என்னை காணவில்லை – 11 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 11 | தேவிபாலா

அத்தியாயம் – 11

காஞ்சனா, துளசியை காரில் அழைத்து வந்தாள். ஒரு மணி நேரமாக கார் பயணம். திருத்தணி கடந்து உள் முகமான ஒற்றையடி பாதை போல குறுகலான சாலையில் கார் பயணித்தது. துளசிக்கு கார் ஆடிய ஆட்டத்தில் இடுப்பு எலும்புகள் விட்டுப்போனது.

“அந்த மந்திர வாதிக்கு முன் பணமா தர அம்பதாயிரம் வச்சுக்கோ.!”

“எதுக்கு அத்தனை பணம்?”

“அவன் தர்ற வசிய மருந்துல மற்ற பெண்களை உன் புருஷன் திரும்பிக்கூட பாக்காம, உன்னையே காலம் முழுக்க சுற்றி வரணும்னா, பணத்தை குடு. இல்லைன்னா திரும்பி போயிடலாம்.”

“இல்லை, தர்றேன்.!”

மேலும் அரை மணி நேரம் பயணித்து, வயல் வெளிக்கு மத்தியில் ஒரே ஒரு வீடு இருந்தது. ஓட்டு வீடு.  அதை நெருங்கினார்கள். காஞ்சனா கதவை தட்டினாள். சில நிமிஷங்களுக்கு பிறகு ஒரு ஆள் வந்து கதவை திறந்தான். துளசி அலறி விட்டாள்.  அந்த நபர் மொட்டை அடித்து ஜைன துறவி போல உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நின்றான். துளசி கண்களை மூடிக்கொண்டு திரும்பி நிற்க,

“ இதப்பாரு! உனக்கு காரியம் நடக்கணும்னா உள்ளே வா. இந்த நபர் மந்திரவாதியோட உதவியாளர்.!”

“மந்திரவாதியும் இப்படித்தான் இருப்பாரா?”

“ஆமாம். என்ன? வர்றியா? இல்லையா?”

சற்று யோசித்து உள்ளே வர சம்மதித்தாள் துளசி. உள்ளே வந்து காஞ்சனா உதவியாளரை தனியாக அழைத்துப்போய் பத்து நிமிடங்கள் பேசி விட்டு வெளியே வந்தாள்.

“ துளசி! கபாலி, பூஜைல இருக்கார். அரை மணி நேரம் காத்திருக்கணும்.!”

அந்த உதவியாளன் பானகம் போல ஏதோ ஒன்றை கொண்டு வந்தான்.

“ இதை குடிக்கலாமா?”

“உன் சந்தேக புத்தி போகாதா துளசி?”

துளசி குடித்தாள். இஞ்சி, சுக்கு, ஏலக்காய் போன்ற ருசிகளுடன் அது நன்றாகத்தான் இருந்தது. அந்த ஆள் அங்குமிங்கும் நடமாடி கொண்டிருந்தான். அரை மணியில் கபாலி வந்தான். பருத்த உடல் கட்டு, வெள்ளை வெளேர் என இருந்தான். அதே ஆடையில்லா கோலம்.கழுத்தில் நிறைய ருத்ராட்ச மாலைகள். நெற்றியில் சாம்பல். துளசிக்கு கூச்சமாக இருந்தது.

“ காஞ்சனா! இந்த பெண்ணுக்கு மரியாதை தெரியலை. வணக்கம் வைக்கலை. முகத்துல அருவருப்பு தெரியுது. நீ சொல்லி கூட்டிட்டு வரலியா? மனுஷன் பிறக்கும் போதும், இறந்த பிறகும் இதே நிலை தான். நடுவுல வம்ச விருத்திக்கு இது தான் முக்கியம். காம உணர்வு இல்லாத மனுஷன் யாரு? எந்த வயசிலும் அது உண்டு. அப்புறமா என்ன பாசாங்கு?”

“இல்லை, நீங்க கோவப்பட வேண்டாம். அவ கூச்சப்படறா. பிற ஆண்களை இந்த மாதிரி நிலைல அவ பார்த்ததில்லை.!”

