என்னை காணவில்லை – 10 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 10 | தேவிபாலா

அத்தியாயம் – 10

காரை எடுத்துக்கொண்டு நேராக துவாரகா, பல்லவியின் க்ளீனிக் வந்து விட்டான். ஓரளவு ஆட்கள் இருந்தார்கள். அது நர்சிங் ஹோமாகவும் செயல் பட்டது. இருபது படுக்கைகள் இருந்தன. சகல மருத்துவ நவீன வசதிகளும் இருந்தன. அங்கு செலவு அதிகம் தான். ஆனால் மனோதத்துவ சிகிச்சையில் நம்பர் ஒன் டாக்டர். தன் கார்டை அனுப்பினான் துவாரகா. பல்லவி வெளியே வந்து விட்டாள்.

“ துவாரகா, பத்து நிமிஷம் காத்திருக்க முடியுமா? ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திர்றேன்.”

“தாராளமா.”

அவள் பத்தாவது நிமிஷம் அவனை அழைத்து விட்டாள். அவளது அறை, ஐந்து நட்சத்திர ஓட்டலின் தரத்தில் இருந்தது. உட்கார வைத்து ஒரு பழரசத்துக்கு உத்தரவிட்டாள்.

“ அன்னிக்கு சுஷ்மா வீட்ல ஓரளவுக்கு உங்க கிட்ட பேசினேன். சுஷ்மாவும் நிறைய சொல்லியிருக்கா. நீங்க உங்க கல்யாணம் நடந்த முதல் இப்ப வரைக்கும் கீ பாயின்ட்ஸை மட்டும் சொல்லுங்க.”

“மற்றவர்கள் எதிர்க்க அதை தாண்டி கல்யாணம் செஞ்சுகிட்டேன் துளசியை!”

“ஏன் துவாரகா?”

“நான் அழகை பெரிசா மதிக்கறவன் இல்லை. நிறம், எடுப்பான அங்கங்கள், இப்படி உள்ள பெண்கள் கிட்ட எல்லா ஆண்களையும் போல எனக்கு வசீகரம் இருந்தா, சுஷ்மாவையே நான் கல்யாணம் செஞ்சிருப்பேனே. நீங்க கூட அழகா, எடுப்பா இருக்கீங்க டாக்டர். என் கண்கள் உங்க கழுத்தை கடந்து கீழே இறங்குதா? அது என் இயல்பு டாக்டர்.”

“எல்லா ஆண்களுக்கும் உள்ள சராசரி காம உணர்வு உங்க கிட்ட குறைச்சலா இருந்தா, உங்க ஆன்ட்ரோஜன் லெவல் பாக்கணும்.”

“நான் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா டாக்டர். காமம் மனசுல தளும்பி வழிஞ்சாத்தான், ஒடம்புல பிரதிபலிக்கும்னு நான் நம்பறேன்.”

“குட். நான் ஒப்புக்கறேன். துளசி பற்றி சொல்லுங்க.!”

“என் அழகு, ஆண்மை, தகுதிகள்  எதுவும் அவ கிட்ட இல்லாத காரணமா, நான் அவளை விலக்கி வச்சிடுவேன்ங்கற பயம். அவள் முதல் நாள் தொட்டே என்னை ஆட்டி படைக்க, எங்க தாம்பத்யம் ஆரம்பமாச்சு. அவ உணர்வுகளை புரிஞ்சுகிட்டு ரொம்ப இதமா நான் நடந்தும் என்னை அவ புரிஞ்சுகலை. உறவு நேரத்துல ஒரு கணவனோட நியாயமான அணுகலை கூட காமுகன் அணுகலா அவ பார்த்தா. ரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தா. படிப்படியா ஒரு சைக்கோ மாதிரி மாறிட்டே வந்து, அம்மா என் தலை கோதி விட்டாக்கூட அதை காமக்கணக்குல சேர்த்தா. என்னோட பழகின பல பெண்கள்  துளசி கிட்ட கடுமையா அவமானப்பட்டாங்க. அதுல சுஷ்மா வாங்கின அடிகள் கொஞ்சமில்லை. எல்லாரும் வெறுக்கற அளவுக்கு துளசி நடந்துகிட்டா. இது நல்லதில்லைன்னு  நான் பல முறை நயமா எடுத்து சொன்னேன். அவ தலைல ஏறலை. என் அம்மா, சகோதரிகள், அவளை பெத்தவங்க இப்படி யார் பேசியும் எடுபடலை. எல்லாரையும் அசிங்கப்படுத்தினா.”

