பூத்திருக்கும் விழியெடுத்து – 12 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 12 | முகில் தினகரன்

அத்தியாயம் –12

“இன்று காலை முதற்கொண்டு இங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளை பொறுமையோடும், ஆர்வத்தோடு கண்டு களித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் கல்லூரியின் சார்பிலும், நடுவர்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாணவ மாணவிகள் பெரும் முயற்சியெடுத்து மிகவும் சிரத்தையோடும், சிரமத்தோடும் ஆடியுள்ளனர்.  அதன் காரணமாகவே நடுவர்களால் உடனடியாக முடிவை அறிவிக்க இயலாது போனது என்கிற உண்மையை ஒப்புக் கொண்டு, அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்றைய போட்டிகளின் முடிவும், இந்த வருடப் போட்டியில் இண்டர் ஸ்டேட் சாம்பியன் பட்டத்தையும், கோப்பையையும் தட்டிச் செல்லும் கல்லூரி எது? என்பதையும்…நடுவர்கள் நாளைக் காலை ஒன்பது மணியளவில் இதே ஆடிட்டோரியத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் அறிவிப்பார்கள்”

“இதென்ன ஒரு முடிவை அறிவிக்க ஒரு இரவு முழுவதும் யோசிக்க வேண்டுமா?” யாரோ ஒரு அப்பாவி மாணவன் கேட்க,

 “இல்லை ப்ரோ…. நிறைய வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்… எப்படின்னா?…  “பெஸ்ட் டான்ஸர் ஆஃப் தி சீஸன்”ன்னு ஒரு தனி நபர் பரிசு,  பெஸ்ட் கோரியோகிராபி, பெஸ்ட் ஃபேண்டஸி டான்ஸ், பெஸ்ட் கிளாஸிகல் டான்ஸ், அப்புறம்தான் சேம்பியன் ஆஃப் தி சீஸன், அறிவிப்பாங்க”

 “ஓ…அப்படியா?”

எல்லோரும் அவரவர் அறைகளுக்குச் சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.

வைசாலியின் விசாகா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் “திக்…திக்”கென்று அதிரும் இருதயத்தோடு படுத்துக் கிடக்க, அசோக்கின் மதர்ஸ் இண்டியா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் பயங்கர கடுப்பில் கிடந்தனர்.

 “ஹும்….ஆரம்பத்திலிருந்து செம ஸ்மார்ட்டா சொல்லிக் குடுத்த அசோக் சார்… ஃபைனல்ஸ்ல நம்மை பழி வாங்கிட்டாரே?… அவர் மட்டும் கடைசி நிமிஷத்துல நம்ம கான்ஸெப்டை மாற்றலைன்னா… நிச்சயம் நாம் தான் சேம்பியன்ஸ்”

சரியாக இரவு பனிரெண்டு மணிவாக்கில் தன் அறையை விட்டு வெளியே வந்த வைசாலி, சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில் யாரோ நிற்பதைப் பார்த்து முதலில் துணுக்குற்றாள்.  பின்னர் தன் பார்வையைக் கூராக்கிக் கொண்டு பார்த்தவள், “அட… ரூபா ஏன் தூங்காம இந்த நேரத்துல அந்த மரத்தடில நிக்கறா?” தனக்குத் தானே கேள்வியைக் கேட்டுக் கொண்டு, மெல்ல அவளை நோக்கி நடந்தாள்.

 “என்ன ரூபா தூங்கலையா?” கேட்டவாறே அவளருகே சென்று நின்ற வைசாலி அவன் கண்களில் ஈரம் படிந்திருப்பதைப் பார்த்துக் குழப்பமானாள்.  “என்ன ரூபா… எனி ப்ராப்ளம்?” சன்னக் குரலில் கேட்டாள்.

சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு, கண்களைத் துடைத்த ரூபா, “அது… வந்து ஒண்ணுமில்லை” சமாளித்தாள்.

 “அதெப்படி ஒண்ணுமில்லேன்னாக் கூட கண்ணுல கண்ணீர் வருமா?” வைசாலி விடாமல்  கேட்டாள்.

