என்னை காணவில்லை – 8 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 8 | தேவிபாலா

அத்தியாயம் – 08

ந்த தே….யா வீட்டுக்கு புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கியா?”

துளசி கேவலமான வார்த்தைகளை உதிர்க்க, கொலுவுக்கு வந்த ஏராளமான பேர் ஸ்தம்பிக்க, சுஷ்மாவின் பெற்றவர்கள் ஆவேசமாக, துவாரகா வெறியுடன் அவளை நெருங்கினான்.

“ என்ன பேசற நீ? புனிதமான கொலு நடக்கற இடத்துல அவ வீட்டுக்கே வந்து அவளை அசிங்கப்படுத்தறியா?”

“இது புனிதமான வீடு இல்லை. இவளை என் புருஷன் வச்சிருக்கான். அதுக்கு இவளை பெத்தவங்களே உடந்தை.”

சுஷ்மா அவளை நெருங்கினாள்.

“ ஆமாண்டீ..அது தான் உண்மை. துவாரகாவுக்கு நான் ஆசை நாயகி தான்.”

“சுஷ்மா, நீ என்ன பேசற?”

துவாரகேஷ் பதற,

“ இருங்க துவாரகா. நானும், நீங்களும் பவித்ரமா பழகறோம்னு நமக்கு தெரியும். அதை இவ நம்ப மாட்டா. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. இது வரைக்கும் நான் பேசலை. இப்ப என்னை  பேச விடுங்க. நான் அழகா அம்சமா இருக்கேன். எந்த தகுதியும் இல்லாத  இவளை, நீங்க கட்டிட்டு அழலையா? அழகான உங்களுக்கு அவலட்சணமான, குணம் கெட்ட இவ, மனைவியா இருக்கறது துரதிஷ்டம். வெளியே போடி.”

துளசி மிரண்டாள்.

“ துவாரகா உனக்கு கிடைச்சதே அதிர்ஷ்டம். குற்ற உணர்ச்சில இவளுக்கு மூளை கலங்கி போச்சு. பெத்த குழந்தைகளை போர்டிங்ல போடப்போறார் துவாரகா. மாமியாரை கை நீட்டி அடிச்ச பேய் இவ. அதனால அவங்க இப்ப முதியோர் இல்லத்துல. இவளை யாரும் மதிக்காதீங்க.”

“ இப்படியா ஒரு பொம்பளை இருப்பா?”

பெண்கள் கடுமையாக விமர்சிக்க, சுஷ்மா கதவை சாத்தினாள். உள்ளே வந்து துவாரகா காலில் விழுந்து அழுதாள் சுஷ்மா.

“ என்னை மன்னிச்சிடு துவாரகா. நான் இன்னிக்கு ரொம்ப கேவலமா நடந்துகிட்டேன்னு எனக்கே தெரியுது. வேற வழியில்லை எனக்கு.”

அவளை தூக்கி நிறுத்தினான் துவாரகா.

நான் தான் உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும். பல பேர் எதிர்ல உன்னை தகாத வார்த்தைகளால அவமானப்படுத்தியிருக்கா துளசி.”

அவன் சுஷ்மாவின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டான்.

“ வேண்டாம் தம்பி. சுஷ்மா சொல்லி எங்களுக்கு எல்லாம் தெரியும். இதுக்கும் மேல பொறுமை வேண்டாம் தம்பி. சட்டரீதியா நடவடிக்கை எடுங்க.”

“சரி சுஷ்மா. நாங்க புறப்படறோம். வாசல்ல இவ என்ன பண்றான்னு தெரியலியே. அவ இப்ப என்ன செஞ்சாலும் அதுக்கு நான் தானே பதில் சொல்லணும்?”

துவாரகா வெளியே வர, துளசி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அங்கே இல்லை.

குழந்தைகளுடன் காரில் ஏறி விட்டான் துவாரகேஷ். சுஷ்மா பட்ட அவமானத்தில் துவாரகா நொறுங்கி போயிருந்தான்.

“ அப்பா! இப்ப வீட்டுக்கா போறோம்?”

“ஆமாண்டா தங்கம். ஏன்மா?”

