மரப்பாச்சி – 9 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 9

ணிமாறனுக்கு இது இரண்டாவது கல்யாணம் என்றாலும், பிருந்தாவுக்கு இது முதல் திருமணம்.. பெண்மைக்குரிய ஆசைகள் அவளுக்கும் இருக்கும்தானே.. கணவன் தன்னை மகளுடன் படுக்கச் சொன்னதால் சற்று அடிபட்டுப் போனாள் அவள், ஆனாலும் இன்னொருபுறம் மனம் நினைத்தது, ‘பருவ வயதை அடையப் போகும் ஒரு பெண் குழந்தையை வைத்திருக்கும் ஒரு ஆணால் எப்படி புதுமனைவியுடன் தனியறையில் கழிய முடியும்? கணவன் அனைத்தையும் உணர்ந்தே செய்கிறான்’ என்பதை உணர்ந்தவள் மனம் முதலில் திகைப்படைந்தாலும், இப்பொழுது புரிந்து கொண்டு முகம் புன்முறுவல் பூத்தது..

ப்ரியாவுடன் கிளம்பி அவள் பெட்ரூமை அடைந்தாள். பெரிய டபுள்காட்.. உயர்தர ஃபோம், ஒன்றரை டன் ஏசி குளிரை வாரி இறைத்தது. சுவரில் அழகான இயற்கை வால்பேப்பரில் விரிந்திருந்தது. ட்ரெஸ்சிங் டேபுளுடன் கூடிய வார்ட் ரோப் என்று அறை பணக்காரத் தன்மையை காட்டியது. உள்ளே சென்றதும் ப்ரியா கட்டிலில் கிடந்த கம்பளி, தலையணையை எடுத்து தரையில் விரித்தாள். பிருந்தாவின் புருவம் உயர்ந்தது.. விரித்தவள் அதில் படுக்கலானாள், பதறிவிட்டாள் பிருந்தா. கட்டிலிலேயே படுத்துப் பழக்கப்பட்டக் குழந்தை தரையில் படுப்பது கண்டு..

        “ப்ரியா கட்டுல்லதான் இடம் இருக்குதே, நீ மேலேயே படுக்கலாமே?”

“இல்லை..” அந்த இல்லைங்கறதுல ஒற்றை வார்த்தையில் அடிபட்டுப் போனாள் பிருந்தா, அவள் தன்னை சித்தியென்றும், அம்மாவென்றும் அழைக்காமல் அப்படி அழைத்ததில்.

ப்ரியா தொடர்ந்தாள்..

“எங்க அம்மா போனப்புறம் தனியாவே படுத்துப் பழக்கப்பட்டுட்டேன், பக்கத்துல யாரும் படுக்கறதை நான் விரும்பலை, நீங்க கட்டுலுல படுத்துக்கங்க நான் கீழே படுத்துக்கறேன், ஒரு வயது முதிர்ந்த பெண் போல பேசுகிறாளே இந்த பதினொரு வயதுப் பெண் என்று மலைத்துப் போனாள் பிருந்தா. இவளை இவள் போக்கில்தான் போய் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தவள். கீழ் அறைக்குச் சென்று ஒரு கம்பளி, தலையணை எடுத்து வந்து தரையில் விரித்துப் படுத்தாள்.. ப்ரியா வினவினாள்..

“எதுக்கு நீங்க தரையில படுக்கறீங்க்? கட்டில்தான் இருக்குதே?”

“அது உன்னோட கட்டில் நீயே அதுல படுக்காம தரையில படுக்கும்போது நான் எப்படி அதுல படுக்கறது..”

“எனக்காக நீங்க தரையில படுக்க வேணாம், அப்பாவுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாரு..”

“நான் சொன்னாத்தான் அப்பாவுக்குத் தெரியும், நான் சொல்லப் போறதில்லை, பின்னயும் வீட்டுல நான் தரையிலதான் படுக்கிறது அதனால எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை, அதனால நீ கட்டுலுல படுத்துக்கலாம்” என்றாள். ப்ரியா அவள் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் தரையிலேயே படுத்திருந்தாள். பிருந்தாவின் நெஞ்சில் ஒரு பயம் வந்து உக்கார்ந்தது.. இந்தப் பெண் இப்படியே இருந்துவிடுவாளோ என்று!

காலை உணவை சுந்தரமே சமைத்தான்.. பிருந்தா அவனிடம் தான் சமைப்பதாகக் கூறினாள். ஆனால் அவன், “அம்மா நீங்களும் ஆபீஸ் போறவங்க, எனக்கு இதுதான் வேலை, என் சமையல் புடிக்கலைனா சொல்லுங்க அப்புறம் நீங்க சமைங்க” என்றான்.

“ஐய்யய்யோ நான் அப்படிச் சொல்லலைங்க சுந்தரம் என்னை விட நீங்க அருமையாச் சமைக்கறீங்க, வீட்டுக்கு வந்த பொண்ணு சமையல் வேலை செய்யாம படுத்துக்கிடக்கிறது கஷ்டமா இருக்குது, அதனால சொன்னேன்” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்து நின்ற மணிமாறன் கேட்டார், “என்ன பிருந்தா சுந்தரம்கூட என்ன ஆர்க்யூமெண்ட்?”