“உனக்கு சொந்த சம்பாத்தியம் இல்லை. மாப்ளை உன்னை விவாகரத்து செஞ்சு தூக்கி வெளில வீசினா, நீ பிச்சை தான் எடுக்கணும்”

இப்படி என் மாமியார் பேசினதுக்கு அம்மான்னு பாக்காம அவங்களையே ஆபாசமா விமர்சனம் பண்ணினா. விளைவு, அவங்க வர்றதில்லை. அம்மா, இப்ப முதியோர் இல்லத்துல. பசங்க கொடைல. டாக்டர்! என்ன தான் சந்தேகம் முத்தி உச்ச கட்டத்துக்கு போனாலும், தன் எதிர் காலம் பற்றின பயம் ஒரு பெண்ணுக்கு இல்லைன்னா, அவ மன நிலைல நிச்சயமா கோளாறு இருக்கும்னு நான் நினைக்கறேன். சிகிச்சை அவளுக்கு தேவை.”

“புரியுது. துளசி ஒத்துழைக்க மாட்டாங்க. அதுக்காக சங்கிலில கட்டி வைக்கற பைத்தியம் இல்லை துளசி. அவங்க மனசு ஒப்பி சிகிச்சைக்கு வர சம்மதிக்காம எந்த ஒரு சிகிச்சையும் தர முடியாது. மனசை இறுக்கமா வச்சிருக்கற மனுஷனை ஹிப்னடைஸ் பண்ணக்கூட முடியாது. சரி, உங்க மத்தில ஃபிசிக்கல் கான்டாக்ட் எப்ப நடந்தது?”

“பல மாசங்களாச்சு டாக்டர்.”

“ஏன்? துளசி விரும்பலையா?”

“அவ தயாரா இருக்கா. நான் விரும்பலை. எனக்கு மனசு செத்த காரணமா, ஒடம்பும் செத்தாச்சு. சமீபத்துல..நேத்திக்கு துளசியே வலிய வந்து முயற்சி பண்ணினா. நான் உதறிட்டு போயிட்டேன். இது ஒண்ணு தான் குறைச்சல். சம்போகத்துக்கு மனசு சந்தோஷமா இருக்கணும். சைக்கோ மனைவி கூட எனக்கு தேவையா? என் உடல் தயாரா இல்லை.”

“உள்ள வாங்க. நான் பரிசோதனை பண்ணிர்றேன்.”

“நீங்க ஒரு பெண்..எப்படீ?”

“அதையும் தாண்டி மருத்துவர். ஒரு டாக்டருக்கு ஆண், பெண் பாகு பாடு இல்லை. ஆண் மகப்பேறு மருத்துவர் ஜோசப், பல பெண்களுக்கு பிரசவம் பாக்கலியா? உள்ள வாங்க.”

பத்தே நிமிஷங்களில் வெளியே வந்தார்கள். தன் உடல் சகலத்துக்கும் தயார் என்பதை நிரூபித்த டாக்டரை வியப்புடன் பார்த்தான்.

“ தப்பை நீங்க பண்றீங்க. உங்க மனசை இறுக்கமா வச்ச காரணமா, எல்லாத்தையும் நிறுத்தி வச்சீங்க. செக்ஸ் ஒரு நல்ல உடல் பயிற்சினு மருத்துவம் சொல்லும். துளசி மனசுல எல்லா விருப்பங்களும் உண்டு. நீங்க புறக்கணிக்கும் போது, அவங்களை உங்களுக்கு பிடிக்கலை, பிற பெண்கள் கிட்ட நாட்டம்னு அவங்க மனசுல ஏறி சந்தேகம் அதிகமாகி இருக்கு.”