“வேண்டாம்பா. வீட்டுக்கு போகவே பிடிக்கலை. அம்மாவை பார்க்க பயம்மா இருக்கு. திரும்பவும் சண்டை போடுவாங்க! எங்களுக்கு அங்கே வரவே பிடிக்கலை. அத்தை வீட்டுக்கு போகலாம்.”

உங்க ரெண்டு பேரையும் அத்தை வீட்ல விட்டுட்டு நான் போறேன்.”

அவன் அக்கா சாரதா வீட்டுக்கு வந்தான். கொஞ்சம் உட்கார்ந்து விட்டு நடந்த சகலமும் சொன்னான். அக்கா அழுது விட்டாள்.

“ தம்பி! சந்தேகப்படற மனைவிகள் உலகத்துல நிறைய உண்டு. பொசசிவ் நெஸ் எல்லா மனைவிகளுக்கும் உண்டு. அழகான ஒரு பெண்ணை, தன் கணவன் பார்த்தா, எந்த மனைவிக்கும் கோபம் வரும். ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் ஹார்மோன்கள் சேட்டை பண்ணும் போது இந்த மாதிரி விபரீதம் வரத்தான் செய்யும். இவளுக்கு நிச்சயமா மன நிலைல கோளாறு இருக்கு. நீ டாக்டரை பார்த்தே ஆகணும். உன் வாழ்க்கை இப்படி பாழா போச்சேடா.”

“அக்கா! குழந்தைகள் இங்கே இருக்கட்டும். நான் புறப்படறேன்.”

“நீயும் இரப்பா.”

“வீட்ல போய் இவ என்ன செய்வான்னு தெரியலியே?”

“தற்கொலை பண்ணிப்பான்னு பயப்படறியா? அவ மத்தங்களை சாகடிப்பா. தான் சாக மாட்டா. கவலைப்படாதே.!”

துவாரகேஷ் புறப்பட்டு வீட்டுக்கு வந்தான். வீடு பூட்டியிருந்தது. முறை வாசல் பெண் தென் பட்டாள். அவளை கேட்க, “வரலியே” என்றாள். துவாரகேஷ் குழம்பினான்.

“ சுஷ்மா வீட்லேருந்து துளசி எங்கே போயிருப்பா?”

அதே நேரம் துளசி காளி கோயிலில் இருந்தாள். துளசியை நம்பும், துளசிக்கு தப்பான உபதேசங்களை தந்து, அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்த காஞ்சனாவுக்கு தகவல் தந்து காத்திருந்தாள். காஞ்சனாவுக்கு ஒரு தனிக்கதை உண்டு. அது பிறகு. இதோ காஞ்சனா வந்து விட்டாள். இவளும் ஒரு ராட்சசி தான்.

என்ன துளசி, திடீர்னு வரச்சொல்லியிருக்கே? முகமே நல்லா இல்லையே?”

“நான் அசிங்கமா இருக்கேன்னு நீயும் சொல்ல தொடங்கிட்டியா?”

“நான் அந்த அர்த்தத்துல சொல்லலைடி. என்ன பஞ்சாயத்து?”

துளசி ஒன்று விடாமல் சொன்னாள்.

“ ஓ…சாதாரணமா நீதான் மத்தவங்களை அசிங்கப்படுத்துவே. இப்ப அவ உன்னை வச்சு செஞ்சிட்டாளா?”

“உனக்கு சந்தோஷமா இருக்கா. தெருவுல போற ஆம்பளைக்கு கூட என்னை பாக்க பிடிக்கலையாம். இப்ப இவளும் பேசறா. ஊரே என்னை அசிங்கப்படுத்துது.”

“காரணம் நீ. அந்தரங்கமா உன் புருஷனை கைக்குள்ள வச்சுக்க தவறிட்டே.”

“அவர் மரத்து போயிட்டாராம். அதை ஆதார பூர்வமா நிரூபிக்கறார். எனக்கு இது இன்னும் அவமானம்! மாமியாரை ஹோம்ல விட்டாச்சு. புள்ளைங்களை கொடை பள்ளில சேர்க்க ஏற்பாடு நடக்குது.”

