என்னை காணவில்லை – 9 | தேவிபாலா
அத்தியாயம் – 09
அடுத்த மூன்று நாட்கள் சுஷ்மா பரபரப்பாக செயல் பட்டு கொடையில் குழந்தைகளுக்கான பள்ளி அட்மிஷனை முடித்து விட்டாள். அங்கே உள்ள பள்ளியின் முதல்வருடன் நேரடி தொடர்பு இருந்ததால் சேர்ப்பதில் கஷ்டமில்லை. துவாரகாவுக்கும் தெரியும். ஆனாலும் சுஷ்மா தான் இறங்கி செய்தாள். புறப்படும் நாள் வந்து விட்டது. குழந்தைகளுக்கான உடைகள், தேவையான பொருட்கள் சகலத்தையும் அவனே பேக் செய்தான். துளசி எதிலும் தலையிடவில்லை. குழந்தைகளை பார்க்க துளசியின் பெற்றவர்களும், உள்ளூர் அத்தைகளின் குடும்பமும் வந்திருந்தது. அம்மாவுக்கு மனசு பொறுக்கவில்லை.
“நீயெல்லாம் ஒரு அம்மாவாடீ? எப்படீடி பெத்த புள்ளைங்களை பிரிய மனசு வருது? அம்மாவுக்கு நிம்மதி இல்லைன்னு அவங்களை ஹோம்ல விட்டார் மாப்ளை. இப்ப பசங்களை வெளியூர்ல விடறார். காரணம் உன்னோட ராட்சச குணம். அதை மாத்திக்கிட்டு என் பிள்ளைங்க என் கூடத்தான் இருக்கணும்னு சொல்றதுக்கு என்னடீ கேடு உனக்கு?”
“எல்லா தகுதிகளும் இருந்தும் எல்லா உறவுகளையும் பிரியற அவலம் எங்க தம்பிக்கு. எல்லார் மனசையும் நோகடிச்சு இவ என்னத்த கண்டா?”
ஆள் ஆளுக்கு அவளை கழுவி ஊற்ற,
“ கொடைக்கானலுக்கு அவளும் வர்றாளா?”
“ஆமாண்டி..வர்றா. என்ன இப்ப?”
“தெரியுமே. பசங்களை பார்க்க போறேன்னு மாசம் ஒரு தடவை குளிர் பிரதேசத்துக்கு அவளை கூட்டிட்டு போய் ரூம் போட்டு நல்லா..”
இதற்கு மேல் அச்சிட முடியாத கெட்ட வார்த்தைகளை உபயோகித்து அவள் கூச்சலிட,
அப்பா நொந்து போனார்.
“ ஒரு ஆம்பளையால கூட இத்தனை மோசமா பேச முடியாது. உன்னை பெத்த நாங்க மகா பாவிங்க! மாப்ளை! கொடைல புள்ளைங்களை விட்டுட்டு நீங்க வேற எங்கியாவது போயிடுங்க மாப்ளே. இந்த சண்டாளி முகத்துல இனி முழிக்காதீங்க.”
“எல்லாரும் கொஞ்சம் நிறுத்துங்க. பசங்க படிக்க போறாங்க. அவங்களை சிரிச்ச முகமா, நல்ல வார்த்தைகளோட வழி அனுப்புங்க.!
தேவையான பொருட்களுடன் குழந்தைகளுடன் காரில் ஏறினான் துவாரகேஷ். அவள் வெளியே வந்து தன் குழந்தைகளை வழியனுப்ப கூட இல்லை. உள்ளே போய் தன் படுக்கை அறையில் கதவை தாளிட்டாள்.
“ மாமா! நிச்சயமா இவ ஒரு டாக்டரை பாக்கணும். இயல்பான பெண்ணா அவ இல்லை. புருஷனை கூட ஒரு பெண் உதறலாம். ஆனா தான் பெற்ற குழந்தைகளை வெறுக்க மாட்டா.”
“நல்லா இருக்க வேண்டிய குடும்பம் உருக்குலையுதும்மா.”
அவளிடம் சொல்லிக்கொள்ள இவர்கள் அழைக்க,
“எல்லாரும் போகலாம்.!”
