பூத்திருக்கும் விழியெடுத்து – 11 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 11 | முகில் தினகரன்

 

அத்தியாயம் –11

ரியாக காலை பத்து மணிக்கு, அந்த நடனப் போட்டி துவங்கியது.
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், தற்போதைய திரைப்படங்களில், பெரிய பெரிய ஸ்டார்களையெல்லாம் ஆட்டுவிக்கும் டான்ஸ் மாஸ்டரான கோகுலவாசன் சிறப்பு அழைப்பாளராக வந்து, போட்டியில் கலந்து கொள்ளும் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாய் ஒரு உரையை நிகழ்த்தி விட்டு, இறுதியில் எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கும் அந்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

“இந்த நடனப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெறும் மாணவச் செல்வங்களை நான் எனது அடுத்த படத்தில் டான்ஸ் கலைஞர்களாக அறிமுகப்படுத்தி திரையுலகில் நுழைய அவர்களுக்கு ஒரு வாசலை அமைத்துக் கொடுக்க தயாராக உள்ளேன்”

“மேடம்… இந்த வாய்ப்பை நாம கண்டிப்பா மிஸ் பண்ணிடக் கூடாது… உயிரைக் கொடுத்து நடனமாடி முதல் பரிசை ஜெயிச்சே ஆகணும் மேடம்” வைசாலியின் குழுவைச் சேர்ந்தவர்கள் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அசோக்கின் மாணவர்களும், “சார்… நாமதான் ஜெயிக்கறோம்… நம்ம ஆளுங்க தான் சினி ஃபீல்டுக்குப் போகப் போறோம்” உற்சாகமாய்ச் சொன்னார்கள்.

ஆனால், அந்த ஊக்கமும், உற்சாகமும் வைசாலியிடமும் இல்லை, அசோக்கிடமும் இல்லை.

டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் மொத்தக் கல்லூரிகளையும் நான்கு பிரிவுகளாய்ப் பிரித்து கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஒரு பிரிவினரும், ஹாஸ்டல் மத்தியில் உள்ள கல்ச்சுரல் ஹாலில் ஒரு பிரிவினரும், பி.டி.ஹாலில் ஒரு பிரிவினரும், விஸ்காம் டிபார்ட்மெண்ட் வளாகத்தில் ஒரு பிரிவும் என நான்கு இடங்களில் போட்டி நடத்தப்பட்டது.

மதியம் வரை நடைபெற்ற கடும் போட்டியின் முடிவில், மொத்தம் கலந்து கொண்ட முப்பது கல்லூரிகளில் பத்துக் கல்லூரிகள் வெளியேறிப் போயின.

மதிய உணவிற்குப் பின்னர் தொடர்ந்த போட்டி மாலையை நெருங்கும் போது, மேலும் பத்துக் கல்லூரிகள்  “பேக் டு பெவிலியன்” ஆகியிருந்தன.

இரவு ஏழு மணி வாக்கில், நான்கே கல்லூரிகள் மட்டுமே களத்திலிருந்தன.  அதில் வைசாலியின் விசாகா கல்லூரியும் இருந்தது. அசோக்கின் மதர்ஸ் இண்டியா கல்லூரியும் இருந்தது.

இரவு எட்டரை மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மேலும் இரு கல்லூரிகள் புறமுதுகிட்டுப் போய் விட, விசாகாவும்… மதர்ஸ் இண்டியாவும் ஃபைனல்ஸில் எதிரெதிரே நின்றன.

வைசாலியா?…. அசோக்கா?

ரூபா திணறிப் போனாள். “அடக்கடவுளே… இதென்ன இப்படி வந்து நின்னிருக்கு?… இந்த ஃபைனல்ஸ் நடந்தா நிச்சயம் ஒருத்தர் தோற்றாகணுமே?… அது யாராயிருக்கும்?… அசோக் தோற்றா… வைசாலிக்காக விட்டுக் கொடுத்த ரகசிய சந்தோஷம் அவருக்கு மட்டும் கிடைக்கும்!… ஆனா அவர் அழைத்து வந்த ஸ்டூடண்ட்ஸ் மத்தியிலும்… அவர் வேலை பார்க்கும் கல்லூரி மேனேஜ்மெண்டிலும் அவரோட பேரு டேமேஜ் ஆயிடுமே?”

அசோக்கின் நிலைமை வேறு மாதிரி ஆகிப் போனது.  நேரடியாகத் தன் மாணவர்களிடம், “டேய்… கொஞ்சம் லைட்டா ஆடி… அந்த காலேஜ் ஜெயிக்கற மாதிரிப் பண்ணுங்கடா” என்றும் சொல்ல முடியாமல், “வெரி குட்… இதே ஸ்பிரிட்டோட ஃபைனல்ஸிலும் ஆடி… வெற்றிக் கனியைப் பறிச்சிட்டு வாங்கடா” என்றும் சொல்ல முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தான்.

அப்போது அவன் மூளைக்குள் “பளிச்”சென்று ஒரு எண்ணம் தோன்றியது.  “அப்படிச் செய்தால் என்ன?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன், அவசரமாய்ச் சென்று தன் குழுவினரை அழைத்தான்.

 “டியர் ஸ்டூடண்ட்ஸ்… காலையிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் நீங்கள் வெளிப்படுத்திய உங்கள் திறமைகளைப் பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்படறேன்!… மனதாரப் பாராட்டறேன்!…ஆனா….” என்று நிறுத்தினான் அசோக்.

