மரப்பாச்சி – 8 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 8
மகளை என்றும் கடிந்து பேசியதில்லை மணிமாறன். தாய் இல்லாத குழந்தை என்பதால் அளவுக்கு அதிகமாகவே கவனமும், செல்லமும் கொடுத்து அவளை வளர்த்து வந்தார்.. அதற்காக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை ப்ரியா. அதனால்தான் அவள் பிருந்தாவை எடுத்தெறிந்து பேசியது கண்டு சிலையானான் மணிவண்ணன். தாயின் இடத்தில் இன்னொரு பெண்ணை வைத்துப் பார்க்க அந்த இளந்தளிர் விரும்பவில்லை என்று புரிந்து போயிற்று அவருக்கு.
‘தப்புச் செய்துவிட்டோமோ’ என்று ஒரு கணம் அவர் மனம் எண்ணியது.. மறுகணம்.. இல்லை ஒரு பெண்ணின் துணை அவளுக்குத் தேவைப்படும் காலம் வரும், அப்பொழுது மகள் உணர்ந்து கொள்வாள் என்று ஆறுதல் அடைந்தவர். குரலில் மென்மையை கலந்து கூறினார்..
“ப்ரியாக் கண்ணு பெரியவங்களை அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசக் கூடாது..”
“பின்ன எங்கயிருந்தோ ஒரு பொம்பளையை கூட்டிட்டு வந்துட்டு என்னோட மம்மின்னா எப்படிப்பா ஒத்துக்கறது.. இப்படி ஒருத்தங்களை கூட்டிட்டு வரப் போறேன்னு நீங்க எங்கிட்டச் சொல்லவே இல்லையே.?.”
“இது ஒரு எதிர்பாராத முடிவும்மா.. நீ புரிஞ்சுக்கோ” அதற்கு மேல் விவாதம் செய்யாமல் அங்கிருந்து அகன்று அவளுடைய அறைக்குச் சென்றாள் ப்ரியா..
“ஏங்க நான் தப்புச் செய்திட்டேனா?”
“ஏன் பிருந்தா அப்படிக் கேட்கற?”
“இல்ல பிரியா என்னை ஏத்துக்கற மாதிரி இல்லை, அவ விரோத மனப்பான்மையில நடந்துக்கிட்டா வீட்டுல அமைதி இல்லாம போயிடும், நிம்மதியா வாழ்ந்த உங்க வாழ்க்கை அமைதியில்லாம போயிடக்கூடாது”
“இது அப்பா சொல்லாம கொள்ளாம ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்கறாரேங்கற கோபம், அது கொஞ்சம் நாளுல சரியாப் போயிடும், நீ நெனைக்கிற மாதிரி இல்லை ப்ரியா ரொம்ப நல்ல பொண்ணு..”
மணிவண்ணன் சமாதானம் கூறினாலும் பிருந்தாவின் மனம் அமைதி அடையவில்லை, கேள்வி தொக்கி நின்றது அவள் மனதில் ‘எப்படி ப்ரியாவை சமாளிக்கப் போகிறேன்!’
நேரம் மணி இரவு எட்டு.. டைனிங் டேபிளில்.. சுந்தரம் இரவு உணவை பரப்பியிருந்தார் ப்ரைட் ரைஸ், சப்பாத்தி, சிக்கன் குருமா, மட்டன் வருவல், நான் என்று அருமையாக சமைத்திருந்தான் சுந்தரம்.. மணம் வீடெங்கும் மணத்தது.. மணிமாறன் மகளின் அறைக்கதவைத் தள்ளித் திறந்தான்.. மகள் கட்டிலில் குப்புறப் படுத்துக்கிடந்தாள், மெதுவாக மகளின் அருகில் அமர்ந்தவர் அவளை மெல்லத் திருப்பினார்.. மகளின் முகத்தைப் பார்த்தவர் அதிர்ந்தார்.. மகள் முகம் அழுது சிவந்திருந்தது.
பதறியவர் கேட்டார்.. ‘எதுக்கும்மா அழுற.. அப்பா மேல கோபமா?”
“கோபம்தாம்பா, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல..”
“இல்லம்மா ஒரு அவசரத்துல நடந்த விஷயம் இது, சொன்னா என் பொண்ணு புரிஞ்சுக்குவான்னு நான் முடிவெடுத்துட்டேன், ப்ரியா நீ இன்னும் வளருவ, உனக்கு ஒரு பெண்ணோட தேவை வரும் அந்த நேரம் நீ கஷ்டப்படக்கூடாதுன்னு தான் அப்பா இப்படி ஒரு முடிவெடுத்தேன்.. அப்பா தப்புச் செய்திட்டதா நீ நெனைச்சா அப்பாவை மன்னிச்சுடு..” மகள் என்றும் பாராமல் அந்தச் சிறுபெண்ணிடம் மன்னிப்புக் கேட்டார் அந்த பெரிய மனிஷன்..
“அப்பா.. எங்கிட்டப் போய் மன்னிப்புக் கேட்டுட்டு.. நீங்க சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டக் கோபம்தான் எனக்கு வேற ஒண்ணும் இல்லை..”
“அப்ப எழுந்து முகத்தைக் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டுச் சாப்பிட வா..”
“எனக்குப் பசிக்கலைப்பா..”
“நீ வரலைனா அப்புறம் அப்பா சாப்பிட மாட்டேன்.. நீ பொய் சொல்லுற மாதிரி அப்பாவுக்கு பசிக்காம இல்லை, அப்பாவுக்கு பயங்கரமா பசிக்குது.. ஆனா நீ வரலைனா அப்பாவும் சாப்பிடாம பட்டினியாத்தான் கிடப்பேன்..”
