என்னை காணவில்லை – 6 | தேவிபாலா
அத்தியாயம் – 06
வீட்டுக்கு வர துவாரகா விரும்பவில்லை. ஆனால் குழந்தைகள் இருவரும் இருப்பதால் வராமல் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, அம்மாவை அடித்து அவமானப்படுத்திய துளசிக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடக்கூடாது. மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பினான். உரத்த துளசியின் குரல். பதிலுக்கு மாமனார், மாமியார் குரல்.
“ நீ செஞ்சது மன்னிக்க முடியாத குற்றம். எப்படி உன் மாமியாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவே?”
“நானா அனுப்பினேன்? அவங்க பையன் கொண்டு போய் விட்டார்.”
“பாட்டியை அம்மா அடிச்சாங்க.”
குழந்தை சொல்ல, பெரியவர்கள் பதறி போனார்கள்.
“ என்னடீ சொல்லுது குழந்தை?”
“ஆமா, அவங்க என்னை அடிச்சாங்க. நான் பதிலுக்கு அடிச்சேன்.”
“அடிப்பாவி! புருஷனை பெத்தவ, தாய்க்கும் மேல. அவங்களை கை நீட்டி அடிச்சது மகா பாவம். கடவுள் உன்னை சும்மா விடுமா?”
“இவ மாப்ளையை பற்றி தப்பு தப்பா பேசியிருப்பா. தாங்க முடியாம அந்தம்மா அடிச்சிருப்பாங்க. இவ மாப்ளையை சித்ரவதை பண்றதை நாமே பல முறை பார்த்திருக்கோமே. இப்ப என்ன செஞ்சாளோ?”
துவாரகா உள்ளே நுழைந்தான்.
“ வாங்க மாமா, அத்தே வாங்க.”
“மாப்ளை, நாங்க உங்க கால்ல விழறோம். இந்த பாவிக்கு பயந்து அம்மாவை முதியோர் இல்லத்துல விட்டுட்டீங்களே. கூட்டிட்டு வந்துடுங்க மாப்ளை.”
“வேண்டாம் அத்தே. இங்கே என் அம்மாவுக்கு பாதுகாப்பு இல்லை. அங்கே நிம்மதியா இருக்கட்டும். குழந்தைகளை கொடைக்கானல் போர்டிங்ல சேர்க்க போறேன்.”
“மாப்ளே, அவங்களையெல்லாம் அனுப்பறதை விட இந்த பாவியை அடிச்சு துரத்துங்க.”
“பெத்த மகளை துரத்திட்டு மாப்ளைக்கு மாமாவா இருக்க போறீங்களா?”
அப்பா அவளை அடிக்கப்பாய, அம்மா தடுத்தாள்.
“ வேண்டாங்க.”
“ஏண்டீ, இப்பவும் இந்த கேடு கெட்டவளுக்கு ஆதரவா? என்னை அவ என்ன சொன்னானு கேட்டே இல்லை?”
“என்னை புரிஞ்சுகுங்க. இந்த நாற முண்டையை அடிச்சு, உங்க கையை கறை படுத்திக்காதீங்க. அவ நிச்சயமா நாசமா போறது உறுதி. புருஷனையும், அவன் குடும்பத்தையும் உருக்குலைச்ச இவளுக்கு நரகத்துல கூட இடம் இருக்காது. மாப்ளை! நாங்க புறப்படறோம். குழந்தைகளை பத்திரமா சேர்த்துட்டு, இவளை விவாகரத்து பண்ற வழியை பாருங்க. இவ வேலையும் பாக்கலை. உங்க உழைப்புல சுக போகமா வாழ்ந்துட்டு உங்களையே பதம் பாக்கறா. நன்றி கெட்டவ.”
“ஏற்கனவே இந்த ஆளு பொம்பளை பித்து புடிச்சு அலையறான். என்னை துரத்திட்டு எவளையாவது இவனுக்கு கூட்டிக்கொடுக்க வந்தீங்களா ரெண்டு பேரும்? இனி இந்த படியை மிதிச்சா காலை வெட்டுவேன்.”
“ மாமா, புறப்படுங்க சீக்கிரம்.”