“பொய். இவளுக்கு கூச்சமில்லை. முத்தின சந்தேக புத்தி உள்ள பெண். இவ புருஷன் மேல அளவு கடந்த சந்தேகம் இவளுக்கு. இந்த மாதிரி சந்தேகம் உலகத்துல எந்த ஒரு பெண்ணுக்கும் வராது. அதுவும் தப்பான சந்தேகம். அழகான தன் கணவன், காம கொடூரன்னு இவ சந்தேகப்படறா. இவ கற்பனைல கணவனை மற்ற பெண்களோட கேவலமா இணைச்சு பாக்கறவ. இவ அழகா இல்லை. அதனால இவ மூச்சு காற்று முழுக்க சந்தேகம். காமம் தொடர்பான எண்ணங்கள் தான். இவளா கூச்சப்படுவா? அவ பார்வை என் உடம்புல எங்கே இருக்கு பாரு?”

கபாலி, துளசி மனதில் ஓடும் எண்ணங்களை உரித்து விட்டான். அவள் பார்வையை படித்து விட்டான். துளசி தன் கண்களை வேறு திசைக்கு மாற்றினாள்.

“ உன்னை நான் கேவலப்படுத்தலை. அது மனுஷ இயல்பு. மறைக்கற உறுப்போ, பொருளோ, சிந்தனையோ அதன் மேல தான் மனுஷனுக்கு நாட்டம் அதிகமா இருக்கும். இல்லைன்னு எல்லாரும் பொய் சொல்லுவாங்க. கண்களை கைகளால மூடி, நான் நல்ல ஆத்மான்னு பாசாங்கு பண்ணிட்டு விரல் இடுக்கு வழியா பாக்கற திருட்டுத்தனம் இங்கே யாருக்கு இல்லை? வந்த விஷயத்தை பேசலாமா?”

அந்த கபாலி மனித மன விகாரங்களை உரித்து காட்ட, துளசி அதிர்ந்து போனாள்.

“ உன் புருஷன் பேரழகன்.புத்திசாலி. பெரிய பதவி, உயர்ந்த சம்பளம். அவனுக்கு இல்லாத தகுதிகள் என்ன பாக்கி? உண்மையா?

“ஆமாம்”

“ நான் வெள்ளையா, பெரிய உருவமா இருக்கேன். இதுவே நான் கறுப்பா இருந்தா என்னை யாருக்கும் பார்க்க பிடிக்காது. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். நிறமும், தேக அழகும் தான் முதல் வசீகரம். உங்கிட்ட அது இல்லை. சுத்தமா இல்லை.!”

“என்னை அவமானப்படுத்தறீங்களா?”

“இல்லை. உண்மையை சொல்றேன். உன்னை பார்க்கும் போது என் உடம்புல எந்த மாற்றமும் இல்லை. இதுவே நீ பேரழகியா இருந்தா, உடனே மாற்றம் தெரியும். ஆனா உன் புருஷன் எப்படி உன்னை கல்யாணம் செஞ்சுக சம்மதிச்சான்னு எனக்கு புரியலை.!”

“காஞ்சனா போகலாம். வா.!”

“நீ ஆத்திரப்பட்டு புறப்பட்டா நஷ்டம் உனக்குத்தான். போ.!”

“உனக்கு காரியம் நடக்க வேண்டாமா துளசி. அவர் உண்மையை முகத்துல அடிச்ச மாதிரி பேசுவார்.!”

“சரி, விஷயத்துக்கு வருவோம். காஞ்சனா எல்லாம் சொல்லிட்டா. உன் புருஷன் காமாந்தகன் அல்ல. ஆனா இதை கடவுளே சொன்னாலும் நீ நம்ப போறதில்லை. அதனால நீ அவனை பல வருஷங்களா சித்ரவதை பண்ணி, உன் மாமியாரும், உன் குழந்தைகளும் உன்னை விட்டு பிரிஞ்சாச்சு. இவன் உன்னை விட்டு ஓடாதது ஆச்சர்யம்.  சரி, நான் வசிய மருந்து தர்றேன். அதை எப்படி உபயோகப்படுத்தணும்னு சொல்றேன்.!”

