ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மாக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்தப் போட்டியில், திலக் வர்மா மிகச்சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தார். அண்மையில் அவர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்குத் திரும்பினார்.
இந்நிலையில் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த இந்திய வீரர் திலக் வர்மாவை, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார். தெலங்கானா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திலக் வர்மாவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
அப்போது தெலங்கானா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீன் கூறும்போது, “திலக் வர்மாவின் சாதனைகள், தெலங்கானா முழுவதிலும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களை, விளையாட்டுத் துறையில் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும், சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஊக்குவிக்கும்” என்றார்.