“மாப்ளை, இவ நிச்சயமா மன நோயாளி தான். டாக்டரை இவ கண்டிப்பா பார்க்கணும். யோசிங்க.”
அவர்கள் இருவரும் அவசரமாக புறப்பட்டு போக, அப்படியே வாசலில் உட்கார்ந்து விட்டான் துவாரகேஷ். குழந்தைகள் இருவரும் அருகில் வந்தார்கள். இருவர் முகத்திலும் பயம் அப்பி கிடந்தது. துவாரகேஷூக்கு தன் பிள்ளைகளை பார்க்க பாவமாக இருந்தது.
“ அப்பா! பாவம் பாட்டி! அவங்களை அம்மா அடிச்சப்ப எங்களால தாங்க முடியலை. பாட்டி எத்தனை நல்லவங்க. எங்களையும் பாட்டி கிட்ட கொண்டு போய் விட்ருங்க. அம்மாவை எங்களுக்கு பிடிக்கலைப்பா.”
“அங்கே ஸ்கூல் கிடையாதுப்பா. நான் உங்களை வெளியூர் பள்ளிக்கூடத்துல சேர்த்து விடறேன். அப்பா வந்து பாத்துக்கறேன். சரியா?”
“பசிக்குதுப்பா.”
“வாங்க! உங்களை ஓட்டலுக்கு கூட்டிட்டு போறேன். ட்ரஸ் மாத்தி விடறேன்.”
உள்ளே வந்து குழந்தைகளை அவன் தயார் செய்ய,
“ எங்கே பயணம்?”
“பெத்த பிள்ளைகளுக்கு பசிக்குமேங்கற எண்ணம் கூட இல்லாதவ கிட்ட நான் பேசினா, எனக்கது அசிங்கம். வாங்கடா கண்ணுகளா.!”
அவர்களை காரில் ஏற்றி ஓட்டலுக்கு அழைத்து போனான். நன்றாக சாப்பிட வைத்தான். அவன் சாப்பிடவில்லை.
“ நீ ஏன்பா சாப்பிடலை?”
“எனக்கு பசிக்கலைப்பா. நீங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிடுங்க.”
குழந்தைகளுடன் அவன் வீடு திரும்ப, இரவு பத்து மணி. துளசி ஹால் சோபாவில் காலை ஆட்டிய படி டீவி பார்த்து கொண்டிருந்தாள். பெற்ற குழந்தைகளை பற்றி கவலையில்லை. கணவன், தன்னை பெற்றவர்கள் மேல் மரியாதை இல்லை. இவளை மாதிரி ஒரு பெண் ஜென்மம் இந்த பூமியி்ல் இருக்க முடியுமா? இவளை உதறவும் இவள் அனுமதிக்க மாட்டாள். அதற்கும் ரகளை செய்வாள். தினசரி நரகத்தையும் நான் அனுபவிக்க முடியுமா.?
குழந்தைகளை உறங்க வைத்தான். அவளுடன் சேர்ந்து உறங்குவதை அவன் நிறுத்தி சில மாதங்கள் ஆகி விட்டது. ஒரு இளம் ஆண் மகனுக்குள்ள எந்த உடல் ரீதியான இச்சையும் அவனிடம் இல்லை. அந்த சித்தர் அந்தரங்க பரிசோதனை செய்த போதே இதை சொல்லி விட்டார். இதை துளசியிடம் சொல்ல வேண்டும். மனதில் ஏறுமா?
பெட்ரூமுக்கு வந்தான். துளசி நிமிர்ந்து பார்த்தாள்.
“ என்ன? எவளும் கிடைக்கலைன்னு இன்னிக்கு எங்கிட்ட வந்திருக்கியா?”
