என்னை காணவில்லை – 7 | தேவிபாலா
அத்தியாயம் – 07
நவராத்திரியில், அது துர்காஷ்டமி நாள். காலை சீக்கிரமே எழுந்து, தானும் குளித்து, குழந்தைகளையும் குளிக்க வைத்தான் துவாரகா. பெண் குழந்தைக்கு பட்டுப்பாவாடை கட்டி தலையை சீவி பின்னலிட்டான்.
“ மூனு பேரும் எங்கே போறீங்க?”
“இந்த ஜெயில்லேருந்து பசங்களுக்கு ஒரு நாளாவது விடுதலை கிடைக்கட்டும். கொலுவுக்கு கூட்டிட்டு போறேன்.”
“நெனச்சேன். பொம்பளைங்க நிறைய வர்ற இடம். ஆசை தீர பார்க்கலாம்.”
“ஆமான்டீ, அதுக்காகத்தான் போறேன். என்ன இப்ப?”
அவள் பதில் சொல்ல வாய் திறக்க, காலிங் பெல் அடித்தது. போய் திறந்தால் அவனது இரு சகோதரிகளும் பட்டு கட்டி நவராத்திரிக்கு அழைக்க வந்திருந்தார்கள். குழந்தைகள் அத்தைகளை கட்டி கொள்ள,
“ அம்மா எங்கே துவாரகா?”
“பாட்டியை ஹோம்ல விட்டாச்சு அத்தே”
“பசங்க என்ன சொல்றாங்க துவாரகா? நாங்க ஃபோன் பண்ணினா அம்மா எடுக்கறதேயில்லை. இது உண்மையா?”
“ஆமாம்கா. இங்கே அம்மாவுக்கு நிம்மதி, பாதுகாப்பு ரெண்டும் இல்லை. வசதியான ஹோம்ல விட்டிருக்கேன்.”
“எதுக்குடா? குத்துக்கல்லாட்டம் நாங்க ரெண்டு பெண்கள் எதுக்கு இருக்கோம்? இப்பவே நாங்க போய் அம்மாவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்.”
“அம்மா, அதை விரும்பலை.!”
“ஏன்டா, மகன் நீ இருக்கும் போது நம்ம அம்மாவுக்கு ஏன் இந்த நிலை?”
“விட்றி கல்பனா. இந்த பேய் கிட்டேயிருந்து அம்மாவை அவன் காப்பாத்தி நல்லதைத்தானே செஞ்சிருக்கான், பாவம்!”
“இதப்பாருங்க, என் வீடு தேடி வந்து என்னை பேய்னு சொன்னா, சொன்ன வாயை கிழிப்பேன். உங்காத்தா, கொழுப்பெடுத்து முதியோர் இல்லம் போனா அதுக்கு நானா பொறுப்பு?”
“எங்கம்மாவை பேசினா, சும்மா இருக்க மாட்டோம்.”
“என்னடீ செய்வீங்க? உங்க மாமியார்களை நீங்க பாத்துக்கற லட்சணம் எனக்கு தெரியாதா? எந்த நேரமும் இங்கே வந்து கொட்டம் அடிக்கறது, உங்க புருஷனெல்லாம் மாப்ளை பந்தா பண்ணிக்கிட்டு சட்டி சோறு கொட்டிக்க இங்கே வந்து நிப்பாங்க. தம்பி நல்லா சம்பாதிக்கறான்னு சுருட்டிட்டு போகத்தானேடீ இங்கே வர்றீங்க.?”
“யாரும் எதையும் சுருட்டலை. எங்கம்மா தான் மாடு மாதிரி உழைக்கறாங்க. என் தம்பி ஒருத்தன் வருமானத்துல, நீ சுக போகமா இருக்கே. இதுல அவனை சந்தேகப்பட்டு எந்த நேரமும் டார்ச்சர் பண்றே. உன் கொரங்கு மூஞ்சிக்கு, ஒரு தகுதியும் இல்லாத உனக்கு, இத்தனை அழகான புருஷன் கிடைச்சும் வாழ தெரியலியே? இவனை தவிர யார் கிடைச்சிருந்தாலும் உன்னை ஓட ஓட விரட்டியிருப்பாங்க. ஒரு வேசி கூட ஆம்பளையை மதிப்பா. நல்ல புருஷனை கேவலப்படுத்தற நீ, அவிசாரியை விட அசிங்கம் பிடிச்சவ. எங்களை மன்னிச்சிடு தம்பி. நாங்க இனி இங்கே வர மாட்டோம். நீ குழந்தைகளோட வாடா. இவ செத்தாத்தான் உனக்கு விடுதலை.”