வெறுப்புடன் அனைவரும் விலக, துளசி காஞ்சனாவுக்கு ஃபோன் போட்டாள். அவள் எடுக்கவில்லை. மூன்று முறை முயன்றும் கிடைக்கவில்லை. கண்களை மூடி மல்லாந்தாள். அந்த சோப், டவல், குவளை அந்தரத்தில் ஆடிய காட்சி கண்ணுக்குள் நின்றது.
“ நான் குளிக்கும் போது குரல் கொடுத்தேனே!
அவன் வீட்டில் எதிரில் இருந்தும், உருவம் தெரியவில்லை. குரலும் கேட்கவில்லை. கோளாறு என்னிடமா? அவரிடமா? அன்று மாமியாரும் இதைத்தான் சொன்னார்கள். பிரச்னை அவரிடம் தான். அதெப்படி, ஒரு மனிதனின் உருவம் தெரியாமல் போகும்? “
முதன் முதலாக ஒரு பயம் தொண்டைக்குள் பந்தாக உருண்டது. இது வினோதமான அனுபவம். வீட்டுக்குள்ளே ஒரு மனிதன் அரூபமாக முடியுமா? இந்த வீட்டில் தீய சக்திகள் நடமாடுகிறதா? மந்திரவாதியை கேட்டால் பதில் கிடைக்குமா?”
நினைக்க நினைக்க கண்களை இருட்டி கொண்டு மயக்கமே வந்தது. அதே நேரம் தன் காரில் சுஷ்மாவை அவர்கள் வீட்டுக்கே சென்று ஏற்றி கொண்டான் துவாரகா. குழந்தைகள் குஷியாகி விட்டார்கள்.
“ பசங்க போகும் போது துளசி மனநிலை என்ன துவாரகா?”
“வாசலுக்கு கூட வரலை. அவ மனுஷியே இல்லை. பிசாசு கிட்ட தாய்மையை நீ எப்படி சுஷ்மா எதிர் பார்க்க முடியும்?”
“உங்களால இவங்களை விட்டு இருக்க முடியுமா?”
“முடியாது தான். ஆனா அவ பார்வைல வளர்ந்தா குழந்தைங்க எதிர் காலம் சிதைஞ்சிடும். கூடாது. அவங்களை மீட்டாகணும். எனக்கு எல்லா சங்கடங்களும் பழகியாச்சு சுஷ்மா.”
கொடையில் தங்குவதற்கு சகல வசதிகளையும் சுஷ்மா செய்திருந்தாள். அன்று ஊரை சுற்றி, குழந்தைகளை சந்தோஷப்படுத்தினார்கள். மறு நாள் பள்ளிக்கு வர எல்லாம் தயாராக இருந்தது. முதல்வரை சந்தித்து பேச, அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் குழந்தைகள் அழகாக பதிலளிக்க, அவருக்கு பூரண திருப்தி. குழந்தைகளின் சீருடை, புத்தகங்கள், தங்கும் ஹாஸ்டல், உணவு என சகலமும் விசாரித்து மனசுக்கு திருப்திப்பட்டு, பெரிய தொகையை கட்டினான். தினசரி அவர்களை வீடியோவில் சாட் செய்ய நேரம் குறித்து கொண்டான். புறப்படும் நேரம் வர,
“ அப்பா! பாட்டியை பிரிஞ்சோம். இப்ப உன்னை, சுஷ்மா ஆன்ட்டியை..!”
குழந்தைகளை சமாதானப்படுத்தி, வெளியே வந்து அழுதான்.
“ என்ன துவாரகா நீ?”
“முடியலை சுஷ்மா. தப்பான ஒரு கல்யாண முடிவை நான் எடுத்த காரணமா, இன்னிக்கு எத்தனை பிரிவுகள் பாரு. ஆளுக்கொரு பக்கம். குடும்பம் சிதறு தேங்காயா நொறுங்கி போச்சு. ஒரு பெண் தாயா இருக்கலாம். அல்லது பேயா மாறலாம். ஆனா தான் பெற்ற குழந்தைகளை பற்றி அவ யோசிக்க மாட்டாளா?”
