தலையை வருடினான். அதை உணர்ந்தவளாய் கண் திறந்தவள்  எதிரில் நின்றவனைக் கண்டதும்  அவன் வயிற்றில் முகம் புதைத்து அழுதாள்.

“டேய்!  சிங்கப்பெண்ணு  இப்படி அழலாமா? பாட்டி உனக்கு பாராட்டு பத்திரம் படிக்கிறாங்க.  வா! ஏதாவது சூடா குடிச்சிட்டு வருவோம். “

மனைவியை கைத்தாங்கலாய் காண்டீனுக்கு அழைத்துப்போனான்.

சூடான வடையையும் காபியையும் சாப்பிடவைக்கும் போதே பாட்டியின் அழைப்பு…

“தம்பி சீக்கிரம் வாப்பா! ரத்தம் ரெண்டு பாட்டில்  வேணுமாம். “

“! நானே தருவேன்மா. பிரச்னையில்லை”

“. தாய்ப்பாலும் வேணுமாம்டா”

“தாய்ப்பாலா”

( -சஞ்சாரம் தொடரும் … )

முந்தையபகுதி – 8 | அடுத்தபகுதி – 10

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...