பூத்திருக்கும் விழியெடுத்து – 13 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 13 | முகில் தினகரன்

அத்தியாயம் –13

றுநாள் காலை, ஆடிட்டோரியம் முன் கூட்டம் அலை மோதியது.  போட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய மாணவ, மாணவியரும், அவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்து வந்த ஆசிரியப் பெருந்தகைகளும் ஆவலோடு காத்திருந்தனர்.

அதே நேரம், தன் அறையில் தன்னுடைய துணிமணிகளை லெதர் பேக்கில் திணித்துக் கொண்டிருந்தான் அசோக்.

“”என்ன அசோக்… அங்க எல்லோரும் ரிசல்ட்டை தெரிஞ்சுக்க ஆவலோட காத்திட்டிருக்காங்க… நீ இங்க இருக்கே?” என்றவாறே அவன் துணிகளை பேக்கில் அடைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு, “ஓ… ஊருக்குக் கிளம்பத் தயாராயிட்டீங்களோ?” கேட்டாள்.

 “யெஸ்”

 “ஏன்?”

 “எப்படியும் வைசாலி டீம்தான் ஜெயிக்கப் போகுது… சேம்பியன் ஷிப்பைத் தட்டப் போகுது… அவள் சந்தோஷமாய்க் கொண்டாடப் போறா… எனக்கு அது போதும்… ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல இத்தனை வருஷத்துக்கப்புறம் அவளைச் சந்தித்தேன்… என்னால முடிஞ்ச சந்தோஷத்தை அவளுக்குக் குடுத்திட்டுப் போறேன்… அவ்வளவுதான்…”

 “அது உன் எண்ணம்… ஆனா வைசாலியோட எண்ணம்ன்னு ஒண்ணு இருக்கல்ல?”

 “அது என்னவாயிருக்கும்?.. நான் அவளை எத்தனை வருஷமா பார்த்திட்டிருக்கேன்… எனக்குத் தெரியாதா? “ஜெயிக்கணும்… அது எந்த முறையில் ஆனாலும் பரவாயில்லை… ஆனா ஜெயிக்கணும்” என்கிற பாலிசி உள்ளவள் ஆச்சே அவள்” பேக்கின் ஜிப்பை “சர்ர்ர்ர்”ரென்று இழுத்தவாறே சொன்னான் அசோக்.

 “அது அப்போ… ஆனா இப்போ கதையே வேற” சொல்லி விட்டுக் கண்ணடித்தாள் ரூபா.

 “அதென்ன கதை?” புருவங்களை நெரித்துக் கொண்டு அசோக் கேட்க,

 “அவ ஜெயிக்கணும்”ன்னு நீ நினைக்கறே… ஆனா அவளோ தான் தோற்கணும்னு தான் நெனைக்கறா”

 “நோ…நோ… வைசாலி அப்படிப்பட்ட ஆளில்லை…எனக்குத் தெரியும் அவ கேரக்டர்”

 “இல்லைப்பா… இப்ப அவ மாறிட்டா… தான் தோற்கணும்… அந்த தோல்வியை ஏத்துக்கற மனப்பக்குவம் தனக்கு வரணும்… அதன் மூலம் தன் கேரக்டரே மாறணும்”ன்னு தீவிரமாயிருக்கா”

 “என்னங்க சொல்றீங்க?… நீங்க சொல்றது நெஜமா?…. தன் வெற்றிக்காக ஒரு உயிரையே பலி கொடுத்தவ அவ…. அவளா தான் தோற்கணும்னு ஆசைப்படறா?… என்னால நம்ப முடியலை!”

“சத்தியமான உண்மை… அவளே நேத்திக்கு ராத்திரி என் கிட்டே சொன்னா”

சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்தான் அசோக்.  “இந்த ரூபா சொல்றது நிஜமா?… இல்லை இதுவும் அந்த வைசாலியோட டிரிக்கா?”

 “என்ன அசோக்… என் பேச்சில் நம்பிக்கை இல்லையா?” தலையைச் சாய்த்துக் கொண்டு ரூபா கேட்க,

 “உங்கள் மீது நம்பிக்கை இருக்கு… ஆனா நீ சொன்ன விஷயத்தின் மீதுதான் நம்பிக்கை வர மாட்டேங்குது”

அப்போது வெளியில் மைக் ஒலி கேட்க,

“ரிசல்ட் சொல்றாங்க போலிருக்கு நான் போறேன்” சொல்லி விட்டு ஓடினாள் ரூபா.

சன்னமாய்ச் சிரித்துக் கொண்டான் அசோக்.

“இதோ நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு இடையிலான நடனப் போட்டியில் இந்த ஆண்டிற்காக சேம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் செல்லும் கல்லூரி…” அறிவிப்பு சில நிமிடங்கள் அமைதி காக்க,

எல்லோரும் காதைத் தீட்டிக் கொண்டு ஸ்பீக்கரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 “குரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி… ஒசூர்… தமிழ்நாடு”

 வைசாலியின் முகம் சந்தோஷப் பட,

அசோக்கின் முகத்தில் குழப்பம் படிந்தது.  “எப்படி?… எப்படி?… அந்த ஒசூர் காலேஜ் வைசாலியோட காலேஜை விட அவ்வளவு ஒண்ணும் பிரமாதமா பர்ஃபாமென்ஸ் பண்ணலையே?”

 “இரண்டாம் இடம்…. மைசூர்… லிங்கப்பா ஆர்ட்ஸ் காலேஜ்”

 அசோக் வெளியில் வந்து நின்றான்.

 “மூன்றாம் இடம்…. திலகராஜ் கல்லூரி… திருவனந்தபுரம்”

“என்னவொரு அநியாயம்… வைசாலி காலேஜோட பர்ஃமாமென்ஸுக்கு முதலிடமே குடுக்கணும்… ஆனா ஒண்ணுமே இல்லாமப் பண்ணியிருக்காங்களே?…” கடும் கோபத்திற்குள்ளான அசோக், தேர்வுக் குழுவினரிடம் வாக்குவாதம் செய்ய ஆவேசமாய்ப் புறப்பட்டான்.

வேகமாய் அவன் எதிரில் வந்த ரூபா, “என்ன அசோக் எங்கே கிளம்பிட்டீங்க?” கேட்க,

 “நான் போய் அந்த ஜட்ஜஸ் கிட்டே பேசப் போறேன்… இது ரொம்ப ரொம்ப மோசமான தேர்வு”

 “நோ… அப்படிப் போய் நீங்க வாதிட்டா… அது உங்களுக்குத்தான் அசிங்கம்!… தோற்றுப் போய் விட்ட ஆத்திரத்தில் நீங்கள் பேசுவதாய் உங்களைக் கிண்டலடிப்பார்கள்…”

அப்போது அவரிடம் வந்த ஒரு வாலண்டியர் இளைஞன், “சார்… இங்க அசோக் சார்…?” என்று கேட்க,

 “நான்தான்… என்ன வேணும்?”

 “உங்களை சீஃப் ஜட்ஜ் சிவராமகிருஷ்ணன் சார் வரச் சொல்றார்”

 “என்னையா?… எதுக்கு?”

உதட்டைப் பிதுக்கிய அந்த இளைஞன், ஆடிட்டோரியத்தில் உள்ள அலுவலக அறையைக் காண்பிக்க, குழப்பத்துடன் நடந்தான் அசோக்.

-( மலரும்… )

முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி – 14

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...