“உனக்கு இதைத்தவிர வேற நினைப்பே இல்லையா துளசி.? அம்மாவை முதியோர் இல்லத்துல சேர்த்தாச்சு. பெத்த குழந்தைங்க உன்னை கண்டா பயந்து ஓடுது. உன்னை பெத்தவங்க உனக்கு சாபம் போடறாங்க. யார் வீட்டுக்கு நீ போனாலும், எந்த நேரத்துல, யாரை நீ கேவலப்படுத்துவியோன்னு பல பெண்கள் மிரண்டு போறாங்க. ஏன் இப்படி இருக்கே? இந்த உலகத்துல உன் பக்கம் பேச யாருமே இல்லை. இது உனக்கு நல்லதா? அந்த சித்தர் சாமி எனக்கு அந்தரங்க பரிசோதனை செஞ்சு என்ன சொன்னார் தெரியுமா? நீயே பாரு.”
கதவை சாத்தி விட்டு அவன் அதை விளக்க,
“ நான் அழகா இல்லை. அதனால என் பக்கத்துல வரும் போது உனக்கு எந்த இயக்கமும் இல்லை. அதே சுஷ்மா இருந்தா, வீறு கொண்டு….”
“அடச்சீ, இனி உங்கிட்ட பேசி லாபமில்லை. அடுத்த வாரம் குழந்தைகளை கொடைல சேர்க்கப்போறேன்.”
“அம்மா, பசங்க யாரும் இல்லாம, ஜல்சா பண்ண திட்டமா?”
“அவங்களை விட்டுட்டு வந்து விவாகரத்துக்கு அப்ளை பண்ணப்போறேன்.”
“நான் தர மாட்டேன். கோர்ட்ல வச்சு உன்னை எப்படி நாறடிக்கணும்னு எனக்கு தெரியும். அதை நான் செய்யறேன்.”
சரக்கென வெளியே வந்து விட்டான் துவாரகேஷ். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் உறங்கி போனான். கெட்ட கனவுகளாக வந்து இருக்கும் உறக்கமும் கலைந்தது.
மறு நாள் காலை ஆஃபீசுக்கு வர, சுஷ்மா கொடை பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன் தயாராக இருந்தாள்.
“ குழந்தைகளை வெளியூர்ல விட துளசி என்ன சொன்னாங்க?”
“அவ தடுக்கலை. அதைப்பற்றி அவளுக்கு கவலையும் இல்லை சுஷ்மா. ஒரு தாயா இருக்க அவளுக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு ஆம்பளை, அந்நிய பெண் கிட்ட பேசக்கூடாததை உங்கிட்ட நான் சொல்றேன் சுஷ்மா!”
நேற்று இரவு நடந்ததை துவாரகேஷ் சொன்னான். சுஷ்மாவுக்கு கண்கள் கலங்கி விட்டது.
“ எல்லா தகுதிகளும் நிறைஞ்ச ஒரு முழுமையான ஆம்பளை நீங்க. இப்படி ஒரு பேய்க்கு வாழ்க்கைப்பட்டு சிதைஞ்சு போச்சே உங்க வாழ்க்கை.!”
“அவளுக்கு, அவளோட நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்னு பார்த்தா, அதையும் ஆபாசமா விமர்சனம் பண்றா. விவாகரத்துனு வந்தா, அதுக்கும் என் மேல குற்றம் சாட்டி கேவலப்படுத்துவா. இங்கே சட்டமும், நீதியும் கூட பெண்களுக்குத்தான் சாதகமா இருக்கு சுஷ்மா.”
“எனக்கொரு யோசனை தோணுது துவாரகா.”
“நீ தற்கொலை பண்ணிக்கோன்னு சொல்றியா?”
“ஏன் துவாரகா இப்படி பேசற? நீ வாழணும். நம்ம கம்பெனில வெளி நாடு போற வாய்ப்புகள் நிறைய இருக்கு. உன் தகுதிக்கு சுலபமா அது கிடைக்கும். அஞ்சு வருஷ ஒப்பந்தம். நீயேன் போகக்கூடாது? உனக்கும் இந்த நரகத்துலேருந்து விடுதலை கிடைக்குமில்லையா?
