‘கடலை விழுங்கும் மீன்’ – நர்மதா தேவி (நூல் விமர்சனம்)

நூல் : கடலை விழுங்கும் மீன்

நூலாசிரியர் : நர்மதா தேவி அவர்கள்

“வாழ்வைப் போல காற்றில் விநோத நடனங்கள் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இலையைப் பிடிக்கும் போது நடனம் மட்டும் எங்கோ ஒளிந்து கொள்கிறது”.

-தேவதச்சன்

இப்படித்தான் கவிதாயினி நர்மதா தேவி அவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது தோன்றியது.

எந்த வலைக்கும் அகப்படாத ஒரு கண்ணாமூச்சி வாழ்வில் நம்பிக்கையில் வாழும் அந்தச் சிறுமீனின் ஆசையைப் பாருங்கள்.. பெருங்கடலின் நீரையெல்லாம் விழுங்கிவிடும் பேராசை யென்றே குறிப்பிடுகிறார்,

அது நர்மதா தேவியின் நம்பிக்கையின் அச்சாணி. இவ்வளவு பெரிய உலகத்திற்கு நிலவின் சிறிய ஒளி தரும் அழகை சூரியனால் தரமுடியுமா எனில் தரமுடியாது . அதுபோல இவர்கவிதைகளில் கோலோச்சும் காட்சிகள் கடல் சார்ந்த கவிதைகள்.

#என்றோ ஒருநாள்

தன்னைப்பார்க்க சக்கரநாற்காலியில் வரும் கால்களையும் இதயத்தையும் நனைத்துவிட இன்னும் அதிக ஆசையுடன் ஓடி வருகிறது அந்த கடல் அலை.

ஆயிரம் பேர் கடலாடினாலும் என்றோ ஒரு நாள் வரும் கால் நனைக்க முடியாது, கடலாட முடியாத அவனின் கால்களை நனைக்க ஓடிவரும் அலைக்கு நினைவலைகள் என்றே பெயர் வைக்கலாம்.

கடலின் நீல நிற கண்களுடன் உறவாடும் மௌனமான கணத்தில் பாதச்சுவடுகள் மறைந்துவிட்டாலும், நெஞ்சம் மட்டும் கடலின் ஆழத்தில் நிசப்தத்தை நாடும் மௌனத்தின் மொழி கவிஞரின் நுட்பம் .

தீட்டு என்பதெல்லாம் பாழும் மனிதருக்குத்தான் … அந்த தெய்வத்துக்கு இல்லை ,என்பதை உணர்த்தும் இந்தக் கவிதை இந்நூலின் சிறப்பான மகுடம் தறிக்கும் வரிகள் .

பக்கம் -11

#ஊர் திருவிழாவின் கூட்ட நெரிசலிலிருந்தும் பாட்டு சத்தத்திலிருந்தும் கருவறையை விட்டு விலகி வெளியேறிய தெய்வம் எங்கே சென்றது? என்பது தான் கவியின் மன விலாசத்தில் புதிய சிந்தனையில் சுடரும் கவிதை, அற்புதமான காட்சி.

உழைப்பவர்க்கு கல்லும் மெத்தையாகும் இரவசாதம் இவர் கவிதையில் கோலோச்சுகிறது.

இயற்கையை நீ நேசிக்கக் கற்றுக் கொண்டால் இயற்கையே உன்னை பாதுகாக்கும் காலத்தின் பாடம் இது.

சகமனிதனை நம்பாத நம் மனம், கண்காணிப்பு கேமராக்களை, அடையாள அட்டைகளிடமும் மனிதம் தோற்றே விட்டது என்கிற கவிதைவரிகளில் இயந்திரமயமாகி வரும் நமது வாழ்வில் நாமும் ஒருநாள் மாறிவிடுவோம் மனிதம் மறந்து என்பதை அழகாக கவிதையாக்கி விட்டார் கவி.