“அந்த அளவுக்கு அவங்க மனசு புரண்டிருக்கு துவாரகா. நீங்க டாக்டர் பல்லவி கிட்ட நிறைய பேசணும்.”
“துளசிக்கு மன நோய்னு நீ சொல்றியா சுஷ்மா?”
“வேற என்ன துவாரகா? முத்தின சந்தேகம் மூளையை பாதிச்சிருக்கு.”
“அதுக்கு ஒரே மருந்து என் மரணம் தான்.!”
“என்ன பேசற நீ?”
“ஆமாம்..நான் இருக்கற வரைக்கும் அவ சந்தேகப்பட்டுட்டே இருப்பா. நான் போயிட்டா, யாரை சந்தேகப்படுவா? அவ ஒரு தாயா, மனைவியா, மகளா எதிலும் தன் பொறுப்பை உணரலை.”
“அப்புறம் நீ மட்டும் ஏன் விசுவாசமான புருஷனா இருக்கணும்?”
“என்ன சொல்ற நீ?”
“உன் இளமையை நீ வீணடிக்காதே. ஒரு மனுஷ ஜென்மத்தை கடைசி வரைக்கும் உயிர்ப்போட வச்சிருக்கறது உணர்ச்சிகள் தான். நீ மரத்து போறது, மரிச்சு போறதுக்கு சமம் துவாரகா. “
“இல்லை, அவளை நான் உணர வைக்கணும்.”
“இதுல நீ ஜெயிப்பேன்னு எனக்கு தோணலை. ஆல் த பெஸ்ட்.!”
“என் முயற்சிகள் தொடங்கியாச்சு சுஷ்மா. நேரம் வரும் போது உனக்கு நான் சொல்றேன். ஸாரி சுஷ்மா. நீ சின்னப்பொண்ணு. இந்த மாதிரி சுற்றுலா ஸ்தலங்களுக்கு வரும் போது மனசுல எத்தனை கனவுகள் இருக்கும்? என்னை மாதிரி மரக்கட்டைகள் கூட வந்தா என்ன சந்தோஷம்?”
“உன் குழந்தைகளுக்காக நான் வந்தேன்.!”
“நீ சீக்கிரம் கல்யாணம் செஞ்சுகணும் சுஷ்மா. உனக்கு ஒரு குறையும் இல்லை. உன்னை அடையப்போறவன் பாக்யசாலி.”
“வேண்டாம் துவாரகா. நீ படற பாட்டை பார்க்கும் போது கல்யாணம்னாலே பயம்மா இருக்கு.”
“எல்லாருக்கும் விபரீத வாழ்க்கை அமையணும்னு இல்லையே சுஷ்மா. அவரவர் விதி அதை தீர்மானிக்குது. நீ ரொம்ப நல்ல பொண்ணு. நல்லதே நடக்கும்.”
கார் மலையை விட்டு இறங்கியது. அன்று இரவு துவாரகா, சுஷ்மாவை விட்ட பிறகு அவள் அப்பா கட்டாயப்படுத்தியதால் அவள் வீட்டில் தங்கி விட்டான். மறு நாள் காலை டாக்டர் பல்லவி ஃபோன் செய்ய, காலை பத்து மணிக்கு வருகிறேன் என்றான்.
“ நீயும் என் கூட வர்றியா சுஷ்மா?”
“வேண்டாம். டாக்டர் பல்லவி அதை விரும்ப மாட்டாங்க. அவங்க அப்ரோச் வழக்கமானதா இருக்காது. நீ போயிட்டு வந்து எங்கிட்ட சொல்லு.”
அதற்குள் துளசி ஃபோன்.
“ எங்கே இருக்கீங்க?”
“பசங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செஞ்சிட்டு சென்னை திரும்பியாச்சு.”
“வீட்டுக்கு வர்றதா உத்தேசம் இருக்கா? இல்லை அந்த தடிச்சி கூட புதுக்குடித்தனம் தொடங்கற எண்ணமா?”
“அப்படி ஒரு நினைப்பு என் மனசுல இருந்தா, அது என்னிக்கோ நடந்திருக்கும். யாரையும் நான் பயப்பட மாட்டேன். ஃபோனை வை.”