“உன் பிடிமானங்கள் எல்லாம் கழலுது. துவாரகா இனி வீட்டுக்கே வராம போனா ஆச்சர்யம் இல்லை.”

“வழி சொல்ல உன்னை கூப்பிட்டா என்னை கலவரப்படுத்தறியா?”

“உன் புருஷனை தக்க வச்சுக்க உனக்கு துப்பில்லை.”

“வழி சொல்லப்போறியா? இல்லையா?”

“ நான் ஒரு மந்திரவாதி கிட்ட உன்னை கூட்டிட்டு போறேன். அவர் வசிய மருந்து தருவார். அதை எப்படி எந்த மாதிரி உபயோகப்படுத்தணும்னு சொல்லுவார். அதை செஞ்சா துவாரகாவை உன் பின்னால நாய் மாதிரி சுத்த வைக்கலாம். ஆனா நிறைய செலவாகும்.”

“நான் என் நகைகளை வித்து தர்றேன். ஏற்பாடு செய் காஞ்சனா.”

“நீ நெனச்சது நடந்தா என்னையும் கவனி.”

“கண்டிப்பா செய்யறேன். என் பசங்களை கொடைல விட்ட பிறகு மந்திரவாதியை நான் பார்க்க ஏற்பாடு செய்.!”

“அதுக்கு முன்னால உன் வீட்டு விலாசத்தை எனக்கு குடு.”

“ எதுக்கு காஞ்சனா என் விலாசம்?”

“பார்த்தியா, என்னையே சந்தேகப்படறே நீ. உன் வீட்டுக்கு வந்து உன் புருஷனை கொத்திட்டு போயிடுவேன்னு நெனச்சியா? இந்த புத்தி தான் உனக்கு எதிரி. வெள்ளையும், சொள்ளையுமா இருக்கற சுஷ்மாவை சந்தேகப்படு. என்னை அப்படி பாக்காதே. நாதியில்லாம ஆயிடுவே. நான் வர்றேன்.”

“கோவப்படாதே காஞ்சனா. எனக்கு என் மேலயே நம்பிக்கை இல்லை. யாரை பார்த்தாலும் சந்தேகமா இருக்கு.”

காஞ்சனா விலகி போக, காளி கோயிலில் மணியடிக்க, துளசி புறப்பட்டாள். மறைவில் நின்று காஞ்சனா ஒரு தடிமனான நபருக்கு துளசியை காட்டி ஏதோ சொல்ல, அவன் துளசியை தன் செல்போனில் படம் பிடித்தான்.

துளசி ஆட்டோவில் ஏற, ஃபோன் அடித்தது. துவாரகா தான். முதலில் எடுக்காதவள், அதன் பிறகு எடுத்தாள்.

“ நீ எங்கேயிருக்கே?”

ஒரு வேளை ரயில்ல தலையை குடுத்திருப்பேன்னு சந்தோஷமா?அப்படி போய் சேர்ந்திருந்தா அந்த தடிச்சியை வீட்டுக்கே கூட்டிட்டு வந்திடலாம்னு எண்ணமா?”

கடுப்பான துவாரகா ஃபோனை வைத்து விட்டான். கதவை கூட திறக்காமல் வீட்டு வாசலில் உட்கார்ந்து விட்டான். வெறுப்பாக இருந்தது. உடம்பு முழுக்க அனல் வீசியது. ஒரு குளியல் போட்டால் தேவலை எனத்தோன்ற உள்ளே போனான். கதவை தாளிடவில்லை. அப்படியே குளியலறைக்குள் நுழைந்து உடைகளை களைந்து ஷவருக்கு அடியில் நின்றான்.

Invisible Cloak…டாக்டர் பல்லவி பளிச்சென சொன்ன சொல், உடம்பில் ஊசியாக குத்தியது. எப்படி டாக்டரால் இதை சொல்ல முடிந்தது? மனோ தத்துவ டாக்டரால் மனதை படிக்க முடியும். என் புத்தியில் என்ன ஓடுகிறது என்பதை கணிக்க முடியுமா? டாக்டரால் எனக்கு நிறைய இதில் உதவ முடியுமா?