“அவ பண்ற டார்ச்சர்ல என் மனசு கசந்து போயிருக்கு டாக்டர்.”

“சரி, இனி பேசி லாபமில்லை. நடக்கப்போறதை பேசுவோம். உங்க பேச்சோ, மருந்துகளோ துளசியை மாற்றப்போறதில்லை. சரி, உங்க மின்னணு மூளை எப்படி இதுக்குள்ள நுழைஞ்சது. பெஞ்சமின் ஆராய்ச்சிகளை நிறைய படிப்பீங்களா?”

அவன் ஆச்சர்யமாக டாக்டரை பார்த்தான்.

“ இந்த Invisible Cloak பற்றி நான் படிச்சிருக்கேன். அது ஏட்டளவு தான். நீங்க அப்ளை பண்ணி பார்த்துட்டீங்களா?”

அவன் பேசவில்லை.

இது இசை கலைஞர்கள் தன் இசை தொடர்பா அக்விக்ஸ்டிக்னு ஒலிக்காக தன் அறையை தயார் செய்வாங்க. அது இப்ப மின்னணு முறைல நிறைய நவீனம் ஆயாச்சு. அது மாதிரி சில கதிர் வீச்சுக்களை பயன்படுத்தி நீங்க செயல் படத்தொடங்கிட்டீங்களா?”

“ டாக்டர்! ஹாரிபோட்டர் கதைகள்ள அது வெறும் ஃபிக்ஷனா இருக்கும். ஆனா சில பிசினஸ் சாதுர்யங்களுக்காக இதை நான் முயற்சி செஞ்சேன்”

“புரியலை துவாரகா.”

“எங்க கம்பெனி, உலக அளவுல ரெண்டாவது இடத்துல மின்னணு சங்கதில முக்கியமான நிறுவனம். அதுக்கு பலத்த போட்டிகளும், சீக்ரெட் ஃபார்முலாக்களை திருடவும் முயற்சி நடக்குது. போட்டி கம்பெனிகள் எங்க அதிகாரிகளை வளைச்சு பெரும் தொகை தந்து ஃபார்முலாக்களை களவாட முயற்சி நடக்குது. நம்பகமானங்க துரோகம் பண்றாங்க. இதை மின்னணு சாதுர்யங்கள் மூலம் தடுக்க, நான் ரெண்டு வருஷமா ஆராய்ச்சி செஞ்சு, எங்க சேர்மன் ஒப்புதலோட இதை ஆரம்பிச்சேன். அவரோட அறைல சில கதிர் வீச்சுக்களை லான்ச் பண்ணி, அதுக்கான ஒரு க்ரீமை நானும் அவரும் எங்க உடல்ல தடவி பரிசோதனை செஞ்சோம்.”

“ரொம்ப சுவாரசியமா இருக்கே. அப்புறம்?”

“நானே எதிர் பாக்கலை. அந்த அறையோட கதிர் வீச்சும், எங்க உடம்புல தடவின க்ரீமும் எங்களை மத்தவங்க பார்க்க முடியாம செஞ்சிருக்கு. எங்க குரலும் அவங்களுக்கு கேக்கலை.”

“பல கற்பனைகள், நம்ப முடியாத சங்கதிகள் இந்த எலக்ட்ரானிக் யுகத்துல நிஜமாகுதே. அப்புறம்?”

“கம்பெனி நேரம் முடிஞ்ச பிறகு நாங்க அரூபமா உள்ளே இருந்தோம். எதிரிகள், கம்பெனில சம்பளம் வாங்கற சீனியர் துரோகிகள், செக்யூரிட்டி ஆட்களை விலைக்கு வாங்கி, உள்ளே வந்துட்டாங்க. சேர்மன் அறையை குடைஞ்சு ஃபார்முலாக்களை கை பற்றினாங்க. சேர்மன் கூச்சல் போட்டார். அவங்களுக்கு கேக்கலை. ஆனா திருட்டு தெரிஞ்சு போச்சு. கையும் களவுமா பிடிச்சோம். இப்ப அவங்க ஜெயில்ல.”