 “ப்ச்…” என்று சலித்துக் கொண்டே வைசாலியின் தோளைத் தொட்ட ரூபா, “ஆமாம்.. நீ ஏன் இன்னும் தூங்காம உலாத்திக்கிட்டிருகே?… நாளைக்கு ரிசல்ட் என்னவாகும்?ன்னு டென்ஷனா இருக்கா?…கவலையேபடாதே… நாளைக்கு உங்க டீம்தான் ஜெயிக்கும்… சேம்பியன் பட்டத்தையும் அள்ளும்” என்றாள்.

 “அதெப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே?” வைசாலி கேட்டாள்.

“ம்…ஃபைனல்ஸ்ல உங்களுக்கு எதிரா ஆடின டீம்…அதான் அந்த கோயமுத்தூர் மதர்ஸ் இண்டியா டீம்.. செம சொதப்பல்… அது போதாதா நீங்க ஜெயிக்கறதுக்கு?”

 “அது… வந்து… நீ சொல்றதும் ஒரு விதத்துல கரெக்ட்தான்!… ஆனா… வழக்கமா எல்லா லீக் போட்டிகளிலும்.. கால் இறுதி… அரை இறுதிப் போட்டிகளில் ஜொலித்த அந்த டீம்… ஏன் ஃபைனல்ஸ்ல… அப்படி சோடை போனது?ன்னு எனக்குத் தெரியலை!”

 “ஆனா எனக்குத் தெரியும்” என்றாள் திடீரென்று குரலை கட்டையாக்கிக் கொண்டு.

 “என்ன?… என்ன தெரியும் உனக்கு அந்த டீமைப் பற்றி?”

 “ம்… அந்த டீமைப் பற்றியும் தெரியும்… அந்த டீமோட டிரெய்னர் அசோக்கைப் பற்றியும் தெரியும்… அவரோட பழைய காதலியைப் பற்றியும் தெரியும்” ரூபா சொல்ல,

 உறைந்து போனாள் வைசாலி.  கனத்த வேதனை மேகமொன்று அவள் மீது நிதானமாய்ப் படர்ந்து அவளை அவ்வாறு உறைந்து போகச் செய்திருந்தது.

 “என்ன வைசாலி… சத்தத்தையே காணோம்… என்னாச்சு? ஃபிளாஷ் பேக்குக்குப் போயிட்டியா?” ரூபா தமாஷாய்க் கேட்க, “பொசுக்”கென்று அழுது விட்டாள் வைசாலி.

 “ஏய்…ஏய்… என்னாச்சு?… எதுக்கு இப்ப திடீர்னு அழறே?” அவள் தாடையைத் தொட்டுத் தூக்கி ஆறுதல் படுத்தினாள் ரூபா.

ஆனாலும் வைசாலியால் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது போக, “சரி… அழட்டும்… அழுது ஓயட்டும்… அப்புறமாய்ப் பேசுவோம்” என்கிற எண்ணத்தில் அவளை அமைதியாய் அழ விட்டாள் ரூபா.

 பத்து நிமிடங்களுக்குப் பிறகு, கண்களைத் துடைத்துக் கொண்டு இயல்பிற்கு வந்த வைசாலியிடம், “த பாரு வைசாலி… மறுபடியும் உன்னோட பழைய நினைவுகளைக் கீறி உன்னை அழ வைக்க விரும்பவில்லை நான்… ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு நான் கிளம்பறேன்” பீடிகை போட்டாள் ரூபா.

வாய் பேசாமல் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள் வைசாலி.

“உன் கல்லூரிக் காதலன் அசோக் ஃபைனல்ஸ்ல தன்னோட ஸ்டூடண்ட்ஸுக்கு மொக்கை கான்ஸெப்டைக் கொடுத்து அவங்களை போட்டில சொதப்ப வெச்சதே… உனக்காகத்தான்”

  “எனக்காகவா?…ஏன்?…ஏன்?” படபடப்பாய்க் கேட்டாள் வைசாலி.

 “அவனுக்குத் தெரியாதா தன்னுடைய பழைய காதலி தோல்வியைத் தாங்க மாட்டாள்?ன்னு… அதனாலதான் அவளையும் அவளோட டீமையும் ஜெயிக்க வைப்பதற்காக அந்த டிரிக்கைக் கையாண்டிருக்கான்”

 “நெஜம்மாவா?” விழிகளை விரித்துக் கொண்டு கேட்டாள் வைசாலி.