அவர்கள் வேகமாக வெளியேற, துளசி கொதி நிலையில் இருந்தாள். அவளது மூச்சு காற்றில் அனல் வீசியது.
“ நான் கொரங்கு மூஞ்சியா? எந்த தகுதியும் எனக்கு இல்லையா? அவிசாரியை விட அசிங்கம் பிடிச்சவளா நான்? உன் உடன் பிறப்புகள் என் வீடு தேடி வந்து, என்னை காறி துப்பறாங்க. நீ அதை ரசிக்கறியா?”
“எங்கம்மாவை நீ அடிச்சது தெரிஞ்சும் நான் உன்னை தண்டிக்கலையே! இப்ப மட்டும் எப்படி தண்டிப்பேன்? அவங்க சொன்னது எல்லாமே உண்மை தானே?”
துளசி வெறி கொண்டவள் போல அவன் மேல் பாய்ந்து அவன் சட்டையை உலுக்கினாள்.
“ உன்னை நான் கொல்லப்போறேன்.”
“ஏற்கனவே நான் செத்தாச்சுடி. எப்படி பொணத்தை நீ கொல்லுவே. இவங்க மட்டுமில்லை. உன்னை இனிமே எல்லாரும் இதை விட மோசமா பேசுவாங்க. உன்னை உணர்ந்து, உன் குணத்தை நீ மாத்திக்கலைன்னா, உன் நிலைமை மோசமாகும். கொடூரமான மிருகங்களை கூண்டுல அடைக்கறது எதுக்கு? இதுக்கு மேல நான் பேசலை. பசங்களா! போகலாம்.”
இருவரையும் காரில் ஏற்றினான். காரை எடுத்தான். துளசி அதே வெறி பிடித்த கோலத்தில் நின்றாள். அவளது மேலாக்கு சரிந்து, உள்ளே உடை குலைந்து, மார்புகள் வெளியே தெரியும் கோலத்தில் சுய உணர்வு இல்லாமல் நிற்க, வாசலை கடந்த இருவர் இதை பார்க்க, முறை வாசல் பெருக்கும் பெண் இதை கவனி்த்து விட்டாள். ஓடி வந்து மேலாக்கை சரி செய்தாள்.
“ என்னம்மா? வாசல்ல ஆம்பளைங்க கடந்து போறாங்க.!”
“யக்கா, நாங்க பாக்க விரும்பலை. அழகான பொம்பளையா இருந்தா, கிழவனுக்கும் கிளர்ச்சி வரும். இதை பார்த்தா வயசு பசங்க கூட வாழ்க்கையே வெறுத்து போவாங்க. பாவம் அந்த துவாரகேஷ்!”
இது காதில் பழுக்க காய்ச்சிய கம்பியாக அவளுக்கு இறங்கியது.
“ பார்த்தியா தாயீ..உன் புருஷன், நீ எத்தனை கொடுமை படுத்தினாலும் உன்னை விட்டு போகலை. புரிஞ்சுகிட்டு வாழப்பாரும்மா.”
“ஏன்? முறை வாசல் பண்ண வந்து குடும்பத்துல குண்டு வைக்கப்பாக்கறியா?”
“ம்ஹூம், உன்னை அந்த ஆண்டவனால கூட மாற்ற முடியாது.”
உள்ளே வந்தவள், தன் கொதிப்பு தீர தலையில் தண்ணீரை ஊற்றிக்கொள்ள தொடங்கினாள்.