துளசி ஆட்டோவை விட்டு இறங்கி உள்ளே வந்தாள். கதவு திறந்து கிடந்தது. எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை. துவாரகா, பிள்ளைகள் இருவரையும் காணவில்லை. உள்ளே வர, பெட்ரூமை ஒட்டி பாத்ரூம் கதவு திறந்திருந்தது.  துளசி நெருங்க, ஷவரிலிருந்து தண்ணீர் கொட்ட,

“ அய்யோ குளிச்சிட்டு ஷவரை மூடாம போயிட்டேனா?”

மூட நெருங்கினாள்.

“ துளசி! நான் குளிக்கறேன்.”

அவன் உருவமும் தெரியவில்லை. குரலும் அவளுக்கு கேட்கவில்லை. ஆனால் அவன் மொண்டு குளிக்கும் தண்ணீர் குவளை மேலும் கீழுமாக போய் வருவது தெரிந்தது. அந்தரத்தில் குவளையும், சோப்பும் மேலும் கீழும் அசைய, டவல் சரக்கென இறங்கியது. மிரண்டு அலறி விட்டாள் துளசி. அங்கிருந்து ஓடினாள். மூச்சிரைக்க சோபாவில் வந்து உட்கார்ந்தாள். சில நொடிகளில் டவலை கட்டிக்கொண்டு துவாரகா வந்து நின்றான்.

“ ஏன் ஓடினே? நான் குளிச்சு முடிச்சிட்டு வர்றேன்.”

இப்போது குரலும் கேட்டது. கண்ணுக்கும் தெரிந்தான்.

“ இப்ப தெரியறீங்க. குரல் கேக்குது. கொஞ்சம் முன்னால ரெண்டும் இல்லை.”

“சோப்பும், குவளையும், டவலும் தனியா அசையறதை பார்த்தேன்.”

“உன் சந்தேகம் புருஷனை தாண்டி, ஜட பொருட்கள் மேலயும் வந்தாச்சா?”

“பசங்க எங்கே?”

“அவங்க அத்தை வீட்ல. இங்கே வர பயப்படறாங்க. நீ என்னை கொடுமை படுத்தினது போதாதுன்னு அவங்களையும் கலவரப்படுத்தினா தாங்குமா?  எனக்கு களைப்பா இருக்கு. நான் படுக்கறேன். “

“உன் புருஷனை நீ தக்க வச்சுக்கலை. அதான் இத்தனை பிரச்னைகளும். மந்திரவாதி வசிய மருந்து தர்றதுக்கு முன்னால பல கேள்விகள் கேப்பாரு. உன்னை நீ தயார் படுத்திக்கோ.”

“நில்லுங்க.”

“எதுக்கு? என்னை என்ன செய்யப்போறே?”

அவனை நெருங்கி வந்து இறுக அணைத்தாள். அவனுக்கு எலும்புகளே நொறுங்கும் படியான அணைப்பு.

“ என்னாச்சு உனக்கு? கட்டிப்பிடிச்சே என் கதையை முடிச்சிட போறியா? புள்ளைங்களை பள்ளில சேர்த்த பிறகு செய். நானும் நிம்மதியா சாகறேன்.”

எனக்கு இன்னிக்கு நீங்க வேணும்!”

“நான் மரத்து போய் பல மாசங்களாச்சு. என்னை விடு. என் மனசு செத்தாச்சு. அதனால ஒடம்பு இயங்காது. தினசரி என்னை கொல்ற உனக்கு இப்ப என் ஒடம்பு கேக்குதா? வெக்கமால்லை உனக்கு? சுஷ்மாவை வேசினு சொன்னியே. அது நீதாண்டி இப்ப. அருவருப்பா இருக்கு. ச்சீய், போ”

அவளை பலவந்தமாக உதறி விட்டு வேகமாக நடந்தான்.

“ தேடி வர்ற மனைவியை அசிங்கப்படுத்தறியா? வசிய மருந்தை வச்சு, என் காலடில உன்னை சுத்த வைக்கறேண்டா!”

(-தொடரும்…)

முந்தையபகுதி – 7 | அடுத்தபகுதி – 9

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...