 “சத்தியமா”

 “அவரு இன்னும் என் மேல் அன்பு… பாசம்…வெச்சிருக்காரா?” குழந்தையைப் போல் கேட்டாள் வைசாலி.

 “அது இல்லாமல்தான் இத்தனை வருஷமா.. வயசு நாப்பத்திரெண்டுக்குப் பக்கமா ஆகியும்… கல்யாணமே பண்ணிக்காமல் பிரம்மசாரியாவே வாழ்ந்திட்டிருக்காரா?” தலையை நொடித்துச் சொன்னாள் ரூபா.

“வாட்?….அவர் இன்னமும் கல்யாணம் பண்ணிகலையா?… ஏன்?…ஏன்?” அவசரமாய்க் கேட்டாள் வைசாலி.

 “அது செரி… நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கே?” திருப்பிக் கேட்டாள் ரூபா.

 அது.. நான்…வந்து.. நான்” திணறினாள் வைசாலி.

 “ரொம்பக் கஷ்டப்படாதே… நானே சொல்றேன் உன் சார்புல… அதாவது உன் மனசுல அசோக் அமர்ந்திருந்த சிம்மாசனத்துல இன்னொருத்தரை உட்கார வைக்க உனக்குப் பிடிக்கலை… பிடிக்கலை கூட இல்லை… உட்கார வைக்க உன்னால முடியலை… அதே நிலைதான் அங்கேயும்… அவரு மனசில் நீ இருந்த இடத்தில் இன்னொருத்தியைக் கொண்டு வர அவராலும் முடியலை”

தலையைத் தாழ்த்திக் கொண்டு மெல்ல விசும்பினாள் வைசாலி.

 “ஹும்… ரெண்டு பேருமே ஆழ் மனசுல அதீத அன்பை வெச்சுக்கிட்டு… ஏதோ ஒரு ஈகோ காரணத்தால் ஒருத்தரை ஒருத்தர் வருஷக்கணக்குல பார்க்காம… பேசாம… இருந்திருக்கீங்க!… இதை முரட்டுத்தனம்ன்னு சொல்றதா.?.. இல்லை முட்டாள்தனம்ன்னு சொல்றதா?…ன்னு எனக்குப் புரியலை”

 “முட்டாள்தனம்தான்… முட்டாள்தனம்தான்” சத்தமாகச் சொன்னாள் வைசாலி.

 “அதை இப்ப நெனச்சு என்ன பிரயோஜனம்?…”

 “ரூபா… இப்ப நான் உன் கிட்ட ஒண்ணு சொல்றேன்… நாளைக்கு என்னோட டீம் தோற்கணும்!… தோல்வியை நான் ஏற்றுக்கணும்!… அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு வரணும்!…” ஆவேசமாய்ச் சொன்னாள் வைசாலி.

 “ஏம்மா… ஏம்மா…இப்படி சொல்லுறே?… உன்னோட டீம் தோற்கக் கூடாதுன்னு அவர் தன்னோட டீமையே டம்மியாக்கியிருக்கார்… இப்பப் போய் நாங்க தோற்கணும்ன்னு சொல்றியே…. உனக்கு புத்திகித்தி கெட்டுப் போச்சா?”

“யெஸ்… இதுநாள் வரைக்கும்  “எங்கும் வெற்றி.,.. எதிலும் வெற்றி… நாந்தான் ஜெயிக்கணும்… மத்தவங்க எல்லோரும் தோற்கணும்…” என்கிற மாதிரியான ஒரு சாடிஸ்ட் மனநிலையில் இருந்த என் புத்தி தெளியணும்ன்னா…நாளைக்கு என் டீம் தோற்கணும்… அந்த தோல்வியே என்னை ஜெயிக்க வைக்கணும்!… எனக்குள் ஒரு புது மாற்றத்தைக் கொண்டு வரணும்!… தான் ஜெயிப்பதற்காக எதையும் செய்யத் துணிந்த வைசாலி தோற்கணும்… அதுதான் என்னோட வெற்றி”

“ம்ஹும்… சந்தேகமேயில்லை… உனக்கு முத்திப் போச்சு… நான் வர்றேன்மா”

ரூபா சென்று விட, தோல்வியைச் சுவைக்க ஆவலானாள் வைசாலி.

-( மலரும்… )

முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...