அதே நேரம், சுஷ்மாவின் வீட்டுக்குள் குழந்தைகளுடன் நுழைந்தான் துவாரகேஷ். சுஷ்மாவின் பெற்றோர் இவர்களை வரவேற்று உபசரிக்க, ஏற்கனவே குழந்தைகளும், பெண்களுமாக வீடு நிரம்பியிருந்து. ஹால் முழுக்க கொலு ஆக்ரமித்திருக்க, குழந்தைகள் இருவரும் உற்சாகமாக, துவாரகேஷூம் தன்னை மறந்து அந்த விழாவில் ஐக்கியமாக, சுஷ்மா நடுத்தர வயது, நாற்பது கடந்த ஒரு பெண்மணியை அழைத்து வந்து துவாரகேஷூக்கு அறிமுகப்படுத்தினாள்.
“ இவங்க டாக்டர் பல்லவி. அகில இந்திய அளவுல முக்கியமான ஒரு சைக்யாட்ரிஸ்ட். பல பேர் இவங்க கிட்ட குணமாகியிருக்காங்க துவாரகா.”
“நானும் குணமாக இந்த சந்திப்பா சுஷ்மா?”
“நோயாளி நீ இல்லை. உன் மனைவி துளசி. நான் டாக்டர் கிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன். இனி நீ பேசலாம். இவங்க என்னை மாதிரி உனக்கு நல்ல தோழியா மாறுவாங்க. நான் உன் குழந்தைகளை அட்டெண்ட் பண்றேன்.”
டாக்டர் பல்லவியுடன் பத்து நிமிஷங்கள் பேசுவதற்குள் பல நாட்கள் பழகியதை போல ஒரு தோழமை வந்தது.
“ சுஷ்மா எல்லாம் சொன்னா. சந்தேகப்படற புருஷன், மனைவி ரெண்டையும் நான் பார்த்து ட்ரீட் பண்ணினதுண்டு. இது உச்சம். அவங்களை நான் பார்க்க நிச்சயமா அவங்க அனுமதிக்க மாட்டாங்க.”
“ஆமாம் டாக்டர்.”
“துவாரகா! நீங்க ரொம்ப நல்லவர். இத்தனை நல்லவனா ஒரு ஆம்பளை இருக்கணும்னு அவசியமில்லை. தப்பான தேர்ந்தெடுப்பு உங்க வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிடுச்சு. அவங்களுக்கான சிகிச்சை என்ன தெரியுமா? நீங்க குடுக்கற பதிலடி தான். அதனால பெரிய புயல் வெடிக்கும். இப்ப மட்டும் வெடிக்கலையா என்ன? இதனால உங்க உணர்வுகளை அடக்கி, வாழ வேண்டிய வயசுல நீங்க வதங்கறது நியாயமில்லை.”
“மனசு, என் உடலை முடக்கிடுச்சு.!”
“கூடாது துவாரகா. நீங்க இதை எடுத்து சொல்லியும் அவங்க உங்களைத்தான் குற்றம் சாட்டறாங்க. அவங்களை சரி பண்ண அதிர்ச்சி வைத்தியம் தரணும்.”
“எப்படி டாக்டர்?”
“ முதல்ல உங்களுக்கு ஒரு கவுன்சிலிங் அவசியம். ஃபிசிகல், மென்டல் செக்கப் தேவை. ரெண்டு ரவுண்ட் அது போய் உங்களை தயார் பண்ணணும். சரியா?”
“டாக்டர்! மாற்ற வேண்டியது அவளை, என்னை இல்லை.!”
“அவங்களை மாற்றணும்னா உங்களை தயார் படுத்தணும் துவாரகா. கணவனோ, மனைவியோ ஒருத்தரால இன்னொருத்தருக்கு அளவுக்கு மீறின கொடுமைகள் இழைக்கப்படும் போது, சகலமும் தாண்டி சகிச்சுக்கணும்னு அவசியமில்லை. தாய், தகப்பன், சகோதர உறவுகளை விட கணவன் மனைவி உறவு உன்னதமானது. காரணம் இந்த உறவுல மட்டும் தான் மனசையும் தாண்டி ஒடம்பும் வருது. எல்லாம் சரியா இருந்தா தாம்பத்யம் சொர்க்கம். பிசிறடிச்சா, இதை விட நரகம் வேற எதுவும் இல்லை. அதனால, முதல்ல நம்மை நாம நேசிக்கணும். நமக்கு கஷ்டம் தர்ற யாரையும் ஓரளவுக்குத்தான் மன்னிக்கலாம். இல்லைன்னா ஆயுதம் எடுக்க வேண்டியது தான். நான் சொல்றது புரியுதா?”
