பூத்திருக்கும் விழியெடுத்து – 14 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 14 | முகில் தினகரன்

அத்தியாயம் –14

சோக் அங்கே சென்று, அங்கிருந்த ஒருவரிடம், “மிஸ்டர் சிவராம கிருஷ்ணன்?” என்று கேட்க, அவர் மூடியிருந்த கதவைக் காட்டி, “உள்ளே போங்க” என்றார்.

நிதானமாய் அந்தக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்த அசோக்கை, “வாங்க மிஸ்டர் அசோக்” என்ற குரல் அழைக்க, உள்ளே சென்றான்.

“உட்காருங்க மிஸ்டர் அசோக்”

 உட்கார்ந்தவன் தன் எதிரில் அமர்ந்திருந்த மனிதரை பார்வையால் ஆராய்ந்தான். தன் வயதுதான் இருக்கும் அவருக்கு. நல்ல ஃபிட்டான உடல் வாகு.  தினப்படி எக்சர்ஸைஸ் செய்வார் போல.

“ஐ யாம் சிவராமகிருஷ்ணன்… ஃபைனல் ஜட்ஜ் ஆஃப் திஸ் காம்படிஸன்”

அசோக் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினான்.

“என்னுடைய முடிவு உங்களுக்கு லேசான அதிருப்தியைக் குடுத்திருக்கும்ன்னு நினைக்கறேன்… ஆம் ஐ கரெக்ட்?” கண்களால் புன்னகைத்துக் கேட்டார்.

 “லேசான திருப்தி இல்லை சார்… பயங்கரமான அதிருப்தியைத்தான் தந்திருக்கிறது… ஆக்சுவலா நானே உங்களைச் சந்திச்சு…. உங்களோட ஒரு பலமான வாக்குவாதம் பண்ணனும்னு நெனைச்சிட்டிருந்தேன்… நல்லவேளையா நீங்களே கூப்பிட்டுட்டீங்க”

 “நான் சில உண்மைகளை உங்க கிட்ட இப்போ ஓப்பன் பண்ணப் போறேன்… அதை நீங்க மௌனமாய் கேட்டுக்கணும்… பொறுமையா ஏற்றுக்கணும்!..இதை வெச்சு எந்த பிராப்ளத்தையும் கிரியேட் பண்ணக் கூடாது!… நீங்க இதுக்கு சம்மதிச்சாத்தான் நான்?”

அசோக் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அந்த சிவராமகிருஷ்ணனை சில விநாடிகள் பார்த்து விட்டு, “ம்… சொல்லுங்க…நான் பிராப்ளம் கிரியேட் பண்ண மாட்டேன்” என்றான்.

ஆக்சுவலா….அந்த விசாகா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் வைசாலி மேடம்… ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டதால்தான் அப்படியொரு ரிசல்ட்டை நான் அனௌன்ஸ் பண்ண வேண்டியதாய்ப் போச்சு”

 ‘விருட்’டென்று தலையைத் தூக்கிப் பார்த்து, “ப்ளீஸ்… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க சார்” கடுப்பாகவே கேட்டான் அசோக்.

 “நியாயப்படி…..அவங்க காலேஜுக்குத்தான் சேம்பியன் டைட்டில் குடுக்கணும்… அதைத்தான் நானும் செலக்ட் பண்ணியிருந்தேன்!… பட்… அந்தப் பெண் தன் கல்லூரி தோற்கணும்கற விஷயத்துல ரொம்பவே சீரியஸா இருந்தாங்க!… அது மட்டுமில்லை மிஸ்டர் அசோக்..  உங்க மதர்ஸ் இண்டியா காலேஜுக்கு சேம்பியன் பட்டத்தைக் குடுக்கச் சொல்லியும் சிபாரிசு பண்ணினாங்க… ஆனா… அந்த இறுதிப் போட்டில உங்க பசங்க சொதப்பின சொதப்பை மொத்த ஆடியன்ஸும் பார்த்துச் சிரிச்சிட்டாங்களே?… ஸோ… அங்கியே உங்க சேம்பியன்ஷிப் கனவு பனால் ஆயிடுச்சு… அதனால் அவளோட அந்தக் கோரிக்கையை மட்டும் நான் நிராகரிச்சிட்டேன்!…”

அசோக் தலையை மட்டும் மேலும், கீழும் ஆட்ட,

”நான் ஒரு விஷயம் கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” சிவராம கிருஷ்ணன் கேட்டார்.