“இல்லை சுஷ்மா. இங்கே இருந்தா, வாரத்துல மூணு நாள் அம்மாவை போய் பார்ப்பேன். வாரத்துக்கு ஒருநாள் சகோதரிகள் வீட்டுக்கு போவேன். மாசத்துக்கு ஒரு நாள் கொடை போய் குழந்தைங்க கூட இருப்பேன். எல்லாத்துக்கும் மேலா தினசரி உன்னை பார்ப்பேன். சுஷ்மா! நீ எனக்கு தோழி, நல்ல ஆலோசகர், வழி காட்டி, எல்லாத்துக்கும் மேலா, காமம் கலக்காத தூய்மையான நட்பு நம்முது. இதையெல்லாம் இழந்து வெளி நாட்டுக்கு நான் போகணுமா?”
“எனக்கு புரியுது துவாரகா. ஆனா இதையெல்லாம் தாண்டி, தினசரி நரகம்னு ஒண்ணை நீ சந்திச்சா தாங்குவியா?”
“ இத்தனை மாசங்கள் அனுபவிச்ச நரகத்துக்கு பதில் தர சில ஏற்பாடுகளை நான் செய்ய தொடங்கிட்டேன் சுஷ்மா.”
“ஏற்பாடுகளா? புரியலை எனக்கு.!”
“எனக்கே முழுசா இன்னும் புரியலை. புரியும் போது முதல்ல உனக்குத்தான் நான் சொல்லுவேன் சுஷ்மா.”
குழந்தைகளை வெளியூரில் சேர்க்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சகலத்துக்கும் சுஷ்மா முழு பொறுப்பை ஏற்றாள்.
“ துவாரகா. இது நவராத்திரி காலம். எங்க வீட்ல கொலு வச்சிருக்கோம். நீ, உன் ரெண்டு குழந்தைகளோட நாளைக்கு வா.”
“பெண்கள் தான் பிரதானம். நீ என்னை கூப்பிடற. மகிஷாசுர மர்த்தினியா பெண்கள் மாறணும். இங்கே ஒரு ராட்சசியை வதம் பண்ண நான் தான் மகிஷாசுர மர்த்தனனா அவதாரம் எடுக்கணும்.”
“ நாளைக்கு எங்க வீட்ல உனக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு. கேம்ஸ் வச்சிருக்கேன். என் லேப்டாப் ஹேங்க் ஆகுது. நீதான் மின்னணு ஏரியால மாஸ்டராச்சே, பாரேன்.”
அவன் பத்தே நிமிஷங்களில் அதை சரி செய்து விட்டான்.
“ அபாரம். நீ கம்பெனி வேலையை விட்டுட்டு தனியா இதுக்காக ஒரு மின்னணு மையம் தொடங்கினா, கோடீஸ்வரன் ஆகலாம். உன் வாழ்க்கையே மாறும்.”
அவன் முகம் மாறியது. அதில் ஒரு இறுக்கம் தெரிந்தது. சிரிப்பு மறைந்து, கடுமை பரவியது.
“ ஆமாம் சுஷ்மா! இந்த மின்னணு அறிவு, என் வாழ்க்கை பாதையை நிச்சயமா மாற்றப்போகுது. அதுக்கான சில ஆராய்ச்சிகள் தொடங்கியாச்சு.”
அவனது இந்த பேச்சும், முகத்தில் புதிதாக வந்து அமர்ந்த குரூரமும், சுஷ்மா இது வரை பாராத துவாரகேஷை அவளுக்கு காட்டியது. அவனது முக நரம்புகள் கணிசமாக இடம் மாறியது தெரிந்தது. அவனை நெருங்கி,
“துவாரகா! என்னாச்சு ஒனக்கு? சம்திங் அன்யூஷூவல்”
அவனிடம் பதிலே இல்லை. சுஷ்மா அவனை பிடித்து உலுக்கினாள்.
“ துவாரகா! ஆர் யூ ஆல்ரைட் நௌ?”
“ Invisible Cloak…”
இந்த வார்த்தைகளை அவனது உதடுகள் மூன்று முறை உச்சரிக்க, அதை உச்சரிக்கும் போது, அவனது விழிகள் பெரிதாகி, குரலும் ஒரு மாதிரி கர்ண கடூரமாக ஒலித்தது.
சுஷ்மாவுக்கு பயத்தில் வியர்த்தது.
( தொடரும்…)
முந்தையபகுதி – 5 | அடுத்தபகுதி – 7