கூகுள் வரைபடங்கள்

நம்மையும் நமது கையடக்க நாட்குறிப்புகளையும் காகித வரைபடங்களையும் பார்த்து குபீரென சிரிக்கின்றன”. என்ற கவிதை

வாழ்வியலின் முரண்களில் நாம் வரைபடங்களில் தொலைந்துவிட்டோம்.

புத்தரின் பின்னிருக்கும் அரசியலை அழகாக முன்னெடுக்கிறார் கவிஞர் .

கோலோச்சும் குடும்பத்தின் காரசார விவாதங்களில் புத்தரும் வரவேற்பறையில் அமைதியாக அமர்ந்திருக்கும் புத்தர்,

நல்ல காலம் நள்ளிரவில் வெளியேறி விட்டதால் இப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடமில்லாது போய் விட்டது .

 சிணுங்கும் இராகுலனோடும் ஆழ்ந்த துயிலின் அடுத்த நாள் அதிர்ச்சியை எப்படித்தான் தாங்கிக் கொண்டாளோ? அந்தப் பேதைப் பெண் யசோதரை, என்ற விவாதப் பொருளின் மௌனத்தில் புத்தர் அதிர்ந்து போயிருக்கலாம் என்ற கருத்தியலை முன்வைக்கும் அகம் சார்ந்த உளவியலில் கடலை விழுங்க நினைக்கும் மீனுக்கு கண்களில் உப்பின் சுவை .

அடுத்த கவிதையிலும் சொல்லப்படாத புத்தர் பயணிக்கிறார் ரெயிலில் . சொல்லாமலேயே இறங்கிச்சென்றுவிட்ட நீயும் எங்கோ பரிச்சயமான முகம் தான்,

நாகரீகம் கருதி கேள்வி எழுப்பாத யசோதரையின் மறுபிம்பமாக தெரிகிறார் கவி.

அவரவர் இடம் வரும்போது இறங்கி விடுவது என்பது தவிர்க்க முடியாது பிரிவின் வலி பெண்ணுக்கு மட்டுமா ? புத்தனுக்கும் உண்டு ஒரு நூற்றாண்டு தனிமை.

உன்பெயரை எங்கோ பார்க்க நேரும் தருணம் பேசிவிட வேண்டும் என்ற நினைப்பும் அப்படியே இருந்து விட்டே போகட்டும் என்பது காதலின் துயர்.

திறந்த புத்தகமாகவே கிடக்கிறது இந்த வாழ்வு . மறைப்பதற்கு ஏதுமில்லை. புதிய என்னை நீங்கள் வாசிக்க நேரிடலாம் என்ற நேர்மையான ஒப்புதல் பெறும் பெண் விடுதலை.

வாக்குவாதம் முற்றும் தருணம் ஒரு நட்பு தன் குரலை துண்டித்துக்கொள்கிறது. சமாதானம் செய்வதற்கு

முன்பே தடை செய்யப்பட்ட நட்புப்பட்டியலில் சுலபமாக

முறிந்த உறவுகள் என்பது இயல்பின் கண்ணீரிலிருந்து தனித்து தன்னை பிரித்துக் கொள்ளுதல் என்பது இப்போது இயல்பாகி விட்டது என்பதை இக்கவிதையில் பதிவிட்ட வரிகளில் கவிஞர் மின்னுகிறார்.

சமாதானம் பேச நடுவில் ஒருவருமற்ற இந்த வாழ்வில் உறவுகளின் வேர்களை வெட்டி எறிவது சுலபம் தான்.

சாதியம் பேசும் மனித மனங்களுக்கு இவரது கவிதை வரிகள் தரும் சாட்டையடி இதுவரை அறிவியலாலும் கண்பிடிக்க முடியாது என்ற தொனியில் கவிஞரின் மனம் சிகரம் தொடுகிறது.

பிரிவின் வலியை விமானம் அறியாது . தழுவிய நெஞ்சம் தூரதேசம் போக புறப்பட்டு விட்டது வெறும் உடல் மட்டும் உயிரைப்பிரிய மறுக்கும் விரல்கள்

அகவாழ்வின் வலியை தன் கவிதையில் மிக அழகாக பதிவு செய்துள்ள கவிக்கு பாராட்டுகள்.