“இந்த அரூபம் எப்ப ரிலீஸ் ஆகும்?”

“அதே க்ரீமை திரும்ப அப்ளை பண்ணணும். ரூம்ல உள்ள கதிர் வீச்சை நிறுத்தணும். அதுக்கான கன்ட்ரோலை நான் ரகசியமா செட் பண்ணி வச்சிருப்பேன். இதுக்கான ஆராய்ச்சி முழுமையா முடியலை. எனக்கு நிறைய சந்தேகங்கள் இதுல இருக்கு.”

“இதை வீட்ல பண்ணி பாக்கணும்னு எப்படி எண்ணம் வந்தது?”

“ இதே தான். எனக்கெதிரா துளசி என்னல்லாம் செய்யறா? என்ன பேசறா? நான் இல்லாத நேரம் அம்மா, குழந்தைகளுக்கு என்ன டார்ச்சர் தர்றாங்கறதை அரூபமா இருந்து பாக்கணும்னு என் பெட்ரூமை இதுக்கு தயார் படுத்தினேன். ஒரு முறை இது நடந்தது. அடுத்த முறை க்ரீமை தடவி நான் தூங்கி போயிட்டேன். யாரும் சுலபத்துல கண்டு பிடிக்க முடியாது. ஆனா துளசிக்கே இப்ப இதுல ஒரு பயம் வரத்தொடங்கியிருக்கு.”

“அதனால அவங்க மாறுவாங்களா?”

“அவ சந்தேக புத்தியை எந்த சயன்சும் மாற்றாது டாக்டர். ஆனா என் கண் முன்னால நடக்கற பல சங்கதிகளை நான் பார்க்க முடியும் இல்லையா?”

“இதுக்கு நிறைய செலவாகுமா?”

“அஞ்சு லட்ச ரூபாய் தான். ஆனா மூளை கொதிச்சு போச்சு. ஆராய்ச்சி முழுமையா முடியலை. சில சிக்கல்களும் இருக்கு. ஆபத்தும் இருக்கு.”

“இதை ஒரு ரூமுக்குள்ள மட்டும் தான் செய்ய முடியுமா?”

“இப்போதைக்கு ஆமாம்.”

“அப்படீன்னா வெளில உங்களுக்கு எதிரா சதிகள் நடந்தா, அதை கண்டு பிடிக்கவோ, அதிலிருந்து உங்களை காப்பாத்திக்கவோ முடியாதா?”

“அதுக்கான ஆராய்ச்சில இப்ப இறங்கியிருக்கேன் டாக்டர். எந்த அளவுக்கு வெற்றி அடைவேன்னு தெரியலை.”

“நீங்க வெற்றியடைய நான் வாழ்த்தறேன். ஆனா இது ஒரு வகைல ஆபத்தான ஆராய்ச்சி. உளவு பாக்கணும்னு பண வசதி உள்ள எல்லாரும் இறங்கிட்டா, மோதல்கள் அதிகமாகும். அரசியல், விளையாட்டு இந்த மாதிரி துறைல இது நுழைஞ்சா என்னாகும்னு புரியலை. சரி, இதை வச்சு துளசியை மாற்ற நான் உங்களுக்கு சில மருத்துவ ஆலோசனைகளை தர்றேன். அது மட்டுமில்லை, ஒரு மனோ தத்துவ டாக்டரா இது எனக்கு பயன் படும். என்னோட இந்த க்ளீனிக் அறைல இதை லான்ச் பண்ணி குடுங்க. அதுக்கான செலவை உங்க சர்வீஸ் சார்ஜ் உட்பட நான் இப்பவே குடுத்துர்றேன்.”

“சரி டாக்டர், எங்க சேர்மன் தவிர இந்த ரகசியம் தெரிஞ்ச மூணாவது நபர் நீங்க. யாருக்கும் சொல்ல வேண்டாம்.”

“கண்டிப்பா சொல்ல மாட்டேன் துவாரகா.”

மின்சார கம்பியில் கை வைத்து விட்டோம் என்பதை துவாரகா அப்போது உணரவில்லை.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 9 | அடுத்தபகுதி – 11

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...