“பலன் எப்படி இருக்கும்?”

“அவன் உன்னையே சுற்றி வருவான். உன்னை நெருங்காம இருக்கறவன், தானா நெருங்கி வருவான். வீடு, வாசல், சொத்து சுகம் எல்லாம் உன் புருஷன் பேர்ல தான் இருக்கா?”

“ஆமாம். ஏன் இந்த கேள்வி?”

“அப்படி இருந்தா, அம்மா, பிள்ளைகளும் அவனை விட்டு பிரிஞ்ச பிறகு, உன் கூட வாழ அவனுக்கு பிடிக்காது. நிச்சயமா உன்னை விட்டுட்டு உங்கிட்ட சொல்லாம கண் காணாத தேசத்துக்கு போயிடுவான். இது கூடிய சீக்கிரம் நடக்கும். எந்த தகுதியும் இல்லாத நீ, தெருவுல தான் நிக்கணும். புரியுதா?”

துளசி பலத்த அதிர்ச்சிக்கு ஆளானாள்.

“ வெறுப்போட உச்சிக்கு ஒரு ஆம்பளையோ, பொம்பளையோ போயிட்டா, அவங்களை மீட்டெடுக்க யாராலும் முடியாது. பாலுணர்ச்சி ஒரு கட்டத்தை கடந்துட்டா வேலை செய்யாது.”

“என்னை நான் எல்லா விதத்திலும் காப்பாத்திக்க என்ன செய்யணும்?”

“அதுக்குத்தான் இந்த வசிய மருந்து. ஒரு மண்டலம் இதை உன் புருஷனுக்கு தினமும் ரெண்டு வேளை நீ தரணும். அவன் வேற எந்த சிந்தனையும் இல்லாம உன்னையே சுற்றி வந்தா, அவனுக்கு மூளை வேலை செய்யாது. இதை பயன்படுத்தி சொத்துக்களை நீ உன் பேர்ல எழுதி வாங்கு. “

“இது நடக்குமா?”

“உடனே நடக்காது. மருந்து வேலை செய்ய தொடங்க கால அவகாசம் வேணும். உடம்பு மட்டுமே குறின்னா, ஒரு ஆண் எதையும் தரத்தயாரா இருப்பான். பல கோடீஸ்வரர்கள், தெருவுக்கு வந்தது, பெண் பித்து பிடிச்ச காரணமாத்தான். இப்ப அவனுக்கு அது இல்லை. ஆனா நீ நம்பாம அவனை சித்ரவதை பண்றே. ஆனா அந்த நிலைக்கு அவன் வருவான். பணத்தை எடு.”

துளசி எடுத்து தந்தாள். அதை வாங்கி கொண்டு காஞ்சனா உள்ளே போனாள். துளசி சந்தேகத்துடன் மெல்ல வந்து எட்டி பார்க்க, காஞ்சனாவின் செயல் முகம் சுருக்க வைத்தது. காஞ்சனா வெளியே வரும் போது வசிய மருந்தோடு வந்தாள்.

“ மறுபடியும் நீ வருவே துளசி. இப்ப போகலாம்.!”

அந்த வசிய மருந்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என கபாலி செய்முறை விளக்கத்தோடு சொன்னது துளசிக்கு இன்னும் கடுமையாக இருந்தது. வெளியே வந்து விட்டார்கள். காரில் ஏறி புறப்பட,

“எதுக்காக சொத்து சங்கதிகளை அவர் பேசணும்? என் புருஷன் என்னையே சுற்றி வரணும். பிற பெண்களை திரும்பி கூட பார்க்க கூடாதுன்னுதான் நான் நினைக்கறேன். எனக்கு பணத்தை விட புருஷன் முக்கியம்.!”

