புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்தநாள் விழா

அண்மையில் திருவாரூர்த் தமிழியக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் 136ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவாரூர் ஜீனியஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் தாளாளர் திரு. சிவ. கங்காதரன் அவர்கள் விழாவைத் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள். திருவாரூர்த் தமிழியக்கத்தின் நிறுவுநர் கவிஞர் கோமல் தமிழமுதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.  விழாவின் முதல்பகுதியாக கவிதை ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.  புரட்சிக் கவிஞர் இயற்றிய தமிழுக்கு அமுதென்று பேர், சிறுத்தையே வெளியில் வா ஆகிய தலைப்புகளில் அமைந்த கவிதைகளை 70 மாணவர்கள் தமிழுணர்ச்சி பொங்க சிறப்பாக ஒப்பித்தார்கள். போட்டியின் நடுவர்களாகத் திருவாளர்கள் கவிஞர் நா. இராஜசேகரன், தர்மதாஸ், எழுத்தாளர் வீரராஜன், பெ. தினேஷ், கனவு ஆசிரியர் அன்பழகன், ஆசிரியர் இராஜேஷ்குமார், ஆசிரியர் தி.கோபிநாத், பா. அசித் குமார், தமிழன் சண்முகம் ஆகியோர் பணியாற்றினர்.

கவிதைப்போட்டிகளில் வென்றவர்களுக்குத் தலா  ரூ. 2000/- முதல்பரிசு, ரூ.1500/- இரண்டாம் பரிசு, ரூ.1000/- மூன்றாம் பரிசு வழங்கப்பட்டன. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற தலைப்பில் ஸ். கோகுலஸ்ரீ, சி. தருனேஷ், ச. சாய்ஸ்ரீ அட்சயா ஆகியோர் பரிசுகளை வென்றனர். சிறுத்தையே வெளியில் வா என்ற தலைப்பில் பொ. கிருத்திகா, கோ. மகாபரணி, ச. சந்தியா பரிசுகளை வென்றனர்.  போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவாரூர்  தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு. வே. மூர்த்தி அவர்கள் கவிதைப் போட்டிகளில் வென்றவர்களுக்குப்  பரிசுகளை அளித்து வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்கள் உரையாற்றும்போது, ”புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் தமிழ் உணர்ச்சியும் எழுச்சியுமிக்க பாடல்களைப் பாடியுள்ளார். அவரது கவிதைகள் எதிர்காலத்திலும் நமக்கு வழிகாட்டும். அவரது கவிதைகளைப் படிப்பதன் மூலம் தமிழின் பெருமிதங்களையும் விழுமியங்களையும் உணரமுடியும். மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதன் மூலத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திச் சாதனையாளர்களாக உருவாக முடியும்” என்றார்.

விழாவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாடல்களை திருவாரூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நல்லாசிரியர் க. முனியாண்டி , தமிழிசைவாணர் இசைச்சித்தன், தெம்மாங்குப் பாடகர் தேவூர்  மோகன் இங்கர்சால் ஆகியோர் இசைவடிவில் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

நகைச்சுவைப் பேரரசு. திருவாரூர் புலவர் இரெ. சண்முகவடிவேல் அவர்கள் விழாச் சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் உரையாற்றும்போது தமிழ்நாடு இன்றைய சூழலில் அடைந்துள்ள முன்னேற்றம் ஒரே நாளில் தானாக வந்து வாய்த்ததில்லை. பல்வேறு போராட்டங்கள் நடத்தி உயிர்த்தியாகம்வரை செய்தபின்னர்தான் நாம் முன்னேறியுள்ளோம். அத்தகைய வரலாற்றை இன்றைய மாணவர்கள் உணரவேண்டும். தமிழ்மொழியை உயர்த்தவும் தமிழ்நாட்டைப் போற்றவும் தமிழினத்தைக் காக்கவும் தக்கவழியில் இன்றைய இளைஞர்கள் மாறவேண்டும். இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான அனைத்தையும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களில் நாம் காணலாம். அவற்றைக் கற்கவும் வாழ்வில் கடைப்பிடிக்கவும் இளையோர் முன்வரவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் திருமதி க. சண்முகபிரியா, திருவாளர்கள் மருத்துவத்துறை ஓய்வு நா. முருகானந்தம், மேனாள் நகராட்சி உறுப்பினர் கோ. வரதராஜன், மேனாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கா. முருகேசன், மேனாள் ஊராட்சி உறுப்பினர் வே. தியாகராஜன், கூட்டுறவு நகர் சங்கத் தலைவர் நாராயணசாமி, மேனாள் தலைமையாசிரியர் மு. தமிழ்வாணன், திருவாரூர்த் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் மு. சந்திரசேகரன், செயலாளர் ஆரூர் அறிவு, வங்கி ஊழியர் சங்கப் பொறுப்பாளர் ப.அழகிரி இயற்றமிழ்ப் பயிற்றகம் தமிழ்நம்பி, இளந்தமிழன், சமுகச் செயற்பாட்டாளர் அழகிரிசாமி, இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் நிறுவுநர் எண்கண் சா. மணி, தமிழ்வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் வெற்றிச் செல்வன், இரமேஷ், மற்றும் தமிழாசிரியப் பெருமக்கள், பொதுமக்கள் எனப் பெருமளவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக திருவாரூர் தமிழியக்கப் பெறுப்பாளர் மாலா தமிழச்சி அவர்கள் நன்றிகூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோமல் மா. முத்துக்குமாரசாமி, ஆசிரியர் ச. பிரபு மற்றும் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தருநர் :

கோமல் தமிழமுதன் (நிறுவுநர், திருவாரூர்த் தமிழியக்கம், விளமல் – திருவாரூர் 94866 86631.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!