“புரியுது டாக்டர்.”
“நாளைக்கே என் க்ளீனிக் வர்றீங்களா? கவுன்சிலிங் ஆரம்பிக்கலாம்.”
“சரி டாக்டர். ஸாரி டு ஸே, என் விஷயத்துல உங்க முயற்சிகள் எல்லாமே பலிக்கும். ஆனா துளசி சங்கதில நீங்க கற்ற வித்தைகள் எதுவும் எடுபடாது.”
“பாக்கலாம். அப்புறமா உங்களுக்கு ரெண்டு முறை ஏற்பட்ட வினோத அனுபவங்களை சுஷ்மா சொன்னா.”
“ஆமாம் டாக்டர். துளசி அதை பொய், பித்தலாட்டம்னு விமர்சிக்கறா. அம்மா, சுஷ்மா குழம்பி போறாங்க.”
“நான் அதை எப்படி எடுத்துக்கட்டும்?”
“ஒரு மனோ தத்துவ டாக்டரா இதுக்கு நீங்க தான் பதில் சொல்லணும் டாக்டர்”
டாக்டர் பல்லவி அவனை உற்று பார்த்தார் முப்பது நொடிகளுக்கும் மேல்.
“பார்வையால ஆழ் மனசுல உள்ளதை படிக்கறீங்களா டாக்டர்?”
“ Invisible Cloak”
தடாலென எழுந்து விட்டான் துவாரகா. அவனால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. டாக்டர் வாயில் அது வரும் என அவன் எதிர் பார்க்கவில்லை. அதற்குள் சுஷ்மா வந்து விட்டாள்.
“ ரெண்டு பேரும் பேசினீங்களா?”
துவாரகா இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை.
“ ரெண்டு பேரும் சாப்பிட வர்றீங்களா?”
“சுஷ்மா, எனக்கு அவசர வேலை இருக்கு. நான் போகணும்மா. தாம்பூலம் தந்துரு. துவாரகா! நீங்க ஃபோன்ல ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்துடுங்க.”
டாக்டர் பல்லவிக்கு தாம்பூலம் தந்து சுஷ்மா அனுப்பி வைத்தாள். அவனை சாப்பிட அழைத்தாள். குழந்தைகள் இருவருக்கும் அவளே பக்கத்தில் இருந்து பரிவுடன் சாப்பாடு ஊட்ட,
“அப்பா! இந்த சுஷ்மா ஆன்ட்டி எங்களுக்கு அம்மாவா இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்? நாங்க கொடைக்கானல் போகாம இங்கியே இருந்திருப்போம். பாட்டியும் ஹோமுக்கு போகாம நம்மோட இருந்திருப்பாங்க.”
துவாரகேஷ் முகத்தில் இன்னும் அதிர்ச்சி அதிகமானது.
“ ஸாரி சுஷ்மா..குழந்தைங்க புரியாம பேசறாங்க. நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.”
“எதுக்கு துவாரகேஷ்? அவங்க மனசுல யார் அன்பை காட்டறாஙகளோ, அவங்க தான் அம்மான்னு பதிவாகியிருக்கு. அதுல தப்பில்லையே. எல்லாத்துக்கும் கடவுள் ஒரு பதிலை வச்சிருக்கும். அது நமக்கு வந்து சேர வேண்டிய நேரத்துல சேரும்.!”
துவாரகேஷ் மாலை வரை குழந்தைகளுடன் அங்கு தான் இருந்தான். அவன் புறப்பட பத்து நிமிஷங்கள் இருக்கையில் வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பத்ரகாளி போல துளசி இறங்கினாள். புயலாக உள்ளே வந்தாள்.
“ தெரியும்டா. நீ வந்தது போதாதுன்னு, இந்த தே……..யா வீட்டுக்கு என் புள்ளைங்களையும் கூட்டிட்டு வந்திருக்கியா?”
(தொடரும்…)
முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8