“முட்டாள்! துவாரகா உன்னை விட்டு நிரந்தரமா விலகி கண் காணாம போயிட்டா, உன் கதி என்ன? எல்லா வகையிலும் உன்னை பாது காத்துக்க கபாலி சொன்ன யோசனை இது. அப்புறமா உன் விருப்பம்.”

காஞ்சனா சொல்லும் போது துளசிக்கு பயம் வந்தது. அதே நேரம் மனசு முழுக்க ஒரு குற்ற உணர்ச்சி நிரம்பியிருந்தது. தன் சந்தேக புத்தியால், தப்பான பாதையில் பயணம் செய்கிறோமோ என்ற கலவரம் எழுந்தது. ஆனால் இந்த கபாலியின் விளக்கங்களை உதறவும் முடியவில்லை. வீடு திரும்பி விட்டாள்.

“ நாளை முதல் உன் சிகிச்சையை தொடங்கிடு துளசி. துவாரகா வரலை போலிருக்கு?”

“அவரை பார்த்துட்டுத்தான் போவியா?”

“அழகான ஆம்பளையை பாக்கணும்னு நெனச்சா அது தப்பா?”

“கொன்னுடுவேன் உன்னை.!”

“நீ தெருவுக்கு வரப்போறது உறுதி. நினைச்சதை சாதிக்கற வரைக்கும் ஆத்திரமும் சந்தேக புத்தியும் உங்கிட்ட இல்லாம இருந்தா, நீ ஜெயிக்கலாம். அப்புறமா உன் விருப்பம்.!”

காஞ்சனா வெளியேறினாள்.

சுஷ்மா எதிரே இருந்தான் துவாரகா. சுஷ்மா அவனையே உற்று பார்த்தாள்.

“ சொல்லு துவாரகா. என்ன சொன்னாங்க டாக்டர் பல்லவி?”

“சில மின்னணு மாயங்களை பற்றி விவாதிச்சோம். உனக்கும் சொல்றேன் சுஷ்மா.”

“வேண்டாம். பல்லவி அதை விரும்ப மாட்டாங்க. எனக்கு அதையெல்லாம் தெரிஞ்சுகணும்னு அவசியமும் இல்லை. துளசி மனசு மாறணும். உன் வாழ்க்கைல நிம்மதி கிடைக்கணும் துவாரகா. எனக்கு அது தான் வேணும்.!”

“இன்னிக்கு துளசி எங்கியோ காலைல கிளம்பி போயிருக்கா. கூடவே அந்த காஞ்சனா. என்னவோ நடக்குது சுஷ்மா.!”

“அந்த காஞ்சனா ஒரு பக்கா க்ரிமினல்னு உனக்கு தெரியுமே துவாரகா. துளசியோட சந்தேக புத்தியை தனக்கு சாதகமா அவ பயன்படுத்துவா.!”

“துளசியை தடுக்க நான் தயாரா இல்லை. துளசி என்ன செஞ்சாலும் எனக்கெதிராத்தான் செய்வா. செய்யட்டும். நானும் இனி சும்மா இருக்கப்போறதில்லை.”

“வேண்டாம் துவாரகா. உனக்கு எந்த ஆபத்தும், யாராலும் வரக்கூடாது. என்னால அதை தாங்கிக்க முடியாது.!”

“நீ பயப்படாதே சுஷ்மா. எல்லாம் நல்லதுக்குத்தான். என்னை அவ என்னிக்கோ கொன்னாச்சு. இனிமே யாராலும் என்னை மீட்க முடியாது. ஒரு ஆணுக்குள்ள எந்த சந்தோஷமும் இல்லாம என்னை துளசி ஜடமாக்கிட்டா. அதனால பாதிக்கப்படறது என் குழந்தைகள். இதுக்கொரு பாடத்தை கற்பிக்காம நான் ஓயமாட்டேன். யார் தடுத்தாலும் நான் நிற்க மாட்டேன் சுஷ்மா. என்னோட கவுன்ட் டவுன் ஆரம்பமாயாச்சு.”

துவாரகா குரலில் வெறியிருந்தது.

(தொடரும்…)

முந்தையபகுதி – 10 | அடுத்தபகுதி – 12

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...