தந்தை பட்டினியாய் கிடப்பேன் என்றதும் துடித்துப் போனது அந்த மகள் உள்ளம். மெல்ல கட்டிலில் இருந்து எழுந்தவள், பாத்ரூம் சென்று பள்ளிச் சீருடை களைந்து, குளித்தாள். குளித்து முடித்து கவுன் ஒன்றை அணிந்து கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள்.. தேவதை போன்று படிக்கட்டில் இறங்கி வரும் தன் கணவனின் மகளை கண்கொட்டாமல் பார்த்தாள் பிருந்தா.. கடவுளின் படைப்பில் தான் எத்தனை எத்தனை உருவங்கள், பார்த்துக் கொண்டிருக்கும் போதே ப்ரியா டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள்.. மணிவண்ணனும், பிருந்தாவும் அருகருகே அமர்ந்தனர்.. மணிவண்ணன் கூறினார், “சுந்தரம், டிரைவர் காளிராஜனையும் வரச் சொல்லு அவனும் சேர்ந்து சாப்பிடட்டும்..” சுந்தரம் வெளியே சென்று டிரைவரை அழைத்து வந்தான்.. தயங்கியபடி உள்ளே வந்த காளிராஜ் கூறினான்..
“ஐயா நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறமா சுந்தரத்தோட சாப்பிட்டுக்கறேன்..”
“காளி இன்னிக்கு எனக்கு கல்யாணம், ரெண்டாவது கல்யாணமுன்னாலும் இது ஒரு சுபநிகழ்ச்சி.. எனக்கு உலகத்துல எல்லாம் நீங்கதான், அதனால எல்லாரும் இன்னிக்கு ஒண்ணாச் சாப்பிடுறோம், உக்காரு” என்று அவன் கைபிடித்து டைனிங் டேபிளில் அமர்த்தினார். சுந்தரம் அனைவருக்கும் பீங்கான் கோப்பையில் வைத்ததிருந்த உணவை எடுத்து வைத்தான். முதல் விள்ளாவை எடுத்து வாயில் வைத்த டிரைவர் காளியின் கண்களில் கண்ணீர்.. அதைக் கண்ட மணிமாறன் கேட்டார்..
“ஏம்மா சுந்தரம் காரம் ஓவரா போட்டுட்டானா?”
“இல்லை ஐயா, ஒரு டிரைவரை மதிச்சு அவன் கூட உக்கார்ந்து சாப்புடுறீங்க பாருங்க, ஒங்க மனசு யாருக்கும் வராது..”
“காளி.. நான் மொதலாளி நீ தொழிலாளிங்கறதெல்லாம் வெறும் மாயைப்பா, எல்லாரும் மனுஷங்க. நான் படிச்ச படிப்புக்கு தாசில்தார், நீ படிச்ச படிப்புக்கு நீ டிரைவர் அவ்வளவுதான். மத்தபடி எல்லாரும் மனுஷங்கதான், எதுவும் நெனைக்காம சாப்பிடு” என்றார் மணிமாறன்.. ‘வயதானவருக்கு வாக்கப்பட்டுவிட்டோமே என்று சில கணம் சிந்தித்த பிருந்தா, கணவனின் அந்த வார்த்தைகள் கேட்டுச் சிலிர்த்தாள்.. எப்படிப்பட்ட மனிதனுக்கு வாக்கப்பட்டிருக்கிறோம்’ என்று
எல்லாவற்றையும் செவிமடுத்துக் கொண்டிருந்த ப்ரியா பிருந்தாவை வினவினாள்..
“உங்க பேரு என்ன?”
கணவனின் மகள் தன்னுடன் முதல் வார்த்தையை பேசியது கண்டு அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது..
அவசர அவசரமாக வாயில் வைத்திருந்த உணவை விழுங்கிவிட்டு பதில் கூறினாள், “என் பேரு பிருந்தா..”
“என் பேரு தெரியுமா?”
“தெரியும்மா.. அப்பா சொல்லியிருக்காரு, உன் பேரு ப்ரியா..”
அதற்கு மேல் அந்த சம்பாஷணை நீளவில்லை, அனைவரும் உணவை உண்டு முடித்து கை கழுவினர்..
“காளி நீ வீட்டுக்குக் கிளம்பு, காலைல கொஞ்சம் நேரமே வந்துடு கோயிலுக்குப் போகணும்..”
“ஆறு மணிக்கு வந்துடுறேன்யா” என்று கிளம்பினான் காளிராஜ். அறைக்குள் கிளம்ப எத்தனித்த மகளை கையமர்த்தி சோபாவில் அமர வைத்தவர்..
“ப்ரியா.. இது என்னோட இரண்டாவது சம்சாரம் உனக்கு இவ சித்தி.. இறந்து போன என் மனைவி இல்லாத குறையை என் மகளுக்கு பிருந்தா நீ நீக்கணும், பொதுவா சித்திங்க மூத்த சம்சாரம் மகளை கொடுமைப்படுத்துவாங்கன்னு சொல்லுவாங்க, ப்ரியா நீ இவங்களை சித்தின்னு கூப்பிட்டாலும் சரி, அம்மான்னு கூப்பிட்டாலும் சரி, அது உன் முடிவு.. பிருந்தா நீ நடந்துக்கற முறையில ப்ரியா உன்னை சித்தின்னு கூப்பிடாம, அம்மான்னு கூப்பிடணும், அந்த மாதிரி நீ நடந்துக்கணும், இது ஒண்ணுதான் என் ஆசை” என்றவர் தொடர்ந்து கூறினார்..
“பிருந்தா நீ போய் ப்ரியாக் கூட படுத்துக்க” என்று கூறும் கணவனை ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தாள் பிருந்தா!
(-தொடரும்…)
முந்தையபகுதி – 7 | அடுத்தபகுதி – 9