இட, வலமாய்த் தலையாட்டினான் அசோக்.

“நீங்க யார்?… உங்களுக்கும் அந்த வைசாலிக்கும் என்ன உறவு?… படாதபாடு பட்டு தன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து… இந்தப் போட்டிக்கு அழைத்து வந்து… இன்கேயும் ராத்திரி பகல் பாராம டிரெய்னிங் குடுத்து… வெற்றிக்கனியைப் பறிக்க வைத்த அந்தப் பெண் ஏன் அந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை?” அசோக்கின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கேட்டார் அந்த சிவராமகிருஷ்ணன்.

என்ன சொல்ல முடியும் அவனால்?

 “அவள் என் முன்னாள் காதலி சார்… இருபத்திஐந்து வருடங்களாக பிரிந்திருந்து விட்டு இப்பத்தான் சந்திக்கிறோம்!…”ன்னு அப்பட்டமா சொல்லவா முடியும்?

 “என்ன மிஸ்டர் அசோக்… திடீர்னு அமைதியாயிட்டீங்க?… நான் கேட்கக் கூடாத விஷயத்தை கேட்டுட்டேனா?” சிரித்தபடி கேட்டார் சிவராமகிருஷ்ணன்.

 “நீங்க கேட்கக் கூடிய விஷயமாயிருந்தாலும்.,.. நான் சொல்லக் கூடிய விஷயமாய் அது இல்லாததால்… என் பதில் “தெரியலை சார்”

அவன் சொல்ல விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட அந்த மனிதர்,. “இட்ஸ் ஓ.கே… நீங்க கிளம்புங்க…. உங்க பசங்களெல்லாம் ஊருக்குப் போக காத்திட்டிருப்பாங்க” என்றார்.

 “எனி வே…. என்னை நம்பி,…. என்னை மதிச்சு… இந்த உண்மையை நீங்க என் கிட்ட சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்… நான் வர்றேன் சார்”

அங்கிருந்து வெளியேறி தன் அறைக்கு வரும் வரை தீவிர சிந்தனையிலேயே நடந்து வந்தான் அசோக். “ஏன்…ஏன் வைசாலி தோல்வியை விரும்பி ஏத்துக்கிட்டா?… அவ மாறிட்டாளா?… அதை எனக்கு உணர்த்தத்தான் தோல்வியை ஏத்துக்கிட்டாளா?… இத்தனை வருஷமா கல்யாணம் பண்ணிக்காமலே வாழ்ந்தது கூட எனக்காகத்தானா?… அப்படின்னா நான் அவளை மறக்க முடியாமல் தனியாக தவ வாழ்க்கை வாழ்வது போல் அவளும் எனக்காக தவ வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்காளா?….”

 “என்ன அசோக்… நான் சொன்னதைக் கேட்காம அந்த ஜட்ஜ் கிட்ட சண்டை போடப் போயிட்டீங்களா?” ரூபா கோபமாய்க் கேட்டாள்.

 “நான் போகலை… அவர்தான் என்னை வரச் சொல்லி ஆளனுப்பினார்”

 “வாட்?… அவர் உங்களை வரச் சொன்னாரா?… எதுக்கு?…”

 அங்கு நடந்தவற்றை இந்த ரூபாவிடம் சொல்லலாமா?… வேண்டாமா? என்று சில விநாடிகள் யோசித்து விட்டு, பிறகு நிதானமாய்ச் சொன்னான்.

அவன் சொன்னவற்றை எந்தவித இடையூறுமின்றி மொத்தமாய்க் கேட்டு முடித்த பின், “பார்த்தீங்களா?… நான் சொன்னது சரியாய்ப் போச்சு பார்த்தீங்களா?” என்றாள் ரூபா.

 “என்ன….என்ன சரியாய்ப் போச்சு?”