கூடவே வரும் நிலவுக்காக ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்படும் மனதை யார்தான் வெறுப்பார்கள்? நிலவே நீ மறைந்துவிளையாடும் அந்த நொடி தனிமையின் இருளை என் மீது போர்த்தி விடுகிறாயே … என்றவரிகள் ஆத்மார்த்தமானவை.

சரி… நீ அழைக்க வேண்டாம் ஒருகணம் நினைத்தாவது விடேன் சரண்டைந்து விடுகிறேன் உன்னிடம் என்ற கவியின் வரிகள் காதலின் சொல்லொண்ணாத்துயர்.

கடல் முழுவதும் நிரம்பி இருக்கும் உவர்ப்பினை வாரி எடுத்து தன்மேனி யெங்கும் பூசிக் கொள்கிறது முகத்துவாரத்தில் ஆறு

_ இந்தக் கவிதை காதலின் மகுடம்.

கொண்டவனின் துயரம் காதலினால் இவளுடையதாகிறது.

ஓடோடி வரும் வாழ்வு கண்ணீரில் கரைந்தாலும் நான் ஆறு அல்ல கடலே…

இனி என்னை கடலாகவே பாவியுங்கள் .

கடலே என்னை ஏற்காது போனாலும் நினைவுகளால் உப்புகரிக்கும் இந்த வாழ்வு

கடலே ….

உன்னிடத்தில் முடியட்டும் என்பது தான் இங்கு காதலின் முடிவுத் துயரம்.

இரட்டைக் காப்பியங்களை நினைவுறுத்துகிறது, இந்தக் கவிதை. பெண்களின் வாழ்வு கடலின் மீன்களின் வாழ்வு. அழுதாலும் உலகம் அறியவே வேண்டாம்… மீன்களின் கண்ணீரை. ஆனால் கடலையே விழுங்கிவிடும் சிறு நம்பிக்கை நட்சத்திரம் அந்த சிறியமீன் . கண்ணகியும் மாதவியும் ஒரு சேர நினைவில் வந்த கணம் அற்புதம் கவிஞரே .

#தனிமையின் பறவை

எதிர்குரல் கொடுக்கும் பறவையின் முகமறியாது பேசிக் கொண்டு தான் இருக்கும் என்பது வாழ்வியலின் நம்பிக்கை நம்மீது சொட்டும் கணம்!

#புத்தர் மீது பாய்ச்சப்படும் ஒளிக்குபின்னேதான்

போரின் காரிருள் மறைந்திருப்பதாக கூறும் வரிகளில் அரசியல் களமாடுகிறது.

காலம் காலமாக திருட்டுப் பட்டம் கட்டி ஒரு சமூகத்தையே அடிமையாக வைத்திருக்கும் மானுடத்தின் அதிகாரத் தொனியை கருவறுக்கிறது இவரது காகம் பற்றிய கவிதை.

சபாஷ்… இனி நீங்கள் அரசியல் கவிதைகளும் எழுதலாம்

அரசியல் என்பது சாக்கடை யல்ல நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்கும் களம். களமாட வேண்டும் இப்படியான வாழ்வை .

இன்னும் உங்களுக்காக நிறைய கவிதைகளை விட்டு வந்திருக்கிறேன்.

படித்து சுவையுங்கள்

வாழ்க கவி!

வெல்க! தமிழ்!

பதிப்பகம் _ நம் நதி பதிப்பகம்

தொடர்பு எண் _ 98947953 83

[email protected]

நூல் மதிப்பு ₹120

அழகிய வடிவமைப்பு

செங்கை மாவட்டத்தில் இன்னுமொரு கவிதைப் போராளி. நர்மதா தேவி அவர்கள் கற்றது முதுகலை பொறியியல்

நம்ப முடியவில்லை

இத்தனை அழகான கவிதைகள் இவர் விரலில் பிறந்தவையா?

இன்னும் பல நூல்கள் தரவேண்டும் சகோதரி.

மதிப்புரை எழுதியவர்

திருமதி. தயானி தாயுமானவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!