 “என்ன சார்… ஃபைனல்ஸ்ல நாங்க விழுந்திடுவோம்!ன்னு பயப்படறீங்களா?.. டோண்ட் வொரி சார்… நாமதான் ஜெயிக்கறோம்” ஒரு மாணவன் உற்சாகத்தோடு சொல்ல,

 “இம்பாஸிபிள்” என்றான் அசோக்.

மொத்த மாணவர்களும் அதிர்ந்து போயினர். வழக்கமாய் தங்களிடம் எந்தவொரு சூழ்நிலையிலும் நெகடிவ் வார்த்தைகளையே பேசாத தங்களுடைய பயிற்சியாளர் இன்று “இம்பாஸிபிள்” என்று சொன்னது அவர்கள் அனைவரையும் திடுக்கிடச் செய்தது.

 “யெஸ்… இன்னிக்கு காலையிலிருந்து இங்க நடந்த முப்பது கல்லூரிகளின் டான்ஸ் பர்ஃபாமென்ஸையும் கூர்ந்து பார்த்ததில் எனக்கு ஒன்னு தெளிவாச்சு!… அதாவது நாம கொண்டு வந்திருக்கற அந்தக் கான்ஸெப்டை ஃபைனல்ஸிலேயும் நாம யூஸ் பண்ணினா… நிச்சயம் நாம தோத்திடுவோம்!… அதனால… நாம உடனடியா நம்ம கான்ஸெப்டை மாத்திக்குவோம்”

“சார்… என்ன சார் விளையாடறீங்களா?.. இன்னும் பதினைந்து நிமிஷத்துல ஃபைனல்ஸ் ஸ்டார்ட் ஆயிடும்…அதுக்குள்ளார நாம எப்படி ஒரு புது கான்ஸெப்டை உருவாக்கி… ஸ்கிரிப்ட் பண்ணி… டிரெய்னிங் எடுத்திட்டு.. ஃபைனல்ஸ்ல ஆடுறது?” அழுது விடுபவள் போல் ஆனாள் கேட்ட மாணவி.

 “ஏன் முடியாது… எல்லாம் முடியும்” என்றான் அசோக்.  அவன் எண்ணம் எப்படியாவது தன்னுடைய டீமை சொதப்ப வைத்து. வைசாலியின் டீமை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான், என்கிற உண்மையை உணராத மாணவர்கள் அசோக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 “சார்… நான் கேள்விப்பட்ட வரையில் நமக்கு எதிரா டான்ஸ் ஆடப்போற அந்த விசாகா காலேஜ் டீமோட ஃபைனல்ஸ் கான்ஸெப்ட் ரொம்பவே மொக்கையாம்”

 “அதைப்பத்தி நமக்கென்ன?… நான் சொல்றதை கேட்டு அதன்படி ஆடறவங்க மட்டும் ஆடுங்க… விருப்பமில்லாதவங்க தாராளமா வெளியேறி… பார்வையாளரா உட்கார்ந்து வேடிக்கை பாருங்க” என்று அசோக் தீர்மானமாய்ச் சொல்லி விட்டு, தனக்குத் தோன்றிய ஒரு மட்டமான கான்ஸெப்டைச் சொல்லி, அரையும் குறையுமாய் ஒரு டிரெய்னிங்கைக் கொடுத்து தன் மாணவர்களை ஃபைனல்ஸுக்கு அனுப்பினான்.

 அவன் எதிர்பார்த்தது போலவே, அவன் குழுவினர் அந்த இறுதிப் போட்டியில் மெகா சொதப்பலைத் தந்தார்கள்.

வைசாலியின் விசாகா கல்லூரி ஆரம்பத்திலிருந்தே ஆடியன்ஸின் கைதட்டல்களையும், ஆரவாரத்தை அளவின்றி அள்ளியது.

நீண்ட நேரம் களமாடிய அந்த நடனப் போட்டியின் இறுதிச் சுற்று முடிந்ததும், மொத்தக் கூட்டமும் கலையாமல் அப்படியே முடிவுகளுக்காக காத்திருந்தது.

 “சந்தேகமேயில்லை… திருச்சி விசாகா காலேஜ்தான் சேம்பியன் கோப்பையைத் தட்டிட்டுப் போகப் போகுது”

 “சான்ஸே இல்லை… ஏன்னா ஃபைனல்ஸ்ல அவங்களுக்கு எதிரா ஆடின கோயமுத்தூர் மதர்ஸ் இண்டியா காலேஜ் ஆரம்பத்திலிருந்தே சூப்பர் பர்ஃபாமென்ஸ் குடுத்திட்டு வந்திருக்கு!… ஆனா விசாகா காலேஜ் ஆரம்பத்திலிருந்து கொஞ்சம் மந்தமாகவே இருந்திட்டு ஃபைனல்ஸ்ல மட்டுமே நல்ல பண்ணியிருக்கு… ஆக மொத்த பர்ஃபாமென்ஸையும் கணக்கிலெடுத்து ரிசல்ட் போட்டா நிச்சயம் கோயமுத்தூர் காலேஜ்தான் சேம்பியன்”

“அட ஏனப்பா… நீங்க அடிச்சுக்கறீங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் அனௌன்ஸ் பண்ணிடுவாங்க… அதுவரைக்கும் பொறுங்க”

ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவர்களை சோகப்படுத்தும் விதமாய் அந்த அறிவிப்பு வந்தது.

-( மலரும்… )

                                                                  முந்தைய பகுதி | அடுத்த பகுதி 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...