“நான் அன்னிக்கு அவ கிட்டப் பேசிட்டு வந்து என்ன சொன்னேன்?… வைசாலி இப்ப சுத்தமா மாறிட்டா… தோல்வியை ஏத்துக்கற பக்குவத்துக்கு வந்திட்டா… இதுநாள் வரையில் வாழ்ந்த வாழ்க்கையே தப்பு…ன்னு புரிஞ்சுக்கிட்டா… இன்னமும் மனசுல உங்களைத்தான் நெனச்சுக்கிட்டு கல்யாணமே பண்ணிக்காம உங்களுக்காக காத்திட்டிருக்கா…ன்னு சொன்னேன் அல்ல?”

அதை ஆமோதிப்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டிய அசோக், “ரூபா… எனக்கு வைசாலி கூடத் தனியா பேசணும்” என்றான்.

 “வெரி குட்… இதை…இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!… பேசுங்க… வாழ்க்கைல ரெண்டு பேரும் மீண்டும் இணைவதற்கு இதுவே ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டும்”

 “இணையறதா?… வாட் யூ மீன்?” அசோக் தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்க,

 “இணையறதுன்னா…. கல்யாணம் பண்ணிக்கறதுதான்” சொல்லி விட்டுக் கண்ணடித்தாள் ரூபா.

 “காமெடி பண்ணாதீங்க மேடம்… கிட்டத்தட்ட ரெண்டு பேருமே நாற்பதை தாண்டியாச்சு… இப்பப் போய் கல்யாணம்னு சொன்னா ஊர் சிரிக்கும்” அசோக் சிரித்தபடி மறுக்க,

 “இங்க பாருங்க சார்… பின்னால் பேசுபவர்கள் புகழ்ந்து பேசினால் என்ன?… இகழ்ந்து பேசினால் என்ன?…காதில் வாங்காமல் அடுத்த அடி எடுத்து வைத்து முன்னேறிக்கிட்டே போகணும் சார்… ஏன்னா நாலு பேருடைய வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக் கொள்வது மிகச் சிறந்தது சார்”

 “அப்ப… அவளைத் தனியா சந்திச்சுப் பேசும் போது கல்யாணத்தைப் பத்திக் கேடுடவா?” அசடு வழியக் கேட்டான் அசோக்.

 “ஹய்யோ… இத்தனை நேரமா அதைத்தான் சார் சொல்லிக்கிட்டிருக்கேன்” முன் நெற்றியில் அடுத்துக் கொண்டு சொன்னாள் ரூபா.

 “சரிங்க மேடம்… கேட்டுடறேன்… பொதுவா… நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து கிடைக்கின்றன… நல்ல அனுபவம் நாம எடுக்கின்ற தவறான முடிவிலிருந்து கிடைக்கின்றது… நான் எப்பவோ எடுத்த தவறான முடிவு எனக்கு நல்ல பாடம் கற்பிச்சுக் குடுத்திருக்கு… இப்பவாவது நல்ல முடிவு எடுக்கறேன்….”

அவன் அப்படி சொன்னதும், தன் மொபைலை எடுத்து வைசாலிக்கு போன் செய்து பேசினாள் ரூபா.

பேசி முடித்த பின், “சார்… நாம எப்படியும் இன்னிக்கு நைட் பஸ்லதான் கிளம்பப் போறோம்.. அதனால நீங்க சரியா மூணு மணிக்கு…  “நேத்ரா ஷாப்பிங் மால்” போங்க… அங்க கீழ்த் தளத்துல ஒரு ரெஸ்டாரெண்ட் இருக்கு… அங்க…. ஐந்தாம் நெம்பர் டெபிள்ல உங்க வைசாலி உங்களுக்காக காத்திருப்பா.. ஆல் தி பெஸ்ட்… அர்ஜெண்டா மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு… நிதானமா வந்து சேருங்க” வாழ்த்தி அனுப்பிய ரூபாவின் விழியோரம் கசிந்த ஈரம் அதுவாய்க் காற்றில் உலர்ந்து போனது.

-( மலரும்… )

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...