இதை ஸ்பீக்கரில் போட்டதால் சுஷ்மா குடும்பமும் கேட்டது. அவனை மிகுந்த மன வலியுடன் பார்த்தார்கள். காரை எடுத்தான். மேப் லொகேஷனை போட்டு காரை செலுத்தினான். அதே நேரம் துளசியை காஞ்சனா ஃபோனில் அழைத்தாள்.
“ உனக்கு பத்து தடவை நான் ஃபோன் போட்டாச்சு காஞ்சனா.!”
“இதப்பாரு, ஆத்திரப்படற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே. உனக்கு காரியம் ஆகணும்னா, கொஞ்சம் பணிஞ்சு தான் போகணும். நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன். துவாரகேஷ் திரும்பி வந்தாச்சா?”
“அவரை பற்றி ஏன் கேக்கற?”
“அவரை அடையணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?”
“கொன்னுடுவேன். பேசற உன் வாயை உடைக்கறேண்டி!”
“அப்ப வேற யாரையாவது பார்த்துக்கோ.”
“சரி, வந்து தொலை.”
காஞ்சனா வந்து விட்டாள், அரை மணியி்ல். பெரிய சொந்த வீடு. ஏற இறங்க பார்த்தாள்.
“ என்ன பாக்கற?”
“நல்லா சம்பாதிக்கற அழகான புருஷன்..சொத்து சுகம்..ஒரு தகுதியும் இல்லாத உனக்கு ஜாக்பாட் யோகம்டி. பாவம் நீ! இதை தக்க வச்சுக்க போராட நினைக்கறது நியாயம் தான்.”
“எனக்காக பரிதாபப்படறியா? இல்லை, என்னை அவமானப்படுத்தறியா?”
“இதைப்பாரு! நீ நிறைய தப்பு பண்ணியாச்சு. அதான் புள்ளைங்க கை விட்டு போயிருக்கு. துவாரகேஷ் மிஞ்சட்டும். கையில எவ்ளோ பணம் வச்சிருக்கே?”
“அஞ்சு சவரன் செயினை வித்து, ரெண்டு லட்சத்துக்கு மேல பணம் வச்சிருக்கேன்.”
“அதை எடுத்துக்கோ.”
“அட்வான்ஸ் பத்தாயிரம் தர்றேன். வசிய மருந்து வேலை செய்யுதான்னு பாக்காம நான் முழுப்பணம் தர மாட்டேன்.!”
காஞ்சனா அவளை ஏற இறங்க பார்த்தாள்.
“ சரி புறப்படு.”
“நான் புடவையை மாத்திட்டு வந்துர்றேன்.”
“அதனால மட்டும் நீ பேரழகியா ஆகப்போறியா? வாடீ இப்படியே.”
“என்னை நீ அவமானப்படுத்திட்டே இருக்கே.”
“வெளில பட்டாசுகள் வெடிக்குது. தீபாவளியை குடும்பத்தோட சந்தோஷமா எல்லாரும் கொண்டாடும் போது, புருஷன் மேல சந்தேகப்பட்டு, பிள்ளைகளை பிரிஞ்சு நிக்கற நீ.”
“என் புருஷன், வேற எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்காம, என்னை மட்டுமே சுற்றி வர்ற அன்னிக்குத்தான் எனக்கு தீபாவளி. எல்லா சிறுக்கிகளுக்கும் ஒரேடியா நெருப்பை வச்சு கொளுத்தணும். அவளுங்க காமத்துக்கு தீ மூட்டணும். நரகாசுரனை எரிச்ச மாதிரி அந்த சுஷ்மாவை எரிக்கணும்.”
துளசியின் குரலில் அசாத்திய வெறி இருந்தது. உள்ளே இருந்த காரணமில்லாத கோபம், அனலாக தெறிக்க, அவளது மன நிலையை பிரதிபலிப்பது போல பத்தாயிரம் வாலா வெளியே வெடித்து முழக்கி கொண்டிருந்தது.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 8 | அடுத்தபகுதி – 10