“ஆர்க்யூமெண்ட் எல்லாம் இல்லைங்க, நான் சமையல் செய்யவான்னேன், அப்ப வீட்டுல நான் என்ன செய்யிறதுன்னு கேட்கறார்?”

“ஆமா அதுவும் சரிதானே, சுந்தரத்தை வேலையைவிட்டு அனுப்பிடலாமா?”  கிண்டலாகக் கேட்டார் மணிமாறன்..

“அம்மா என் பொழப்பைக் கெடுத்துடாதீங்க..” என்று அவனும் கிண்டலாகக் கூறினான்.

“வந்ததும், வராததுமாய் நான் ஏங்க மத்தவங்க பொழப்பைக் கெடுக்கறேன்..” என்று அவளும் தமாஷாகக் கூற நிலமை அங்கே கலகலப்பானது.

அனைவரும் காலை உண்வை நேரமே முடித்தனர். ப்ரியா பள்ளிச் சீருடைக்கு மாறியிருந்தாள். அவளிடம் கூறினார் மணிமாறன், “ப்ரியா கோவிலுக்குப் போகணும், போயிட்டு உன்னை ஸ்கூலுல விட்டுடுறேன்..” என்றார்.

“சரிப்பா” என்றாள் அவள். பிருந்தா அழகிய காட்டன் புடவையில் இருந்தவள் கேட்டாள், “ஏங்க இன்னிக்கு ஆபீஸ் போக வேண்டாமா?”

“இல்லை பிருந்தா இன்னிக்கு ரெண்டு பேரும் ஆபீஸ் போகப் போறதில்லை.. நாம நெறைய பேசணும்..” என்று அவள் கேட்க மட்டும் கூறினார் மணிமாறன்..

கோயிலுக்குச் சென்று அம்மனை வணங்கிவிட்டு ப்ரியாவை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பியிருந்தனர் மணிமாறனும் பிருந்தாவும்..

சோபாவில் அருகருகில் அமர்ந்திருந்தனர் இருவரும். கணவனின் அண்மை தனிமை அவளை வியர்க்கச் செய்தது, ஆனால் மணிமாறன் இயல்பாக இருந்தார்..

“நான் போயிட்டு புடவையை மாத்திட்டு வரட்டுமா?”

“இரு பிருந்தா ஒண்ணும் அவசரம் இல்லை” என்றவர் கேட்டார் அவளை..

“ஒரு வயசானவனைக் கட்டிக்கிட்டோமேங்கற வருத்தம் உனக்குள்ள இருக்குதா?”

“ஒங்களை வயசானவரா என்னால பார்க்க முடியலை, ஒங்களுக்கு இப்ப வயசு 45, நெறைய பேர் இப்ப மொதல் கல்யாணமே நாப்பத்திஅஞ்சுக்கு மேலதான் பண்ணிக்கறாங்க, மேலயும் நீங்க பார்க்க அப்படி நாப்பத்தி அஞ்சு வயசு ஆளு மாதிரி இல்லை, ஒரு முப்பத்தி நாலு மதிக்கலாம் அவ்வளவுதான்..”

“இல்லை மனசைத் தேத்திக்க நீ சொல்லுற பதில் இது”

“சத்தியமா இல்லைங்க” என்று அவர் தலையில் கைவைத்தவள். பின்புதான் தான் செய்த காரியம் உணர்த்த சரேலென கையை பின் வலித்தாள் பிருந்தா, ஒரு புன்முறுவல் அவர் முகத்தில் எழுந்தது.. அவர் கூறினார், “எதுக்கு கையை அப்படி கரண்டைத் தொட்ட மாதிரி எடுத்த? நீ ஒண்ணை நல்லா உள்வாங்கிக்கணும், இரண்டாவதா கட்டிக்கிட்டாலும் நீ என் மனைவி, நான் உன் கணவன், நீயே சொல்லிட்ட நான் ஒண்ணும் வயசானவன் மாதிரி இல்லைனு நேத்து நான் உன்னை ப்ரியா அறையில படுக்கச் சொன்னதும் ஒரு கணம் உன் முகம் அதிர்ச்சியில் விழுந்ததை நான் கவனிச்சேன், நீயும் உணர்ச்சியுள்ள ஒரு மனுஷ ஜீவன் தாங்கிறது எனக்குத் தெரியாம இல்லை. பருவத்தோட வாசலுல நிற்கற மகளை வச்சுக்கிட்டு, அப்பா ஒரு பொண்ணோட அறைக்குள்ள போய் தாள் போட்டுக்கிறது நல்லா இருக்காது. அதனாலதான் நேத்து அப்படி நடந்துக்கிட்டேன்..”

என்றவர் அவள் கையை எடுத்து தன் கைக்குள் அதக்கிக் கொண்டார், அவள் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு அதிர்வு ஓடத் தொடங்கியது. கண்களை இறுக மூடிக் கொண்டாள் பிருந்தா. அவளை கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு தன் பெட்ரூமிற்குள் நுழைந்தார் மணிமாறன். பிருந்தாவின் வாழ்வில் முதலிரவு அல்ல முதல் பகல் அங்கே அரங்கேறத் தொடங்கியது!

(-தொடரும்…)

முந்தையபகுதி – 8 | அடுத்தபகுதி – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!